Tamil Islamic Media ::: PRINT
இஸ்லாம் இந்தியாவுக்கு அந்நிய மதமா?

இந்தியாவில் இஸ்லாத்தை எதிர்ப்போர்கள் எடுத்துவைக்கும் முதல்விவாதம் என்னவென்றால் இஸ்லாம் ஒரு அந்நிய மதம் – முஸ்லிம்கள் அராபிய அடிமைகள் – இஸ்லாம் கலாச்சாரத்தால் , மொழியால் வேறுபட்டது என்பதாகும்.

அத்தகைய தவறான புரிந்துணர்வை நீக்கும் விதத்தில் பதில் அளிக்கத் தொடங்கலாம்.
இந்தக் கேள்விகளுக்கு ஒரு மேலோட்டமான, பதில் சொல்வது என்றால் இவைகளைத்தான் சொல்லத் தோன்றும்.

இந்தியாவில் பிறந்த ஒருவன் அந்நிய மண்ணுக்கு வேலைதேடிப் போவதும் அங்கிருந்து பொருளீட்டி இந்தியாவுக்கு அனுப்புவதும், வெளிநாடுகளில் இருந்து புதிய புதிய பொருட்களையும் சாதனங்களையும் கொண்டு வந்து பயன்படுத்துவதும் ,காலையில் குடிக்கும் காபி தொடங்கி பகட்டாக வாழ காற்றாடி, குளிர்சாதனம், தொலைக் காட்சிப் பெட்டி, மைக்ரோ ஓவன் , வாஷிங்மிஷின் , அலைபேசி, தொலைபேசி இரவில் இழுத்துப் போர்த்திக் கொண்டு உறங்கும் கம்பளிப் போர்வை வரை பயன்படுத்துவதும்,
வெளிநாடுகளில் கடைப்பிடித்த அல்லது கற்றுக் கொண்ட பழக்க வழக்கங்களை அன்றாட வாழ்வில் அமுல் படுத்துவதும் ,தொழில் வளர்ச்சிக்காக வெளிநாடுகளில் தொழில்நுட்பங்கள் நிறைந்த இயந்திரங்களை இறக்குமதி செய்வதும் ,தீராத வியாதிகளைத் தீர்க்க உயர்ந்தவகை மருத்துவ வசதிகளை வெளிநாடுகளுக்கு சென்றேனும் பெற்றுக்கொள்வதும் ,சித்தா , ஆயுர்வேத மருந்துகளை மறந்துவிட்டு அலோபதி, ஹோமியோபதி என்கிற மருத்துவமுறைகளைப் பின்பற்றுவதும்,காய்கறிகளின் மரபணுக்களை மாற்றி இயற்கைக்கு மாறுபாடான விதைகளையும் இறக்குமதி செய்யப்பட்ட உரங்களையும் பயன்படுத்துவதும் ,
பிஜ்ஜா , நூடுல்ஸ், பிரைடு சிக்கன் , பாஸ்ட் புட் போன்ற உணவுப் பழக்கங்களை அந்நியனிடமிருந்து சுவீகாரம் எடுத்துக் கொள்வதும் ,கொடுமைப்படுத்தும் கோடையிலும் கோட்டும் சூட்டும் மாட்டி கழுத்தில் டை கட்டி பீடுநடைபோடும் போதும், ஆங்கிலக் கல்வியை முன்னிலைப் படுத்தி குழந்தைகளை கான்வெண்டுகளில் சேர்ப்பதும், அரசியல் கட்சிகள் கம்யூனிசம் என்றும் சோசலிஷம் என்றும் முதலாளித்துவம் என்றும் அந்நிய நாட்டில் வடிவமைக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளை வைத்துக் கொள்வதும் ,
அனைத்துக்கும் மேலாகஅன்னியன் வகுத்த அடிப்படையிலேயே இந்தியநாட்டின் பாராளுமன்ற, சட்ட, ஜனநாயக விதிமுறைகளை பயன்படுத்துவதும் ,அனுமதிக்கத்தக்கவை என்றால், மக்களின் மனம் விரும்பும் ஒரு மார்க்கத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்வது மட்டும் எப்படித் தவறாகும்?

மேலே குறிப்பிடப்பட்டவை உடனே வெளிப்படுத்தும் உணர்வுகளே. ஆனால் விரிவான பதில்களும் நிறைய இருக்கின்றன.

