Tamil Islamic Media ::: PRINT
சாரதா பீடம் சொல்லும் திப்புவின் மதநல்லிணக்கம்

நவம்பர் 10, மாவீரன் திப்பு சுல்தான் பிறந்த நாள். ஒவ்வொரு ஆண்டும் திப்பு ஜெயந்தி கொண்டாட்ட திட்டங்களை கர்நாடக அரசு அறிவித்ததும் கர்நாடக மற்றும் தேசிய பாஜக தலைவர்களும், பல விளிம்பு நிலை வலதுசாரி அமைப்பினரும், அதன் ஆதரவாளர்களும் திப்பு குறித்து சர்ச்சியைக்குறிய குற்றச்சாட்டுகளை ஊடகங்களிலும் தங்களின் சமூக வலைதள பக்கங்களிலும் விவாதிக்க துவங்கிவிடுகின்றனர். இந்த ஆண்டும் அதற்கு விதிவிலக்கல்ல.


திப்பு சுல்தான் இந்துக்களுக்கு எதிரானவர் என்றும், அவர் இந்துக்களை கொன்றார், மதமாற்றம் செய்தார், இந்து பெண்கள் மீது பாலியல் கொடுமைகளை ஏவினார் என்று பல கதைகளை சொல்லிவரும் இவர்கள் கூறும் கூற்றுக்களுக்கு ஏதும் வரலாற்று சான்று இருக்கிறதா என்றால், இவர்கள் ஆதாரமாகக் காட்டுவதெல்லாம் செவிவழிக் கதைகள் மட்டுமே.


சில நாட்கள் முன்பு, நண்பர்களுடன் இதுகுறித்த கலந்துரையாடிக் கொண்டிருக்கையில், என்னுடைய நண்பர் ஒருவர் திப்புசுல்தான் மத நல்லிணக்கத்தையே கடைபிடித்தார் என்று வாதிட்டார். அதற்கு அவர் மேற்கோள் காட்டிய ஆதரம் எங்களை வியக்கவைத்தது. அதை எடுத்துக் காட்டிய என்னுடைய நண்பர் முஸ்லிமோ, காங்கிரஸ் காரரோ அல்ல, அவர் ஒரு சராசரி மனிதர் அதுவும் இந்து மதத்தைச் சார்ந்தவர்.
இந்து மத பீடங்களில் மிக உயர்ந்த பீடங்களில் ஓன்று கர்நாடகா மாநிலம் சிரிங்கேரியில் உள்ள 'சிரிங்கேரி சாரதா பீடம்'. இது இந்து மதகுருக்களின் மிகவும் முக்கியமானவரான அதி சங்கரர் அவர்களால் நிறுவப்பட்டது.
திப்பு சுல்தானை இன்று எதிர்ப்பவர்கள் அவர் ஒரு மத வெறியர் என்று விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால், இந்த சிரிங்கேரி சாரதா பீடம் அதனுடைய அதிகாரப்பூர்வ வலைதளத்தில், திப்பு சுல்தான் உடைய மத நல்லிணக்க குணாதிசயங்களைக் குறித்து பாராட்டியுள்ளது.


இந்து சமயத்தின் மூன்று அடிப்படை நூல்கள் என்று அறியப்படும் பத்து உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத் கீதை ஆகிவற்றிற்கு விளக்கவுரை அளித்து அவை போதிக்கும் அத்வைத தத்துவத்தை மக்களுக்கு  எடுத்துரைத்தவர் ஆதி சங்கரர். இந்து மதத்தின் மாபெரும் சிற்பி என்று போற்றப்படுபவர்.
ஆதி சங்கரர் இந்தியா முழுவதும் பயணம் செய்து அத்வைத தத்துவத்தை பரப்ப நிறுவிய நான்கு மடங்களில் எட்டாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட முதல் மடம் தான்'சிரிங்கேரி சாரதா பீடம்'. இங்கு சாரதா தேவியின் கோவில் ஒன்றும் உள்ளது.

