தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பும் பாதுகாப்பிற்கான வழிமுறையும்.

திருநபி (ஸல்) அவர்கள் தஜ்ஜால் பற்றி கூறியவை (மஸீஹுத் தஜ்ஜால் - ஈஸாவின் எதிரி)

 1. உலக இறுதியில் தஜ்ஜால் தோன்றும்போது இறைவணக்கங்கள் அலட்சியம் செய்யப்படும்.  சரீர இச்சைகளுக்கே முன்னுரிமையளிக்கப்படும். வரம்பு மீறுவோர் தலைவர்களாவர்.  உண்மையையும் பொய்யையும் பிறித்தறிவது கடினமாகிவிடும்.  பொய் பேசுதல் ஆகுமானதாகிவிடும். ஜகாத் என்னும் ஏழை வரி கொடுப்பது சிரமமானதாகக் கருதப்படும்.  இறை நம்பிக்கையாளர்கள் கேவலப்படுத்தப்படுவார். தன்னைச் சுற்றி நடக்கும் பாவங்கள் அவரை வேதனையடைய்ச் செய்யும்.  வேதனையால் அவரது உள்ளம் நீரில் உப்பு கரைவது போல் உருகும்.  எனினும் அவர் ஏதும் செய்யவோ சொல்லவோ சக்தி பெற்றிருக்க மாட்டார்.  பெய்யும் மழையால் எப்பயனும் இராது.  ஏனேனில் அது தேவையற்ற காலங்களில் பொழியும். ஆண்கள் ஆண்களுடனும்,  பெண்களுடனும் புணர்வர்.  பெண்கள் மிகைத்திருப்பர்.  பிள்ளைகள் பெற்றோருக்கு வழிப்படமாட்டார்கள். நண்பர்கள் நண்பர்களைக் கேவலப்படுத்துவர்.  அப்போது மேற்கிலிருந்து ஒரு (தஜ்ஜால்களின்) கூட்டம் தோன்றும்.  என் உம்மத்தினரில் பலவீனர்களை அவர்கள் அடக்கி ஆள்வர். வட்டி பரவலாகிவிடும்.  மனிதனின் உதிரத்திற்கு மதிப்பு ஏதும் இராது.  இசை பாடும் பெண்கள் அதிகம் இருப்பர்.  (முத்கல்லி இப்னில்ஹஜர்)
 2. தஜ்ஜால் வெண்ணிறம் உள்ளவனாகத் தோன்றுவான். (மிஷ்காத்)
 3. அவனிடம் ஒர் யஹுதிப் படையும், பலதரப்பட்ட ஆண் பெண்களும் இருப்பர்.
 4. அவனது கட்டுப்பாட்டில் ஒரு வெள்ளைக் கழுதை இருக்கும். அதன் இரு காதுகளுக்கும் இடையில் 30 கஜ தூரம் இருக்கும்.  தஜ்ஜால் வானத்துக்கும் பூமிக்கும் நடுவில் பாய்ந்து கொண்டிருப்பான்.
 5. அவன் குருடர்களையும் தொழுநோயாளிகளையும் குணப்படுத்துவான்.  இறந்தோரை உயிர்ப்பிப்பான்.
 6. தேனீக்கள் ராணி ஈயைப் பின் தொடர்வது போன்ற இவ்வுலகச் செல்வங்கள் அவனைப் பின்தொடர்ந்து செல்லும்.
 7. என்னுடைய உம்மத்துகளில் பெரும்பாலோர் தஜ்ஜாலைப் பின்பற்றுவர்.
 8. தஜ்ஜாலையே என்றும் சூழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் அவனளிக்கும் உணவை உண்பதற்காக நாங்கள் அவனுடன் இருக்கிறோம் என்பர்.
 9. தஜ்ஜால் வானை நோக்கி உத்திரவிடுவான்.  மழை பெய்யும் பயிர்கள் வளரும்.
 10. கடலின் நீர் மட்டம் அவனது முழங்கால் அளவே இருக்கும்.
 11. தஜ்ஜால் தோன்றியதும் பெண்கள் ஆண்கள் போன்றும் ஆண்கள் பெண்கள் போன்றும் மாறிவிடுவர்.
 12. ஆதம் (அலை) படைக்கப்பட்டதிலிருந்து உலக இறுதிநாள் வரையுள்ள இடைப்பட்ட காலத்தில் தஜ்ஜாலின் தீங்குகளுக்கும் கொடுமைகளுக்கும் நிகர் என்றும் இருந்திராது. (10-12 கன்ஜுல் உம்மால் - வால் 7)
 13. தஜ்ஜால் தோன்றிய பின் மக்கா மதீனா தவிர உலகின் மற்ற பகுதிகள் அனைத்தும் அவன் வசமே இருக்கும்.
 14. உங்கள் வழித்தோன்றல்களுக்கு நடுவில் உங்கள் இடத்தை தஜ்ஜால் பிடித்துக்பொண்டான். (முஸ்லிம்)
 15. அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்: ரஸூல் (ஸல்) அவர்கள் என் உம்மத்தினரில் பனூதமீம்கள் தான் தஜ்ஜாலை எதிர்த்துப் போரிடுவோரில் மிகக்கடுமையானவர்கள் என்று கூற நான் கேட்டதிலிருந்து பனூதமீம்கள் மீது அதிகப் பிரியம் வைக்க ஆரம்பித்து விட்டேன்.
 16. தஜ்ஜாலைப் பற்றிக் கேள்விப்படுவோர் அவனிடமிருந்து தூரமாகிவிட வேண்டும்.
 17. தஜ்ஜால் வருகையின் போது அவர்கள் அதை அறிந்ததும் சூரா கஹ்ஃபின் ஆரம்ப 10 வசனங்கள்,  இறுதி 10 வசனங்கள் ஓதி வந்தால் அவர்கள் தஜ்ஜாலின் தீங்குகளிலிருந்தும் கொடுமைகளிலிருந்தும் பாதுகாக்கக்படுவார். (மிஷ்காத்)

