Tamil Islamic Media ::: PRINT
தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?'
First Published : 11 Feb 2012 04:02:01 AM IST

Last Updated : 11 Feb 2012 04:12:38 AM IST

வியாழக்கிழமை தொலைக்காட்சிச் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது, சென்னையில் 9-ம் வகுப்பு மாணவன் ஒருவன் வகுப்பு அறையில் ஆசிரியையை வெறித்தனமாகக் குத்திக் கொலை செய்த சம்பவம். 39 வயதான உமா மகேஸ்வரி, ஆசிரியர் பணியை மக்கள் சேவையாகக் கருதி, தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் என்பதை அறியும்போது, கொலையுண்டிருப்பது ஓர் ஆசிரியையா அல்லது தமிழகத்தின் வருங்காலமா என்று நெஞ்சம் துணுக்குறுகிறது.
 
அதே சென்னையில் இன்னொரு சம்பவம். அனகாபுத்தூரில் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை, அவரிடம் நண்பர்களாகப் பழகிய நான்கு இளைஞர்கள் வஞ்சகமாக அழைத்துச் சென்று, அவருக்குக் குளிர்பானத்தில் மதுவைக் கலந்து கொடுத்து வெறித்தனமாகக் கற்பழித்திருக்கிறார்கள். அந்த நான்கு பேரும் மாணவர்கள். அதிலும் பொறியியல் படிக்கும் மாணவர்கள்.
இளம் தலைமுறையினர் மத்தியில் காணப்படும் பொறுமையின்மைக்கும், வெறித்தனமான பிடிவாதங்களுக்கும், கட்டுப்பாடில்லாத ஒழுக்கக் கேடுகளுக்கும் அடிப்படைக் காரணங்கள் இறையுணர்வு இல்லாமையும், நுகர்வுக் கலாசாரத்தின் தாக்கமும்தான் என்பது நமது தேர்ந்த கருத்து. அதிலும் குறிப்பாக, நுகர்வுக் கலாசாரம் கட்டவிழ்த்து விட்டிருக்கும் ஒழுக்கக் கேடுகளில் முக்கியப் பங்கு வகிப்பது வக்கிரத்தனங்களின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் காட்சி ஊடகங்களும், வெறித்தனத்துக்கு வழிகோலும் மதுப் பழக்கமும்தான் இந்தப் போக்குக்குக் காரணங்கள்.
 
இறையுணர்வாளர்கள் தவறிழைக்கவில்லையா? இறைவனின் பெயரால் இழைக்கப்பட்ட கொடுமைகள் கொஞ்சமா நஞ்சமா? ஆஷாடபூதிகளாகவும், ருத்திராட்சப் பூனைகளாகவும், கபட வேட தாரிகளாகவும் எத்தனையோ பேர் காவி உடை தரித்த, வெள்ளை அங்கியை அணிந்த காமுகர்களாக உலவினார்கள் தெரியுமா? என்றெல்லாம் இறை மறுப்பாளர்கள் எதிர்க்கேள்வி எழுப்பக்கூடும். அவர்கள் கூறுவது எல்லாம் பொய் என்று நாம் மறுக்கவோ, ஒதுக்கித் தள்ளவோ தயாராக இல்லை.
 
அதேசமயம், இறையுணர்வு என்பது பரவலாக, சமுதாயத்தில் ஒழுக்கத்தையும் நேர்மையையும் தவறு செய்தால் இறைவன் தண்டிப்பார் என்கிற தார்மிக பய உணர்வையும் ஏற்படுத்தி வந்திருக்கிறது. கபடவேட தாரிகள் சாமியார்களாகவும், பாதிரியார்களாகவும், மௌல்விகளாகவும் உலவி இருக்கலாம். ஆனால், அப்படி நடந்துகொண்ட ஒரு சிலரைக் காரணம் காட்டி சமுதாயத்தில் ஒழுக்கத்தைப் போதித்த தெய்வத் தொண்டர்கள் அனைவரையும் நாம் இழிவு செய்துவிட முடியாது. கூடாது!
 
இளைஞர்களுக்கு ஆன்மிக போதனை நடத்தி வந்த காலகட்டத்தில், பேராசைக்கு இடம் கொடுக்காதே, ஒழுக்கம்தான் உயர்வு தரும், இறை நம்பிக்கை உன்னைக் காப்பாற்றும் என்று பிஞ்சு உள்ளங்களில் நல்ல போதனைகளைப் பள்ளிகளிலும் வீட்டிலும் ஊட்டி வளர்த்துவந்த காலங்களில் எங்கோ ஒன்றிரண்டு சம்பவங்கள் நடந்ததுபோக, இப்போது இளைஞர்கள் பாதை தவறி நடப்பது என்பதே ஒரு நெறியாக மாறி விட்டிருக்கிறது என்பதுதான் உண்மை.
 
