Tamil Islamic Media ::: PRINT
கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்!

இந்தத் தடவை short vocation 15 நாட்கள் விடுப்பு எடுத்து பக்ரீத்தை குடும்பத்துடன் கொண்டாட எண்ணி நானும் என் நண்பர்கள் இருவரும் சேர்ந்து ஒரே நாளில் ஊருக்கு விமான சீட்டு (Emirates Airlines இல்) எடுத்தோம். விமான சீட்டு எடுத்ததிலிருந்து மனம் ஊருக்கு கிளம்ப ஆயத்தமாகிவிட்டது. ஒரு வழியாக இங்கு (அமீரகத்தில்) பக்ரீதை கொண்டாடி விட்டு மதியம் 2:45 மணிக்கு விமானம் புறப்பட, மனம் முழுவதும் வீட்டை நோக்கியே இருக்க மூவரும் அன்று இரவு சந்தோஷமாக சென்னை விமான நிலையத்தை அடைந்தோம்.

எல்லா வேலையும் (Emigration, Baggage Collection) முடித்துக் கொண்டு கஸ்டம்ஸ் அதிகாரியிடம் கஸ்டம்ஸ் சீட்டைக் கொடுத்த போது அவர் எங்களுடைய பொருட்களை scan செய்து விட்டு சுமார் 15 முஸல்லா (தொழுக பயன்படும் துணியினால் ஆன விரிப்பு) உள்ள ஒரு பெட்டியை (நண்பனுடையது) மட்டும் மறுபடியும் தனியாக scan செய்ய வேண்டும் என்று கூறி இன்னொரு அதிகாரியிடம் அனுப்பினார்.

அவரும் ஸ்கேனரில் பார்த்து விட்டு ''இது என்ன?'' என்று வினவினார். நானும் என் நண்பரும் அதைப் பற்றி விளக்கி விட்ட பிறகு ''எத்தனை இருக்கிறது?'' என்று வினவினார். நாங்கள் ''15 முஸல்லா இருக்கிறது'' என்று கூறினோம். அப்போது ''இதற்கு ஒரு கிலோவிற்கு 300 ரூபாய் பணம் கட்ட வேண்டும்'' என்று அந்த அதிகாரி கூறவே, எனக்கும் என் நண்பருக்கும் சரியான கோபம் வந்து விட்டது.

காரணம் இது வியாபார ரீதியாக எடுத்துச் செல்லவில்லை, இதைக் கொண்டு செல்வதற்கு தடையோ, கட்டுப்பாடோ இல்லை. நான் கடுமையான குரலில் ''இது முஸ்லீம்கள் பயன்படுத்தும் தொழுகை விரிப்பு, இதற்கு ஏன் நாங்கள் customs duty கட்ட வேண்டும்?'' என்று கேட்கவே, ''அது எப்படி இருக்கும் எனக்கு sample காட்டுங்கள்'' என்று கூறினார்.

எங்களிடம் தனியாக hand baggage இல் ஒரு முஸல்லா இருந்ததால் அதை எடுத்து காண்பிக்க முயற்சி செய்தோம். அப்போது அதைக் கண்டுக் கொள்ளாமல் ''எங்களுடைய கஸ்டம்ஸ் மூத்த அதிகாரியும் முஸ்லீம் தான், அவரிடம் காட்டுங்கள், அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்'' என்று கூறினார்.

அப்போது அங்கு சென்ற கஸ்டம்ஸ் அதிகாரி, மூத்த முஸ்லீம் அதிகாரியிடம் விஷயத்தை கூறவே அதைச் சற்றும் சட்டை செய்யாத மூத்த அதிகாரி எங்களைப் போக சொன்னார். உடனே நாங்கள் மூவரும் எங்களுடைய தள்ளு வண்டிகளை  தள்ளிக் கொண்டு வண்டியில் வந்து அமர்ந்தோம்.

ஆக நாங்கள் அவரிடத்தில் ''சார் இதுக்கு எதுக்கு சார் கஸ்டம்ஸ் டூட்டி கட்டனும், விட்ருங்க சார்'' என்று பம்மியிருந்தால் ''நான் விட்டு விடுகிறேன், எனக்கு ஆயிரம், இரண்டாயிரம் கொடுங்கள்'' என்று கூறியிருப்பார். ஆனால் நாங்கள் அப்படி கூறாது அவரிடத்தில் தைரியமாக பேசியதால் எங்களை விட்டுவிட்டார்.

