Tamil Islamic Media ::: PRINT
நோன்பும் மனக்கட்டுப்பாடும்

நோன்புக்கும் மனக்கட்டுப்பாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அது இச்சைகளை கட்டுக்குள் வைத்திருப்பதற்கான அற்புதமான வழிமுறை. கிட்டத்தட்ட எல்லா மதங்களும் நோன்பை ஏதேனும் ஒரு வகையில் வலியுறுத்துகின்றன. திருக்குர்ஆனும் உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டதுபோன்றே உங்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறது.

நம் முன்னால் உணவும் பானமும் இருந்தும் நாம் உண்ணாமல் பருகாமல் தவிர்ந்திருப்பதுபோன்றுதான் மனித வாழ்வும். நமக்கு முன்னால் தடுக்கப்பட்டவை இருந்தாலும் அவை வசீகரமான ஆடைகளால் தம்மை அலங்கரித்துக் கொண்டிருந்தாலும் அவற்றை நெருங்காமல் இருப்பது. அவை துன்பங்களை மறைத்துக் கொண்டு இன்பங்களென காட்சி தருபவை. குறிப்பிட்ட நேரம்வரை எப்படி நம்மால் உண்ணாமல் பருகாமல் இருக்க முடிகிறதோ அப்படித்தான் குறிப்பிட்ட காலம்வரை, இறைவன் நமக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும்வரை பொறுமையாக இருப்பது.

தவிர்ந்திருத்தல் நிலையான தவிர்ந்திருத்தல் அல்ல. அது தற்காலிகமானதுதான். நிலையான தவிர்ந்திருத்தல் ஒரு மனிதனை சட்டென அதற்கு மாறான திசையில் செலுத்திவிடலாம். இங்கு தடுக்கப்பட்ட ஒவ்வொன்றுக்கும் ஒரு மாற்று இருக்கிறது. மாறாக தடுக்கப்பட்டவை மிகக் குறைவாகவே இருக்கின்றன. அவற்றுக்கும் மாற்றாக ஏராளமான அனுமதிக்கப்பட்ட வழிகள் இருக்கின்றன. தேவை, சிறிது காலப் பொறுமை.

இளைஞர்களுக்கு நபியவர்கள் கூறிய அறிவுரை இங்கு கவனிக்கத்தக்கது. அவர்கள் கூறினார்கள்: இளைஞர் சமூகமே! உங்களில் மணமுடிக்க சக்தி பெற்றவர் மணமுடித்துக் கொள்ளட்டும். ஏனெனில் அது பார்வையைத் தாழ்த்திவிடுகிறது. வெட்கத்தலத்தைப் பாதுகாக்கிறது. யார் மணமுடிக்க சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு வைக்கட்டும். ஏனெனில் அது அவருக்குக் கேடயமாகும்.” (புகாரீ)

ஆம், நோன்பு மனதைக் கட்டுப்படுத்துவதற்கான அற்புதமான பயிற்சி. மனிதன் பல சமயங்களில் இச்சைகளால் வீழ்த்தப்பட்டு விடுகிறான். மனம் எந்தவொன்றுக்கும் எளிமையாக அடிமையாகிவிடுகிறது. அது செல்லமாக வளர்க்கப்படும் சிறு குழந்தையைப் போல அடம்பிடிக்கிறது. அதன் மீது அதிகம் பிரியம் கொண்ட பெற்றோர் அது கேட்பதை கொடுக்காமல் அதன் அழுகையை நிறுத்த முடியாது என்று எண்ணிவிடுகிறார்கள். அப்படித்தான் மனித மனதும். மனிதனைத் தவறான விசயத்தின் பக்கம் இழுத்துச் சென்று விடுகிறது.

மனிதன் தன் மனதைக் கட்டுப்படுத்துவற்கு முறையான பயிற்சி அவசியம். பயிற்சியின்மூலம் அவனால் தான் விரும்பும் முடிவை அடைய முடியும். மனம் போலியான பல விசயங்களை நமக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிறது. நிறைவேற்றியே ஆக வேண்டும் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, அதற்கான நியாயவாதங்களை உருவாக்கி கொடுத்து நம்மை பாவங்களில் அது வீழ்த்திவிடுகிறது.

நம் மிருக இச்சைகள் நம்மை வழிநடத்தத் தொடங்கிவிட்டால் நாம் அடிமையாகிவிட்டோம் என்று பொருள். அது பரந்துவிரிந்த இந்த உலகில் குறுகிய சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள்போன்று நம்மை ஆக்கிவிடுகிறது. இச்சைகள் நம் கட்டுக்குள் இருக்கிறதென்றால் நாம் சுதந்திரமாக இருக்கின்றோம் என்று பொருள். அறிவை மழுங்கடிக்கும் ஒவ்வொன்றும் போதைதான். ஒவ்வொரு போதையும் தடைசெய்யப்பட்டதுதான். நோன்பு எந்தவொன்றுக்கும் அடிமையாகிவிடாமல் நம்மைத் தடுக்கிறது. அடிமைத்தனத்திலிருந்து நம்மை மீட்டெடுக்கிறது.

நோன்பின் மூலம் நீங்கள் தக்வா உடையவர்களாக ஆகலாம் என்று இறைவன் கூறுகிறான். தக்வா என்றால் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வதும் தடுக்கப்பட்ட வழிகளைவிட்டு தவிர்ந்திருப்பதும் ஆகும். தக்வா என்பது இயல்பு நிலை. இந்த உலகில் ஒரு மனிதன் இங்கும் அங்கும் தடுமாறித் திரியாமல், ஏதோ ஒன்றுக்கு அடிமையாகிவிடாமல் இயல்பு நிலையில் நீடித்திருந்தாலே போதுமானது. உண்மையில் அதுதான் வெற்றி.

- ஷா உமரி

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.