கடவுள் என்று ஒருவர் இல்லையென்றால், அப்படி ஒருவரை நாம் கண்டுபிடித்து நிலைநிறுத்தியாக வேண்டும் என்பார் பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட சிந்தனையாளர் வால்டேர். பள்ளிகளில் இறையுணர்வு போதிக்கப்பட்டது. ஆத்திச்சூடியும், கொன்றை வேந்தனும், உலக நீதியும், மூதுரையும் பிஞ்சு உள்ளங்களை நெறிப்படுத்த சொல்லிக் கொடுக்கப்பட்டன. இப்போதைய நர்சரி ரைம்ஸ் கல்வி முறை, பணத்தைத் தேடுவதும் வாழ்க்கை வசதிகளைத் தேடுவதும், சிற்றின்ப சந்தோஷங்களுக்கு வழிகோலுவதும் மட்டுமே தனது குறிக்கோள் என்று மாறிவிட்டிருப்பதன் வெளிப்பாடுதான் சென்னையில் நடந்தேறியிருக்கும் அந்த இருவேறு சம்பவங்கள்.
 
கற்பழிக்கப்பட்ட பெண், தனது நண்பர்கள் என்று அந்த நான்கு மாணவர்களையும் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்து தாய்க்கு அறிமுகப்படுத்தியபோது, சகோதரிபோலத் தனது மகளுடன் பழகுகிறார்கள் என்று அந்தத் தாய் கருதி அதை அங்கீகரித்ததன் விளைவுதான் இன்று கற்பழிப்பில் முடிந்திருக்கிறது என்று நாம் சொன்னால் நம்மைப் பழமைவாதிகள் என்று ஒதுக்கக்கூடும். ஆனால், அதுதானே நிஜம்?
ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருப்பதுபோலத் திரைப்படங்களும், தொலைக்காட்சித் தொடர்களும், கதைகளும் பரவலாக வெளிவருகின்றன. அவை நடைமுறையில் சாத்தியம்தானா என்பதை நினைத்துப் பார்க்கக்கூட திராணியற்றவர்களாக நாம் மாறிவிட்டிருக்கிறோம். காரணம் இதைத் தவிர்க்க முடியாது என்கிற சூழ்நிலையை இன்றைய நுகர்வுக் கலாசாரச் சூழல் உருவாக்கி விட்டிருக்கிறது.
 
திரைப்படங்கள் சமுதாய சீர்திருத்தங்களுக்கு வித்திட்டதுபோய் சமுதாயச் சீரழிவுக்கு வழிகோலிக் கொண்டிருக்கின்றன. வாழ்க்கையில் காதலைத் தவிர, வேறு உணர்வுகளே இல்லை என்பதுபோன்ற பிரமையை ஏற்படுத்தாத திரைப்படங்கள் ஒன்றிரண்டு மட்டுமே என்றாகிவிட்டது.
 
பள்ளி மாணவர்கள் தொடங்கி பிறந்த நாளானாலும், தேர்வில் வெற்றி பெற்றாலும், மகிழ்ச்சியான தருணம் என்றாலும் மது அருந்திக் கொண்டாடுவது என்பது கலாசாரமாகிவிட்டிருக்கிறது. போதாக்குறைக்கு, நமது அரசும் ஊருக்கு ஒன்றிரண்டு என்பதுபோய் தெருவுக்குத் தெரு மதுபான விற்பனைக் கடைகளைத் திறந்து வைத்து இளைஞர்களைத் தவறான வழிக்குத் திசைதிருப்புவதில் முனைப்பாக இருக்கிறது.
 
பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் பணம் சம்பாதிப்பதை மட்டுமே லட்சியமாகக் கருதுகிறார்களே தவிர, குறைந்த வருமானமானாலும் ஒழுக்கமான நிறைந்த வாழ்வுக்கு அவர்களைப் பழக்கத் தயாராக இல்லை. ஆசிரியையை வெறித்தனமாகக் குத்திக் கொலைசெய்த அந்தப் பள்ளிச் சிறுவனுக்கு தினமும் கைச்செலவுக்கு நூறு ரூபாய் தருவார்களாம் பெற்றோர்.
திரைப்படம் பார்த்துதான் தனது பழிவாங்கும் குணம் அதிகரித்ததாகக் கூறுகிறான் அந்தப் பள்ளி மாணவன். சகோதரியாகப் பழகிய பெண்ணை போதையில் கற்பழிக்கிறார்கள் நான்கு பொறியியல் கல்லூரி மாணவர்கள். இறைவா, நாங்கள் எங்கே போகிறோம்?
The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.