ஆகவே உங்களிடத்தில் தவறு இல்லேயன்றால் அழகான முறையில் ஆனால் கெஞ்சாமல்/ பயப்படாமல் விஷயத்தை எடுத்து சொல்லுங்கள். நாம் பயப்படுவது போல் நடித்தாலும், அல்லது பெட்டியைப் பிரித்து காட்டு என்று சொன்னால் மறுபடியும் கட்ட வேண்டும் என்று பயப்படுவதாலும் தான் அந்த பலகீனத்தைப் பயன்படுத்தி காசு பார்த்துவிடுகின்றனர் சில கஸ்டம்ஸ் அதிகாரிகள். பெட்டியைப் பிரித்து காட்ட சொன்னால், தயங்காதீர்கள், ''காட்டுகிறேன், ஆனால் திரும்பவும் பெட்டியை கட்டிக் கொடுக்க வேண்டும்'' என்று சொல்லுங்கள்; தைரியமாக பேசுங்கள்; ''இவன் வெளிநாட்டிலிருந்து வருகிறான், இவனை ஈசியாக ஏமாற்றி விடலாம்'' என்று நினைப்பவர்களின் எண்ணத்தைத் தவிடுபொடியாக்குங்கள்.

இதைப் போல் என் நண்பனின் மச்சான் (அக்கா மாப்பிள்ளை) இந்த முறை அமீரகத்தில் இருந்து ஊருக்குச் செல்லும் போது Panasonic LCD TV (32�) கொண்டு சென்றார். சாதாரண மாடல்களில் 32� வரை கொண்டு செல்லலாம். ஆனால் புதிதாக வந்துள்ள மாடல்களில் Sony Bravia வில் சில series மாடல்கள் மற்றும் புதிதாக வந்துள்ள மாடல்களுக்கு மட்டும் customs duty கட்ட வேண்டும். இவர் கொண்டு சென்றதோ பழைய மாடல் LCD TV. முழுவதுமாக கவர் செய்யப்பட்டதால் டிவியின் பெயரும், மாடலும் தெரியவில்லை.

அவரை வழிமறித்த கஸ்டம்ஸ் அதிகாரி ஒருவர் ''இது எத்தனை இன்ச் டி.வி.'' என்று கேட்க, அவர் ''32 இன்ச்'' என்று சொல்லியிருக்கிறார். அதை மறுத்த கஸ்டம்ஸ் அதிகாரி ''இல்லை, இது 42� மாதிரி தெரிகிறது'' என்று கூறியவுடன் டிவி வாங்கிய பில்லைக் காண்பித்து இருக்கிறார். அப்போதும் அதை மறுத்த அதிகாரியிடம், ''சார் உங்களுக்கு 32 இன்ச் டிவிக்கும், 42 இன்ச் டிவிக்கும் வித்தியாசம் தெரியவில்லையா?'' என்று அதட்டலுடன் கேட்டவுடனே இவரை மறுப்பேதும் சொல்லாமல் அனுப்பி விட்டார். அவர் கொஞ்சம் அசந்தாலும் அவரிடத்திலும் காசு பார்த்திருப்பார்கள் கஸ்டம்ஸ் அதிகாரிகள்.

ஆக நாம் அமைதியாக ஜெண்டிலாக, சாஃப்டாக சொன்னால் வேலை நடக்காது என்னும் இடத்தில் இப்படி பேசினால் தான் நம்மை நாம் தற்காத்துக் கொள்ள முடியும். இல்லையென்றால் நம்மை இலகுவாக ஏமாற்ற ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது.

உஷார் தோழர்களே! விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகளுடன் எப்போதும் பயப்படாமல், நேரடியாகத் தெளிவாகப் பேசுங்கள். நாம் எச்சரிக்கையாக இல்லாவிட்டால், நம் தலையில் அவர்கள் மிளகாயரைப்பது உறுதி!

http://www.inneram.com/2011010512873/be-caution-in-airport-customs

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.