Tamil Islamic Media ::: PRINT
இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!!

கோபம் – இது எத்தனை பெரும் விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. கோபத்தினால் பல நன்மைகளை இழந்தவர்கள் உண்டு. பல குடும்பங்கள் பிரிந்ததும் உண்டு. கோபம் மூலம் பலர் நண்பர்களை இழந்ததும் உண்டு. பல நண்பர்கள் கடும் விரோதிகளாக மாறியதும் உண்டு.

தாய், தந்தையர் தங்கள் பிள்ளைகளின் நலனுக்காக கோபிக்கிறார்கள். அதை அக்குழந்தைகள் புரிந்துகொண்டால், அவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமைகிறது. அக்கோபத்தை பிள்ளைகள் தவறாக புரிந்துகொண்டால், அங்கு பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கு மத்தியில் பாசம் பறிபோய்விடுகிறது. அதேபோல் மனைவி தன் கணவன் மீது கோபம் கொள்கிறாள் அல்லது கணவன் தன் மனைவி மீது கோபம் கொள்கிறான். அது பொய் கோபமாக, ஊடலாக இருந்தால், அது இன்பமாக மாறிவிடுகிறது. அதே கோபம் உண்மையான கோபமாக இருந்தால் இருவரின் வாழ்க்கையும் நிம்மதியற்று போய்விடுகிறது. சில சமயம் அக்கோபம் புயலாக மாறி இருவரும் பிரிந்து வாழுதல் அல்லது பெரும் விவாகரத்து வரை அழைத்துச் செல்கிறது. கோபத்தால் பலர் தங்களுடைய உடல் நலத்தையும் கெடுத்துக்கொள்கிறார்கள். இப்படி பல விளைவுகளை ஏற்படுத்தும் இந்த கோபத்தைப் பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதைக் காண்போம்.

அல்லாஹ் தன் திருமறையில் 3:134 வசனத்தில் கோபத்தைப் பற்றி குறிப்பிடும் போது, (பயபக்தியுடையவர்கள்) கோபத்தை அடக்கிக்கொள்வார்கள். மனிதர்கள் செய்யும் தவறுகளை மன்னிப்பார்கள் என்று கூறுகிறான்.

ஒரு முறை ஒரு மனிதர் வந்து நபி (ஸல்) அவர்களிடம், ‘எனக்கு உபதேசியுங்கள் என்று கேட்டார். கோபம் கொள்ளாதே என்று நபியவர்கள் பதில் சொன்னார்கள். அவர் மீண்டும், மீண்டும் பல முறை உபதேசியுங்கள் என்று கேட்டபோது அப்போதும் நபியவர்கள் கோபம் கொள்ளாதே என்றே பதில் சொன்னார்கள். (அபூஹுரைரா (ரலி) – புகாரி, திர்மிதீ, அஹ்மத்). கோபம் கொள்ளாதே என்று நபியவர்கள் திரும்ப திரும்ப கூறியதிலிருந்து நாம் கோபத்தின் விளைவு எவ்வளவு பெரியது என்பதை விளங்கிக்கொள்ளலாம். சமுதாயத்தினரிடையே குழப்பம், உறவுகள் பிரிவு, உடல் நலக் கேடு என எல்லா வகையிலும் இந்த கோபம் முக்கிய ஆணிவேராக அமைகிறது.

யூதர்களில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அபுல்காசிமே! அஸ்ஸாமு அலைக்க (உமக்கு மரணம் உண்டாகட்டும்!) என்று சற்றே மாற்றி ஸலாம் கூறினர். நபி (ஸல்) அவர்கள், வ அலைக்கும் (நீங்கள் சொன்னது உங்களுக்கும் உண்டாகட்டும்!) என்று (பதில்) சொன்னார்கள். அப்போது அருகில் இருந்த ஆயிஷா (ரலி) அவர்கள், அவர்களை கோபப்பட்டு சபிக்கும் விதமாக, அலைக்குமுஸ்ஸாமு வத்தாமு (உங்களுக்கு மரணமும், இழியும் உண்டாகட்டும்!) என்று (பதில்) சொன்னார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ஆயிஷாவே! அருவருப்பாகப் பேசுபவளாக இருக்காதே! என்று கண்டித்தார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், அவர்கள் சொன்னதை நீங்கள் செவியுறவில்லையா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நான்தான் அவர்கள் சொன்னதற்கு, வ அலைக்கும் (நீங்கள் சொன்னது உங்களுக்கும் உண்டாகட்டும்!) என்று பதில் சொல்லிவிட்டேனே! (அதை நீ கவனிக்கவில்லையா?) என்று திருப்பிக் கேட்டார்கள். (ஆயிஷா (ரலி) – புகாரி, முஸ்லிம்).

