Tamil Islamic Media ::: PRINT
05 மன அமைதியும் ஒரு அருட்கொடையே

நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை தங்களது தோழர்களிடையே இருந்தபோது, அவர்கள் செல்வத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

'இறைவனுக்கு அஞ்சி நடப்பவருக்கு செல்வம் இருப்பதில் தவறில்லை. ஆனால், இறைவனுக்கு அஞ்சி நடப்பவருக்கு செல்வத்தை விட ஆரோக்கியம் மேலானது. மேலும், மன அமைதி (திருப்தி) என்பது இறைவனின் அருட்கொடைகளில் ஒன்றாகும்.'

உண்மையான விசுவாசியின் பண்புகள்:

உங்களுக்கு ஒரு நோய் வந்தால், நீங்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும்.

உங்களுக்கு ஒரு அருட்கொடை (நன்மை) கிடைத்தால், நீங்கள் நன்றி செலுத்துபவராக இருக்க வேண்டும்.

உங்களுக்குப் பிரியமான ஒருவரை நீங்கள் இழந்தால், இறைவனின் நாட்டம் என்று அவனிடமே ஒப்படைத்துவிட வேண்டும்.

உங்களது வாழ்வாதாரம் (ரிஸ்க்) நெருக்கடியானால், கண்ணியமிக்க இறைவன் ஏதோ ஒரு ஞானத்திற்காகவே அதைத் தடுத்திருக்கிறான் என்று நம்ப வேண்டும்.

ஒரு அழகான வீட்டைக் கண்டால், அதன் உரிமையாளருக்காக அபிவிருத்தி (பரகத்) வேண்டிப் பிரார்த்திக்க வேண்டும்.

ஒரு ஆடம்பரமான காரைக் கண்டால், பொறாமை கலந்த பார்வையுடன் பார்க்காமல், அதன் உரிமையாளருக்கு இறைவன் நற்பேற்றை (தவ்பீக்) வழங்க வேண்டும் என்று மனதார வேண்டிக்கொள்ள வேண்டும்.

ஒரு தம்பதியினரிடையே அன்பையும் நெருக்கத்தையும் கண்டால், அவர்களுக்கு அந்த அன்பை இன்னும் அதிகமாக்க இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும்.

உங்களைத் தவிர மற்றவருக்கு ஒரு வேலை (உத்தியோகம்) கிடைத்தால், அதில் அவருக்கு உதவி செய்யுமாறு இறைவனிடம் வேண்ட வேண்டும்.


பிறர் மீது அன்பு கொள்வது என்பது ஒரு சிறந்த போராட்டமாகும் , அது அனைவராலும் முடிந்துவிடாது.

நீங்கள் எப்போது இப்படியான மனப்பக்குவத்தைப் பெறுகிறீர்களோ, அப்போது துயரங்கள் உங்களைப் பாதிக்காது.

ஏனெனில், உங்கள் சொர்க்கம் உங்கள் இதயத்திற்குள்ளேயே இருக்கிறது!

رسائل من النبي صلى الله عليه وسلم أدهم شرقاوي

தமிழில் : ஆவூர் இஸ்மாயில் ஹஸனீ



The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.