Tamil Islamic Media ::: PRINT
அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?

( Dr. K.V.S. ஹபீப் முஹம்மத் )

‘தீமைகள் செழித்து வளர நல்லவர்கள் செய்ய வேண்டியது ஒன்றே. அது அவர்கள் மெளனமாக இருப்பதே ஆகும்’ எட்மண்ட் பர்க்.

‘உண்மையை அறிந்த பின்னரும், உண்மையைப் பேச மறுக்கும் நாளே நாம் இறக்கும் நாள்’ மார்டின் லூதர் கிங்.

இன்று உலகில் வன்முறைகளும், அநீதிகளும், குற்றங்களும் தலை விரித்தாடுகின்றன. ஆனால், இவற்றுக்கு எதிராகக் குரல் எழுப்புவோர் மிகக் குறைவாகவே காணப்படுகின்றனர். தம்மையோ, தமது சமூகத்தையோ பாதிக்காத வரையில் எவரும் அநீதிகளைப் பற்றி கவலை கொள்வதில்லை. ஆனால் அவர்கள் அநீதிக்குள்ளாக்கப்பட்டாலோ, மற்றவர்கள் தங்களுக்காகக் குரல் எழுப்பவில்லையே என்று அங்கலாய்க்கிறார்கள்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு எழும் சினம் போலவே, பாதிக்கப்படாதவர்களுக்கும் ஏற்படாத வரை, அநீதிகள் ஒருபோதும் ஒழியாது. அநீதிக்கு எதிராகப் பாதிக்கப்படாதவர்கள் எழுப்பும் குரல், அதிகத் தாக்கங்களை ஏற்படுத்தும் சக்தி படைத்தது. பிறர் தாக்கப்படும் போது நாம் குரல் எழுப்பினால்தான், நாம் தாக்கப்படும்போது பிறர் நமக்காகக் குரல் எழுப்புவார்கள் என்பதை எந்தச் சமூகமும் மறந்து விடக்கூடாது.

‘அநீதிக்கு எதிராகக் குரல் கொடுப்பது முஸ்லிம் சமூகத்தின் அடிப்படைக் கடமை’ என இஸ்லாம் கூறுகின்றது. முஸ்லிம்களை மட்டுமின்றி, உலக மாந்தர் அனைவரையும் அழிவிலிருந்தும், அநீதியிலிருந்தும் பாதுகாக்க வேண்டும் என்பது முஸ்லிம்களுக்கு இறைவன் இட்ட ஆணையாகும்.


“முஸ்லிம்களே ! மனித இனத்தைச் சீர்படுத்துவதற்காகத் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் மிகச் சிறந்த சமுதாயத்தினராய் நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் நன்மை புரியும்படி ஏவுகின்றீர்கள், தீமையிலிருந்து தடுக்கின்றீர்கள். மேலும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கின்றீர்கள்.”

( குர்ஆன் 3:110 )


“நன்மையின் பக்கம் அழைக்கக் கூடிய ஒரு குழுவினர் உங்களிடையே கண்டிப்பாக இருந்திட வேண்டும். அவர்களோ நல்லவை புரியும்படி ஏவ வேண்டும். தீயவற்றிலிருந்து தடுத்த வண்ணம் இருக்க வேண்டும். எவர்கள் இப்பணியைப் புரிகின்றார்களோ, உண்மையில் அவர்களே வெற்றியாளர் ஆவர்.”

( குர்ஆன் 3:104 )


மேலே குறிப்பிடப்பட்டுள்ள வசனங்கள் நன்மையை ஏவி, தீமையை விலக்கும் சமுதாயமே சமுதாயம் என்றும், வெற்றி பெற்ற சமுதாயம் என்றும் நமக்கு உணர்த்துகின்றன.


அநீதிகளுக்கு எதிராக நம்மால் முடிந்த அளவுக்கு போராட வேண்டும்.


