Tamil Islamic Media ::: PRINT
ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் 2/2)

முதல் பாகம்: http://www.tamilislamicaudio.com/articles/detail.asp?cid=26&scid=11&aid=421&alang=ln1

 

தலைவரின் தகுதி, ஆலோசகர்களின் தகுதி, மக்களின் தகுதிகளைப் பார்த்தோம். இதில் ஆலோசகர்களின் தகுதி என்பது மிக முக்கியமானது. தலைவரோ, அல்லது மக்களோ சரியில்லையெனில் எளிதாக வெளிப்பட்டுவிடும் ஆனால் ஆலோசகர்கள் சரியில்லையெனில் அது வெளியில் தெரிவது எளிதல்ல என்பது மட்டுமில்லை அதனால் ஏற்படும் விளைவுகள் எண்ணிப் பார்க்க முடியாதவாறு அமைந்துவிடும். கலிஃபா உதுமான் (ரலி) அவர்களின் ஆலோசர்களின் ஒருவரான மர்வான் என்பவரின் சதியின் விலையை இந்த சமூகம் இன்றளவும் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. மாவீரன் சிராஜுத் தெளலாவின் ஆலோசகர் மீர் ஜாபரின் துரோகம், சிராஜுத் தெளலாவின் ஆட்சியைப் பறித்தது, வளம் நிறைந்த வங்காளத்தை ஆங்கிலேயர்களின் வசம் கொடுத்தது. தனது சில ஆலோசகர்களின் மன்னிக்க முடியாத துரோகத்தினால் மைசூர் சிங்கம் திப்புசுல்தான் தனது இன்னுயிரைத் துறந்தார், தனது நாட்டை இழந்தார், ஏன் இந்தியாவையே நாம் இழந்தோம். - எண்ணிப் பார்ப்போம் நாம் எத்தனை பேருக்கு நல்ல ஆலோசனைகள் சொல்லும் நண்பர்களாக இருக்கின்றோம், நமக்கு எத்தனை பேர் இருக்கின்றனர் என்று. ஏதாவது ஆலோசனை தேவை என்றால் எத்தனை பேர் நம்மை நாடுகின்றனர் என்று எண்ணிப்பார்ப்போம். (நாகூர் ஹனிபாவின் ஒரு பாடலின் வரி: புத்தி சொல்லும் தகுதி வாழ்ந்து புகழ் மணக்கச் சிறந்திடு...)


குறித்துக் கொள்ளுங்கள் நமது ஓட்டினால் ஆட்சிகள் அமைவதில்லை. அல்லாஹ்வினால் நம்மீது அவைகள் ஏற்படுத்தப்படுகின்றன.

நபி மூஸா (அலை) அவர்களிடம் அவரது மக்கள் கேட்டார்கள் “அல்லாஹ் எங்கள் மீது திருப்தியுடன் இருக்கிறானா அல்லது அதிருப்தியுடன் இருக்கிறானா என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது” என்று அல்லாஹ்விடம் கேட்டு எங்களிடம் கூறுங்கள். அதன்படி நபி மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் கேட்க அல்லாஹ் கூறினான். நான் மக்கள் மீது திருப்தியுடன் இருக்கிறேன் என்பதற்கான அடையாளம் நல்ல ஆட்சியாளர்களை நான் அவர்கள் மீது அமர்த்துவேன். நான் மக்கள் மீது அதிருப்தியுடன் இருக்கிறேன் என்பதற்கான அடையாளம் அவர்களை கெட்ட ஆட்சியாளர்களின் மூலம் சோதிப்பேன் என்று.