சிரிங்கேரி சாரதா பீடம்


இந்த பீடத்தின் தலைமை குருவாக வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்த ஜகத்குருக்களில் (ஆச்சார்யாக்களில்) ஒருவர்தான் கி.பி. 1770 - 1814 காலகட்டத்தில் வாழ்ந்த ஸ்ரீ சச்சிதானந்தா பாரதி. அவர் வாழ்ந்த காலகட்டத்தில் தான் ஸ்ரீரங்கப் பட்டினத்தை தலைநகராகக் கொண்டு அன்றைய மைசூர் மாகணத்தை மொகாலய மன்னர்களான ஹைதர் அலியும், அவருக்கு பின் ஆட்சி செய்த அவரின் மகன் திப்பு சுல்தானும் ஆட்சி செய்திருக்கிறார்கள். அதில் சிரிங்கேரி சாரதா பீடம் அமைந்து இருக்கும் சிருங்கேரியை உள்ளடக்கிய பகுதிகளும் அடக்கம்.
ஸ்ரீ சச்சிதானந்தா பாரதி அவர்களின் காலகட்டத்தில், மடத்திற்கும், ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் மன்னர்களுக்கும் இடையே இருந்த சீரிய நட்புறவு, மேலும் இம்மன்னர்கள் மடத்திற்காக செய்த உதவிகள், நற்பணிகள் அனைத்தையும் புகழ்ந்து தங்களின் அதிகாரப் பூர்வ வலைதளத்தில் ஆவணப்படுத்தி உள்ளதை நம்மால் பார்க்க முடிகிறது. ( இங்கே அழுத்தவும் )
இந்து மடம் கூறும் திப்பு சுல்தானின் மதசார்பற்ற ஆட்சியும், மத நல்லிணக்கமும்
ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய திப்பு சுல்தானை, அந்த காலகட்டத்தில் ஆங்கிலேயர்கள் மராத்திய மன்னனான பரசுராம் பாவு மற்றும் ஹைதராபாத் நிஜாம் ஆகியோர்களோடு கூட்டணி வைத்து எதிர்த்து வந்தனர். இந்த ஆங்கிலேய கூட்டணிக்கும், திப்பு சுல்தானுக்கும் இடையே மூன்றாம் மைசூர் போர் (Third Anglo-Mysore War) நடைபெற்ற போது மாராத்திய இந்து மன்னரான பரசுராம் பாவ், திப்புவின் ஆட்சிக்கு உட்பட்ட பெத்னூர் பகுதி மீது படையெடுத்தார். அவரின் படை ஒன்று (முறைப்படுத்தப் படாத குதிரை வீரர்கள் (irregular horsemen) என்கிறது வேறு ஒரு ஆவணம்) ரகுநாத் ராவ் பட்வர்த்தன் என்பவரின் தலைமையில் சிருங்கேரி மடத்தை சூறையாடி இருக்கிறார்கள்.  மடத்தில் இருந்த பலரை கொன்றும், காயப்படுத்தியும், அங்குள்ள கோயில்களையும், சிலைகளையும் சேதப்படுத்தியும் உள்ளனர்.  சாரதா தேவி சிலையையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி உள்ளனர்.

ஸ்ரீ சச்சிதானந்தா பாரதி (1770 - 1814)

