Tamil Islamic Media

மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது

உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் கூறியதாக அன்னை ஆயிஷா அவர்கள் அறிவிக்கிறார்கள்: உங்களில் ஒருவர் சாப்பிட ஆரம்பித்தால் பிஸ்மில்லாஹ் என்று சொல்லட்டும், அப்படி ஆரம்பத்தில் சொல்ல மறந்துவிட்டால் இடையில் பிஸ்மில்லாஹி அவ்வலுஹு வ ஆஹிருஹு என்று சொல்லட்டும்.

மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது உணவும், நீருமாகும் என்பது சொல்லித்தெரியவேண்டியது இல்லை. அந்த உணவின் ஊட்டத்தைக்கொண்டுதான் மனிதனின் உடல் வளர்கிறது. ஆகவே, உணவின் விஷயத்தின் இஸ்லாம் நிறையவே கண்காணிக்கிறது . இறைவன் குர்ஆனில் ஒரு இடத்தில் குறிப்பிடும் ஆயத் இந்த இடத்திற்கு மிகப்பொருத்தமானதாகும். ' ஓ ரஸூல்மார்களே நீங்கள் நல்ல பொருளையே சாப்பிடுங்கள் நிறைவாக நல்லறங்கள் செய்யுங்கள், நிச்சயமாக நான் நீங்கள் செய்பவற்றை அறிகிறேன்.' இந்த ஆயத்தில் அல்லாஹ் 'ரஸூமார்கள்' என்று பன்மையாக சொன்னதின் பொருள், அனைத்து நபிமார்களுக்கும் ஏவப்பட்ட கட்டளை இதுவாகும்.

மனிதன் தன் குழந்தை பருவம் தவிர்த்து, தன் வாலிப காலத்திலிருந்து மரணம் வரை ஓடி ஓடி உழைப்பதெல்லாம் தன் உணவுக்காக மட்டுமே. நீங்கள் கேட்கலாம் என்ன உணவுக்காக மட்டும் தானா என்று? அந்த உணவு இருந்தால் தானே மற்ற அவன் தேவைகள் பக்கம் கவனம் செலுத்த முடியும், அது நல்ல உடையாகட்டும் அல்லது வீடாகட்டும். ஒரு மனிதனை அழைத்து நல்ல உடை அணிந்தால் என்ன? என்று கேட்டால். அவன் இங்கே சோத்துக்கே வழியை காணுமாம் என்று புலம்புவதை சர்வசாதாரணமாக பார்க்கிறோம். ஆக, உணவு என்பது மனிதன் அடிப்படைத் தேவையில் உள்ளது என்பது மறுப்பதற்கில்லை.

இந்த உணவு அவசியம் என்பதால் இஸ்லாம் அது வருகிற எல்லா வழிகளையும் ஆராய்கிறது. அதை இஸ்லாம் இரண்டாக பிரித்துப்பார்க்கிறது.

1. சம்பாதிக்கும் முறை 2. அவன் உண்ணும் முறை

நாம் ஏற்கனவே பார்த்தது போன்று மனித உழைப்பின் முதல் நோக்கமே அவன் உண்ண உணவு வேண்டும் என்பது தான். ஆகவே அந்த செயல் சுத்தமாக இருக்க இஸ்லாம் விரும்புகிறது. அவனது வியபாரம் ஹலாலான முறையில் இருக்கவேண்டும் என்று வழியுறுத்துகிறது. அவன் தடுக்கப்பட்ட வட்டி போன்ற செயல்களை விட்டு தவிர்ந்திருக்கிறானா என்று கண்காணிக்கிறது. இன்னும் வியபாரத்தில் உண்மை இருக்கவேண்டும் என்றும், பொய் அறவே இருக்ககூடாது என்று வலியுறுத்துகிறது. இன்னும் எத்தணைவிதமான ஒழுங்கு முறைகள் உண்டோ அத்துணையும் கடைபிடிக்கச்சொல்கிறது.