‘தீமையைக் கண்டால் கைகளால் தடு ! அது முடியாத போது நாவினால் தடு ! அதுவும் முடியாத போது மனத்தளவில் தடு ! ஆனால் அதுவோ இறைநம்பிக்கையின் தாழ்நிலையாகும்’ என்றார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். எனவே அவரவர் சக்திக்கேற்ப அநீதிகளைக் களைவதில் அக்கறை கொள்ள வேண்டும். அதிகாரத்தில் இருப்போர் தமது பதவியைப் பயன்படுத்தி அநீதிகளை ஒழிக்க வேண்டும். சட்டம், நீதித்துறை, இராணுவம், காவல்துறை ஆகியவற்றின் உதவியோடு அநீதிகளைக் களைய வேண்டும். அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர் தொலைக்காட்சியில் உரையாற்றுதல், நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுதல், அறிக்கை வெளியிடுதல் ஆகியவற்றோடு மட்டும் நிறுத்திக் கொள்வது பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் கோழைச் செயலாகவே கருதப்படும்.

பொதுமக்கள், அறிவு ஜீவிகள், சமூக ஆர்வலர்கள், மனித நேயர்கள், மனித உரிமை இயக்கத்தினர் ஆகியோர் அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டும். ‘கொடுங்கோல் ஆட்சியாளர்க்கு முன் உண்மையை எடுத்துரைப்பது மாபெரும் அறப்போர் (ஜிஹாத்) ஆகும்’ என்றார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

அநீதிக்கு எதிராக மக்கள் எழுப்பும் குரல், ஆதிக்க சக்திகளைக் கலக்கமடையச் செய்யும் சக்தி படைத்தது. எங்கோ ஆப்பிரிக்காவில் ஒரு மூலையில் நடக்கின்ற ஒரு அநீதிக்கு எதிராக, தமிழ்நாட்டில் ஒரு குக்கிராமத்தில், ஒரு சிறிய எண்ணிக்கையினர் குரல் எழுப்புவதால் என்ன பயன் என்று கருதிவிடக்கூடாது. ஜாதி, மதம், மொழி, இனம் பாராது அனைத்து மக்களும் ஓரணியில் திரள வேண்டும். தீயவர்கள் தீமை புரிவதற்காகக் கூட்டணி அமைத்துக் கொள்ளும் போது, நன்மைக்காக நல்லவர்கள் ஒன்று சேரத் தயங்குவதேன்?

அநீதிக்கு எதிரான குரல் வலுவாகவும், தொடர்ந்தும் ஒலிக்க வேண்டும். ஆதிக்ககாரர்களை திகில் அடையச் செய்யும் அளவிற்கு எதிர்ப்புப் போராட்டமும், விளக்கக் கூட்டங்களும், பேரணிகளும் நடைபெற வேண்டும். சிறு பிரச்சார நூல்கள், அச்சு, மின்னணு ஊடகங்கள் ஆகியவற்றின் மூலம் பிரச்சனைகளின் உண்மை நிலைப் பற்றி, மக்களுக்கு தெளிவாக விளக்க வேண்டும். அமெரிக்க மக்களுக்கு, அமெரிக்க அரசு செய்து வரும் பல அடவடித்தனங்களைப் பற்றி தெரியாது. பாலஸ்தீனர் பிரச்சினையில் இஸ்ரேல் அரசு நியாயமாக நடந்து கொள்வதாகவும், பாலஸ்தீனர்களே அநீதிகளைப் புரிவதாகவும், அமெரிக்க மக்கள் நம்ப வைக்கப்பட்டுள்ளனர். இதுபோலவே பல அரசுகள் தாம் செய்யும் தவறுகளை மக்கள் அறியாதவண்ணம் பார்த்துக் கொள்கிறார்கள்.

அநீதிகள் புரிபவர்கள் நமது சமூகத்தவராயினும், அவர்களை எதிர்த்து நாம் குரல் எழுப்ப வேண்டும். எனது தேசம் எது செய்தாலும் ஆதரிப்பேன் (My nation right or wrong) என்பது இன வெறியாகும்.


’ஒருவன் தன் சமூகத்து மக்களை நேசிப்பது இன வெறியாகுமா?’ என ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வினவினார். அதற்கு நபிகளார் அவர்கள், ‘இல்லை, மாறாக தன் சமூகத்தார் கொடுமை செய்ய முற்படும் போது, அவர்களுக்குத் துணை புரிவது தான் இனவெறி’ என்றார்கள்.

அடுத்தவர் செய்யும் தவறுகளை ஆவேசமாகக் கண்டிக்கிறோம். ஆனால் நமது நாடு, நமது சமூகம் செய்யும் தவறுகளைக் கண்டும் காணாதது போல் இருந்து விடுகின்றோம். தமது சமூகத்தைக் கண்டிப்பது தேசத் துரோகம், மதத் துரோகம், இனத் துரோகம் என்று கருதுகிறோம். ஆனால், இந்த இனவெறிச் சிந்தனை அவர்களையே அழித்து விடும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டு தட்டிக் கேட்கப் படாத மனிதர்கள் அழிந்து போனது போல, நாடுகளும், சமூகமும் அழியும்.