இதனால் வேதனை அடைந்த ஜகத்குரு சுவாமிகள் மடத்தை விட்டு வெளியேறி உள்ளார். பிறகு திப்புவின் உதவி கோரி கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். இந்த கடிதத்தை படித்து மன வேதனையடைந்த திப்பு சுல்தான், "இந்த கலியுகத்தில் இது போன்ற புனித தளத்திற்கு எதிராக குற்றம் புரிந்தவர்கள் அதற்கான விளைவுகளை கூடிய விரைவில் சந்திப்பார்கள்.” என்று பதில் எழுதியுள்ளார். அதுமட்டுமல்ல, இடிக்கப்பட்ட மடத்தையும், ஆலயத்தையும் சீரமைக்கவும், சாராத தேவி சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவவும் (re-consecration) தன் அரசு அதிகாரிகளுக்கு உத்திரவிட்டுள்ளார். இந்த தகவல்கள் அனைத்தையும் சாரதா மடத்தின் வலைத்தளத்தில் மட்டுமன்றி , மடத்தின் விக்கிபீடியா பக்கத்திலும் இடம்பெற்றுள்ளது.
அந்த வலைத்தளம், திப்புவின் மத நல்லிணக்கதிற்கு எடுத்துக்காட்டான பல தகவல்களை நமக்கு அறியத் தருகின்றது:பல சந்தர்ப்பங்களில் திப்பு சுல்தான் மடத்தின் குருக்களிடம் ஆசி பெற்றுள்ளதையும், திப்பு சுல்தான், தான் சார்ந்திருக்கும் மூன்று சக்திகள் "1. இறைவனின் அருள்.  2. ஜகத்குருவின் ஆசி,  3. என் (திப்புவின்) கைகளின் பலம்.” என்று கூறியுள்ளதையும் சுட்டிக் காட்டுகிறது.
மாராத்திய குதிரைப் படையினால் மடம் தாக்கப்பட்ட பிறகு ஜகத்குரு அவர்கள் மனமாற்றத்தை நாடி பூனாவிற்கு செல்ல முடிவுசெய்த போது, திப்பு சுல்தான், ஆச்சார்யா (குரு) பூனாவிற்கு செல்வதற்கு முன் ஸ்ரீரங்கப்பட்டினம் வந்து செல்லுமாறு வேண்டினார். மேலும்,  பூனாவிர்க்கு சென்ற குருவைப் பற்றி பல நாட்களாக எந்த தகவலும் இல்லாதிருந்தபோது, திப்பு சுல்தான் பூனாவில் தங்கியிருந்த குருக்களுக்கு ஒரு கடிதம் எழுதியதாகவும் அதில் அவர் “குருவைப் போன்ற புனிதமுடையவர்கள் எங்கே தங்கியிருந்தாலும் அங்கே செழிப்பு இருக்கும்.” என்று கூறியிருந்ததாகவும் மடத்தின் வலைதளம் பதிவுசெய்கிறது. பிறகு ஆச்சார்யா மீண்டும் சிருங்கேரிக்கே வந்து விட்டார் என்றும் அதில் சொல்லப்பட்டுள்ளது.
ஆச்சார்யா அவர்கள் ஒருமுறை காஞ்சியில் தங்கியிருந்த போது, அங்கே கோயில்களை சீரமைக்க திப்பு சுல்தான் அளித்திருந்த பொருட்களை ஆசீர்வதிக்குமாறு ஆச்சார்யாவிடம் கடிதம் மூலம் வேண்டினார் என்றும் கூறுகிறது.
மேலும் கி.பி.1791 லிருந்து கி.பி.1798 வரை திப்பு சுல்தான் ஆச்சார்யாவிற்க்கு 29 கடிதங்களை எழுதியுள்ளதாகவும், அந்த ஒவ்வொரு கடிதமும் திப்பு சுல்தான் ஆச்சார்யாவின் மேல் வைத்திருந்த பெருமதிப்பை பறை சாற்றுகிறது என்றும் சிருங்கேரி மடத்தின் அதிகாரப் பூர்வ வலைதளம் பாராட்டுகிறது.
இந்த ஆதாரத்தின் வியப்பில் நம்முடைய ஆய்வுத் தேடலை தொடர்ந்த போது, சிருங்கேரி மடம் மட்டுமல்ல, திப்பு சுல்தான் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் பல்வேறு இந்து சமய மடங்கள், கோவில்களுக்கு உதவி செய்ததும் அவர்களுக்கு வழங்கிய அன்பளிப்புகள், உதவிகள் குறித்தும் , மடங்கள் திப்புவுடன் நல்லுறவு பாலித்ததோடு உரிமையாக உதவி கோரியுள்ள பல்வேறு ஆதாரப்பூர்வமான நிகழ்வுகளையும் இதுபோன்ற எண்ணற்ற அதிகாரப்பூர்வ தளங்கள் பதிவு செய்கின்றன. அவை ஒவ்வொன்றயும் தனித்தனியாக ஆய்வு செய்து எழுத முடியும்.