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அந்த யூதர்கள் கூறியதற்கு, இப்படி கோபமாக பதில் சொன்னதற்கு நபி (ஸல்) அவர்கள் கண்டித்தார்கள். எதிரிகளிடமும் மென்மையான போக்கை கடைப்பிடித்து அவர்களை திருத்துவதே நபியவர்களின் அழகிய வழிமுறை. ஏன் நபி (ஸல்) அவர்கள் மென்மையான போக்கைக் கையாண்டார்கள்? காரணம், நிச்சயமாக அல்லாஹ் மென்மையானவன். அனைத்து விஷயங்களிலும் மென்மையை விரும்புகிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆயிஷா (ரலி) – புகாரி, முஸ்லிம்).

அதேப் போல் ஒரு முறை பள்ளியில் சிறுநீர் கழித்த கிராமவாசி ஒருவரை நபித்தோழர்கள் கோபம் கொண்டு தாக்க முயன்றபோது, அவர்களைத் தடுத்து நிறுத்தி, சிறுநீர்பட்ட அந்த இடத்தை தம் கைகளால் தண்ணீர் ஊற்றி தூய்மை செய்தது நபியவர்களின் மென்மையின் உச்சக்கட்டம். இதேப் போல் ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது இறைமறுப்பாளர்கள் கடுமையாக நடந்து கொண்டார்கள். அவர்களிடமும் கோபம் கொள்ளாமல் மென்மையான போக்கைக் கையாண்டு அந்த உடன்படிக்கையில் வெற்றிப் பெற்றது மென்மைக்குக் கிடைத்த வெற்றியேத்தவிர கோபத்தால் கிடைத்த வெற்றியல்ல.

மென்மையை இழப்பவன் நன்மையை இழப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) – முஸ்லிம், அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்). பொதுவாக கோபம் கொள்பவர் தன் நிலையை இழந்துவிடுவார். அதனால்தான் அரபியில் ஒரு பழமொழி சொல்வார்கள்: கோபத்தின் ஆரம்பம் பைத்தியம், முடிவு வருத்தம் என்று சொல்வார்கள். இதேப் போல் ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள்: Anger is a short madness (கோபம் என்பது ஒரு அரைப்பைத்தியம்). உண்மையில் பைத்தியக்காரன் தான் என்ன செய்கிறோம், என்ன பேசுகிறோம் என்பதை அறியமாட்டான். கோபம் கொண்டவரும் அதேபோல் தான் என்ன செய்கிறோம், என்ன பேசுகிறோம் என்பதை அறியாமல் இருப்பார்கள். கோபத்தில் இருப்பவர்கள் கூறுவார்கள், கோபம் வந்தா நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது என்று சொல்வார்கள். தமிழில் கூட கோபதைப் பற்றி ஒரு பழமொழி சொல்வார்கள்: கோபத்தோடு எழுந்தவன் நஷ்டத்தோடு உட்காருவான் என்று சொல்வார்கள். உண்மையில் கோபம் கொண்டு எழுந்து அதற்கான செயலில் ஈடுபடும் போது அநீதீ, அட்டூழியம், உறவுகள் பிரிவு சில சமயம் கொலைக் கூட செய்வார்கள்.