‘எவன் அநீதியான விஷயத்தில் தன் சமுதாயத்தினருக்கு உதவி புரிகின்றானோ அவன் கிணற்றில் விழுந்து கொண்டிருக்கும் ஒட்டகத்தின் வாலைப் பிடித்துக் கொண்டிருப்பவனைப் போன்றவன் ஆவான். அந்த ஒட்டகத்துடன் சேர்ந்து அவனும் கிணற்றில் வீழ்வான்’ என்றார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். (நூல் : அபூதாவூது)

அநீதிக்கு எதிராக வெளிநாட்டவர் எழுப்பும் குரலைவிட உள்நாட்டினர் (அதே சமூகத்தவர்) எழுப்பும் குரலே வலுமிக்கது. ஆட்சியாளர்களும், அக்கிரமக்காரர்களும் தமது சமூகத்தினரின் எதிர்ப்புக்கே அதிகம் அஞ்சுகின்றனர்.

இன்று உலக மக்கள் அதிகம் எதிர்க்க வேண்டியது வல்லரசுகளின், குறிப்பாக அமெரிக்காவின் ஆதிக்க மனப்பான்மையை உலகில் எவருக்கும் அஞ்ச மாட்டோம். எந்தத் தர்மத்திற்கும் கட்டுப்பட மாட்டோம். எந்த நாட்டையும், எந்த வேளையிலும், எந்த வகையிலும் தாக்குவோம். அங்குள்ளவர்களைச் சிறை பிடிப்போம். சித்திரவதை செய்வோம் என செயல்படுகின்றன. ஐ.நா. சபை உலக வங்கி, சர்வதேச நிதியம், சர்வதேச அணுசக்தி கழகம் ஆகிய அனைத்தையும் தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, ஒரு தாதாவைப் போல் நடந்து கொள்கின்றன. ஐ.நா. சபை என்பது அமெரிக்க ஐக்கிய சபை ஆகிவிட்டது. உலகத்தைப் பாதுகாக்க வேண்டிய ஐ.நா. பாதுகாப்பு சபை, அமெரிக்க – ஐரோப்பிய நலன்களைப் பாதுகாக்கும் சபையாகி விட்டது. தன்னிச்சையாக செயல்படுதல், ஏகாதிபத்தியம், இரட்டை நிலை ஆகியவையே வல்லரசுகளில் செயல்பாட்டின் அடிப்படைகள்.

நமது நாடு உட்பட, உலகின் பல நாடுகள் வல்லரசுகளின் அரசு பயங்கரவாதத்தை கண்டிக்க மறுக்கின்றன. வல்லரசுகளிடமிருந்து கிடைக்கும் கடன், தொழில்நுட்ப உதவி, ஆயுத விற்பனை ஆகியவை இவர்களை மெளனமாக்கி விடுகின்றன. வல்லரசுகளின் வற்புறுத்தலுக்குப் பணிந்து ஐ.நா. பாதுகாப்பு சபை, பொதுச்சபை, அணுசக்திக் கழகம் ஆகியவற்றில் வல்லரசுகளுக்கு ஆதரவாக ஓட்டுப் போடுகின்றன. காந்திஜியின் அஹிம்சை, நேருஜியின் அணிசாராக் கொள்கை ஆகியவற்றைப் பின்பற்றும் நமது நாட்டின் நிலையே இப்படி என்றால், மற்ற நாடுகளின் நிலையைப் பற்றிப் பேச வேண்டியது இல்லை. அரபுக்களை நசுக்கி வரும் இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்து வரும் அமெரிக்காவைக் கண்டிக்க அரபு நாடுகளோ தயாராக இல்லை.


ஆகவே இத்தகையத் தருணங்களில் பொதுமக்கள், அறிவு ஜீவிகள், சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்கள், மதம் சித்தாந்தம், நாடு ஆகிய உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு, அநீதிகளுக்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் பிரச்சனையின் தீவிரத்தைக் குறைப்பதோடு, காலப்போக்கில் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும் வழிவகுக்கும்.

 

நன்றி : நர்கிஸ் - ஏப்ரல் 2014



The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.