Tamil Islamic Media

கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் : ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி

கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் Unsung Heroes-தொடர்-1
-காஞ்சி அப்துல் ரவூப் பாகவி-

முதல் ஆளுமை ....ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி


இந்தத் தொடரில் நான் மிகுந்த திறமைகளையும் ஆற்றல்களையும் தமக்குள் கொண்டிருந்தும் அவற்றால் தமிழ்ச் சமூகம் பயன் அடைய வேண்டியிருந்தும் நம் சமூகத்தால் கண்டு கொள்ளப்படாத Unsung Heroes – கொண்டாடப்பட வேண்டியவர்களாய் இருந்தும் கொண்டாடப் படாத ஆளுமைகளைக் குறித்து மட்டுமே எழுதவிருக்கின்றேன்.

தமிழ்த் திண்ணை தளத்தை முகநூலில் உருவாக்கி நடத்தி வரும் ஊடக நிபுணர் நாடறிந்த ஆவணப் பட இயக்குனர் கோம்பை அன்வர் போன்றோரின் நன்னோக்கங்களை நிறைவு செய்யும் வகையில் இதில் வரும் கட்டுரைகளைக் கண்ட பின்பே எனக்கு இப்படியொரு தொடரைத் தொடங்கி முகநூலில் குறிப்பாக “தமிழ்த் திண்ணை” யில் வெளியிட்டால் என்ன என்கிற எண்ணம் தோன்றியது.
நினைவில் கொள்ளுங்கள் , இதில் ஏற்கனவே பிரபலமாக இருக்கும் ஆளுமைகள் பற்றியதல்ல இந்தத் தொடர். எனவே, முன்பே பொதுவெளியில் பிரபலமானவர்களைப் பற்றியதல்ல இந்தத் தொடர். தகுதியும் திறமையும் இருந்தும் நம் சமுதாயத்தால் தொடர்ந்து அறியாமை அல்லது மாச்சரியம் போன்ற காரணங்களால் தக்க அங்கீகாரம் பெறாமல் இருந்து வருகின்ற, இருட்டடிப்புக்கு ஆளாகி வருகின்ற அல்லது நம் சமுதாயத்திற்கே உரிய மெத்தனப் போக்கால் சரிவரப் பயன் படுத்தப் படாமல் இருக்கின்ற அல்லது பொதுவெளியில் சுமாரான அறிமுகம் மட்டுமே பெற்றுள்ள ஆளுமைகளைப் பற்றியதே இந்தத் தொடர்!

இதனை மனத்தில் வைத்துக் கொண்டு இந்தத் தொடரைப் படிக்கும் படி என் முகநூல் நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
உங்களுக்குத் தெரிந்த இத்தகைய தமிழ் முஸ்லிம் ஆளுமைகள் அல்லது பொதுவான தமிழ் ஆளுமைகள் எவராக இருப்பினும் எந்த சமயத்தைச் சேர்ந்தவராக இருப்பினும் தமிழராய் இருப்பின் எனக்கு அவரைக் குறித்த சரியான தகவல்களை நீங்கள் தயவு கூர்ந்து அனுப்பித் தந்தால் இந்த தளத்தில் எழுதிப் பதிவிடத் தயாராக உள்ளேன்.


கலை மற்றும் அறிவு சார்ந்த துறைகளில் அறிஞர்களை யும் திறமையாளர்களையும் ஊக்கப்படுத்தும் இயல்பு நம் சகோதரர்களான மலையாளிகளுக்கு வாய்க்கப் பெற்றிருப்பது போன்று தமிழர்களான நமக்கு வாய்க்கப் பெறாததால் இந்த நிலை தமிழகத்தில் நிலவுகின்றது.


தமிழர்களான நாம் குறிப்பாக தமிழ் முஸ்லிம்களான நாம் நமக்கே உரித்தான மெத்தனப் போக்கின் காரணத்தால் நல்ல திறமையாளர்களைப் பயன்படுத்தாமல் நமக்கு நாமே தீங்கிழைத்துக் கொண்டிருக்கின்றோம்.