இவ்வாறே நபி ஈஸா (அலை) அவர்களும் அல்லாஹ்விடம் யாஅல்லாஹ் நீ மக்கள் மீது திருப்தியுடன் இருப்பதற்கும், அதிருப்தியுடன் இருப்பதற்கும் என்ன அடையாளம் என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ் நான் திருப்தியுடன் இருந்தால் விவசாய பூமிகளில் விதைகளைப் பயிரிடும் வேளையில் மழையை நான் இறக்குவேன். அறுவடை செய்யும் நேரத்தில் மழையை நிறுத்தி விடுவேன். மேலும் நல்ல ஆட்சியாளர்களையும் அமர்த்துவேன். ஆனால் நான் மக்கள் மீது அதிருப்தியுடன் இருந்தால் விவசாய பூமிகளில் விதைகளைப் பயிரிடும் வேளையில் மழையை நான் நிறுத்தி விடுவேன். அறுவடை செய்யும் நேரத்தில் மழையை இறக்குவேன். மேலும் கெட்ட ஆட்சியாளர்களையும் அமர்த்துவேன். என்று அல்லாஹ் கூறினான்.

ஆனால் நாமோ ஓட்டுகள் சேகரிப்பதில் கவனம் செலுத்துகிறோமே தவிர, நமது அஹ்லாக்குகளை சீர் செய்வதில் சிறிதும் கவனம் செலுத்துவதில்லை.


இங்கு ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். இஸ்லாம் என்பது ஒரு முழுமையான வாழ்க்கை வழிமுறை. மறுமைக்காக இம்மையை துறக்கவோ இம்மைக்காக மறுமையை துறக்க நமக்கு கூறப் படவில்லை. இம்மையின் மூலமாகவே மறுமையை அடைய வழிசொல்லும் மார்க்கம். மனைவிக்கு ஆடையளிப்பதும் அறமாகும் என்று கூறிம் நீதியான மார்க்கம். ஆனால் உலகின் ஆட்சி என்பாது அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு அளிக்கின்றான். அது இந்த சமூகமாகத்தான் இருக்கும் என்றில்லை. இன்று உலகின் சூப்பர் பவர்களின் ஒன்று இங்கிலாந்து.

இஸ்லாமிய நாடுளை வெற்றிகொண்டு செல்வத்தையும் அறிவையும் அள்ளிச் சென்று தன்னை வளர்த்துக் கொண்ட நாடு. இதனை இழந்த இஸ்லாமிய நாடுகள் இன்றளவிலும் அறிவில் எழந்து நிற்க இயலாமல் இருப்பது வேதனைக் குறிய ஒரு விசயம். நிற்க இவர்களிடம் ஏன் உலகமே மண்டியிடுகின்றது என்று ஒரு உதாரணம் பார்ப்போம்.

இங்கிலாந்தில் உள்ள பிரஸ்டன் (Preston) என்ற சிறைச்சாலையை ஒரு வலம் வருவோம். இரண்டுபேருக்கு ஒரு அறை. அறையில் வேண்டிய வசதிகள் இண்டர்நெட் வசதியுடன். கட்டாயமாக ஒவ்வொரு கைதியும் சிறைக் காலத்தில் ஒரு தொழில் கல்வியை கற்கவேண்டும். சமையலறை …. 5 ஸ்டார் ஹோட்டல் தோற்று போகும். சமையலுக்காக உபயோகிக்கும் பாத்திரங்கள் அனைத்தும் விலையுயர்ந்தவை. எந்த ஒரு அதிகாரிக்கோ காவாலாளிகளுக்கோ கைதிகளை அடிக்கும் உரிமை மட்டுமல்ல அதட்டும் உரிமை கூட கிடையாது. ஒவ்வொரு வாரமும் கைதிகளுக்க்கான உபதேசம். அந்தந்த மதத்தினருக்கு அந்தந்த மத போதகர்களைக் கொண்டே. உள்ளேயே ஒரு சூப்பர்மார்க்கட். கைதிகள் தங்களுக்குத் தேவையானதை வாங்கிக்கொள்ள.

