Tamil Islamic Media ::: PRINT
தன்னம்பிக்கை கொள்ளுங்கள் !


மெளலானா மெளலவி சையிது நிஜாமி ஷாஹ் நூரி பாகவி

தன்னம்பிக்கை என்பது மனிதனின் வாழ்வில் இடம்பெறவேண்டிய இன்றியமையாத உணர்வாகும். தன்னம்பிக்கையற்ற மனிதர் தம் தனிப்பட்ட வாழ்விலும் இல்லறவாழ்விலும் பொதுவாழ்விலும் வெற்றிபெற முடியாதவராகவே இருப்பார். பொதுவாக தன்னம்பிக்கையே மனிதனைச் செயல்பட வைக்கும் ஊக்குவிப்புக் கருவியாக உள்ளது. சாதனையாளர்களின் வெற்றிக்குத் தன்னம்பிக்கையே ஆணிவேராகவும் அடிப்படையாகவும் அமைந்துள்ளது. ஒரு தனிமனிதனுக்கு இது ஏற்புடையது போன்றே ஒரு சமூகத்தின் வெற்றி வாழ்வுக்கும் இது பொருந்தக் கூடியதாகவே இருக்கிறது.

தன்னம்பிக்கையின் முதல் கட்டம் தன்னைப் பற்றிய சுய மதிப்பீட்டில் துவங்குகிறது. தன்னால் சாதிக்க முடியும் என்ற உறுதிப்பாட்டைச் சுயநிலையில் உணர்வது என்பதே தன்னம்பிக்கையாகும். அதற்கு உரத்தை ஏற்படுத்தக் கூடியவையாக அவன் பெற்றிருக்கும் கல்வி, செயலாற்றல், பொருளாதாரம், பதவி போன்றவை அமைந்திருக்கின்றன. இவை அவனது தன்னம்பிக்கைக்குப் பின்புலமாக அமைந்திருக்கின்றன. மனித உள்ளத்தில் ஏற்படும் தாழ்வு மனப்பான்மையும் பயம் போன்ற கோழைத்தனமுமே தன்னம்பிக்கையின் முதல் எதிரி. அவற்றை நீக்கி, “எப்பேர்ப்பட்ட எதிர்ப்புகளாயினும் அதனை நான் சந்திப்பேன், சாதிப்பேன்” என்ற உறுதிப்பாட்டை உள்ளத்தின் அடித்தளத்தில் பதியவைத்துக் கொள்வதே தன்னம்பிக்கையின் மறுபெயர் என்றும் கூறலாம். எதிர்நிலைகளைச் சந்திக்க நேரும்போதுதான் தன்னம்பிக்கை மனிதனுக்கு அவசியத் தேவை. எதிர்நிலைகள் என்பது யுத்தக் களத்திற்கு மட்டும் சொந்தமானதல்ல. பொதுவாழ்வின் அனைத்து நிலைகளுக்கும் அது பொருந்தும்.

இறைநம்பிக்கையாளர்களே, (எதிரிகளின்) கூட்டத்தினரை நீங்கள் சந்தித்தால் (எவ்விதக் கலக்கத்தையோ பயத்தையோ மனதில் கொள்ளாமல்) உறுதியான (தன்னம்பிக்கை) நிலைப்பாட்டை மேற்கொள்ளுங்கள். அல்லாஹ்வை அதிகமாக (மனதாலும் வாயாலும்) நினைவு கூறுங்கள். அதன்மூலம் நீங்கள் வெற்றியாளர்களாக ஆகிவிட முடியும். (8:45)