அப்படி இஸ்லாம் விதித்த முறைப்படி ஒருவன் சம்பாதித்து ஹலாலான முறையில் பொருளை கொண்டுவந்து விட்டால் அடுத்தாக இஸ்லாம் பார்ப்பது நாம் தான் சரியாக சம்பதித்துவிட்டோமே என்று அவன் இஷ்டப்பட்ட பொருட்களை சாப்பிட இஸ்லாம் அனுமதிக்கவில்லை. அங்கும் சில ஒழுங்கு முறைகளை ஏற்படுத்துகிறது.

சில உணவுகளை மனிதன் உண்பதயே ஹரமானதாக - தடுக்கப்பட்டதாக இஸ்லாம் ஆக்கிவிட்டது. அப்படி தடுக்கப்பட்ட உணவு, குடிபானங்களை தவிர்த்துவிட்டு சாப்பிடச்சொல்கிறது. தடுக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை குற்றமாக (பாவமாக ) ஆக்குகிறது. அப்படி தடுக்கப்பட்ட பொருட்களை பட்டியலைப் பார்த்தோம் என்றால், ஸூரத்துல் மாயிதா என்ற ஸூராவின் 3 ஆவது வசனத்தில் இறைவன் குறிப்பிடும் போது (தானாகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்ட)தும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப்பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன; (அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து, முறைப்படி) அறுத்தீர்களோ அதைத் தவிர; (அதை உண்ணலாம். அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச்) சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும்; அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன) - இவையாவும் (பெரும்) பாவங்களாகும்;

இன்னும் இது போன்று விலக்கப்பட்ட சாராயம், போதைப்பொருட்கள் போன்றவையாகும். பெரும்பாலும் ஹராமாக்கப்பட்ட பொருட்களின் பட்டியலை எடுத்துப்பார்த்தால் அவை மனிதன் சாப்பிடும் பொருட்களாகவோ அல்லது அவன் சாப்பிடுவதற்க்கு காரணமான பொருட்களாகவோ இருப்பதை பார்க்க முடிகிறது.

மனித உணவை அவசியத்தைக்கருத்தில் கொண்டே இஸ்லாம் இப்படி ஹராமக்கியுள்ளதா? என்று எண்ணத்தோன்றுகிறது. இவ்வளவு வழிமை பெற்ற ஒரு பொருளாக உணவு ஆகுவதற்கு காரணம் என்ன? மனிதன் ஆடையில்லாமலும், அறிவு பெறாத நிலையிலும் இருந்த, அவன் குழந்தைப்பருவத்திலிருந்து ஆரம்பித்து அவன் மரணிக்கும் வரை அவனோடு ஒன்றியிருக்கும் ஒரே பொருள் அவனது உணவாகும். இன்னும் உணவின் தாக்கம் அவனது உடல் மீது மட்டும் இல்லாமல் அவன் உணர்வுகள் மீதும் ஏற்படுகிறது. தவறான உணவுகளை உண்ணும்போது அவன் உணர்வு நிலையும் தவறாக செல்வதை காணமுடிகிறது.

நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ இங்கு ஞாபகம் வருகிறது அவன் (அல்லாஹ்) தான் எனக்கு உணவு அளிக்கிறான் இன்னும் குடிப்பட்டுகிறான், இன்னும் நான் நோயுற்றால் அவன் எனக்கு நோய் நிவாரணம் அளிக்கிறான். மனிதனின் உணவும், அவன் குடிபானமும் சமநிலை மாறும் போது மனிதன் நோய்வாய்ப்படுவதை இவ்வசனம் மிகத்தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. இன்றுள்ள பரவலான நோய்களான சுகர், BP போன்ற நோய்களுக்கும் மருத்துவ உலகம் உணவையே மூலமாக பார்ப்பதைக் காணமுடிகிறது. இவ்வித நோயகளுக்கு அடிப்படை காரணமாக இன்று வட்டி போன்ற தடுக்கப்பட்டவைகள், ஹலாலைப் போன்றே இஸ்லாமிய சமுதாயத்திடத்தில் நிறைந்திருப்பதை பார்க்க முடிகிறது. இன்றைய சூழலில் வட்டி ஒரு பொருட்டாகவே கருதப்படுவதில்லை, வட்டியையும் வாங்கிக்கொண்டு இறைவன் தங்களை கருணைக்கண் கொண்டு பார்பதில்லை என்று சொல்லும் தொழுகையாளிகளைப்பார்க்கும் போது இந்த ஹதீஸ் தான் ஞாபகத்திற்கு வருகிறது.