ரமளான் வந்து விட்டால்……எத்தனை முஸ்லீம் கைதிகளோ அத்தனை “ஹாட் பாக்ஸ்கள்” 8 மணிநேரத்திற்கு உணவு அப்படியே இருக்கும் விலையுயர்ந்த தரமான “ஹாட் பாக்ஸ்கள்”. இரண்டு நேரத்திற்கான உணவுகள் ஸஹர் மற்றும் இஃப்தார் நேரத்திற்காக. (ஏனெனில் அந்த நேரத்தில் அங்கு சமையல் நடப்பதில்லை அதற்காக இந்த ஏற்பாடு). இந்த ஏற்பாடு அத்தனை முஸ்லீம் கைதிகளுக்கும் உண்டு. அவர்கள் நோன்பு வைத்தாலும் சரி வைக்காவிட்டாலும் சரி. (Source: Speech from Moulana Tariq Jameel who witnessed this by himself. Watch: https://www.youtube.com/watch?v=aCsu8yeYpaA [Urdu] )

நம்மால் கற்பனை செய்யக்கூட இயலவில்லை. இது போன்று பல காரணங்கள் அவர்கள் கையில் ஆட்சி அதிகாரம் இருப்பதற்கு. நமது அஹ்லாக்குகள் எப்படியிருக்கின்றன என்பதை சற்றே எண்ணிப் பார்ப்போம்.



முஸ்லீம்கள் மைனாரிட்டியாக இருக்கும் இந்தியாவில் ஆட்சி நம்மைத் தேடி வருமா?


மெளலான அபுல் கலாம் ஆசாத். நேரு இவரிடம் கல்வித் துறையை ஒப்படைத்தார். ஒரு ஆலிமிடம் சுதந்திர இந்தியாவின் கல்வித் துறை எப்படி? நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாகத் தான் இருக்கின்றது ஆனால் மெளலானா அபுல் கலாம் ஆசாத்தைப் பற்றி அறிந்த நேருவிற்கோ எந்தவொரு தயக்கமும் இல்லை. சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மெளலான அபுல் கலாம் ஆசாத் சாதித்ததென்ன?. இவரின் பிறந்தநாள் நவம்பர் 11, இந்த தேசத்தின் கல்விதினமாக அறிவிக்கப்படும் அளவிற்கு சாதித்தார். இந்தியாவின் தலை சிறந்த கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி Indian Institutes of Technology யை நிறுவியவர் இவர் தான். எல்லா பல்கலைகழகங்களையும் கண்காணிக்க University Grants Commission, என்ற அமைப்பை ஏற்படுத்தியவரும் இவர் தான்.- சாதனைகளில் சில.


முகம்மது ரஃபி கித்வாய் அவர்களைப்பற்றி எத்தனை பேருக்குத் தெரியும். நேரு சுதந்திர இந்தியாவில் உணவு நெருக்கடியை போக்குவதற்கு இவர் தகுதியானவர் என அறிந்து இவரிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்தார். மிக குறுகிய காலத்தில் தனது கடின உழைப்பாலும், மதி நுட்பத்தினாலும் , உணவு நெருக்கடிக்கான காரணங்களை முதலில் கண்டுபிடித்தார். பின்னர் மிக உறுதியுடன் அதற்கான தீர்வுகளை அமல் படுத்தினார். நாட்டின் உணவு நெருக்கடியை தீர்த்தார். மக்கள் வாயார வாழ்த்தினார்கள். ஆனால் அவர் இறக்கும்போது அவரது பூர்வீக வீடு அடமானத்தில் இருந்தது. (நாம் மறந்த தலைவர்களில் இவரும் ஒருவர்) (நன்றி: தேசம் மறந்த ஆளுமைகள் – ராபியா குமாரன்)

தனது நன்னடத்தையாளும், கண்ணியத்தினாலும் ஜனாதிபதி பதவியையே தன்னை நாடி வரச் செய்தவர்தான் டாக்டர் அப்துல் கலாம். பதவி வந்தபின் தனது திறைமையால் அந்த பதவிற்கே ஒரு அந்தஸ்தை இந்திய மக்களிடையே குறிப்பாக மாணவர்களிடையே உருவாக்கினார் அவர்.

