Tamil Islamic Media

சீனாவில் விதைத்த விதை - ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி)

  சீனாவில் விதைத்த விதை - ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி)

- கட்டுரையை எழுதியவர்  C M N சலீம் (சமூகநீதி.காம்)  

பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உயிருக்கு உயிரான தோழர்கள் ஏராளமானோர் இருந்தாலும் ஒருசிலரின் தனித்துவமிக்க தியாகமும் அர்ப்பணிப்பும் துணிச்சலான செயலாக்கங்களும் வரலாற்று ஏடுகள் அவர்களின் பெயர்களை உயர்த்திப் பிடிக்கின்றன.  

 குறிப்பாக உலகம் முழுவதும் இஸ்லாமிய மார்க்கத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற வேட்கையில் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு சாதனை செய்துள்ளனர். நீண்ட நெடிய அந்தப் பட்டியலில் நாம் வாழும் இந்திய மண்ணிற்கும் கிழக்காசிய நாடுகளுக்கும் இஸ்லாம் வேரூன்ற காரணமாக இருந்த ஹஸ்ரத் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்களின் சாதனைகளைக் காண்போம்.

  பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கி.பி. 610இல் மக்காவில் வைத்து அல்லாஹ்வுடைய தீனுல் இஸ்லாத்தை மக்களிடையே விதைத்திடும் அழைப்புப் பணியில் ஈடுபட்ட தொடக்க நிலையில், சத்தியத்தின் பால் ஈர்க்கப்பட்டு பெருமானாரிடம் ஒப்பந்தம் செய்த, துவக்க நிலை முஸ்லிம்களில் 17வது நபர்தான் ஹஸ்ரத் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அப்போது அவர்களின் வயது 17.

  “அஷ்ஷரத்துல் முபஷ்ஷிரா” சொர்க்கம் உறுதி என்று நன்மாராயம் வழங்கப்பட்ட 10 நபித்தோழர்களில் ஹஸரத் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்களும் ஒருவர். இஸ்லாமிய மார்க்கத்தையும் பெருமானாரையும் கேலி செய்து பேசியதற்காக நிராகரிப்பாளன் ஒருவனின் மண்டையை உடைத்து தனது இளம் வயது வேகத்தை காட்டியவர் ஹஸ்ரத் ஸஅத் இப்னு அபீவக்காஸ். அதுதான் இஸ்லாத்திற்கு அழைப்பு விடுத்தபோது, சிந்தப்பட்ட முதல் இரத்தம்.

  இஸ்லாத்தின் வீச்சும் வேகமும் அதிகரிக்கவே பெருமானாருக்கும் இஸ்லாத்தை தழுவிய முஸ்லிம்களுக்கும் நெருக்கடிகள் அதிகமாகி இனி மக்காவில் வாழ இயலாது என்ற நிலை உருவானது. எதிரிகள் பெருமானாரையும் முஸ்லிம்களையும் கொலை செய்திட முடிவு செய்தனர். அந்த நேரத்தில் இறைவனுடைய வழிகாட்டுதல் இறை வசனமாக பெருமானாருக்கு இறங்கியது.

  “இம்மையில் நன்மை செய்தவர்களுக்காக (மறுமையில்) நன்மைதான் கிடைக்கும். அல்லாஹ்வுடைய பூமி மிக விசாலாமானது. நிச்சயமாக பொறாமையாளர்களுக்கு அவர்களுடைய கூலி கணக்கின்றியே (அதிகமாக) கொடுக்கப்படும்”. (அல்குர்ஆன்39:10)

  பாதுகாப்புத் தேடி புலம் பெயர்வதை சுட்டிக் காட்டி இறக்கிய வசனத்தின் அடிப்படையில் பெருமானாரின் வழிகாட்டுதலின்படி முஸ்லிம்களில் 11 நபித்தோழர்களைக் கொண்ட ஒரு சிறிய குழு மக்காவிலிருந்து புறப்பட்டு செங்கடலைத் தாண்டி அபீஸீனியா (எத்தியோப்பியா) சென்று “நஜ்ஜாஷி” என்ற கிருத்துவ மன்னரிடம் அடைக்கலமானது.

