💥 யார் அந்த மாமனிதர்..?

💥 யார் அந்த மாமனிதர்..?

 முதல் பார்வையில் அவர் மீது அச்சம் கலந்த மரியாதை ஏற்படும். பழகி விட்டாலோ, விலகவே முடியாத அளவுக்கு அவர் மீது பிரியம் உருவாகி விடும்.

 அவர் பேசினால் பேச்சு சரளமாக இருக்கும், சொல் தெளிவாக இருக்கும், கருத்து சரியானதாக இருக்கும். ஆனால், அதற்காக பெரியதொரு சிரமம் எடுத்துக் கொள்ள மாட்டார்.

 கிராமவாசி, நகரவாசி இருவருக்கும் தகுந்தவாறு தனது பேச்சு நடையை, முறையே எளிய முறையிலும் கருத்தாழமிக்கதாகவும் அமைத்துக் கொள்வார்.

 இரண்டு வாய்ப்புகள் வரும் போது, அதில் எளிதானதையே தேர்வு செய்வார். ஆனால், அது பாவமாக இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால், அதிலிருந்து காத தூரம் விலகி விடுவார்.

 அவர் தனக்காக யாரையும் பழிவாங்கியதில்லை, யார் மீதும் கோபித்ததில்லை. இறை கண்ணியம் பாழாக்கப்பட்டால் மட்டுமே கோபத்தை வெளிப்படுத்துவார்.

 எவரும் அவரிடம் உதவி கேட்டு, இல்லை என்று அவர் சொன்னதில்லை. இருந்தால், உடனே அதை வழங்கி விடுவார். இல்லை யென்றால், இருப்பவரிடம் வாங்கித் தருவார்.

 இறைவன் தன்னைத் தேர்வு செய்யும் முன்பே உண்மையாளர், நம்பிக்கையாளர் என்று மக்க ளால் அழைக்கப்பட்டவர்.

 அரசர்களுக்கு முன் மக்கள் எழுந்து நிற்பது போல தனக்கு முன் எவரும் எழுந்து நிற்பதை விரும்பாதவர்.

 இல்லத்துள் நுழைந்து விட்டால், தனது வேலையை தாமே செய்து கொள்ளும் உங்களைப் போன்ற சாமான்ய மனிதராகவே, அவர் மாறிவிடுவார் என்று தமது மனைவியரால் குறிப்பிடப்பட்டவர்.

 தமது பணியாளர்களை விட, தன்னை உயர்வாகக் கருதிக் கொள்ளாதவர். மட்டுமல்ல, தமக்குப் பணிவிடை செய்தவருக்குத் தாமும் பணிவிடை செய்பவர்.

 உணவுண்ணும்போது குறை கூறும் பழக்கமில்லாதவர். பிடித்தால், உண்ணுவார். இல்லை என்றால், எதுவும் சொல்லாமல் எழுந்து விடுவார்.

 மேல்தட்டு மக்களை மாத்திரமல்ல, அடித்தட்டு மக்களையும் நினைவில் வைத்து, அவர் தொடர்ந்து காணப்படாவிட்டால், பிறரிடம் அவர் பற்றி விசாரிப்பார்.

 விசாரணையில் அவர் உள்ளூரில் இருப்பதாக தெரிய வந்தால், சென்று உடல் நலம் விசாரிப்பார். வெளியூர் சென்றதாகக் கேள்விப்பட்டால், அவருக்காக பிரார்த்தனை செய்வார்.

 மக்கள் அவர் சம்மந்தப்பட்ட விஷயங்களை மறந்து விட்டாலும், மக்கள் சம்மந்தப்பட்ட எதையும் அவர் மறக்கவே மாட்டார்.

 மக்களுக்கு அதிக நன்மைகள் புரிந்து, அவர்களுக்கு அதிக உபகாரம் புரிபவரே, அவர் உள்ளத்திலும், அவரது அவையிலும் அதிகக் கண்ணியம் வாய்ந்தவர்.

 ஒரு சபைக்குச் சென்றால், தனக்கென ஓரிடத்தை, ஓர் ஆசனத்தை எதிர்பார்க்காமல் சபையின் முடிவெல்லையிலேயே அமர்ந்து கொள்வார்.

 அவர், தன்னைத்தான் அதிகம் விரும்புகிறார் என்று, ஒவ்வொருவரும் எண்ணுமளவிற்கு, எல்லாரிடமும் இனிமையாக நடந்து கொள்வார்.

 ஒருவர் அவர் முன்பு பேசினால், இடையில் குறுக்கிட மாட்டார். பேசி முடிக்கும் வரை அமைதி காப்பார்.

 தேவை நிமித்தம் எவரும் அவரிடம் வந்தால், அவராக அங்கிருந்து செல்லும் வரை, அவரோடு உரையாடிக் கொண்டிருப்பார்.

 அவரது கைகளை எவரும் பிடித்தால், அவராகக் கைகளை எடுக்கும் வரை, தனது கைகளைக் கழட்டிக் கொள்ள மாட்டார்.

 பிணங்கிக் கிடப்போரிடையே இணக்கத்தை ஏற்படுத்துவாரே தவிர, இணக்கமாக இருப்போரி டையே பிணக்கத்தை ஏற்படுத்த மாட்டார்.

 ஒருவர் பற்றி விரும்பாத செய்தி எதையும் கேள்விப்பட்டால், மக்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று, பொதுவாகவே குறிப்பிடுவார். சம்மந்தப்பட்டவருடைய பெயரைக் குறிப்பிட்டு அவரைச் சங்கடப்படுத்த மாட்டார்.

● தனிப்பட்ட வகையில், மூன்று குணங்களை
விட்டும் தன்னைப் பாதுகாத்துக் கொண்டவர் :
 முகஸ்துதிக்காக எதையும் செய்வது, 
 அதிகப் பிரசங்கித் தனம் செய்வது, 
 தேவையற்றவற்றில் ஈடுபடுவது.

● சமூகத் தளங்களில், மூன்று குணங்களை
விட்டும் தன்னைப்பாதுகாத்துக் கொண்டவர் : 
 பிறரைப் பழிப்பது, ஏசுவது,
 பிறரைப் பற்றி குறை கூறுவது, 
 பிறர் குறையைத் தேடி அலைவது.

 அவர் பேசினால் அனைவரும் செவிமடுப்பர்; 
 ஆணையிட்டால், அனைவரும் அடிபணிவர்;
 ஏவாமலேயே பணிவிடை செய்ய முன்வருவர்;
 மக்கள் திரளைப் பெற்றவர்; காரணம், 
 அவர் கடுகடுப்பானவர் அல்லர்; 
 முகம் சுழிப்பவரும் அல்லர்.

💥 யார் இந்த மாமனிதர் என்ற யோசனையா? 
கண்மணி நாயகம் (ஸல்) அவர்களே!

 

 


No articles in this category...