வியக்கத்தக்க மூளை வளங்களுக்குச் சொந்தக்காரர்களாக நம் சமுதாயத்தில் பலர் இருந்தும் அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பது நமக்கு நாமே செய்துகொள்ளும் அநீதியே ஆகும்.
அத்தகைய குன்றிலிட்ட விளக்காய்ப் பிரகசிக்க்வேண்டியவரை இருந்தும் குடத்திலிலிட்ட விளக்காய் இருக்கும் ஆளுமைகளில் முதலாமவராக நான் பதிவு செய்ய விரும்புவது அறிஞர்
ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி அவர்களைத்தான் .


தமிழாற்றல் மிக்கவர் என்பது மட்டுமல்லாது, அரபு நாட்டிற்கு செல்லும் முன்பே அரபு மொழியில் சரளமாக உரையாடவும் நவீன அரபியில் அரபிகளே வியக்கும் வண்ணம் பேசவும் எழுதவும் அறிந்திருந்தவர்.


அந்தக் காலத்தில் ஆங்கிலம் அறிந்த மார்க்க அறிஞர்கள் ஒரு சிலரைத் தவிர வேறெவரும் இல்லை எனலாம். அத்தகைய சரளமான ஆங்கிலம் அறிந்த ஆலிம்ளில் ஒருவர்.
குறிப்பாக, சென்னை ஜமாலியா அரபுக் கல்லூரி யில் படித்துக் கொண்டிருந்த போது புதுக்கல்லூரியின் மேனோள் முதல்வர் பேரறிஞர் செய்யித் அப்துல் வஹ்ஹாப் புகாரி(ரஹ்) அவர்களின் என்கிற பிரியத்துக்குரியர்.


பாக்கியாத்தில் எனக்குப் பல படிகள் சீனியராக இருந்தவர். மதரஸா ஜமாலியா , மதரஸா தவூதிய்யா போன்ற மார்க்க கலா பீடங்களில் பயின்று முடித்து விட்டு, அரபுக் கல்லூரி ஆசிரியராகவும் பணியாற்றி விட்டு, தம்முடைய தந்தை மீரா ஹுசைன் பாகவி (ரஹ்) அவர்களைப் போல் தாமும் ஒரு பாகவியாக ஆக வேண்டும் என்று விரும்பி பாக்கியாத்தில் வந்து ஓதியவர்!


எல்லாவற்றுக்கும் மேலாக தமது இளவலைத் தமது சொந்த செலவில் மருத்துவப் படிப்பு (எம். பி.பி. எஸ்) படிக்க வைத்தவர். அவர் தான் .... இஸ்லாமிய அறிஞர் கிபாயத்துல்லாஹ் பாகவி!


இந்தப் பெயருக்குரியவர் இன்றும் நம்மிடையே வாழ்ந்து வருவது தமிழ் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, தமிழர்கள் அனைவருக்குமே கிடைத்தற்கரிய ஒரு நற்பேறு என்று தான் கூற வேண்டும்!
அண்ணன் கிபாயத்துல்லாஹ் பாகவி அவர்களும் அண்ணன் சதக்கத்துல்லாஹ் பாகவி அவர்களும் இணைந்து தெள்ளு தமிழ் நடையில் எழுதிய, தென்னகத்தின் தாய்க் கல்லூரி அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக் கல்லூரியின் வான்புகழ் வெளியீடான “ஜவாஹிருத் தப்சீர்” இப் புவியுள்ள வரையும் அவர்களின் அரும்பணியைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும், அது மட்டுமன்றி, என்றென்றைக்குமாக அவர்களுக்கு மறுமைப் பேறுகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கும்.
அவரது தமழாற்றலுக்கு எடுத்துக் காட்டாக அவரது கவிதை ஒன்றை இங்கே பதிவிட்டுள்ளேன் .
கவிதை முடிந்த பின்பும் அவரைக் குறித்து பல அரிய தகவல்கள் பதியப்பட்டுள்ளன . எனவே தொடர்ந்து படிக்க வேண்டுகிறேன்,