இந்தியா, ஒரு பன்முக சமுதாயங்களின் சங்கமம். பலவகைப்பட்ட மத, இன, வழிபாட்டுமுறைகள் , மொழி, பண்பாடு, கலாச்சாரம், நிறம்,உடலமைப்புகொண்ட மக்கள் என பலவேறுபாடுகளை தன்னகத்தே கொண்டிருந்தாலும் அனைவரையும் ஒன்றாகவே கருதும் அரசியலமைப்பு சட்டத்தைக் கொண்ட ஒரு சன்மார்க்கநாடு.

அஸ்ஸாமில் பிறந்தவனும் ஆண்டிப்பட்டியில் பிறந்தவனும் சட்டத்தின் முன் சமம் ஆனவன். இந்த நாட்டில் பிறந்த எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்கிற உரிமை பெற்றவர்கள். அவரவர்கள் விரும்பும் மதத்தைப் பின்பற்ற அனைவருக்கும் சமஉரிமையை அரசியல் சட்டம் வழங்கி இருக்கிறது. இதுவே இந்தியாவின் சிறப்பு.
இந்த நாட்டின் பெரும்பான்மை சகோதரர்கள் பின்பற்றும் மதமாக இந்து மதம் இருக்கிறது. இந்தப் பெரும்பான்மை பற்றி பல கேள்விகள் பல திசைகளிலிருந்தும் எழுப்பப்பட்டாலும் நாம் அதைப் பற்றி பேசவேண்டிய தளமும் களமும் இது அல்ல என்று கருதுகிறோம்.

அதே நேரம் நாம் சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறோம். நமது முதல் கேள்வி –
பெரும்பான்மை மக்கள் பின்பற்றும் மதமான இந்து மதம் தவிர இஸ்லாம் மற்றும் கிருத்துவ மதங்கள்தான் அந்நிய மதங்கள் என்று தவறான புரிந்துணர்வின் அடிப்படையில் பட்டம் சூட்டப்பட்டிருக்கின்றன. இந்த நாட்டில் பிறந்த மக்களில் பெரும்பகுதியினர் இந்து மதத்தைப் பின்பற்றுவதால் அவர்கள் இந்துக்கள் அதனால் இந்தியர்கள் என்றால் மற்ற மதங்களைப் பின்பற்றுவோர் மட்டும் எங்கே பிறந்தார்கள்? நாம் அறிந்தவரை அவர்கள் அண்டார்டிகாவிலோ ஆப்ரிகாவிலோ பிறக்கவில்லையே. அவர்களும் இதே மண்ணில் பிறந்தவர்கள்தானே. பிறந்த நாட்டின் குடியுரிமை, பிறந்தவர்கள் அனைவருக்கும் பொதுச்சொத்துதானே!
அடுத்த கேள்வி இந்தியாஎன்கிற பூகோள அமைப்புடைய நாட்டுக்கு எந்த மதம் சொந்த மதம்? இந்தியா என்கிற பெயருடன் ஒரு நாடு உருவானது எப்போது? இந்தியா என்ற பெயர் இந்த நாட்டுக்கு சூட்டப்பட்டது எப்போது? இந்தியா என்ற பெயர் சூட்டப்பட்டபோதே இஸ்லாமும் கிருத்தவமும் இந்தியாவில் பல மக்களால் பின்பற்றப்பட்டே வந்தனவே! . அதனால்தானே இந்தியா என்று பெயர்சூட்டப்பட்ட பூகோளப் பகுதி மதவாரியாக இரண்டாகப் பிரிக்கப்பட்டது?

மூன்றாவது முக்கியமான கேள்வி வரலாற்று ரீதியாக ஒட்டுமொத்த இந்தியாவுக்கு என்று தனியாக ஒரு மதம் இருந்ததா? அப்படியானால் இந்தியாவுக்கு சொந்தமாக இருந்த மதத்தின் பெயர் என்ன? அந்த மதத்துக்கு இடையூறாக வந்த அந்நிய மதங்கள் யாவை? பெரும்பான்மை மக்கள் பின்பற்றுவதாக இன்று கற்பிக்கப்படும் இந்துமதம்தான் இந்தியாவின் மதமா என்ற கேள்விக்கு பதிலைத் தேடினால்தான் இஸ்லாம் ஒரு அந்நிய மதம் என்ற தவறான புரிந்துணர்வை நீக்க முயல முடியும்.

உண்மையான வரலாற்றை ஆதாரங்களோடு ஆராய்ந்து பார்ப்போமானால், இன்று முஸ்லிம்களை அந்நியர் எனச் சொல்லும் பலரும் ஏதோ ஒரு காலத்தில் எங்கிருந்தோ இங்கே வந்து குடியேறியவர்கள்தான் என்பது தெள்ளத்தெளிவாக விளங்கும்.