  இரண்டாவது குழு ஏறக்குறைய 100 முஸ்லிம்கள் மக்காவிலிருந்து அபீஸீனியாவிற்கு கி.பி. 615 தில் புறப்பட்டுச் சென்றனர். ஜாபிர் இப்னு அபிதாலிப் (ரலி) அவர்கள் தலைமையில் சென்ற இந்த குழுவில் ஹஸ்ரத் ஸஅத் இப்னு அபீவக்காஸ் அவர்களும் இடம் பெற்றிருந்தார்கள்.

  அபிஸீனியா சென்ற 100 பேர்களைக் கொண்ட பெரும் எண்ணிக்கையிலான இந்தக் குழுவை பின்தொடர்ந்து வந்த குறைஷிகள் “நஜ்ஜாஷி” மன்னரிடம் முறையிட்டு வாதம் செய்ததையும் நஜ்ஜாஷி மன்னர் அவற்றை நிராகரித்து முஸ்லிம்களுக்கு பரிபூரண அடைக்கலம் கொடுத்ததையும் நாம் வரலாற்றில் பார்த்திருக்கிறோம் படித்திருக்கிறோம்.

  அபீஸீனியாவில் முஸ்லிம்கள் மார்க்க கடமைகளை எவ்வித இடையூறும் இல்லாமல் நிறைவேற்றினர். அங்கே வாழ்ந்த மக்களை இஸ்லாத்தின் பால் அழைத்தனர்.

அதன் மூலம் அபீஸீனியாவில் அதாவது இன்றைய எத்தியோப்பியா, சோமாலியா, எரிடீரியா, சூடான் போன்ற பகுதிகளில் வாழ்ந்த மக்கள் இஸ்லாமிய மார்க்கத்தை ஆசையாக அள்ளித் தழுவுவதற்கு இந்த புலம் பெயர்வு சம்பவம் காரணமாக அமைந்தது.

இந்தச் சூழலில் ஹஸ்ரத் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்கள் இளமை துடிப்பின் காரணமாகவும் பெருமானாரிடம் பெற்ற ஆன்மீகப் பயிற்சியின் காரணமாகவும் அபீஸீனியாவை விட்டு புறப்பட்டுச் சென்று இந்த உலகம் முழுவதும் அல்லாஹ்வுடைய தீனை நிலைநிறுத்த வேண்டும் என்று முடிவு செய்கிறார். மனம் இருப்புக் கொள்ளவில்லை.

எங்கே புறப்பட்டுச் செல்வது? எப்படிச் செல்வது? யாருடன் செல்வது என்று ஹஸ்ரத் ஸஅத் அவர்களது உள்ளம் கொந்தளித்தது. இறுதியாக தனது தந்தை செய்த வியாபாரம் நினைவிற்கு வருகிறது. ஹஸ்ரத் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்களின் தந்தை அபீ வக்காஸ் அவர்கள் சீனா மற்றும் கிழக்காசிய நாடுகளுக்கு கடற்பயணம் மேற்கொண்டு வியாபாரம் செய்தது நினைவிற்கு வருகிறது. அல்லாஹ்வுடைய செய்திகளைக் கொண்டு சேர்ப்பதற்கு அவர்கள் தேர்வு செய்த பகுதி கிழக்காசியப்பகுதி. தன் பயண முடிவை உறுதியாக்கிக் கொண்டு அபீஸீனியாவை விட்டுப் புறப்பட தயாராகிறார்கள். பாய்மரப் படகு செங்கடலில் இருந்து புறப்பட்டு அரபிக் கடலில் புகுந்து இந்தியப் பெருங்கடலில் நுழைகிறது.

(இந்தியப் பெருங்கடலின் ஆழத்தையும் நீளத்தையும் அணு அணுவாக அறிந்து வைத்திருந்த இனம் உலகில் இரண்டே இனம் தான். ஒன்று அரபு இனம் மற்றொன்று தமிழினம்.)

ஹஸ்ரத் ஸஅத் அவர்களின் பாய்மரப் படகு தமிழக கடலோரப் பகுதிக்கு வருகிறது. இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடைப்பட்ட பாக்நீரினை வழியாகச் சென்று வங்கக் கடலில் கலந்து இறுதியாக கல்கத்தா அருகில் உள்ள இன்றைய பங்களாதேஷின் சிட்டகாங் துறைமுகத்தை அடைந்தது.

