கவர்னருக்கு வேறு வழி தெரியவில்லை. மறுநாள் காலை முஸ்லிம்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தூது விட்டார். தூதுவர் ஸஈதிடம் வந்தவுடன் சாஷ்டாங்கம் செய்து வணங்க முற்பட்டார். ஆனால் முஸ்லிம்கள் அதனைத் தடுத்து விட்டனர்.
“உங்களைக் கண்ணியப்படுத்த நாடித்தான் நான் அப்படிச் செய்தேன். ஏன் என்னைத் தடுத்தீர்கள்?” என்று அந்தத் தூதுவர் கேட்க, “நீங்களும், நானும் அல்லாஹ்வின் அடிமைகளே. இப்படிப்பட்ட சாஷ்டாங்களெல்லாம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே செய்ய வேண்டும். அவனே இந்த உலகின் அதிபதி. என்றென்றும் நிலைத்திருப்பவன்” என்று ஸஈத் அவருக்கு அழகிய விளக்கத்தைக் கொடுத்தார்.
“இதுதான் உங்கள் தொடர் வெற்றிக்குக் காரணம்” என்று வியந்து கூறிய அந்தத் தூதுவர், “எங்கள் கவர்னருக்கு உயிர் பாதுகாப்பு அளித்திட தாங்கள் வாக்குறுதி தர வேண்டும் என்று கேட்பதற்காகவே நான் வந்துள்ளேன்” என்று ஸஈதிடம் கூறினார்.
“உங்கள் கவர்னரும், படையினரும் தங்கள் ஆயுதங்களை எங்களிடம் ஒப்படைத்து சரணடைந்து விட்டால் நாங்கள் ஒரு உயிருக்கும் பங்கம் விளைவிக்க மாட்டோம். நாங்கள் வாக்கு மாறுபவர்களல்லர்” என்று ஸஈத் கூறினார்.
தூதுவர் கவர்னரிடம் சென்று நடந்ததைக் கூறி, “இந்த அரபுகள் தங்கள் வாக்குறுதியை ஒரு பொழுதும் மீறியதில்லை. நம்பிக்கை மோசடியும் செய்ததில்லை. ஆனால் தாங்கள் அவர்களை ஏமாற்றப் போவதைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் ஏமாற்றுபவர்கள் எல்லாம் அழிந்தே போயிருக்கிறார்கள்” என்று கூறினார்.
ஹெர்பியஸ் தனது பட்டு அங்கியையும், ஆபரணங்கள் அனைத்தையும் களைந்து ஒரு கம்பளி ஆடை அணிந்து, வெறுந் தலையுடனும், வெறுங்காலுடனும் கூனிக் குறுகிக்கொண்டு வர, அவரைப் பின்தொடர்ந்து அவரது படையினரும் ஸஈத் முன் வந்தனர்.
ஆடம்பரத்திலும், செல்வச் செழிப்பிலும் மிதக்கும் கவர்னரும், படாடோபம் கொண்ட படையினரும் தங்கள் முன் சரணடைவதற்காக வருவதைக் கண்ட ஸஈதும், முஸ்லிம்களும் நாயனுக்கு நன்றி நவின்று சாஷ்டாங்கத்தில் விழுந்து அவனைப் புகழ்ந்தனர்.
ஆம்! இதுதான் இஸ்லாம் கற்றுத் தந்த இங்கிதம். வெற்றி முகத்திலும் வெற்றுக் காகிதங்கள் நாங்கள், நீயே அனைத்து வெற்றிகளுக்கும் சொந்தக்காரன் என்று படைத்தவனிடம் பறை சாற்றும் பண்பு.
(“இஸ்லாம் வென்றெடுத்த ஷாம்” நூலிலிருந்து...) |