வடமொழி வேதங்களில் (கி.மு. 1500-கி.மு.500) ‘தஸ்யு’க்கள் என்னும் உள்நாட்டு மக்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் பாரசீகத்தில் இருந்து படைஎடுத்து வந்த ஆரிய மொழி இனத்தவரால் அடிமையாக்கப்பட்டார்கள். இந்த ஆரியர்கள் ரிக் வேதக் காலத்தில் கால்நடைகளுக்கு மேய்ச்சல் காட்டும் இனத்தவராக ஈரான் வழியாக இந்தியாவில் புகுந்து இங்கிருந்த விவசாய மக்களுடன் கலந்து, உள்நாட்டுப் பழங்குடியினரை அடிமையாக்கிச் சூத்திரர்களாகவும், தீண்டத்தகாதவர்களாகவும் ஆக்கினார்கள். இதற்காகவே மனுநீதி எனும் வர்க்கபேத சாஸ்திரத்தையும் உண்டாக்கினார்கள்.

நடுநிலையான வரலாற்று ஆசிரியர் எழுதியுள்ளவைகளை இங்கு விலாவாரியாக விவரிக்கவேண்டியதில்லை. அவைகள் திறந்த புத்தகங்களாக விரிந்து கிடக்கின்றன. ஆயிரம் எடுத்துக்காட்டுகளில் இரண்டே இரண்டை மட்டும் இங்கு எடுத்துச் சொல்லலாம். ((K.K.Hirst) K.K. ஹிர்ஸ்ட் என்ற புகழ்பெற்ற ஆய்வாளர் நதிக்கரைகளில் தழைத்த உலக நாகரிகங்களை ஒவ்வொன்றாக ஆய்ந்த ஆய்வாளர் ஆவார். . அமெரிக்காவின் இல்லினாஸ் பல்கலைக் கழக்கத்தின் தொல்பொருள் ஆய்வுத் துறையின் தலைவியுமாவார். இவர் இவ்வாறு கூறுகிறார்

“ Sometime around 1700 BC, the Aryans invaded the ancient urban civilizations of the Indus Valley, and destroyed that culture. The Indus Valley Civilization were far more civilized than any horse-back nomad, having had a written language, farming capabilities, and led a truly urban existence. Some 1,200 years after the supposed invasion, the descendants of the Aryans, so they say, wrote the classic Indian literature called the Vedic manuscripts.”

“கி. மு. 1700 ஆம் ஆண்டுவாக்கில் ஆரியர்கள் இந்தியாவின் சிந்துசமவெளி நாகரிகங்கள் தழைத்து வளர்ந்த வளமான சிந்து சமவெளியின் மீது அத்துமீறி படைஎடுத்தார்கள். அவர்கள் படையெடுத்த காலத்தில், நாகரிகம் தழைத்து வளர்ந்திருந்த அந்தப் பகுதி தங்களுக்கென மொழி மற்றும் வேளாண்மைத் திறமைகளில் உயர்நிலையில் இருந்ததுடன் உயர்ந்த நகர்ப்புற வாழ்க்கையிலும் மேம்பட்டு இருந்தார்கள். இவ்வாறு இந்த நாட்டுக்குள் நுழைந்த ஆரியர்கள் அத்தகையப் படையெடுப்புக்குப் பின் கிட்டத்தட்ட 1200 ஆண்டுகளுக்குப் பின்தான் வேதங்கள் என்று அழைக்கப்பட்ட தொன்மை வாய்ந்த இலக்கியங்களை எழுதத் தொடங்கினார்கள்.அவைகளே வேதங்கள் என்று அழைக்கப்பட்டன ”

அடுத்ததாக,

“ சிரியா நாட்டைச் சேர்ந்த மித்தனி (Mittani) யிலிருந்து புறப்பட்ட ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழையுமுன் சில காலம் ஈரானை சேர்ந்த ஈஸ்பராயன் (Esfarayen) என்ற மாநிலத்தில் தங்கிவிட்டு வந்தார்கள். அப்போது பாரசீக நூல்களைக் கற்றார்கள் அதன்பின் இந்தியாவிற்குள் வந்தபின் பாரசீக மத நம்பிக்கையின் அடிப்படையில் ரிக்வேதத்தை உருவாக்கினார்கள். எனவே பாரசீக மொழியில் உள்ள கடவுள் பெயர்களை ஒரு பாரசீக அகராதியில் இருந்து தொகுக்கப்பட்டுள்ளது. “

இந்த பாரசீக அகராதியின் பெயர் “Muslim and Parsi Names” இதை எழுதியவர்கள் இன்றைய மத்திய அமைச்சர் திருமதி. மேனகாகாந்தி மற்றும் பேராசிரியர் ஓசைர் ஹுசைன்.