இமாம் முஸ்லிம் அவர்கள் பதிவுசெய்கிறார்கள்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு பிரயாணியைப்பற்றி கூறிப்படும் போது இவ்வாறு கூறினார்கள் ' நீண்ட பிரயாணத்தின் காரணமாக தலையெல்லாம் பரட்டையாகிப்போன ஒருவன் தன் கையை உயர்த்தி யாரப் யாரப் என்று இறைவனை அழைக்கிறான், ஆனால் அவனின் உணவும் குடிபானமும் ஹரமானதாக இருக்கிறது, அப்படி ஹராமை உண்டு, குடித்ததன் மூலமாக அவன் உடல் வளர்ந்திருக்கிறது. அவனின் பிராத்தனை எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படும் என்று கூறினார்கள்.

இப்படி ஒரு மனிதன் கஷ்டங்களை மேற்கொண்டு சம்பாதித்த பின் அவன் சாப்பிட அமரும்போது அவன் மனோநிலை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு இந்த ஹதீஸ் ஒரு அழகிய உதாரணமாகும் இவ்வளவு நிலையிலும் என்னைப் பாதுகாத்து எனக்கான உணவை ஹாலான பொருட்களால் ஆக்கினாயே, யா அல்லாஹ் உனக்கே சர்வபுகழும் என்ற அடிப்படையில் அவன் சாப்பிட ஆரம்பிக்கும் போது பிஸ்மில்லா என்று சொல்லட்டும்.

இக்கட்டுரையின் ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்ட ஆயத்தை போன்றே இன்னொரு வசனத்தில் இறைவன் குறிப்பிடுகிறான். ஓ முஃமின்களே நீங்கள் நல்ல உணவையே சாப்பிடுங்கள் இன்னும் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள் என்று . அப்படி சாப்பிட ஆரம்பிக்கு போது மறந்துவிட்டாலும் , இடையில் ஞாபகம் வந்தால் பிஸ்மில்லாஹி அவ்வலுஹு வ ஆஹிருஹு என்று கூறிக்கொள்ளட்டும் என்று நபி பெருமான் வழிகாட்டினார்கள். சாப்பிடும் போது பிஸ்மில்லா சொல்லவேண்டும் என்ற செய்தி அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருப்பினும், நாம் எத்தனை பேர் அதை சொல்லி சாப்பிடுகிறோம் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒரு செய்தியாகும்.

சாப்பிடும் ஆரம்பத்தில் பிஸ்மில்லாவும் அதன் கடைசியில் அல்ஹம்துலில்லாஹ் ஓதினால் அந்த உணவிற்குரிய நன்றியை செலுத்தியவகளாக நாம் ஆகிவிடுவோம்.

இன்னும், உணவு உண்ணும் வழிகளை (Eating Etiquette & Table Manners) நபியவர்கள் சொல்லித்தந்தார்கள். சாப்பிடும்போது ஓரத்திலிருந்து சாப்பிடவும், நடுவில் இறைவனின் ரஹ்மத் இறங்குகிறது. இன்னும், கீழே விழுந்த பொருட்களையும் எடுத்து சாப்பிடவும், சாப்பிட்டு முடித்தவுடன் கைகளை சூப்பவும்.

போன்ற அற்புதமான வழிகளை நபியவர்கள் சொல்லிக்கொடுத்தார்கள். இது போன்ற அழகிய வழிமுறைகளைப் பின்பற்றி வாழ்வில் நோயற்றவர்களாக நாமும் அனைத்து மக்களும் வாழ வல்ல இறைவன் உதவி புரிவானாக.

- ஹஸனீ


No articles in this category...