கனவுத் துயரங்கள்! கண்ணீர்த் துளிகள்!!
அரபு மூலம்: ஜிப்ரான் கலீல் ஜிப்ரான்
தமிழாக்கம்: ஈரோடு மீ. கிஃபாயத்துல்லாஹ் பாகவீ

நாங்கள் விணணிலிருந்து சரம்சரமாக விடப்படும் வெள்ளிநாண்கள்!
இயற்கையன்னை வாரியெடுத்து அணைத்து இன்புறுவதால்,
சின்னஞ்சிறு நீரோடைகள் எங்களால் அழகு மீக்குறும்!

நாங்கள் சுடர்விடும் வைரக்கற்கள்!
வெண்ணிறக் கிரீடத்திலிருந்து உதிரும் எங்களை
வைகறை வஞ்சிகள் வாரியெடுத்துப் பசும்புற்களின் மேல் அலட்சியமாகத் தூவிவிடுவர்!

நாங்கள் அழுதுகொண்டிருக்கிறோம்!
இந்த மணற்குன்றுகளோ
எங்களைப் பரிகசித்துக் குறுநகை புரிந்துகொண்டிருக்கின்றன!

நாங்கள் வெட்கத்தால் தலைதாழ்த்தும்போது
நறுமணப் பூக்கள் தலைநிமிர்த்தி எஙகளைத் தழுவத் துடிக்கும்!

நாங்கள் முகிலும் வயலுமான இளங்காதலர்களிடையே
தூதர்களாகப் பணியாற்றும் அடிமைகள்!
குளிர்ந்த முகிலின் காதற் கவிதைகளைச் சுமந்து வந்து
வயலின் தகிக்கும் உளத்திற்கு உரமாகக் காணிக்கை வழங்குவோம்!

இடியின் முழக்கமும்’ மின்வாட்களின் ஒளிக் கீற்றுகளும் எங்கள் வருகையைக் கூறும் கட்டியங்காரர்கள்.
வானவில்லின் வர்ண ஜாலங்கள் தாம் எங்களின் ஓய்விற்கான சமிக்ஞைகள்!
ஆழ்கடலில் ஓய்வாகத் துயிலச் செல்லும் எங்களைக் காற்றுப் புறாக்கள் தங்கள் படபடக்கும் சிறகுகளால் கட்டியணைத்துப் பறந்து சென்று,
பசுங்கனிச் சோலைகளில் இறக்கி விளையாடவிட்டு வேடிக்கை பார்க்கும்!
ஆங்கு...
நாங்கள் பன்னீர்ப் பூக்களின் மெல்லிதழ்களை முத்தமிட்டுக் கொண்டும்
நடுங்கும் சின்னஞ்சிறு கிளைகளைச் சீண்டிக் கொண்டும் இருப்போம்!
சனனல்களில் தொங்குகின்ற திரை யாழ்களின் ஸ்வரக் கம்பிகளை எங்கள் மென்விரல்களால் மீட்டுவோம்.
அவை எழுப்பும் இனிய கீதங்கள் இல்லத்தாரின் இனிய நெஞ்சங்களில் இன்ப உணர்வுகளை நினைவுறுத்தும்!
எங்களை ...
காற்றில் மறைந்திருக்கும் கானல்தான் உருப் பெறச்செய்கின்றது.
நாங்களோ....
மழை என்ற நற்பெயரால் உருவாகிக் காற்றின் விரும்பத் தகாத தொடர்பால் சூறாவளியாகிக் கானலை அழித்து விடுகிறோம்.
அதனால் நாங்கள் .....
கடல் மங்கையின் கனவுத் துயரங்கள்! வானக் காதலனின் கண்ணீர்த் துளிகள்!