ஆகவே முஸ்லிம்களை அந்நியர் என்று கூறுபவர்களும் இந்த நாட்டுக்குள் புகுந்த அந்நியர்களே என்பதே வரலாறு தரும் உண்மை.

இதுமட்டுமல்ல , இந்தியாவின் அரசியலை ஆட்டிப் படைத்த ரஜபுத்திரர்கள் கூடத் துருக்கியர்கள் குடியேறிய காலத்தில் இங்கு வெளியுலகிலிருந்து குடியேறியவர்கள்தான். சௌகான், பரிகரர், சோலங்கி என்று சொல்லப்படுபவர்கள் எல்லோருமே வெளியுலகில் இருந்து இந்தியாவுக்குள் வந்தவர்கள்தான். முஸ்லிம்களை மட்டும் மட்டும் வெளிநாட்டில் இருந்து வந்து குடியேறியவர்கள் என்று பழிதூற்றுவது நியாயமற்ற விவாதம்ஆகும்.

மண்ணின் மைந்தர்கள், ஆரியர்கள் நாடுகடந்து கொண்டுவந்த மதத்தை ஏற்கலாம் என்ற வாதம் சரியாக இருக்குமானால் அதே மண்ணில் பிறந்த மைந்தர்கள் இஸ்லாத்தையும் ஏற்பதில் தவறென்ன?

இங்கு நாம் சுருக்கமாக சொல்லவருவது என்னவென்றால் ஆரியர்கள் இந்தியாவுக்குள் மத்திய ஆசியாவிலிருந்து வரும் முன் இந்தியாவுக்குகென, குறிப்பிட்ட மதங்கள் இருந்திருக்கவில்லை. அக்கால இந்திய மக்கள் சிலை வணங்கிகளாகவும், தங்கள் இஷ்ட தெய்வங்களை தாங்களே தேர்வு செய்து வழிபடுபவர்களாகவும் இருந்தனர். இதில் கல்,மரம்,நிலம்,நெருப்பு,சூரியன், மனிதன், ஆகிய அனைத்தும் அடங்கும். ஆரிய நுழைவுக்குப் பின்னர்தான் வேதங்களின் அடிப்படையில் வேத மதம் அல்லது இந்துமதம் கட்டமைக்கப்பட்டது. அந்தக் கட்டமைப்பின் அடிப்படை நான்குவகை வர்ணாசிரமாக இருந்தது.

மேலும் இந்தியாவில் இன்று கிருத்துவ மற்றும் இஸ்லாத்தைத் தழுவிய மக்கள் இந்த நாட்டின் மண்ணிலே பிறந்து வளர்ந்து வர்ணாசிரமஅடிப்படையிலான சமுதாயக் கொடுமைகளை, சாதி ஒடுக்குமுறைகளை நீக்கிக் கொள்வதற்காக மதம் மாறியவர்கள்தான். அத்தகைய கொடுமைகளை விலாவாரியாக விவரிக்க ஆரம்பிப்பது இந்தத் தொடரின் நோக்கத்தில் துவேஷ வித்தைத் தூவிவிடும். ஆகவே அவற்றைத் தவிர்க்கிறோம். எனினும் கொடுமைகளின் காரணமாக மனம்விரும்பிய மதங்களில் நிலைபெற்ற முஸ்லிம் மற்றும் கிருத்தவர்களை அந்நிய மதங்களின் அடிமைகள் என்று வர்ணிப்பது உண்மைகளுக்கு மாறானது.

