Tamil Islamic Media

புனித மிஃராஜ் இரவு அமல்கள்!

 

புனித மிஃராஜ் இரவு வர இருப்பதால் சங்கையான எங்களுடைய இமாம்கள் அன்றைய இரவை எப்படி கழிக்க வேண்டும் என எமக்கு அறிவுறுத்தி இருப்பதை நாம் கற்றுக் கொள்வது நமக்கு நற்பயன்களை ஈட்டித் தரும்.
.
சங்கை மிஃராஜ் இரவில் இதய சுத்தியோடு ஒருவர் பின் வரும் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவாரேயானால் அவர் 100 வருட வணக்க வழிபாடுகளில் அவர் ஈடுபட்டதற்கு அது சமமாகிவிடும் என அவர்கள் அறியத் தந்துள்ளார்கள்.
.
*12 ரக்கா'அத் நfபில் தொழ வேண்டும். இரண்டிரண்டு ரக்காத்தாக 06 ஸலாமில் தொழுது கொள்ளலாம்.
.
*ஒவ்வொரு ரக்'ஆத்திலும் சூரா பாத்திஹாவுக்குப் பிறகு, சூரா இஹ்லாஸ் (குல்ஹுவல்லாஹ்) அல்லது வேறு ஏதாவது சூராவை ஓதிக்கொள்ளலாம்.
.
*பிறகு 100 முறை ' ஸப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வல்லாஹு அக்பர்' என்று ஓதிக்கொள்ள வேண்டும்.
.
*பிறகு 100 முறை 'அஸ்தஃபிருல்லாஹ்' என்று கூறிக் கொள்ள வேண்டும்.
.
*பின் தனக்குத் தெரிந்த ஒரு ஸலவாத்தை 100 முறைக் கூறிக் கொள்ள வேண்டும்.
.
அதன் பின் எமது சன்மார்க்கத் தேவைகளுக்காகவும் உலக தேவைகளுக்காகவும் து'ஆ செய்துக் கொள்ள வேண்டும். இன்ஷா அல்லாஹ் அவனது (பாவக் காரியங்களுக்கல்லாத) அத்தனை துஆக்களையும் அல்லாஹ் ஏற்று அருள் புரிவான்.
.
(கன்ஸுல் உம்மால், பாகம்: 12, பக்கம்: 312-313, ஹதீஸ் இல: 35170)
.
[இமாம்கஸ்ஸாலி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ' இஹ்யா உலுமுத்தீனிலிருந்து பெறப்பட்டது]
.

மிஃராஜ் தினத்தில் நோன்பு வைக்கலாமா?

கேள்வி:

ரஜபு 27 மிஃராஜ் தினத்தன்று நோன்பு வைக்கலாமா?

பதில்:

மிஃராஜ் தினத்தில் நோன்பு வைக்கலாம் என்பதற்கு நபிமொழிகளில் ஆதாரங்கள் காணக்கிடைக்கிறது. இமாம் பைஹகி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஷுஃபுல் ஈமானிலும், தைலமி ரஹ்மத்துல்லாஹி அவர்கள் முஸ்னதுல் பிர்தவ்ஸிலும், ஸல்மானுல் பார்ஸி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வாயிலாக இவ்வாறு அறிவிக்கின்றனர்:

ரஜப் மாத்தில் ஒரு இரவும், பகலும் இருக்கிறது. அத்தினத்தில் பகலில் நோன்பு வைத்து, இரவில் நின்று வணங்கினால் நூறு ஆண்டுகள் நோன்பு வைத்து வணங்கிய கூலி கிடைக்கும். அவ்விரவு ரஜப் 27வது இரவாகும். அந்நாளில்தான் அல்லாஹ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நபியாக அனுப்பி வைத்தான்'.

மேலும் அபான் இப்னு ஙயாஸ் அவர்கள், அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமாக அறிவிக்கும் மற்றொரு நபிமொழியும் பைஹகியில் காணப்படுகிறது.

