சொந்தமாகட்டும் சொர்க்கம் !

அண்ணலே யா ரசூலல்லாஹ் !
உங்களை
உவக்கும்போதுதானே
உயிர் பெறுகிறது
எங்கள் உள்ளம் !

உங்கள் முஹப்பத்தை
முத்தமிடும் போதுதானே
மணம் வீசுகிறது
எங்கள் மூச்சு !

தாயிப் மலைக் கற்கள்
குத்திக் கிழித்த
உங்கள்
பாதச் சுவடுகளில்
பார்வை விழும்போதுதானே
பனித் திரையாகிறது
எங்கள்
விழித்திரை !

பெருமானே...
உங்கள்
பசித்த வயிறுக்கு உணவாக
குறைஷிகள் பரிமாறியது
கற்களைத்தானே
உங்கள் தாகத்திற்கு
வாரி இறைத்தது
சொற்களைத்தானே !

கல்லிலும் சொல்லிலும்
கசங்கிப் போனவர் மத்தியில்
கனிந்து வந்த
கருணை நபியும்
நீங்கள்தானே !

அண்ணலே...
கசப்புகளைத் தந்தவர்க்கு
கரும்புத் தோட்டங்களையே
காணிக்கையாக்கியவர் தாங்கள் !

கல்லெறிந்தவர்க்கும்
சொல்லெறிந்தவர்க்கும்
வாழ்த்துக்களால்
வாழ்க்கையைத் தந்தவர் தாங்கள் !

அண்ணல் பெருமானே...
நாங்களோ
உங்கள் பொற்பாதம்
பதிந்து கிடந்த
பாலை மணல் தடங்களைப்
பற்றி நடக்காத
பேதைகள் !

கஸ்தூரி மணம் வீசும்
உங்கள்
வியர்வைத் துளிகளில்
முகம் கழுவாத
ஏழைகள் !

அருவியாய் பொழிகின்ற
உங்கள்
அருள் விழிகளின் அன்பில்
ஆனந்த நீராடித்
திளைக்காத
அபலைகள் !

புன்னகை ஒளியோடு
பொன்னுரைகளை
பிரசவிக்கின்ற
உங்கள் பூவிதழ்கள்
பூப் பூத்து சிரிப்பதைப்
பார்த்து ரசிக்காத
பாமரர்கள் !

எங்கள் கண்மணியே நாயகமே!
பத்தருக் களத்தில்
படை நடத்திச் சென்ற
உங்கள்
வீரப் பாதங்களுக்கு
பாதணியாகிக் கூடவே
பயணிக்காதவர்கள் நாங்கள் !

உஹதுப்போரில்
உதிரம் வடித்து
உயிர் துடிக்க
நீங்கள் நின்றபோது
எதிரிகளின் அம்புகளுக்கு
எங்கள்
உடல்களைத் தராதவர்கள் நாங்கள் !

எத்தனை முறை பிறந்தாலும்
இறக்காத இன்பத்தை
இழந்தவர்கள் நாங்கள் !

உங்கள் வாழ்நாளின்
வசந்தத்தை
வாழாமல் தொலைத்தவர்கள்
நாங்கள் !

ஆனாலும்
நபி பெருமானே
உங்கள் திருமுகம் பார்த்து
திருக்கலிமா மொழிந்த
அபூபக்கர் சித்தீக்கைப்போல்....

உங்கள் சிரம் துணிக்க வந்து
சிந்தை தெளிந்து
இறைவனுக்கே
சிரம் பணிந்து வாழ்ந்த
உமரே பாரூக்கைப்போல்...

ஹிஜ்ரத்தின் பாதையில்
உங்களை
வழியனுப்பி விட்டு
மரணத்தின் படுக்கையில்
பள்ளிகொண்ட வீரர்
அலீ
ஹஜ்ரத்தைப்போல்...

நாங்களும்
வாழ்ந்திருந்தால்
எங்களுக்கும் சொந்தமாகியிருக்கும்
சொர்க்கம் !

வாழ்நாள் முழுவதும்
உங்களை
வீழ்த்த முனைந்து
வீழ்ந்தானே
அபு ஜஹில் ...

அறத்தின் அன்னை
ஆயிஷா பிராட்டிமேல்
அவதூறை
வீச நினைந்து
அண்ணல் உங்கள் நெஞ்சில்
அக்கினியை வார்த்தானே
அப்துல்லாஹ் பின் உபை ...

இவர்களோடு
நாங்களும் இணைந்திருந்தால்
எண்ணும் போதே
அஞ்சித் துடிக்குதே நெஞ்சு !

அன்று மட்டுமல்ல
இன்றும் ...
அபுஜஹில்
அபுலஹப்
போன்ற கசடுகளின்
விட்டகுறை
தொட்டகுறையாக
சில அசடுகள்
உங்கள் வெளிச்சத்தை
மூடத்தான் பார்க்கின்றன !

அழுக்கு நாக்குகளால்
உங்கள் அகமியங்களை
அசுத்தமாக்கத்தான்
முயல்கின்றன !

என்றாலும் ...
உங்களை
முட்டிப்பார்க்க
முற்பட்டவர்களையெல்லாம்
வெட்டிப்போட்ட
முஹாஜிர்களைப்போல
வாளெடுக்காமல்

எதிரிகள் நுழைய முடியாத
எங்கள் இதயத்தின்
கருவறைக்குள்
உங்கள் அன்பை மட்டும்
பாதுகாத்து வைத்திருக்கின்றோமே

களங்கமில்லாத
அந்த அன்பிற்காக
எங்களுக்கும் சொந்தமாகட்டும்
சொர்க்கம் !

(Received via Email -  Abu Mymoona )




1 Israel war against Gaza children explained
  More than 100 children have been killed every day since Israel started bombing the besieged Palestinian enclave on October 7.
 
2 The Bravery of Palestine
  In the soil where struggles deeply root, A people's bravery takes its route. Against injustice, their hearts remain, A flame of courage, an unyielding flame.