நமக்கும் மிக நெருங்கிய காலத்திய உதாரணத்தை காட்டியுள்ளேன். ஆட்சி நம்மைத் தேடி வரவேண்டும் அதற்கான காரணங்களை மக்கள் நம்மிடையே காண வேண்டும். அதற்கான பயிற்சிகளை முதலில் நாம் மேற்கொண்டு, தகுதிகளை வளர்த்துக் கொள்ளவேண்டும். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கும் அறிவாளிகள் சமுதாயத்தில் உருவாக்கப் படவேண்டும்.



சற்றே மாற்றியும் யோசிப்போம். ஆட்சி அவசியம்தானா?

எந்த ஒரு செயலுக்கும் ஒரு நோக்கம் (Objective) இருக்கவேண்டும். நாம் ஆட்சிக்கு வர விரும்புவதற்கும் ஒரு நோக்கம் இருக்கவேண்டும். அது மக்களுக்கு, முஸ்லீம்கள் உட்பட அனைவருக்கும், நல்லது செய்வது தான் என்று மட்டுமே என்றிருக்கவேண்டும். அதல்லாமல் மற்ற எதற்காகவாவது (பதவி ஆசை, அதிகாரத்திற்காக, பணத்திற்காக, பெயருக்காக, புகழுக்காக etc..) இருக்குமேயானால் இஸ்லாத்திற்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை.

இப்போது நோக்கம் மக்களுக்கு நல்லது செய்வதற்காக, குறிப்பாக முஸ்லீம்களின் பாதுகாப்பிற்காக, அமைதிக்காக என்றிருக்கும் பட்சத்தில், சற்றே மாற்றி யோசிப்போம் ஆட்சியில் இருந்தால் மட்டும் தான் இது சாத்தியமா? ஆட்சியில்லையெனில் இவை சாத்தியமில்லையா? நிச்சயம் இதற்கு ஆட்சியில் இருப்பது அவசியமில்லை என்பதே பதில், உதாரணம் சென்னை வெள்ள நிவாரணப் பணி.

சமீபத்திய சென்னை வெள்ளப் பெருக்கின் போது நமது சமுதாயத்தினர் மேற்கொண்ட நற்பணிகள். சமுதாயத்தின் மீதிருந்த எண்ணத்தையே மற்றவர்களிடம் மாற்றிப் போட்டது. பலனை எதிர்பாராமல் செய்யும் உதவிகள் எதிரிகளையும் நண்பர்களாக மாற்றிவிடும். நாளை நமது நலனுக்கு ஒரு பிரசினை என்றால் நாம் களம் இறங்க வேண்டியதில்லை, நமக்கு முன்னே நமக்காக அவர்கள் நிற்பார்கள். வெள்ள நிவாரணப் பணி ஒரு ரியாக்சன். ஒரு ரியாக்சனுக்கே இவ்வளவு பவர் என்றால் ஆக்சனுக்கு எப்படியிருக்கும்.

எந்த டாக்டரிடம் நமக்கு சுகம் கிடைக்கின்றதோ அவரிடம் தான் நாம் மீண்டும் செல்வோம். இது மனித இயற்கை. இது போன்று தான் தனது பிரச்சினைகளுக்கு தீர்வுகளை யார் கொடுக்கின்றார்களோ அவர்களைத்தான் மக்கள் விரும்புவார்கள். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முஸ்லீம் சமூகம் தீர்வைக் கொடுத்தது தான் இந்த சமுகத்தைப் பற்றிய பார்வையே மாற்றி அமைத்தது. இதிலிருந்து நாம் பாடம் பெறவேண்டும். மக்களுக்கான தீர்வை கொடுப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். மக்களின் தீர்க்கபடாத பிரச்சினைகள் ஏராளமாக இருக்கின்றன. அதில் சிலவற்றிற்காகவாவது தீர்வுகளை கொடுக்க நாம் முன்வரவேண்டும்.

