Tamil Islamic Media ::: PRINT
அறிவமுதூட்டிய எங்கள் ஆன்மீக ஆசான் கமாலுத்தீன் ஹள்ரத் கிப்லா அவர்கள்......பற்றிய ஒர் மலரும் நினைவு

திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டையில் மௌலானா, எஸ். ஹுசைன் முஹம்மது பாகவி என்ற கபீர் ஆலிம் அவர்களுக்கு 21.09.1934ல் மூத்த மகனாகப் பிறந்தார்கள். தந்தை இமாமாகப் பணியாற்றிய ஊர்களில் பள்ளிப் படிப்பை முடித்த ஹள்ரத் அவர்கள் மார்க்கக் கல்வி பயில ஆரம்பித்தார்கள்.

வேலூர் பாக்கியாத் அரபிக் கல்லூரியில் 1955ஆம் ஆண்டு இளங்கலை ஆலிம் (பாக்கவி) பட்டமும், 1957ஆம் ஆண்டு முதுநிலை ஆலிம் (ஃபாஸில்) பட்டமும் பெற்றார்கள். பட்டம் பெற்றபின் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் உள்ள "மன்பஉல் உலா' அரபிக் கல்லூரியில் ஆசிரியர் பணியைத் தொடங்கினார்கள். 1957 முதல் 1962 வரை 5 ஆண்டுகள் அக்கல்லூரியில் பணியாற்றினார்கள்
அடுத்து வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் 1965 முதல் 2003 வரை 38 ஆண்டுகள் ஹள்ரத் அவர்கள் பேராசிரியராகப் பணியாற்றினார்கள். இவற்றில் 1989 முதல் 1993 வரை 5 ஆண்டுகள் அன்னார் முதல்வராகப் பணியாற்றியது குறிப்பிடத் தக்கதாகும்.
மறைந்த மாமேதை கமாலுத்தீன் ஹள்ரத் அவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டிய சிறப்பம்சங்கள் நிறையவே இருந்தன. பாடம் நடத்தும் முறை, சொந்த வாழ்க்கை, சமூக அக்கறை, சுயமரியாதை, தன்னம்பிக்கை, வழிபாடு, இறையச்சம்... என ஏராளமான நற்பண்புகள் நம்மை அன்னார்மீது ஈர்ப்பு கொள்ளச்செய்தன.

அரபி மதரசாக்களில் உள்ள பாடநூல்களை ஆசிரியர் தாமும் புரிந்து, மாணவர்களையும் புரியவைப்பதென்பது மிகப் பெரிய சவால்தான். கமாலுத்தீன் ஹள்ரத் அவர்கள் இக்கலையில் கைதேர்ந்த மேதை என்றுதான் சொல்ல வேண்டும். சிலர், பாடநூலின் அரபி வாசகத்தை வாசித்து, வார்த்தை வார்த்தையாகப் பொருளையும் சொல்லி, கருத்தையும் சொல்லிக் குழப்பிக்கொண்டிருப்பார்கள்.

ஆனால் ஹள்ரத் அவர்கள், ஆரம்பத்திலேயே அன்றைய பாடத்தின் கருத்தைச் சுருக்கமாகத் தாய்மொழியில் விளக்கிச் சொல்லிவிட்டுப் பின்னர் பாடநூலின் வாசகத்தைப் படித்துப் பொருள் சொல்வார்கள். இதனால், பாடத்தின் கருவைக் குறிப்பெடுத்துக்கொள்ள மாணவர்களுக்கு வாய்ப்பு ஏற்படும்.

வகுப்பறையில் பாடம் நடத்துவதோடு நிறுத்திக்கொள்ளாமல், சொந்த அனுபவங்கள், வாழ்க்கையின் மேடு பள்ளங்கள், உலக நடப்புகள், தன்னம்பிக்கையூட்டும் அறிவுரைகள் போன்ற வழிகாட்டுதல்கள் ஹள்ரத் அவர்களிடம் அதிகமாகவே கிடைக்கும்.
மிகக் குறைந்த ஊதியத்தில் ஆசிரியர் பணியைத் தொடங்கிய கமாலுத்தீன் ஹள்ரத் அவர்கள், பொருளாதார நெருக்கடிகள் கடுமையாக மிரட்டியும்கூட எந்தப் பணக்காரரிடமும் கையேந்தியதில்லை. தன்மானத்தோடும் சுயமரியாதையோடும் வாழ்ந்த அவர்கள், எங்களுக்கும் அதைப் போதித்தார்கள். உள்ளதைக் கொண்டு போதுமாக்கும் சிக்கனம் என்ற தாரகமந்திரமே அவர்களது கண்ணியமான வாழ்க்கையின் இரகசியமாக இருந்தது.