தமிழில் இந்தக் கவிதை உருவான பின்னணி
45 ஆண்டுகளுக்கு முன்பு 1975 ஆம் ஆண்டு தென்னகத்தின் தாய்க்கல்லூரி அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரி லஜ்னத்துல் இர்ஷாத் சொற்பயிற்சி மன்றம் சார்பாக ஓர் ஆண்டு மலரை அப்போதைய மாணவர்களான நாங்கள் அச்சில் வெளியிட்டோம். அப்போது நான் மூன்றாவது ஜும்ரா ஓதிக் கொண்டிருந்தேன்.

நானும், தேனருவி போன்ற தமிழ் நடையில் பேசவும் எழுதவும் ஆற்றல் பெற்றிருந்த இன்றும் பாக்கியாத்தின் தஃப்சீர் பிரிவில் கிஃபாயத்துல்லாஹ் பாகவி ஹளரத் அவர்களுடன் பணியாற்றிக் கொண்டிருந்த சதக்கத்துல்லாஹ் பாகவீ ஹளரத் அவர்களும், நாடறிந்த தமிழறிஞர்அதிரை அஹ்மத் காக்கா அவர்களும் அம்மலருக்கான ஆசிரியர் குழுவில் இடம் பெற்றிருந்தோம். அதிரை அஹ்மத் காக்கா தமிழாசிரியராகவும் அப்போது இயங்கிக் கொண்டிருந்த பாக்கியாத் சென்டினெரி பிரஸ் அச்சகத்தின் மேலாளராகவும் இருந்தார்கள். சதக்கத்துல்லாஹ் பாகவி ஹளரத் அவர்கள் முதவ்வல் ஓதிக் கொண்டிருந்த காலகட்டம் அது. நாங்களே மீண்டும் ஆசிரியர் குழுவினராகத் தெரிவு செய்யப்பட்டு தொடர்ந்து இன்னோர் ஆண்டு மலரும் வெளியிட்டோம். அந்த ஆண்டு மலர்கள் இரண்டிலும் மற்ற கட்டுரைகளை சரிபார்த்து வெளியிட்டது மட்டுமன்றி நானும் கட்டுரைகளும் கவிதைகளும் எழுதியிருந்தேன்.


தண்டமிழ் வித்தகர் என்று நான் அழைக்கும் கிஃபாயத்துல்hஹ் பாகவி ஹளரத் அவர்கள் அரபியிலிருந்து அழகு தமிழில் பெயர்த்து எழுதிய புதுக் கவிதை ஒன்றை இன்னமும் என்னால் மறக்க இயலவில்லை. அது தான் நான் இங்கு உங்கள் பார்வைக்காகப் பதிவிட்டிருக்கின்ற உலகப் புகழ்பெற்ற அரபுக் கவிஞர் ஜிப்ரான் கலீல் ஜிப்ரான் அவர்கள் மழைத்துளிகளைப் பற்றி அற்புதக் கற்பனையுடன் எழுதிய கவிதையாகும். நூற்றுக்கணக்கான முறை வாசித்தாலும் மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டுகின்ற நடையில் அந்தக் கவிதையை கிபாயத்துல்லாஹ் பாகவி அவர்கள் எழுதியிருந்தார்கள்.
கலீல் ஜிப்ரானே தமிழராய்ப் பிறந்து எழுதியிருந்தால் இப்படித்தான் துள்ளல் நடையில் எழுதியிருப்பார் என்று எண்ணச் செய்யும் எழில் நடைக்குச் சொந்தக்காரர் தான் மௌலானா கிஃபாயத்துல்லாஹ் பாகவீ அவர்கள்.