 

தொகுப்பு: முகம்மது ஃபைரோஸ், கும்பகோணம். 

 

 

 
 தன் அடியார் மீது எந்த விதமான (முரண்பாடு) கோணலும் இல்லாததாக ஆக்கி இவ்வேதத்தை இறக்கி வைத்தானே, அந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகும். (18:1)
 
 அது உறுதியான (வழியைக் காண்பிப்ப)து, அவனிடத்திலிருந்துள்ள கடினமான வேதனையைப் பற்றி அச்சமூட்டுவதற்காகவும் ஸாலிஹான (நற்)செயல்கள் செய்யும் முஃமின்களுக்கு - நிச்சயமாக அவர்களுக்கு அழகிய நற்கூலி(யாக சுவனபதி) இருக்கிறது என்று நன்மாராயங் கூறுவதற்காகவும் (குர்ஆனை அருளினான்). (18:2)
 
 அதில் (அதாவது சுவனபதியில்) அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள். (18:3)
 
 அல்லாஹ் (தனக்கென) ஒரு மகனை எடுத்துக் கொண்டான் என்று சொல்பவர்களை எச்சரிப்பதற்காகவும் (இதனை இறக்கி வைத்தான்). (18:4)
 
 அவர்களுக்கோ, இன்னும் அவர்களுடைய மூதாதையர்களுக்கோ இதைப் பற்றி எவ்வித அறிவாதாரமுமில்லை அவர்களுடைய வாய்களிலிருந்து புறப்படும் (இந்த) வார்த்தை பெரும் பாபமானதாகும்; அவர்கள் கூறுவது பொய்யேயன்றி வேறில்லை.  (18:5)
 
 (நபியே!) இந்த (வேத) அறிவிப்பில் அவர்கள் நம்பிக்கை கொள்ளாவிட்டால், அவர்களுக்காக வியாகூலப்பட்டு, நீர் உம்மையே அழித்துக் கொள்வீர்கள் போலும்!  (18:6)
 
