ஈர்ப்பை விதைப்போம்!

ஈர்ப்பை விதைப்போம்!

நான் தஞ்சை ஆற்றங்கரைப் பள்ளிவாசலில் இமாமாகப் பணியாற்றிக் கொண்டிருந்த போது ஒரு முறை இந்து நண்பர் ஒருவர் தன் வீட்டு விசேஷ நிகழ்ச்சி ஒன்றுக்கு என்னை அழைப்பதற்காக பள்ளிவாசலுக்கு வந்தார்.
கம்பீரமான காவல்துறை அதிகாரியான அவர் பள்ளியின் நுழைவாயிலுக்கு சில அடிகள் முன்பாகவே தயங்கி நின்ற விட்டார்.

நான் அவரை அன்போடு அழைத்து அவரின் தயக்கம் நீக்கி, கால்களைக் கழுவச் செய்து, பள்ளியினுள்ளே அழைத்துப் போனேன். தொழுகை முறையை சுருக்கமாக அவருக்குச் சொன்னேன்.


அதையெல்லாம் கவனத்தோடு காது தாழ்த்திக் கேட்டு முடித்து, பள்ளிவாசலைச் சுற்றித் தன் பார்வையை சுழலவிட்ட அந்த நண்பர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்.


'ஏன் சார், நீங்கள் தொழுவதற்கு இங்கே எந்த அடையாளமும் (Symbol) இல்லையா?' அவரின் இந்தக் கேள்வி என்னை நொறுக்கிப் போட்டது என்ன கேட்ககிறீர்கள்?' என்றேன்.


'இல்லை. இந்துக்களாகிய நாங்கள் சிலைகளை வைத்து வணங்குகிறோம் கிறிஸ்தவர்கள் சிலுவை வைத்திருக்கிறார்கள். அப்படி மையமாக வைத்து வணங்க உங்களுக்கென்று எந்தக் குறியீட்டுப் பொருள் எதுவும் இங்கே காணவில்லையே? அதைத் தான் கேட்டேன்'.அவரது கேள்விக்கு நான் தந்த விளக்கத்தைப் பொறுமையோடு கேட்டுக் கொண்ட அவர்
'குறியீட்டுப் பொருள் எதுவுமின்றி இப்படி வெறுமையில் இறைவனை வழிபடுகிற உங்கள் வணக்கமுறை 'ரியலி கிரேட் சார்' என்ற அகமகிழ்ந்து பாராட்டினார்.

இந்தப் பாராட்டு மொழிகளால் நான் ஒன்றும் குளிர்ந்து போகவில்லை. மாறாக 'எந்தக் குறியீட்டுப் பொருளும் இல்லையா?' என்ற அவரது கேள்வி தேள் கொடுக்காய் என்னைத் தீண்டிக் கொண்டிருந்தது.
அந்த நண்பருக்கு சுமார் நாற்பது வயதிருக்கலாம். முஸ்லிம்கள் தங்களின் வணக்கத்திற்கு எந்தக் குறியீட்டுச் சின்னங்களையும் வைத்துக் கொள்வதில்லை என்கிற மிகச் சாதாரண விஷயத்தை நாம் அவருக்குத் தெரிவிக்க நாற்பது ஆண்டுகள் ஆகியிருக்கிறதே என்கிற கசப்பான உண்மை என்னைக் கலங்கடித்தது.

நம்மோடு பழகும் மாற்று மத சகோதரர்களுக்கு இஸ்லாம் என்றால் என்ன? அதன் அடிப்படைக் கோட்பாடுகள் யாவை? என்பதெல்லாம் தெரியவில்லை. தெரியவில்லை என்பதை விட நாம் அவர்களுக்குத் தெரிவிக்கவில்லை என்பது தான் சரியானது. தெரிந்து கொள்ள வேண்டிய கடமை நமக்கு உண்டு. செய்கிறோமோ நாம்? திருமணம் போன்ற வைபவங்களில் அவர்களை அன்புடன் அழைத்து சுவையான பிரியாணியைப் பரிமாறுகிற நாம் இஸ்லாமியத் திருமணம் பற்றிய கருத்துகளைப் பரிமாறுகிறோமா?
இஸ்லாம் சம்பந்தமாக பல நூறு புத்தகங்களை வெளியிடுகிற நாம் முஸ்லிம் அல்லாதாரும் விளங்கிக் கொள்ளும் வகையில் எத்தனை புத்தகங்கள் வெளியிடுகிறோம்?


ஒரு மீலாது மேடையில் பிரபல்யமான ஓர் இந்துப் பிரமுகர் இப்படிக் குறிப்பிட்டார்: 'நபிகள் பெருமானரைப் பற்றிக் குறிப்பிடுகிற போது தயவு 'எம்பெருமானார்' என்று கூறாதீர்கள். 'நம் பெருமானார்' என்றே கூறுங்கள் காரணம் அவர் எல்லோருக்கும் பொதுவான பெருமானார். அவரது கருத்துக்கள் இந்த மனித குலம் முழுமைக்கும் சொந்தமானவை.'


நமது விழாக்கள் பிற மத அன்பர்களும் பங்கு கொள்ளும் வகையில் நடத்தப்பட வேண்டும். அவர்களுக்குப் புரியும் வகையில் பிரசுரங்கள் வெளியிடப்பட வேண்டும். நமது திருமணங்களில் அதிக அளவில் அவர்கள் கலந்து கொள்கிறார்கள். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, இஸ்லாமியத் திருமணம், வரதட்சணை, விதவைத் திருமணம், விவாகரத்து போன்ற விஷயங்களில் இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை விளக்கலாம் மண வாழ்க்கை சம்பந்தமான சிறு பிரசுரங்கள் வழங்கலாம்.


பிறரைக் கட்டயாப்படுத்தி, நமது மார்க்கத்திற்கு அவர்களை இழுக்க வேண்டுமென்று நான் சொல்லவில்லை குறைந்தபட்சம் இஸ்லாம் என்றால் என்ன என்பதையாவது நாம் அவர்களுக்கு விளக்கி, அவர்களின் தப்பெண்ணங்களைப் போக்கலாமே.


இழுத்துக் கொண்டு வர நமக்கு உரிமையில்லை. அது நாகரிகமன்று. ஆனால் ஈர்த்து வருபவர்களைத் தடுக்க இயலுமா, எனவே ஈர்ப்பை ஈரத்துடன் மாற்றாரின் இதயங்களில் விதைப்போம்.

 

- மவ்லவீ. எஸ்.எம்.ரஃபீஉத்தீன் பாகவி

 


No articles in this category...