ரஜபில் ஓர் இரவுண்டு. அவ்விரவில் நல்லமல் புரிவோருக்கு நூறு ஆண்டுகள் நல்லமல் புரிந்த கூலி கிடைக்கும். அது ரஜபு மாதத்தின் 27வது இரவாகும். அவ்விரவில் யாராவது 12 ரக்அத்கள் தொழுதால் ஒவ்வொரு ரக்அத்திலும் ஸூரத்துல் பாத்திஹாவும், வேறு ஏதாவது ஸூரத்தும் ஓத வேண்டும். ஒவ்வொர இரண்டு ரக்அத்களும் தொழுது முடித்த பின்னர், 'ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வல்லாஹு அக்பர்' என்று 100 தடவைகளும், இஸ்திக்பார் 100 தடவைகளும், அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது 100 தடவை ஸலவாத்துகளும் ஓதிவிட்டு மறுமை, இம்மை சம்பந்தப்பட்டவை குறித்து தேவையானவற்றை துஆச் செய்யலாம். பின்னர் பகலில் நோன்பு நோற்க வேண்டும். அல்லாஹ் அவரது துஆக்களை ஏற்றுக் கொள்வான்.

மேலே காட்டப்பெற்ற இரண்டு ஹதீஸ்களும் 'மர்பூஉ' ஆன நபிமொழிகள். இவற்றில் இரண்டாவது ஹதீஸ் முந்தையதை விட மிக பலகீனமானது என பைஹகீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றனர். அத்தோடு இரண்டாவது நபிமொழியை அறிவிக்கும் அறிவிப்பாளர்களில் சந்தேகத்திற்குரிய இருவர் காணப்படுவதாக இப்னு ஹஜர் ரஹ்மத்துல்லாஹி அவர்கள் கூறுகின்றனர். என்றாலும் ஏவல், விலக்கல் போன்ற ஆணை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில்தான் பலவீனுமான ஹதீஸ்களை எடுக்கக் கூடாது. ஆனால் பழாயில் சிறப்புகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அமல் செய்வதற்கு பலவீனமாக நபிமொழிகளை ஆதாரமாகக் கொள்ளலாம் என்பது ஹதீஸ்கலை மேதையர்களுடையவும், மார்க்கத்தறை அறிஞர்களுடையவும் ஏகோபித்த முடிவாகும்.

ரஜப் 27 எனக்கு நபிப்பட்டம் வழங்கப்பட்டது. அத்தினத்தில் நோன்பு வைத்து நோன்பு திறக்கும் வேளையில் துஆக் கேட்டால், பத்து வருடக் குற்றங்களுக்கு அது பரிகாரமாக அமையும்.' பவாயிது நிஹாத் என்ற நூலில் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமாக அறிவிக்கப்படும் இந்த நபி மொழியும் 'மர்பூஉ'தான்!

'யாராவது ரஜப் மாதம் 27 அன்று நோன்பு வைத்தால் அவருக்கு அல்லாஹ் 60 ஆண்டுகள் நோன்பு வைத்த கூலியை கொடுப்பான். அத்தினத்தில்தான் அண்ணல் நபியுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபிப்பட்டத்தை வழங்கினார்கள்.' ஜுஸ்உ அபீ முஆத் என்ற நூலில் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமாக இந்த நபிமொழி பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதே கருத்தில் வந்துள்ள எல்லா நபிமொழிகளிலும் இந்த நபிமொழிதான் மேலானதும், 27வது இரவிலும், பகலிலும் செய்யப்படுகின்ற அமல்களுக்கு அடிப்படை ஆதாரமுமாகும்.'

ஆதார நூல்:பதாவா ரிழ்விய்யா, பாகம் 4, பக்கம் 657, 658

ஆக்கம் தொகுப்பு ...மிஸ்கீன் ஹாபிள் காரீ மு.முஹம்மது இத்ரீஸ் அப்துற்றஹ்மான் கௌஸி காதிரீ ரிஃபாஈ M.SC..M.A..P.HD


No articles in this category...