 (மனிதர்களில் அழகிய செயலுடையவர்கள் யார் என்று அவர்களைச் சோதிப்பதற்காக, நிச்சயமாக பூமியிலுள்ளவற்றை அதற்கு அலங்காரமாக நாம் ஆக்கினோம்.  (18:7)
 
 இன்னும், நிச்சயமாக நாம் அதன் மீது உள்ளவற்றை (ஒரு நாள் அழித்துப்) புற்பூண்டில்லாப் பாலைநிலமாக்கி விடுவோம்.  (18:8)
 
 (அஸ்ஹாபுல் கஹ்ஃபு என்ற குகையிலிருந்தோரைப் பற்றி) அந்த குகையிலிருந்தோரும், சாஸனத்தையுடையோரும் நம்முடைய ஆச்சரியமான அத்தாட்சிகளில் நின்றும் உள்ளவர்கள் என எண்ணுகிறீரோ,  (18:9)
 
 அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் "எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்காக எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!" என்று கூறினார்கள்.  (18:10)

 

 
 
 அவர்கள் எத்தகையோர் (என்றால்) என் நினைவை விட்டும் அவர்களுடைய கண்களில் திரையிடப் பட்டிருந்தன இன்னும் (நல்லுபதேசங்களைச்) செவிமடுக்கவும் அவர்கள் சக்தியற்றுப் போயினர். (18:101)
 
 நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(த் தம் ) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக இக்காஃபிர்கள் (விருந்துக்கு) இறங்குமிடமாக நரகத்தையே சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம்.  (18:102)
 
 "(தம்) செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?" என்று (நபியே!) நீர் கேட்பீராக. (18:103)
 
யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான்.  (18:104)
 
அவர்கள் தங்களுடைய இறைவனின் வசனங்களையும், அவனை (மறுமையில்) சந்திப்போம் என்பதையும் நிராகரிக்கிறார்கள்; அவர்களுடைய செயல்கள் யாவும் வீணாகும்; மறுமை நாளில் அவர்களுக்காக எந்த மதிப்பையும் நாம் ஏற்படுத்த மாட்டோம்.  (18:105)
 
அதுவே அவர்களுடைய கூலியாகும் - (அது தான்) நரகம் - ஏனென்றால் அவர்கள் (உண்மையை) நிராகரித்தார்கள்; என்னுடைய வசனங்களையும், என் தூதர்களையும் ஏளனமாகவே எடுத்துக் கொண்டார்கள்.  (18:106)
 
 நிச்சயமாக எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறார்களோ அவர்கள் (விருந்துக்கு) இறங்கும் இடமாக ஃபிர்தவ்ஸ் என்னும் தோட்டங்கள் இருக்கும்.  (18:107)
 
அதில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அவர்கள் அதிலிருந்து மாறி (வேறிடம்) செல்ல விரும்ப மாட்டார்கள்.  (18:108)
 
 (நபியே!) நீர் கூறுவீராக "என் இறைவனுடைய வார்த்தை(களை எழுதுவதற்)காக கடல் (முழுவதும்) மையாக ஆகுமானாலும், என் இறைவனுடைய வார்த்தைகள் (எழுதி) முடிப்பதற்குள் கடல் (நீர்) தீர்ந்து விடும்; அதைப் போல் (இன்னொரு கடலையே) நாம் உதவிக்குக் கொண்டு வந்தாலும் சரி!"  (18:109)
 
 (நபியே!) நீர் சொல்வீராக "நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே! நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருக்கிறது எவன் தன்னுடைய இறைவனைச் சந்திக்கலாமென ஆதரவு வைக்கின்றானோ அவன் (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்து, தன் இறைவனை வணங்குவதில் வேறெவரையும் இணையாக்காதும் இருப்பானாக."  (18:110)தொகுப்பு: முகம்மது ஃபைரோஸ், கும்பகோணம்.


No articles in this category...