அன்றைய சேர சோழ பாண்டிய நகரங்களாகவும் இன்றைய தமிழக – கேரள துறைமுக நகரங்களாகவும் விளங்கும் பூம்புகார், நாகப்பட்டிணம், கீழக்கரை, காயல்பட்டிணம், கள்ளிக்கோட்டை (கோழிக்கோடு) காசர்கோடு போல பங்களாதேஷின் சிட்டகாங் துறைமுகமும் உலகப் புகழ்பெற்ற துறைமுகம்தான். கடந்த 60 ஆண்டுகளாகத் தான் அது எல்லைக் கோடுகளாகப் பிரிக்கப்பட்டு பங்களாதேஷ் என்ற நாடாக ஆக்கப்பட்டுள்ளதே தவிர அதுவும் இந்திய முஸ்லிம்களின் ஆட்சிக்குட்பட்டிருந்த ஒரே நிலப்பரப்புதான்.

இயற்கையிலேயே துறைமுக வடிவமைப்பைக் கொண்டிருந்த சிட்டகாங் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சிய ஹஸ்ரத் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்கள் சில நாட்கள் சிட்டகாங் அதைச் சுற்றியுள்ள பகுதியில் இஸ்லாமிய மார்க்கத்தையும் பெருமானாரின் வழிகாட்டுதலையும் மக்களிடையே எடுத்துக்கூறி அப்படியே தங்களுடைய வாழ்க்கையில் வாழ்ந்து காட்டுகிறார்கள்.

ஹஸ்ரத் ஸஅத் அவர்கள் மக்காவில் பெருமானாரை விட்டுப் பிரிந்து அபீஸீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்த ஆண்டு கி.பி. 615. அல்குர்ஆனின் வசனங்கள் இறங்கத் துவங்கி 5 ஆண்டுகள் கூட முழுமை பெற்றிராத காலம். இஸ்லாமிய மார்க்கத்தின் சட்டதிட்டங்கள், வழிபாட்டு முறைகள், முழுமையாக இறங்கப்பெறாத நிலையில் பெருமானாரை விட்டு பிரிந்த ஹஸரத் ஸஅத் அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படையான கோட்பாடுகளையும் உயரிய நாகரீகத்தின் ஒரு சில வடிவங்களை மட்டுமே சிட்டகாங் மக்களிடம் எடுத்துக் கூறி அழைப்பு விடுத்த போது அது மக்களை ஈர்த்தது. மக்கள் மனமுவந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர்.

சிட்டாகாங்கை விட்டு புறப்பட்டுச் சற்று மேலே அன்றைய மணிபல்லவம் என்று வழங்கப்பட்ட இன்றைய மணிப்பூர் மாநிலத்திற்கு சென்றார்கள். மணிப்பூர் மலைகளில் வாழ்ந்த பழங்குடியினரிடையே பெருமானாரின் கடவுள் கொள்கை குறித்தும் வாழ்வில் பெருமானாரைப் பின்பற்றி வாழ வேண்டிய அவசியம் குறித்தும் எடுத்துச் சொல்கிறார்கள்.

ஹஸ்ரத் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்களின் சொல்லும் செயலும் எவ்வித வேறுபாடும் இல்லாமல் வாக்கும் வாழ்வும் ஒன்றுபோல இருப்பதைக் கண்டு மக்கள் இஸ்லாத்தை ஆரத் தழுவிக் கொண்டார்கள். இன்றைய இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், மேகாலயா, அஸாம், போன்ற பகுதிகளுக்குச் சென்று விட்டு இறுதியாக சீனா சென்றடைந்தார்கள்.

கி.பி. 616-618 ன் இடைப்பட்ட காலத்தில் சீனா சென்றடைந்த ஹஸ்ரத் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்கள் சீன மக்களிடையே பெருகியிருந்த மூட நம்பிக்கைகளையும் தவறான உணவுப் பழக்கங்களையும் விளக்கிக் கூறி பெருமானாரைப் பின்பற்ற வேண்டிய அவசியத்தை மக்களிடையே விதைத்தார்கள்.