தண்ணீர் பற்றாக்குறை

மழை நீர் சேமிப்பு திட்டங்களை அமல் படுத்தலாம். இருந்த ஏரிகளும், குளங்களும், குட்டைகளும் பிளாட்டுகளாக மாறியது தான் தண்ணீர் பற்றாக்குறைக்கு காரணம். சமீபத்திய வெள்ளத்திற்கும் காரணம். முஸ்லீம் அமைப்புகளும், செல்வந்தர்களும் இந்த திட்டங்களை முறைப்படி அமல்படுத்தலாம். இது ஒரு சிறந்த ஸதகத்துல் ஜாரியாவாக அமையும்.

மருத்துவத்துறை:

தொண்டாற்றும் துறையாக ஒரு காலத்தில் இருந்தது இன்று முழுவதுமாக வியாபாரமாக்கப் பட்டுவிட்டது. ஆஸ்பத்திரிக்கு செல்லாமலே எளிய முறையில் குணப்படுத்தும் முறைகள் இருக்கின்றன. இதற்கான விழிப்புணர்வை முறையாக மேற்கொள்ளலாம். அதிக விலையுள்ள பல மருந்துகளுக்கு விலை குறைவான மாற்று மருந்துகள் உள்ளன. இதனடிப்படையில் மலிவு விலை மருந்து கடைகளை திறக்கலாம்.

விவசாயம்:

உணவே மருந்தாக இருந்த காலம் மாறி இன்றே விஷமே உணவாக இருக்கின்றது. எந்த பூச்சிக் கொள்ளி மருந்துகளை குடித்தால் மரணம் நிச்சயமோ அந்த மருந்துகளைத்தான் உணவு தானியங்களுக்கு தெளித்து பின்னர் அதை உணவாக சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றோம், அதன் காரணமாகத்தான் நோய்களும் நோயாளிகளும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. முஸ்லீம் விவயசாயிகள் இயற்கை விவசாயத்தை கையில் எடுப்பது மட்டுமில்லாமல் அதில் முன்னோடிகளாக திகழவேண்டும்.

குர்ஆனிலிருந்து தீர்வுகள்:

குர்ஆனில் வாழ்வின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் இருக்கின்றன என்று பெருமையுடன் கூறிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் எந்த தீர்வையாவது செயல் படுத்தி காட்டியிருக்கின்றோமா?. நமக்கு ஓதுவதற்கே நேரமில்லை இதில் எங்கே ஆய்வு செய்வது..

குர்ஆனை ஆய்வு செய்து அதில் முன்னணியில் இருப்பவர்கள் யார் தெரியுமா? தெரியவில்லை என்றால் தெரிந்து கொள்ளுங்கள். யூதர்கள் தான். அல்லாஹ் ஆத் சமுதாயத்தை நெருப்பை கொண்டழித்தான் என்ற ஆயத்தை ஆய்வு செய்தார்கள். அப்படியானால் அந்த ஏரியாவில் நெருப்பு சம்பந்தப்பட்ட பொருள் இருக்கவேண்டுமென்ற கோணத்தில் ஆராய்ந்து பெட்ரோல் இருப்பதை கண்டுபிடித்தார்கள்.

படிக்கவேண்டும், ஆராய்ச்சிகள் குர்ஆன் அடிப்படையில் தொடங்கவேண்டும். மனித சமுதாயத்திற்கு தீர்வுகள் வழங்கப்படவேண்டும். எந்த சமுதாயம் தன்னுடைய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை அளிக்கின்றதோ அந்த சமுதாயத்தை நிச்சயமாக தன்னை ஆள்வதற்கு முழு சம்மதத்துடன் வரவேற்கும். ஆகவே நமது சிந்தனைகள் என்னைக் கொண்டு மற்றவர்கள் என்ன பலன் அடைந்தார்கள் என்ற கோணத்தில் அமைய வேண்டும். மற்றவர்கள் மீது எப்படி அதிகாரம் செலுத்தலாம் என்று ஒரு போதும் இருக்கக்கூடாது. எந்த வகையில் அல்லாஹ் எனக்களித்திருக்கும் அறிவை என்னல் பெருக்கி மற்றவர்களுக்கு அதன் மூலம் பலனளிக்க முடியும் என்ற எண்ணத்தை வளரச் செய்ய வேண்டும்.