இப்போது நமக்கு எழும் கேள்வி.
திப்பு சுல்தான் மதச்சார்பற்றவர் மட்டுமல்ல மத நல்லிணக்கத்தின் அடையாளமாக வாழ்ந்தார் என்று திப்புவின் காலத்தில் வாழ்ந்த இந்து மத பீடங்களே அதிகாரப்பூர்வமாக ஆவணப்படுத்தியிருக்க, இன்று மதவாதத்தை கொள்கையாக கொண்ட சிலர் திப்புவை மதவெறியர் என்று விமர்சனம் செய்வது ஏன்?
திப்பு மட்டுமல்ல, முஸ்லீம் ஆட்சியாளர்கள் என்றாலே அவர்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று சித்தரிக்கப்படுவதும், அதற்க்கு ஆதரவாக பல்வேறு கதைகளை பரப்புவதும் இன்று பரவலாக்க காண முடிகிறது. இதை முன்னெடுத்துச் செல்லும் சகிப்புத்தன்மையற்ற விளிம்புநிலை இயக்கங்களும் அதற்க்கு ஆதரவாக செயல்படும் வலதுசாரி அரசியல் இயக்கங்களின் செயல்பாடுகள் இந்த நாட்டின் இறையாண்மைக்கும் மக்கள் ஒற்றுமைக்கும் எதிரானது. இது வெளிப்படையான பிரிவினைவாத அரசியல்அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்?
ஆம், இந்திய சுதந்திர போராட்டத்திற்காக 1857 இல் நடந்த கழகத்தின் போது இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து போராடினர். இதனால் திக்குமுக்காடிப் போன பிரிட்டிஷ் அரசு அன்று துவங்கிய யுக்திதான் அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி. இந்த நாட்டில் காலங்காலமாக ஒற்றுமையுடனும் சமூக நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வந்த இந்து முஸ்லீம் சமூகங்களுக்கிடையே பிரிவினையை உண்டு செய்ய அவர்கள் கையாண்ட முக்கியமான யுக்தி, வரலாற்றை மாற்றி எழுதி ஒருவர் மீது ஒருவருக்கெதிராக பழி சுமத்தியது.
ஆனால், பெரும் துர்அதிஷ்டம் என்னவென்றால், சுதந்திரம் அடைந்து எழுபது ஆண்டுகள் கடந்த பின்பும் இன்றும் பிரிவினைவாத சக்திகள் இந்த நாட்டில் இதுபோன்ற பிரிவினை வாதங்களை முன்னெடுத்துச் சென்று மக்களிடையே பிரித்தாளும் சூழ்ச்சியை தொடர்வது தான்.
பாஜக ஆட்சிக்கு வந்த சிறுது காலத்திலேயே டெல்லியில் சாதாரண ஒரு சாலையின் பெயர் பலகைக்காக ஏற்பட்ட கலகமும் தங்களின் நிலைப்பாட்டை ஆதரிக்க பல்வேறு வலது சாரி அரசியல்வாதிகள் அவுரங்கஸிப் மன்னரைப் பற்றி வரம்புமீறிய விமர்சனம் செய்ததும் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
இந்த கட்டுரை திப்புவை புனிதப்படுத்த அல்ல. முஸ்லீம் ஆட்சியாளர்களானாலும், இந்து ஆட்சியாளர்களானாலும் சரியான வரலாறு பாதுகாக்கப்பட வேண்டும். இதுபோன்ற பிரிவினைவாத சக்திகளின் கைகளில் சிக்கி இன்று வரலாறு சிதைக்கப்படுகிறது. அதை முறியடிப்பதும், வரலாற்றை சரியாக திருத்தி எழுதும் கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்பதை நினைவுபடுத்தவுமே இந்த கட்டுரை.


- முகமது ரஃபீக். பா சான்றாதாரங்கள்:

  1. https://www.sringeri.net/jagadgurus/sri-sacchidananda-bharati-iii-1770-1814
  2. https://www.sringeri.net
  3. https://en.wikipedia.org/wiki/Sringeri_Sharada_Peetham
  4. https://ta.wikipedia.org/s/4jca
  5. https://ta.wikipedia.org/s/8a8
The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.