இன்றைய உலகில் தனிமனித நிலையிலும், சமூகரீதியிலும் பல முனைகளிலும், எதிர்நிலையாளர்களை அனுதினமும் சந்திக்கக்கூடியவர்களாக இஸ்லாமியச் சமூகத்தவர்களே இருந்து வருகிறார்கள். இன்று நம்மைப் பற்றியும், சுற்றியுமே பலதரப்பட்ட ஊடகங்களின் மூலம் பிரச்சார யுத்தமே முனைப்புடன் நிகழ்த்தப்பட்டு வருகிறது. ஆயுதங்களின் பயன்பாடுகளெல்லாம் இரண்டாம் கட்டமாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆஃப்கானிஸ்தானை அழிக்க அமெரிக்கா விரும்பியது. இரட்டைக் கோபுரத் தகர்ப்பு நிகழ்த்தப்பட்டது. எவ்வித ஆய்வையோ, ஆதாரங்களையோ மேற்கொள்ளாமலும் முன்வைக்காமலும் மறுவினாடியே அமெரிக்க ஜனாதிபதி புஷ் ஊடக யுத்தத்தைத்தான் முதலில் துவக்கினார். அல்காயிதா அதன் முன்னோடி உசாமா பின் லாதின் ஆகியோரைக் காரணமாக்கிப் பிரச்சார யுத்தத்தைத் தொடங்கினார். அதன்பின்பே ஆயுதப்போரைத் தொடங்கினார். ஆஃப்கானிஸ்தான் சிதைக்கப்பட்டது. ஈராக்கை ஆயுதங்களால் அழிப்பதற்கு முன்னால் அணு ஆயுதங்களை ஈரான் பதுக்கி வைத்திருப்பதாக ஊடக யுத்தத்தையே துவக்கி உலகத்தையே கோயபல்ஸ் முறையில் முட்டாளாக்கினார். அதன் பின்பே ஆயுதத் தாக்குதலைத் துவக்கி ஈராக்கைச் சின்னபின்னமாக்கினார். அநியாயமாக அதிபர் சதாமையும் தூக்கிலிட்டார். பொதுவாக இன்றைய உலகம் தனது விரோதிகளையும் வேண்டப்படாதவர்களையும் வதைக்க ஊடகப் பிரச்சார யுக்தியையே முதல் ஆயுதமாக உலகளாவிய நிலையில் பயன்படுத்தி வருகிறது.

இதற்கு இந்திய நாடும் விதிவிலக்காக இருக்கவில்லை. இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்சார (ஊடக யுத்த)த்தின் மூலமே மோடி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார் என்பதை நாம் அறிவோம். முன்பெல்லாம் யுத்தத்தில்தான் வெளிநாட்டு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. மோடி மேற்கொண்ட (ஊடகப்) பிரச்சார யுத்தத்திற்கும்கூட வெளிநாட்டு நிறுவனத்தின் (பிரச்சார ஆயுதம்) மூலம் மக்களை மயங்கிடச் செய்தார். கவர்ச்சியான அறிவிப்புகள், ஆலோசனைகள் போன்ற ஊடக ஆயுதங்களே தேர்தலில் பயன்படுத்தப்பட்டன. பொதுவாக உலக நடப்புகளும் நமது நாட்டில் இன்று செயல்படுத்தப்பட்டு வரும் அணுகுமுறைகள் அனைத்தும் ஊடக (யுத்த)ங்களைச் சார்ந்தவையாகவே இருக்கின்றன. அணு ஆயுதங்களால் நிகழ்த்தப்படும் யுத்தங்கள் கூடக் குறிப்பிட்ட இடங்களிலும் நாடுகளிலும் மட்டுமே அவை பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆனால் ஊடக யுத்தம் காற்றடிக்கும் திசைகளில் எல்லாம் பேரழிவை ஏற்படுத்திவிடும் வல்லமையைப் பெற்றிருக்கிறது.

இவ்வாறான சூழ்நிலையில் மேலே குறிப்பிட்டுள்ள திருக்குர்ஆன் வசனம் (8:45) வசன அறிவிப்பின்படி எதிரிகளின் கூட்டத்தை (அவர்களால் தொடுக்கப்படும் தவறான தகவல் யுத்தங்களைச்) சந்திக்கும்போது அல்லாஹ் அறிவுறுத்தியுள்ளபடி நாம் முதலில் மேற்கொள்ளவேண்டியது ‘ஒருங்கிணைந்த உறுதிப்பாடே’ ஆகும். ஸபத்த என்ற பதத்தின் அரபி ஏவல் வினைக்கு, ‘உறுதியான நிலைப்பாடு’ என்று கூறலாம். இது மனித உள்ளத்தில் ஏற்படும் துணிவு சார்ந்த உணர்வாகும். அதன் வெளிப்பாடு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மேவி நிற்கும். இதைத்தான் இக்கட்டுரையின் தொடக்கத்தில், ‘தன்னம்பிக்கை’ என்று குறிப்பிட்டிருந்தோம்.

