"பேசாமல் இரு,  கதவை அல்லாஹ் எப்படித் திறக்கிறான் என்று பார்!!
  கதவு அடைபட்டிருப்பது பற்றிய சிந்தனையிலேயே ஏன் தொலைந்து போகிறாய்?!" என்கிறார் மௌலானா ஜலாலுத்தீன் ரூமி (ரஹ்). ..
  சங்கைமிகு குர்ஆனில் மனித வாழ்வைப்பற்றி அல்லாஹு தஆலா சுருக்கமாக மூன்றே வசனங்களில் கூறியுள்ளான். 1) مِنْ نُّطْفَةٍ خَلَقَهٗ فَقَدَّرَهٗ ۙ  (ஒரு துளி) இந்திரியத்திலிருந்து அவனைப் படைத்து, அவனை (அளவுப்படி) சரியாக்கினான்.
  2) ثُمَّ السَّبِيْلَ يَسَّرَهٗۙ  பின் அவனுக்காக வழியை எளிதாக்கினான். 3) ثُمَّ اَمَاتَهٗ فَاَقْبَرَهٗۙ  பின் அவனை மரிக்கச் செய்து, அவனை கப்ரில்” ஆக்குகிறான். (அல்குர்ஆன் : 80:19, 20, 21)
  எவ்வளவு சுருக்கமான பயணம் இது! ..
  வாழ்வின் வழித்தடங்களில் இலகு தான் அடிப்படை. 
  சிரமம் எதிர்பாராதது, திடீரென்று வருவது; விரைவில் போய்விடும். 
  உடைந்து போய் வேதனைப்படும் உள்ளத்திற்கு ஜப்பார்- ஆற்றுப்படுத்துபவனாகிய அல்லாஹ் விரைவில் கட்டுப் போடுவான்.
  அடைபட்ட வழியை ஃபத்தாஹ்- திறப்பவனாகிய அல்லாஹ் திறந்து விடுவான்.
  வளைந்து போன உன் காரியங்கள் நேராகும்; உன் வலிகள் விரைவில் குணமாகும்.
  நீ அல்லாஹ்வுக்குச் சொந்தம்; அவன் உன் மனதுக்கு நிம்மதியை வழங்குவான்! .. وَالَّذِيْنَ جَاهَدُوْا فِيْنَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا   "மேலும் எவர்கள் நம்முடைய வழியில் முயல்கின்றார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்துவோம்." (அல்குர்ஆன் : 29:69)
  இறைநம்பிக்கை என்பது வெறும் வார்த்தையல்ல; அது மனதுடனான போராட்டம். பொருமையும், சகிப்புத்தன்மையும் தேவை. பாரங்களையும் கடமைகளையும் நிலைநிறுத்த வேண்டும்.
  நன்மையை அடையும் முயற்சியில் தன் முழு வலிமையையும் செலவிடுபவருக்கு அல்லாஹு தஆலா அதனை இலகுவாக்கிக் கொடுக்கிறான்; 
  அல்லாஹ்வுக்கு வழிப்பட நாட்டம் கொண்டு ஒருவர் முயற்சித்தால் அவருக்கு அல்லாஹ் அதற்கான வாய்ப்பை வழங்குகிறான்.
  وَلَمَنْ صَبَرَ وَغَفَرَ اِنَّ ذٰلِكَ لَمِنْ عَزْمِ الْاُمُوْرِ  "ஆனால், எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால், நிச்சயமாக, அது மிக்க உறுதியான (வீரமுள்ள) செயலாகும்." (அல்குர்ஆன் : 42:43)
  இந்த வசனத்திற்கு இப்னு ஸஅதீ (ரஹ்), தனது விரிவுரையில் கூறியுள்ளதாவது:
  "மனம் சொல்லும் சொல், செயலைக் கைவிடுவது கடினமானது; பிறரின் நோவினைகளை பொருத்துக் கொண்டு விட்டுக் கொடுப்பதும், மன்னிப்பதும், உபகாரம் செய்வதும் மிகக் கடினமானது; ஆனால் அல்லாஹ் யாருக்கு இலகுவாக்கிக் கொடுக்கிறானோ அவருக்கு இலகுவானது தான்."  (பக்கம் 761) ..
  சுனனுத் திர்மிதீயில் 2616- ம் எண்ணில் இடம் பெற்றுள்ள ஹதீஸில் முஆத் பின் ஜபல் (ரழி) அறிவிக்கிறார்கள்: 
  ஒரு பயணத்தின் போது, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடன் இருந்தேன். 
  ஒருநாள் அவர்களுக்கு நெருக்கமாக இருந்த போது, "என்னை சொர்க்கத்தில் நுழையச் செய்து, நரகத்திலிருந்து தூரமாக்கும் நற்செயலை எனக்கு அறிவியுங்கள்!" என்று கேட்டேன். 
  "மகத்தானதொன்றை என்னிடம் கேட்டு விட்டீர்; அல்லாஹ் யாருக்கு அதனை இலகுவாக்கித் தருகிறானோ அவருக்கு அது இலகுவானது தான்." எனக்கூறி வணக்கவழிபாடுகள் தொடர்பான பல்வேறு அம்சங்களையும், நரகத்திலிருந்து தப்பிக்க நாவைப் பேணிகாக்க வேண்டிய அவசியத்தையும்  எடுத்துரைத்தார்கள்.