இவ்வளவு சிரமத்திலும் நெருக்கடியிலும் தன்னடக்கத்தோடு வாழ்ந்து, தம் மக்கள் இருவரையும் பட்டதாரிகளாக ஆக்கினார்கள் என்பது, எங்களுக்கெல்லாம் சிறந்த முன்மாதிரி ஆகும். ஹள்ரத் அவர்களின் மூத்த புதல்வர் ஷப்பீர் அஹ்மத் ஒரு இன்ஜினியர் ஆவார். இளையவர் ரஷீத் அஹ்மத் இளநிலைப் பட்டம் பெற்றவராவார்.

"இறைவா! யாரிடமும் நான் கையேந்தும் நிலையை ஏற்படுத்திவிடாதே!'' என்று நான் தொடர்ந்து பிரார்த்தனை செய்துவந்தேன். பெண் குழந்தையைக் கொடுத்தால், இவன் கையேந்தும் நிலை ஏற்படலாம் என்று கருதிய இறைவன், எனக்குப் பெண் குழந்தைகளே இல்லாமல் செய்துவிட்டான் - என்று ஹள்ரத் அவர்கள் கூறுவார்கள்.

குடும்ப வாழ்க்கையில் மனைவி, மக்களோடு பிரச்சினைகள் ஏதும் ஏற்பட்டால், திருக்குர்ஆன் சொல்லும் அறிவுரையின்படி, "இறைவா! எங்கள் துணைவியர் மற்றும் சந்ததியினரிடமிருந்து எங்களுக்குக் கண்குளிர்ச்சியை அருள்வாயாக!'' (25:74) எனும் துஆவை ஓதுவேன். பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்று ஹள்ரத் அவர்கள் சொன்னதுண்டு. இது அவர்களிடம் நாங்கள் கற்ற வாழ்க்கைப் பாடமாகும்.

அடக்கம், எளிமை, சிக்கனம் ஆகியவை நபி (ஸல்) அவர்கள் காட்டிய அழகான பண்புகளாகும். இவற்றை அப்படியே கடைப்பிடித்து வாழ்க்கையில் ஜெயித்துக்காட்டிய மகான் கமாலுத்தீன் ஹள்ரத் அவர்கள்.

வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் துணை முதல்வராக ஆனபோதும் சரி; முதல்வராகப் பணியாற்றியபோது சரி; கல்லூரியில் தான் உயர்ந்த பதவியில் உள்ளோம் என்று ஒருபோதும் அவர்கள் எண்ணியதுமில்லை; வெளிக்காட்டிக் கொண்டதுமில்லை.
மாணவர்கள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவதிலும், அவர்களின் நலனில் கவனம் செலுத்துவதிலும் அன்னார் ஒரு பாசமிக்க "தந்தை'தான். மாணவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டாலோ, பண நெருக்கடி ஏற்பட்டாலோ, பாடங்களில் சிக்கல் ஏற்பட்டாலோ தம்மாலான உதவிகளைப் பரிவோடு செய்வார்கள். பட்டம் வாங்கிய பின்னும் சேவை எதுவுமின்றி தம் மாணவர்கள் யாரும் இருந்தால், வேலை கிடைக்க ஆவன செய்வார்கள். மாணவர்களின் குடும்ப உறுப்பினர்களைக் கேட்டுத் தெரிந்துகொள்வதில் அதிக அக்கறை காட்டுவார்கள். தக்க ஆலோசனைகளும் வழங்குவார்கள்.