உண்மையான வரலாற்றின் பக்கங்களை இன்னொரு கோணத்தில் ஆராயப் போனால் , வணிகத்துக்காகவும் முஸ்லிம்கள் இந்தியாவுக்கு வந்திருக்கிறார்கள். வணிகம் செய்ய வந்தவர்கள் தங்களின் வணிக வசதிக்காக இங்கேயே தங்க ஆரம்பித்தார்கள். இங்குள்ளவர்கள் முஸ்லிம்களின் நல்ல நாணயமான நடத்தைகளைப் பார்த்து வியந்து அவர்களுடன் வணிகம் செய்ய விரும்பினார்கள். அவர்களின் நாணயம், நல்லெண்ணம், நடத்தை, ஒழுக்கம், ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டவர்களின் இதய மாற்றம், எண்ணப்புரட்சி பெருகியதால்தான் இஸ்லாம் இந்தியாவில் பரவ ஆரம்பித்தது. பல்வேறு திசைகளிலும் வழிகாட்டும் அழைப்புப் பணியும் வெற்றிகரமாக நடந்தது. தங்களின் பிறவியின் களங்கத்தை துடைக்கும் புனித நீராக இஸ்லாத்தைக் கண்ட மக்கள் இஸ்லாத்தைத் தழுவினர்.

அன்றைய உலக மக்களின் இயல்பும் தொழிலும் வாழ வகையுள்ள நாடுகளைத் தேடிச் செல்வதுமாகும். அவ்வாறு நாடுகளைத் தேடிப் புறப்பட்ட இனங்கள் உலக வரலாற்றில் எத்தனையோ உள்ளன. கொலம்பசில் இருந்து, வாஸ்கோடாகாமா வரையும், அலெக்ஸான்டரில் இருந்து நெப்போலியன் வரையிலும் கூட இந்த வரலாறு உலக சரித்திரப்பக்கங்களில் நீளும் .

அதே ரீதியில்தான் பெருமானார்(ஸல்) அவர்கள் காலத்திலேயே இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளுக்கு அராபிய வணிகர்கள் வருகைதந்தனர். கேரளக் கடற்கரைப் பகுதிகளில் அந்தக் காலத்திலேயே கட்டப்பட்ட பள்ளிவாசல்களின் கோபுரங்களில் இத்தகைய சான்றுகள் கொடிகட்டிப் பறக்கின்றன. சேரநாட்டை ஆண்ட மன்னர் சேரமான் பெருமாளின் வரலாற்றிலும் விரவிக் கிடக்கிறது. அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு ஹஜ்ஜுக்கு சென்று திரும்பும்போது ஓமன் நாட்டின் சலாலாவில் இறைவனடி சேர்ந்த சான்றுகள் காணக்கிடைக்கின்றன.

வணிக நோக்கங்களுக்காகவும் பிழைப்புத் தேடியும் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை , பர்மா, சீசெல்ஸ், தென் ஆப்ரிகா, மொரிஷியஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று குடியேறிய இந்தியர்களுக்கும் அந்தந்த நாட்டின் குடியுரிமைகள் வழங்கப் பட்டு இருக்கின்றன. மலேசியா ஒரு இஸ்லாமிய நாடாக இருந்தாலும் அங்கு எல்லா ஊர்களிலும் கோயில்கள் கட்டப்பட்டு இருக்கின்றன. பத்துமலை தைப்பூசத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. அமெரிக்காவின் பல பெரிய நகரங்களில் இந்துக் கோயில்கள் கட்டபட்டிருப்பது கண்கூடு. அண்மையில், அபுதாபி நாட்டில் கூட கோயில் கட்ட இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கெல்லாம் இந்து மதத்தை அந்நிய மதம் என்று கேலி பேசுவோர் யாருமில்லையே!

மதங்களை ஒரு மரமாகக் கொண்டால் தழைத்து வளர தான் நின்ற இடத்தில் சூரிய வெளிச்சம் கிடைக்காத காரணத்தால் வெளிச்சம் இருக்கும் பக்கம் நீண்டு வளரும் மரங்களின் கிளைகளைப் போலதான் இஸ்லாமும் கிருத்துவமும் இந்த மண்ணில் வளர்ந்தன; தழைத்தன ; பலருக்கு நிழல் தந்தன. கிளைகள் விரவிப் படந்து வளர்ந்தாலும் மரத்தின் ஆணிவேர் இந்திய மண்ணில்தான் ஊன்றி நின்று நிலைபெற்று நிற்கிறது. வளர்வதற்காக வெளிச்சத்தின் பக்கம் நீண்டுவிட்டன என்கிற தாவரசலன இயல்புக்காகவே வளர்ந்த கிளைகளை வெட்ட நினைப்பவர்கள்தான் இஸ்லாத்தை அந்நிய மதம் என்கிறார்கள்.

இந்த வரலாற்று செய்திகளை அழைப்புப் பணியாளர்கள் குறித்துவைத்துக் கொள்ளவேண்டும்.

இன்னும் பேசவேண்டி இருக்கிறது.

- அதிரை. இப்ராஹீம் அன்சாரி.

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.