ஹஸ்ரத் ஸஅத் அவர்கள் சீனாவில் இருந்தபோது அவர்களுக்கு கி.பி. 623ல் அரபு வணிகர்கள் மூலம் பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து மக்காவிலிருந்து மதீனாவிற்கு போய்விட்ட செய்தி வருகிறது. உடனடியாக சீனாவிலிருந்து மதீனா திரும்புகிறார்கள் ஹஸ்ரத் ஸஅத் அவர்கள் பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து ஏறக்குறைய 2 ஆண்டுகளில் ஹஸ்ரத் ஸஅத் அவர்கள் மதீனா வந்தடைந்தார்கள்.

ஹிஜ்ரி 2, ரமலான் மாதம் பிறை 17 அன்று அதாவது கி.பி. 624, மார்ச் மாதம் 3ஆம் தேதி சனிக்கிழமை அன்று இறை நிராகரிப்பாளர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பத்ரு போர் மூண்டது. முஸ்லிம்கள் மீது வலிந்து திணிக்கப்பட்ட இந்தப் போரில் ஹஸ்ரத் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

அதன் பிறகு ஹிஜ்ரி 3 ஷவ்வால் மாதம் பிறை 3இல் அதாவது கி.பி. 625 மார்ச் மாதம் 23 அன்று நடைபெற்ற உகது போரிலும் கலந்து கொண்டு வீரப் போர் புரிந்தார்கள்.

பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலம் முழுவதும் அவர்களின் தோளோடு தோள் நின்று இஸ்லாமிய மார்க்கத்தின் தூணாக விளங்கினார்கள் ஹஸ்ரத் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்கள். பெருமானாரின் மரணத்திற்குப் பிறகு ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் தலைமையிலும் ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்களின் தலைமையிலும் இஸ்லாமிய இராணுவத்திற்கு தலைமையேற்று பல்வேறு போர்களில் முன்னின்று ஹஸ்ரத் ஸஅத் அவர்கள் இஸ்லாமிய அரசின் பாதுகாப்பு கேடயமாக விளங்கினார்கள்.

கி.பி. 650ல் ஹஸ்ரத் உதுமான் (ரலி) அவர்கள் இஸ்லாமிய அரசின் கலீஃபாவாக பொறுப்பேற்ற உடன் உலகின் பல பாகங்களுக்கும் இஸ்லாமிய அரசின் தூதர்கள் அனுப்பப்பட்டனர். சீனாவில் அன்றைக்கு மிகப் பெரிய பேரரசாக விளங்கிய டாங் பேரரசிற்கு ஹஸ்ரத் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்கள் மதினாவில் இருந்து இஸ்லாமிய அரசின் தூதராக அனுப்பப்பட்டார்கள்.

ஏற்கனவே சீனாவிற்கு வந்திருந்த அனுபவமும் சீனா மக்களின் பழக்க வழக்கத்தையும் நன்றாக அறிந்திருந்த ஹஸ்ரத் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்கள் இப்போது இஸ்லாமிய அரசின் அதிகாரப்பூர்வ தூதராக கி.பி. 650இல் சீனா வந்தார்கள். அவர்கள் இந்த முறை வரும் போது ஏற்கனவே வந்த அதே பாதையான தமிழக கடற்கரை வழியாக வங்கக் கடலில் புகுந்து சிட்டாகாங் துறைமுகம் பிறகு மணிப்பூர் வழியாக சீனா வந்தடைந்தார்கள்.

ஹஸ்ரத் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்கள் இரண்டாவது முறையாக இஸ்லாமிய அரசின் அதிகாரப்பூர்வ தூதராக சீனாவிற்கு வரும் போது அல்குர்ஆன் முழுமையாக்கப்பட்டு எழுத்து வடிவமாக தொகுக்கப்பட்ட பிரதி ஒன்றையும் கையோடு எடுத்து வந்தார்கள். வருகின்ற வழியில் சிட்டகாங் நகர மக்களும் மணிப்பூர் மக்களும் மிக ஆர்வமாக அதைப் பார்த்து வியந்தனர். அதையே தங்களின் வாழ்க்கைக்கான வழிகாட்டியாக ஏற்று மனமுவந்து சாட்சியம் கூறினர்.

மணிப்பூர் கடந்து சீனா சென்றடைந்த ஹஸ்ரத் ஸஅத் அவர்களை டாங் பேரரசின் மன்னர் ‘குவாஸாங்’ உயரிய கண்ணியத்தோடு வரவேற்றார். சீனா முழுவதும் சுற்றிப் பார்த்த ஹஸ்ரத் ஸஅத் அவர்களுக்கு மிகப் பெரிய ஆச்சரியம் காத்திருந்தது.