இலக்கிய ஜாம்பவான் கி.வா.ஜகந்நாதன் அவர்களாலேயே வியந்து பாராட்டப் பெற்றவர் . திரு கி.வா.ஜ அவர்கள் தமது ‘மஞ்சரி’ இலக்கிய இதழில் இவருக்காகச் சில பக்கங்களையே ஒதுக்கி, இவரது தமிழாக்கங்களை வெளியிட்டு வந்தார். கலீல் ஜிப்ரனின் இந்தக் கவிதையையும் கி.வா.ஜ அவர்கள் வெளியிட்டு மவ்லானா அவர்களை கவுரவித்தார்கள்.


சொல்லப் போனால், அந்தக் காலகட்டத்தில் கிபாயத்துல்லாஹ் பாகவி அவர்களின் தமிழ் நடைக்கு கி.வா.ஜ மற்றும் அதிரை அஹ்மத் போன்ற தமிழறிஞர்களே ரசிகர்களாக மாறிவிட்டிருந்தனர்.
கலீல் ஜிப்ரானின் கவிதைகள் மட்டுமல்ல, அரபு இலக்கிய ஆளுமைகளான டாக்டர் ஹுசைன் மூனிஸ், பிரபல அரபு நாவலாசிரியர் நஜீப் கைலானீ போன்றோரின் சிறுகதைகளையும் கூட மனங்கவரும் வகையில் தமிழ் மரபுக்கேற்ப சரளமாகவும் இயல்பாகவும் மொழிபெயர்ப்பதில் கிஃபாயத்துல்லாஹ் பாகவீ அவர்களுக்கு நிகர் அவரே!


“அல் அரபிய்யா” என்கிற அரபு மாத சஞ்சிகையில் வெளிவந்த, எகிப்தின் இலக்கிய வாதி டாக்டர் ஹுசைன் மூனிஸ் அவர்களின் சிறுகதை ஒன்றை மௌலானா அவர்கள் தமிழாக்கம் செய்து மஞ்சரி இதழுக்கு அனுப்பிய போது அதை மகிழ்வுடன் வெளியிட்ட கி.வா.ஜ அவர்கள் எழுதிய சிறு குறிப்பு ஒன்றே கிஃபாயத்துல்லாஹ் பாகவி அவர்களின் தமிழ் இலக்கியத் திறனை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிடப் போதுமானதாகும்.


தமிழ்ப் பெரியார் கி.வா.ஜ அவர்கள் இத் தமிழாக்கத்தைப் படித்து அதன் எழில்நடையைக் கண்டு வியந்து கிபாயத்துல்லாஹ் பாகவி அவர்களைப் பாராட்டி எழுதிய அந்தக் குறிப்பு இதுதான்:
“’மொழியால், இனத்தால், நிறத்தால், ஏன், நாட்டால் வேறுபட்டிருந்தாலும் கூட, உலகெங்கிலும் மனித உணர்வுகள் ஒன்றுதான் என்பதை இந்தச் சிறுகதை நமக்கு உணர்த்துகின்றது’ என்று எழுதியதோடு நிற்காமல் அதற்கு முத்தாய்ப்பாக, ‘மனித உணர்வுகளைத் தத்ரூபமாக இக்கதையின் ஆசிரியர் எழுத்தில் வடித்துள்ளார். மொழிபெயர்ப்பும் அதற்கு வாங்கல் அல்ல” என்று மனதாரக் குறிப்பிட்டிருந்தார்.


தமது சின்னஞ்சிறு முயற்சிகளுக்குக் கிடைக்கும் சாதாரண ஊக்கச் சொற்களுக்கெல்லாம் மனம் பூரித்துப் போய் பெருமைகொள்வோர் நிறைந்த இவ்வுலகில், இத்தோடு இன்னும் பற்பல சிறப்புகளைப் பெற்றிருந்தும் விளம்பர வெளிச்சமே இல்லாமல் அமைதியாக அறிவுப்புரட்சி நடத்திக் கொண்டிருக்கும் மௌலானா கிஃபாயத்துல்லாஹ் பாகவீ அவர்கள் ஒரு நிகரில்லா நிறைகுடம் என்று துணிந்து கூறலாம்.


No articles in this category...