சிலருக்கு கோபம் வந்தால் அந்த கோபத்திற்கு காரணமான நபரைப் பார்த்து, அசிங்கமான கெட்ட வார்த்தைகளால் திட்டுவார்கள். அதுவும் தாயையும், அக்காவையும் விபச்சாரம் செய் என்று கருத்துப்பட உள்ள வார்த்தைகளை கூறுவார்கள். இது எல்லா சமுதாயத்தினரிடமும் சர்வசாதாரணமாக இருக்கிறது. திட்டுவதுதான் சண்டைக்கும், கொலைக்கும் முக்கிய காரணமாக அமைகிறது. கெட்டவார்த்தைகள் பேசுபவன் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) – அஹ்மத், இப்னுஹிப்பான்) மற்றொரு ஹதீஸில்: தன் நாவால் வெட்கம் கெட்ட விஷயங்களைப் பேசுபவனையும், கெட்டவார்த்தைகள் கூறுபவனையும் அல்லாஹ் மிகவும் வெறுக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபுதர்தா (ரலி) – திர்மிதீ). திட்டக்கூடியவனாகவோ, சாபமிடுபவனாகவோ, கெட்ட செயல்கள் செய்யகூடியவனாகவோ, கெட்டவார்த்தை பேசுபவனாகவோ ஒரு மூமின் இருக்கமாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு மஸ்வூத் (ரலி) திர்மிதீ, அஹ்மத், இப்னுஹிப்பான்). கெட்டவார்த்தைகளை சொல்பவர்கள் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான், கெட்டவார்த்தைகளை சொல்பவர்கள் மூமின்களாக இருக்கமுடியாது என்றால் எந்த அளவுக்கு இந்த அசிங்கமான கெட்டவார்த்தைகளின் பாதிப்புக்கள் இருக்கும் என்பதை உணரவேண்டும்.

சிலர் கோபத்தினால் அதற்கு காரணமானவரை சபிப்பார்கள். சபிக்கும் போது என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் சில நேரங்களில் சபித்துவிடுவார்கள். ஆனால் அது எவ்வளவு பயங்கரமானது, அதன் பின் விளைவு என்ன என்பதை பற்றிச் சிறிது கூட கவலைப்படுவதில்லை. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மற்றவரை ஒருவர் சபிக்கும் போது அந்து சாபம் வானத்திற்கு செல்கிறது. அங்கே வானத்தின் கதவுகள் மூடியிருக்கின்றன. பின்பு அது உலகத்திற்கே திரும்புகிறது. உலகத்திலும் கதவுகள் மூடியிருக்கின்றன. பின்பு அது வலது புறமும், இடது புறமும் அலைந்து திரிகின்றது. அங்கும் வழி கிடைக்காததால், அது சொன்னவரிடமே வந்து சேருகிறது. (அபுதர்தா (ரலி) – அபூதாவூத்). மற்றொரு ஹதீஸில், ஒருவர் மற்றவரை பாவி என்றோ, காபிர் என்றோ அழைத்தால், அவர் (உண்மையில்) அவ்வாறு (பாவியாக, காபிராக) இல்லையாயின், அது சொன்னவரிடமே வந்து சேருகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபுதர் (ரலி) – புகாரி).

பொதுவாக கோபமும், பொறாமையும் உடன் பிறந்தவர்கள் என்று சொல்லலாம். காரணம் பொறாமையின் உச்சக்கட்டம்தான் கோபம். நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: உங்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயத்தினரைப் பிடித்த பொறாமை மற்றும் கோபம் ஆகிய வியாதிகள் உங்களையும் பீடித்துள்ளன. அவை (இரண்டும்) மழித்துவிடக்கூடியவை. முடியை மழிக்கும் என்று கூறமாட்டேன் எனினும் அவை மார்க்கத்தையே மழித்துவிடும் என்று கூறினார்கள். (ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) – திர்மிதீ, அஹ்மத்)

இந்த இரண்டு குணங்களான பொறாமை மற்றும் கோபம் ஆகியவற்றை கொண்ட சமுதாயத்தினர் சிறப்பாக வாழ்ந்ததாக வரலாறே கிடையாது. இருக்குமிடம் தெரியாமல் அழிந்தார்கள் என்பதே உண்மை. நபி யூஸுப் (அலை) அவர்கள் மீது பொறாமையும், கோபமும் கொண்டு, தன்னுடைய தம்பி என்றும் பார்க்காமல் பாழும் கிணற்றில் தள்ளினார்கள். இறுதியில் அவர்கள் தன் தம்பியிடம்தான் தஞ்சம் புகுந்தார்கள். இது பொறாமை மற்றும் கோபதால் விளையும் தீமையைப் பற்றி திருக்குஆன் கூறும் உண்மைச் சம்பவம். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்தக் கோபத்தை விடுவதே சிறந்தது.

ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள்! சண்டையிட்டுக் கொள்ளாதீர்கள்!

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.