  அல்லாஹு தஆலா இலகுவாக்கித் தந்து விட்டால் சொர்க்கமும் இலகுவாகக் கிடைத்து விடும் என்பதுடன், சொர்க்கத்தை அடையக் காரணமான அமையும் வணக்க வழிபாடுகளும் இலகுவாக அமைந்து விடும் என்பதை இந்த ஹதீஸின் மூலம் அறியலாம். ..
  "மாஉ ஜம்ஜம் லிமா ஸுஇல"- ஜம்ஜம் நீர், எந்த எண்ணத்தில் குடிக்கப் படுகிறதோ, அதற்குரியது." என்ற நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பொன்மொழிக்கு சர்க்கார் கிப்லா நிஜாமிஷாஹ் நூரி தாமத் பரக்காத்துஹு, ஒரு முறை இப்படி விளக்கம் கூறினார்கள்: 
  "அல்லாஹ்விடம் அல்லாஹ்வைக் கேட்க வேண்டும்; குறிப்பாக ஜம்ஜம் நீரை அருந்தும் போது கேட்கப்படும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது என்றால், அப்போது ஈமான் ஸலாமத்- இறை நம்பிக்கையில் ஆரோக்கியத்தைக் கேட்க வேண்டும்."
  வாழ்க்கைப் பாதையில் நம் பயணம் இலகுவாக அமைவது அல்லாஹு தஆலாவின் மீது நாம் கொள்ளும் நம்பிக்கையினால் சாத்தியமாகிறது. ..
  காழி அபூபக்ர் இப்னுல் அரபி மாலிக்கி (ரஹ்) கூறினார்கள்:
  "ஹிஜ்ரீ 489- ம் ஆண்டு நான் மக்காவில் இருந்தேன். ஜம்ஜம் தண்ணீரை அதிகளவில் அப்போது குடித்தேன். குடிக்கும் போதெல்லாம், இறைநம்பிக்கையும், கல்வியும் அதிகரிக்க வேண்டுமென நிய்யத்- எண்ணம் கொண்டேன். அதன் விளைவாக, அல்லாஹு தஆலா கல்வியை எனக்கு இலகுவாக்கி தன் பரக்கத்- அருள்வளத்தை திறந்து விட்டான். 
  கற்றபடி செயலாற்ற இறையருளை வேண்ட மறந்து விட்டேன். நான் அவ்விரண்டையும் வேண்டியிருக்க வேண்டுமே! இரண்டையும் குறையின்றி அல்லாஹ் எனக்கு திறந்து விட்டிருப்பான்.
  இப்போது, செயலை விட அதிகமாக கல்வியில் எனது தேர்ச்சி அமைந்து விட்டது." (ரஹ்லத்துல் ஹிஜாஸிய்யா, ஹுழைகீ) ..
  அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்: 
  "குர்ஆனின் ஐம்பது வசனங்களை ஒரு இரவில் ஓதி வருபவர, ஃகாபில்- மறதியாளர் பட்டியலில் எழுதப்பட மாட்டார்.
  நூறு வசனங்களை ஓதுபவர், கானித்- கீழ்ப்படிந்து நடப்பவர்களில் எழுதப்படுவார்.
  முன்னூறு வசனங்கள் ஓதுபவருக்கு கின்தார்- அதிகளவு செல்வம் வழங்கப்படும்.
  தொள்ளாயிரம் வசனங்கள் ஓதுபவருக்கு  நலவும், அவர் குர்ஆனை சிந்தனையுடன் ஓதுபவராக இருந்தால் குர்ஆனில் விளக்கமும் திறந்து விடப்படும்."
  (முஸன்னஃப் இப்னு அபீஷைபா 30709) .. وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ  "நாம் இந்தக் குர்ஆனை, அறிவுரை பெறுவதற்கான எளிய வழியாக அமைத்திருக்கின்றோம். பின்னர், அறிவுரையை ஏற்றுக்கொள்ள எவரேனும் இருக்கின்றாரா?" (அல்குர்ஆன் : 54:17)
  "மனிதர்கள் ஓதும் விதமாக அவர்களின் நாவுகளுக்கு அல்லாஹ் குர்ஆனை இலகுவாக்கிக் கொடுத்திருக்க -வில்லையென்றால் படைப்பினங்களில் வேறு யாரும் கூட அதனைச் செய்ய முடிந்திருக்காது." என்று  இந்த வசனத்திற்கான விளக்கத்தில் இப்னு அப்பாஸ் (ரழி) கூறியுள்ளார்கள்.
  இப்னு உஃதைமீன் (ரஹ்) கூறினார்கள்: 
  "குர்ஆனை சிந்திப்பவருக்கு அதன் கருத்துக்களை இலகுவாக விளங்க வைக்கிறான். 
  அதனை மனனம் செய்பவருக்கு அதன் வார்த்தைகள் உச்சரிப்பை இலகுவாக்கி  வைக்கிறான்.
  குர்ஆனை மனம் செய்வதற்காக ஆரோக்கியமான மனதுடன் அதனை மூன்னோக்கினால், அல்லாஹ் அதனை உனக்கு எளிதாக்கி வழங்குகிறான்.
  ஆய்வில் ஈடுபட்டு, குர்ஆனின் கருத்துக்களை விளங்கிக் கொள்ளும் எண்ணத்துடன் அதை முன்னோக்கினால் அதையும் அல்லாஹ் உனக்கு எளிதாக்கி வைப்பான்." (லிகாஉல் மஃப்தூஹ், 13/184)
  தெளிவு பிறப்பதன் அழகைக் கண்டு ரசிக்கத் தொடங்கி விட்டால், குழப்பம் ஒரு பொருட்டாகத் தெரியாது.
  #முஸ்தஃபா_காசிமி  |