30 ஆண்டுகளுக்கு முன்பு வந்த போது ஹஸ்ரத் ஸஅத் அவர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கம் அதன் பிறகு அரபு வணிகர்களின் அழைப்புப் பணி காரணமாக சீனாவின் பல பாகங்களிலும் ஆழமாக வேரூன்றி இருந்ததைக் கண்டார்கள்.

குறிப்பாக உலகப் பிரசித்தி பெற்ற (Silk Road) பட்டுச்சாலை வர்த்தகத்தின் மூலம் நிலவழியாக வந்த அரபு வணிகர்கள் பாரசீகத்தில் இருந்து மத்திய ஆசியா வழியாக சீனாவின் ஜின்ஜியாங் மாகாணம் வரை வழிநெடுகிலும் வாழ்ந்த மக்களிடம் தீனுல் இஸ்லாத்தை விதைத்திருந்ததை ஹஸ்ரத் ஸஅத் அவர்கள் கண்டு ஆனந்தம் அடைந்தார்கள்.

சீனாவில் வாழ்ந்த முஸ்லிம்களை ஒருங்கிணைத்து இஸ்லாமிய சமூகக் கட்டமைப்பை உருவாக்கிடும் விதமாக டாங் பேரரசின் மன்னர் குவாஸாங்கிடம் ஒரு பள்ளிவாசல் கட்டுவதற்கான அனுமதி வழங்கவேண்டும் ஹஸ்ரத் ஸஅத் முறையிட்டார்கள்.

மனமுவந்து ஏற்றுக் கொண்ட மன்னர் உடனடியாக சீனாவின் கேன்டன் நகரில் பள்ளிவாசலுக்கான நிலத்தை ஒதுக்கித் தந்தார்கள். அன்றைக்கு கட்டப்பட்ட பள்ளிவாசல் இன்றைக்கும் கேன்டன் நகரில் ஹஸ்ரத் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) மெமோரியல் மஸ்ஜித் என்று அழைக்கப்படுகிறது. சீனப் பாரம்பரிய கட்டிடக் கலையை பறைசாற்றும் விதமாக கொண்டுள்ள அந்த இறையில்லம் இறைவனுடைய தீனுல் இஸ்லாத்தின் இரும்புத் தூணாக இன்றும் காட்சி தருகிறது.

ஹஸ்ரத் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கி.பி. 664ல் மரணமடைந்தார்கள். அவர்கள் அன்று விதைத்த இஸ்லாம் என்கிற வீரிய ரக விதை வேரூன்றி முளைத்து மரமாகி கிளை பரப்பி மிகப்பெரிய சமூகமாக பல்கிப் பெருகியுள்ளது. உயரிய நாகரீகத்தின் பண்புகளை தமது வாழ்வியல் மூலம் வெளிப்படுத்துகின்றனர் இன்றைய சீன முஸ்லிம்கள்.

ஹஸ்ரத் ஸஅத் அவர்களுக்குப் பிறகு ஏராளமான அரபு வணிகர்கள், மத்திய ஆசிய முஸ்லிம்கள் சீனாவிற்கு வந்து இஸ்லாமிய அழைப்புப் பணியில் ஈடுபட்டனர். சீனப் பெண்களை திருமணம் செய்து கொண்டனர். புதிய இனம் உருவானது. முஸ்லிம்கள் பல்கிப் பெருகினர். சீனப் பெண்களுக்கு அரபுப் பெயர்களை உச்சரிப்பதில் சற்று சிரமம் இருந்தது. ஆனாலும் ஆசை ஆசையாக தங்களுக்கு பிடித்தமான அரபுப் பெயர்களை சற்று சுருக்கி உச்சரித்தனர். ‘ஹஸன்’ என்ற பெயரை ‘ஹாய்’ என்றும் ‘ஹூசைன்’ என்கின்ற பெயரை ‘ஹூய்’ என்றும் அன்போடு அழைக்கின்றனர்.

இன்றைய தேதியில் சீனாவின் மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 2.5% உள்ளனர் என்கிறது சீனத்தின் புள்ளிவிவரம் என்று ஹஸ்ரத் ஸஅத் இப்னு அபீவக்காஸ் அவர்கள் விதைத்த விதை.
No articles in this category...