Tamil Islamic Media

ஒரு 2.5 கதை

ஒருநாள் ஒரு செல்வந்தர் சாலைவழியே சென்றபோது ஒரு யாசகன் 'சீமானே..! ஏதாவது தந்து உதவுங்கள்' என்றார். செல்வந்தர் அவனை கருணையுடன் பார்த்தார். யாசகரின் கண்களில் நம்பிக்கையின் ஒளி பிறந்தது.

'செல்வச் சீமானே..! வருமானம் ஏதுமற்ற வறியவன் நான். உங்கள் செல்வத்திலிருந்து ஒரு துரும்பளவு இந்த ஏழைக்கு அளிக்கக்கூடாதா..' என்று கெஞ்சினார். செல்வந்தர் 'நான் உனக்கு பணம் எதுவும் தரப் போவதில்லை. ஆனால் நாம் இருவரும் சேர்ந்து ஒரு வியாபாரம் செய்வோம். எனக்கு நிறைய விளை நிலங்கள் உள்ளன. அதில் விளையும் பொருட்களை நீ விற்பனை செய்ய வேண்டும். வியாபாரத்திற்கான அத்தனை வசதிகளையும் நானே செய்து தருகிறேன். நீ விற்பனை மட்டும் செய்தால் போதும். உனக்கு எவ்வளவு இலாபம் வேண்டும்?' என்றார். அந்த யாசகர் 'நீங்களாக பார்த்து எது கொடுத்தாலும் போதும்..'என்றார். அதற்கு செல்வந்தர் '*97.5%* நீ எடுத்துக் கொள் எனக்கு 2.5% போதும்' என்றார். யாசகர் நம்ப முடியாமல் '*2.5%* சதவீதம் போதுமா?' என்றார். செல்வந்தர் 'எனக்கு ஏராளமான செல்வங்கள் இருக்கின்றன. அதனால் 2.5% போதும். வருடக்கடைசியில் தந்தால் போதும்'என்றார்.

வியாபாரம் தொடங்கியது. யாசகர் கடுமையாக உழைத்தார். வியாபாரம் பெருகியது. யாசகர் கொஞ்சம் கொஞ்சமாக தன் வசதிகளை பெருக்கிக் கொண்டார். படிப்படியாக அவரது அந்தஸ்து உயரத் தொடங்கியது. அந்தஸ்து உயர உயர அவரது ஆடம்பரம் பெருகியது. ஆண்டு கடைசியில் கணக்கு பார்த்தபோது 2.5% சதவீதம் என்பது பெரிய தொகையாக தெரிந்தது. அவர் செல்வந்தரிடம் 'இந்த வியாபாரத்தை நடத்தியது நான்தான். நீங்கள் எந்த உழைப்பும் செய்யவில்லை. இரவும் பகலும் உழைத்தது நான் மட்டுமே. உங்களுக்கு ஏன் பங்கு கொடுக்க வேண்டும்? எனக்கே இன்னும் அதிக தேவைப்படுகிறது. அடுத்த வருடம் பார்க்கலாம்' என்றார்.

நமது வாழ்விலும் இதுதான் நடக்கிறது. அல்லாஹ்தான் நமது பார்ட்னர். அவனே வாழ்வையும் வாழ்நாளையும் தந்தான். பணம் சம்பாதிக்கும் திறமையும் ஆற்றலும் அவன் தந்ததே. உடலின் நிஃமத்துகளை குறைவில்லாமல் தந்தான். நம்மிடமிருப்பது எதுவும் அவன் தந்ததே. அவனால் கிடைத்ததில் அவனுடைய பங்கான 2.5% சதவீதம் மிகச்சிறிய பகுதியே. அதை தவறாமல் கொடுக்க உறுதி கொள்வோம். தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமை. ஜகாத் அளவு குறிக்கப்பட்ட கடமை. இவ்விரண்டு கடமைகளையும் அல்லாஹ் எப்போதும் சேர்த்தே கூறுகிறான்.

அகீமுஸ்ஸலாத்.. வ ஆத்து ஜகாத். (தொழுகையை நிலைநிறுத்துங்கள்..ஜகாத்தையும் கொடுத்து விடுங்கள்)






No articles in this category...