நாம் யார்மீது ஈமான் கொண்டிருக்கிறோமோ அந்த அல்லாஹ்வின் தொடர்பு நமக்கு அளப்பரிய பின்பலமாகும். ஏனெனில் அகிலங்கள் அனைத்திற்கும் சொந்தக்காரச் செல்வந்தன் அல்லாஹ் மட்டுமே. பணபலத்தையும் பதவி அதிகாரச் செருக்கையும் உடையவரின் உறவும் தொடர்பும் ஒரு சாதாரண மனிதனைத் துணிவு உள்ளவனாகவும் தன்னம்பிக்கை கொண்டவனாகவும் ஆக்கிவிடுவதற்கு அவன் பெற்றிருக்கும் பின்பலமே காரணமாக அமைந்திருக்கும்போது நமக்கு உதவிடவும், நம்மைப் பாதுகாத்திடவும் காத்திருப்பவனும் ஒரு நொடியில் அகிலங்களை ஆக்கிடவும் அழித்திடவும் வல்லமையுள்ளவனான அல்லாஹ்வை உறுதியான பின்பலமாக நாம் பெற்றிருக்கிறோம் என்பதை மனதில் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். ஆகவே நாம் அச்சமடைய வேண்டிய தேவையே இல்லை.

இறைநம்பிக்கையுடனான தன்னம்பிக்கையுடன் நீதிக்கும் நேர்மைக்கும் ஏற்ப நெஞ்சுரத்துடன் அனைத்துச் சதித்திட்டங்களையும் எதிர்கொள்வதற்கு நமது மனநிலையைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் வாழ்ந்து காட்டுவதற்கும் நாம் மிக்க தகுதி பெற்றவர்களாகவே இருக்கிறோம் என்பதை நிரூபித்திடும் வகையில் துணிவை வெளிப்படுத்திக் காட்டிடவும் வேண்டும். ஆனால் துர்பாக்கியம் என்னவெனில் இன்று நம்முள் அதிகமானோர் நிழலைக் கண்டே அஞ்சக்கூடியவர்களாக இருந்து வருகிறோம்.

இறைநம்பிக்கையாளர்களுக்கு உதவி செய்வது (அவர்களைக் காப்பது) நம்மீது கடமை (30:47) என்ற இந்த அறிவிப்பின் மூலம் எவ்வளவு பெரிய வலுவான வாக்குறுதியை அல்லாஹ் நமக்கு அளிக்கின்றான். இது எந்த அளவிற்கு நம் உள்ளத்தில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தவல்லது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இஸ்லாமிய மார்க்கத்தை நாம் வாழ்வியலாகக் கொண்டிருக்கிறோம் என்ற ஒன்றைத் தவிர நமக்கும் நம்மை எதிரிகளாகக் கருதுபவர்களுக்கும் இடையில் வேறு எந்தப் பாகுபாடும் அறவே இல்லை. இது முற்றிலும் உண்மையாகும். மேலும் இந்தக் காரணத்தை முன்வைத்தே அவர்கள் நம்மை விரோதித்துக் கொண்டும் வெறுப்புடன் சீண்டிக்கொண்டும் இருக்கிறார்கள் என்பதும் தெளிவான உண்மையாகும். அல்லாஹ்வின் சமூகத்தில் (மனித வாழ்வுக்கு ஏற்புடைய) மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. (3:19) நமக்கு விளைவிக்கப்பட்டு வரும் பாதிப்புகள் அனைத்தும் அல்லாஹ்வுடனான நமது தொடர்புகளை முன்வைத்தே நிகழ்த்தப்பட்டு வருகின்றன எனும்போது அந்த வல்லோனின் அறிவிப்பின்படி அவனது உதவிகளை நாம் அடைந்து கொள்வதற்கும் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கும் நாம் மிகவும் தகுதி உள்ளவர்களாகவே இருக்கிறோம். ஆகவே அல்லாஹ்வின் உதவிகளைப் பெறுவதற்கு அவனால் அறிவிக்கப்பட்ட வழிமுறைகளின் படியே நாம் அல்லாஹ்வின் சமூகத்தில் பொறுமையுடனும் தன்னம்பிக்கையுடனும் அணுகிட வேண்டும். அவன்மூலமே உதவிகளைப் பெற்றிட முனைய வேண்டும்.

இன்றைய சூழலில் எதனை முதலில் செய்ய வேண்டும் என்றால் நாம் நம்முள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வதே அவசியமாகும். அதிலும் குறிப்பாக அல்லாஹ்வைச் சார்ந்து அவனையே பின்பலமாகக் கொண்ட தன்னம்பிக்கையே ஆகும்.

( இனிய திசைகள் – மார்ச் 2015 இதழிலிருந்து )

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.