மதுவிலக்கு:

வாக்குறுதி அளிப்பது எளிது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிளக்கு அமல் படுத்துவோம் என்று கூறுவது. செயல் முறை….? இப்போது தமிழ் நாட்டின் வருமானத்தில் முதலிடத்தில் இருப்பது மதுக்கடைகள் மூலம் வரும் வருமானம் 2014 -15-ல், 22 ஆயிரத்து, 400 கோடி . இன்று அரசின் வருமானத்தில், ஏறத்தாழ ஐந்தில் ஒரு பங்கு, மது விற்பனை மூலம் கிடைக்கிறது. பலபேர்களுக்கு வேலைவாய்ப்பும் இதில் அடக்கம். மது விலக்கை அமல் படுத்தினால் இந்த இரண்டு பிரச்சினைகளையும் தீர்க்கவேண்டும். அதற்கான செயல் முறை திட்டம் நம்மிடையே இருக்கின்றதா?. கிடையாது. ஆகவே அதில் கவனம் செலுத்தி அப்படியொரு எளிதாக நடைமுறை படுத்தக் கூடிய பொருளாதார செயல் முறைதிட்டத்தை உருவாக்கி, ஆளும் கட்சியிடம் ஒப்படைத்து செயல் படுத்தக் கூறலாம். கோரிக்கையுடன் தீர்வும் வைக்கப்படும் போது பிரச்சினை தீர்வதற்கான சாத்தியம் அதிகம்.

வட்டியில்லா கடன்:

இன்று எத்தனையோ குடும்பங்கள் வட்டிப் பிரச்சினைகளினால் நிம்மதியிழந்து தவிக்கின்றன. கடனாக வாங்கிய ஒரு சிறு தொகைக்காக வாழ்க்கை முழுவதும் வட்டி கொடுத்துக் கொண்டிருப்பவர்கள் கணக்கிலடங்கா. வட்டியில்லா வங்கிகள் சாத்தியமே இன்று இந்தியாவிலேயே நம்மவர்கள் சிலரின் முயற்சியால் தொடங்கப்பட்டு பலபேர் பலனடைந்து கொண்டிருக்கின்றனர். அதற்கான முயற்சியில் நேரடியாக ஈடுபட முடியவில்லையெனினும் அதில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு முழு ஆதரவையும் ஊக்கத்தையும் வழங்கலாம்.

ஜகாத்:

இதை முறைப்படுத்தினால் ஏழ்மை ஒழிந்து விடும் என்று கோஷம் மட்டும் போட்டுக் கொண்டிருக்காமல் செயலில் செய்து காட்டலாம், முஹல்லா அளவில் இது முறைப்படுத்தி பின்னர் ஊர் அளவில், மாவட்ட அளவில் ஜமாத்துகளின் தொடர்பு ஏற்படுத்தப் பட்டால் ஏற்படும் பலன்கள் நிச்சயம் மாற்று மத சகோதரர்களையும் நம்மளவில் ஈர்க்கும். இருக்கும் அமைப்புகள் ஜமாத்துகள் மிக எளிதாக இதை செயல் படுத்தலாம்.