மறைந்த கமாலுத்தீன் ஹள்ரத் அவர்கள் பெரிய பேச்சாளராக இல்லாமல் இருக்கலாம். ஆனால், எளிய நடையில் கனமான கருத்துகளைக்கூட மக்கள் புரியுமாறு எடுத்துவைப்பதில் சிறந்து விளங்கினார்கள். சாதாரணமாகப் பேசி, அசாதரணமான கருத்துகளை மனத்தில் பதியவைத்துவிடுவார்கள்.
ஆக, சித்தையன்கோட்டை கமாலுத்தீன் ஹள்ரத் அவர்கள் ஒரு சாகப்தம். ஆனால், அது முடியவில்லை. ஆயிரக்கணக்கான அவர்களின் மாணவர்களால் அது இன்றும் தொடர்கிறது; இனியும் தொடரும் எனலாம்.

இன்று "பாக்கவிகள்' என்று அழைக்கப்படும் ஒவ்வொருவரும் ஹள்ரத் அவர்களின் மாணவர்களாகவே இருப்பர்; அவர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டவர்களாகவே இருப்பர். இன்று எழுத்திலும் பேச்சிலும் சமூக சேவையிலும் முன்னணியில் இருக்கும் பெரும்பாலான ஆலிம்கள் கமாலுத்தீன் ஹள்ரத் அவர்களால் ஏதாவது ஒரு வகையில் பயனடைந்தவர்களாகவே இருப்பர்.

கமாலுத்தீன் ஹள்ரத் அவர்களின் இறுதித் தொழுகை 21.1.2009 அன்று சேலம் ஜங்ஷன் மையவாடியில் இஷாவில் நடந்தது. அதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இவர்களில் பெரும்பாலோர் ஆலிம்கள்தான். அனைவரும் ஹள்ரத் அவர்களின் மறுமை வாழ்வு சிறக்க இறையிடம் மன்றாடி பிரார்த்தித்த காட்சி உருக்கமானது. இரங்கல் கூட்டத்தில் கலந்துகொண்ட ஆலிம்கள் பலரும் கண்ணீர் விட்டு அழுதது ஹள்ரத் அவர்கள்மீது ஆலிம்களுக்கு உள்ள பாசத்தை வெளிப்படுத்தியது.

இன்று ஆலிம்கள் சமுதாயம் பாசமிக்க ஒரு தந்தையை இழந்து அநாதையாக நிற்கிறது. பெற்ற தாயும் தந்தையும் காட்டும் பாசத்துக்கு நிகராக மாணவச் செல்வங்கள்மீது பாசமழை பொழிந்த இப்படியொரு ஆசானை நாங்கள் எங்கள் வாழ்நாளில் கண்டதில்லை. அன்னாரின் பிழைகளைப் பொறுத்து, சொர்க்கத்தை வல்ல ரஹ்மான் வழங்குவானாக! என்று பிரார்த்திப்பதைத் தவிர, நாங்கள் வேறு என்ன செய்திட முடியும்?

இறுதியாக, சமுதாயத்துக்கு ஒரு சொல். வாழ்க்கை முழுவதையும் மார்க்கத்திற்காக அர்ப்பணித்து, 75 ஆண்டுகளில் 46 ஆண்டுகளை ஆசிரியர் பணியில் செலவிட்டு, ஆயிரக்கணக்கான மார்க்க அறிஞர்களை உருவாக்கிய ஓர் ஆலிம் பெருந்தகை, பணியிலிருந்து ஓய்வுபெற்றபோது வெறுங்கையோடுதான் ஊர் திரும்பினார்.

தாம் பெற்ற பிள்ளைகளின் உதவியோடுதான் எஞ்சிய நாட்களைக் கழிக்க முடிந்தது. முதுமையில் யாரையும் எதிர்பார்க்காமல் தன்னிறைவோடு வாழ்ந்து மறைய ஒரு பெருந்தொகையை கல்லூரியோ சமுதாயமோ அளித்திருக்க வேண்டாமா?

கமாலுத்தீன் ஹள்ரத் அவர்கள் ஒரு அரசு அலுவலராகவோ, நிறுவன ஊழியராகவோ இருந்து தமது ஆற்றலை அதன் முன்னேற்றத்திற்ககச் செலவிட்டிருந்தால், ஓய்வு காலத்தில் எத்தனை சலுகைகள் கிடைத்திருக்கும்! அல்லது இம்மைக் கல்விக்கும் மறுமைக் கல்விக்கும் இதுதான் வித்தியாசமோ

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.