குறிப்பு: கடந்த சில வருடங்களாக எங்கள் ஊரைச் (நெல்லை ஏர்வாடி) சேர்ந்த EMAN என்ற ஐக்கிய அமீரக அமைப்பின் மூலம் ஜகாத்தை வசூல் செய்து முறையாக அதை கொடுத்து வருகிறோம். இன்று மிகவும் ஏழ்மையான, எந்தவித ஆதரவுமற்ற சுமார் 80 ஏழை குடும்பங்கள் அவர்களுக்கான பணம் அவர்களுக்கு கிடைத்த நிலையில், யார் கையையும் எதிர்பாராமல் வாழ்கின்றனர்.


மேலே குறிப்படப்பட்ட அனைத்துமே நிச்சயமாக நாம் செயல் படுத்தப்படக் கூடியதே! இது போன்ற நல்ல காரியங்களைச் செய்வதற்கு ஆட்சி தேவையில்லை, மாறாக இது போன்ற காரியங்களில் நாம் ஈடுபட்டால் நிச்சயம் ஆட்சி ஒருநாள் நம்மைத் தேடிவரும்.

உண்மையில் நோக்கமும் செயலும் தூய்மையாக இருந்தால் ஒரு ஆட்சியால் சாதிக்க முடியாததை ஒரு தனி நபர் சாதிக்க முடியும். இதோ சில உதாரணங்கள்: வரலாறு அல்ல.. நிகழ் காலத்திலேயே…

ஒருகோடிக்கும் மேற்பட்ட மக்கள் இஸ்லாத்தை ஏற்க காரணம்.
5,700 பள்ளிவாசல்கள்.
9,500 கிணறுகள்
15,000 அனாதைகளின் பரிபாலனம்..
எந்த அரசாங்கத்தினாலும் சாதிக்க முடியாததை தனி நபராக சாதித்தார்.
சாதித்தவர்: டாக்டர்: அப்துல் ரஹ்மான் அல் சுமைத். தனது சொகுசான குவைத் வாழ்க்கையைத் துறந்து, உயிரைப் பணயம் வைத்து ஆப்ரிக்காவில் அவர் செய்த தியாக உழைப்பின் விளைவுகள்.
Watch: https://www.youtube.com/watch?v=TbPbbOGGknE 



1.800 ஆம்புலென்சுகள். (Efficient Service, Response time 3 to 5 mins)
நூற்றுக் கணக்கான மருத்துவ மனைகள். தனக்கென சொந்த வீடில்லை.
ஆதரவற்ற குழந்தைகள், பெண்கள் மற்றும் வயோதிர்களுககாக எப்பொதுமே திறந்திருக்கும் கதவுகள்.
சாதித்தவர்: அப்துல் சத்தார் யத்ஹி, அண்டை நாடான பாகிஸ்தானில்
அரசாங்கத்தால் சாதிக்க முடியாததை தனி நபராக சாதித்தவர்.
Watch: https://www.youtube.com/watch?v=AfKn2vUiQuc 



சிந்தனைகள் மாறவேண்டும். அது பதவியை நோக்கி ஒரு போதும் இருக்கக் கூடாது. சேவை என்ற வட்டத்திற்குள்ளேயே அது இருக்கவேண்டும்.

பல அமைப்புகள் இது போன்று சமூக பிரச்சினைகளுக்கு தமிழ் நாட்டில் நமக்கருகிலேயே தீர்வையளித்துக் கொண்டிருக்கின்றன. அவைகள் பத்திரிக்கைகளிலோ, டி.வி.க்களிலோ, வாட்ஸ்அப்புகளிலோ வருவதில்லை தெரிவதில்லை. அவற்றைத் தேடி கண்டுபிடித்து அவர்களுக்கு ஊக்கத்தையும் உங்களது நேரத்தையும் கொடுங்கள்.

சகோதரர்களை பேச்சை குறைப்போம் செயல்களை அதிகப் படுத்துவோம். என்றோ படித்த ஞாபகம், சந்தோசம் என்பது வண்ணத்துப் பூச்சியைப் போன்றது. அதை நாம் துரத்தினால் அது நம்மைவிட்டு விலகிப் போகும். நாம் அதை சட்டைசெய்யாமல் நமது (சரியான) வேலையில் கவனம் செலுத்தினால் அது நமது தோளில் வந்தமரும் என்று. ஆம் ஆட்சியும் அது போன்றே.

நமது குறிக்கோள் உண்மையான வெற்றி, சந்தோசம்… இம்மையிலும் மறுமையிலும். அது ஆட்சி கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம். மறுமை வரை காத்திருக்காமல்…

அல்லாஹ் நம் அனைவருக்கும் உணர்ந்து புரிந்து சரியான வழியில் செயல்பட அருள் புரிவானாக..

குறிப்பு: நான் மார்க்கம் கற்ற ஆலிம் இல்லை. தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள், திருத்திக் கொள்கிறேன்.

நெல்லை ஏர்வாடி S.பீர் முஹம்மத்
http://www.nellaiEruvadi.com
http://www.TamilIslamicAudio.com


7146. அப்துர் ரஹ்மான் இப்னு சமுரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் (என்னிடம்), 'அப்துர் ரஹ்மானே! ஆட்சிக் பொறுப்பை (நீங்களாக)க் கேட்காதீர்கள். ஏனெனில், நீங்கள் கேட்டு அது உங்களுக்கு அளிக்கப்பட்டால் அதோடு நீங்கள் (தனியாக) விடப்படுவீர்கள். கேட்காமல் உங்களுக்கு அது அளிக்கப்பட்டால் அது தொடர்பாக உங்களுக்கு (அல்லாஹ்வின்) உதவிகிடைக்கும். நீங்கள் ஒரு சத்தியம் செய்து, அது அல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாக நீங்கள் கருதினால் உங்களின் சத்தியத்(தை முறித்துவிட்டு முறித்த)தற்கான பரிகாரத்தைச் செய்துவிடுங்கள். சிறந்தது எதுவோ அதைச் செயல்படுத்துங்கள்' என்றார்கள்.13 Volume :7 Book :93 புஹாரி

நபி (ஸல்) கூறினார்கள்: “ஒரு முஃமின் (இறைநம்பிக்கையாளர்) மற்றொரு முஃமினுக்கு ஒரு கட்டடத்தைப் போன்றாவார். கட்டடத்தின் ஒரு பகுதி மற்ற பகுதிக்கு வலு சேர்க்கிறது.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

மேலும் நபி (ஸல்) கூறினார்கள்: “பகைமை கொள்ளாதீர்கள் பொறாமை கொள்ளாதீர்கள் புறக்கணிக்காதீர்கள் சகோதரர்களாக, அல்லாஹ்வின் அடிமைகளாக வாழுங்கள் ஒரு முஸ்லிம் தனது சகோதரரை மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்து ஒதுக்கிட வேண்டாம்.” (ஸஹீஹுல் புகாரி)

மேலும் கூறினார்கள்: “ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு சகோதரராவார். அவருக்கு அநியாயம் செய்யக் கூடாது அவரை எதிரியிடம் ஒப்படைக்கக் கூடாது யாரொருவர் தனது சகோதரன் தேவையை நிறைவேற்ற ஈடுபடுகிறாரோ அல்லாஹ் அவன் தேவையை நிறைவேற்றுகிறான்! யார் ஒருவர் ஒரு முஸ்லிமின் கஷ்டத்தை அகற்றுகிறாரோ அவருக்கு அல்லாஹ் மறுமையின் கஷ்டங்களிலிருந்து ஒரு கஷ்டத்தை அகற்றுகிறான். யார் ஒருவர் முஸ்லிமின் குறையை மறைப்பாரோ அல்லாஹ் அவருடையக் குறையை மறுமையில் மறைத்துவிடுவான்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

மேலும் கூறினார்கள்: “பூமியிலுள்ளவர்களின் மீது கருணை காட்டுங்கள். வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான்.” (ஸுனன் அபூதாவூது, ஸுனனுத் திர்மிதி)

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.