நரக மாளிகை - தாய் மண்ணின் மீது பற்று கொண்ட ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்!

 

கோவிந் நிகலானி இயக்கிய த்ரோஹால் என்ற திரைப்படம் தமிழில் பிசி ஸ்ரீராம் இயக்கத்தில் 1995ம் ஆண்டு குருதிப்புனல்என்ற படமாகியது. இந்தியை விட தமிழில் அதிக வரேவற்பு கிடைத்த படம் இது. இப்படத்தில் வன்முறைக்காட்சிகள் அதிகம் அத்துடன் தீவிரவாதக்குழுவாக அடையாளப்படுத்தப்பட்ட குழு அரசு இயந்திரத்திற்குள் ஊடுறுவி செய்யும் குள்ளநரித்தனங்கள், இயக்கத்தின் பெண் உறுப்பினர்களை பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்குவது உட்பட பல விஷயங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நடைமுறையில் இப்படியொரு மோசமான இயக்கம் இருக்க முடியுமா, இவ்வளவு வன்முறை என்பது அதீத கற்பனை என்ற முடிவுடன் தான் அந்த படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்தேன். ஆனால் சுதீஷ் மின்னி எழுதிய இந்த நூலைப் படித்ததும் குருதிப்புனல் சித்தரிக்கும் அந்த மோசமான இயக்கத்தைவிட கூடுதல் மோசமான இயக்கம் நடைமுறையில் சாத்தியம் என்பதையும் அது இந்து தர்மத்தை நிலைநாட்டுகிறேன் என்ற போர்வையில் இயங்கும் ஆர்எஸ்எஸ் என்ற தீவிரவாத இயக்கம் என்பதையும் அறிந்துகொண்டேன். கமலஹாசனும் பிசி ஸ்ரீராமும் படத்தை எடுப்பதற்குமுன் இந்நூலை படித்திருந்தால் அவர்கள் அந்த தீவிரவாத இயக்கத்தின தன்மையை இப்படத்தில் காட்சிப்படுத்தியதை விட கூடுதலான காட்சிகளை தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருப்பார்கள் என்று நம்புகிறேன்.

ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்தும் சாகாவிற்கு ஐந்துவயதிலே அவரது தாயாரால் தூக்கிக் கொண்டு விடப்பட்ட குழந்தை சுதீஷ் மின்னி. அவ்வியக்கத்துடன் வளர்ந்து இருபத்தைந்து ஆண்டு காலம் அதில் செலவிட்ட அவர் அவ்வியக்கத்தின் முக்கியமான பல ரகசிய நடவடிக்கைகளில் பங்கெடுத்து அவர்களின் மக்கள் விரோத, சட்ட விரோத, மானுட விரோத, அறத்தை மறுக்கும் நடவடிக்கைகளினால் மனம் நொந்து வெளியேறி அதன் எதிர் இயக்கமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் வந்துசேர்கிறார். அவரது இருபத்தைந்து ஆண்டுகால அனுபவத்தின் ஒரு சிறிய பகுதியை நூலாகியிருக்கிறார். மலையாளத்தில் எழுதப்பட்ட இந்நூலை நேர்த்தியாக மொழி பெயர்த்திருக்கிகிறார் தோழர் சதாசிவம். அத்துடன் மூலநூலாசிரியரை சந்தித்து அவருடன் ஒரு நேர்காணல் நடத்தி அதையும் இந்நூலில் இணைத்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் ராணுவம் போல் கட்டமைக்கப்பட்ட அமைப்பு. அதன் உள்கட்டமைப்புகள் பற்றிய ஒரு சித்திரம் நமக்கு இந்நூலைப் படித்தால் கிடைக்கும். ராணுவத்தில் மேல் மட்ட அமைப்பில் உள்ளவர்களை கீழ்மட்டத்திலுள்ளவர்கள் கேள்வி கேட்க முடியாதோ அதேபோல் இங்கேயும் முடியாது. ராணுவம் போல் சீருடை, தண்டா என்ற ஆயுதம் ஆகியவை ஆர்எஸ்எஸ் ஊழியரை அடையாளப்படுத்துபவவை. ராணுவ கிளை அமைப்பு ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சியுடன் அவ்வமைப்பின் நோக்கத்தில் அதன் உறுப்பினர்களை ஒன்றியிருக்க செய்யும் நோக்கங் கொண்ட வகுப்புகளை எடுப்பது போல் ஆர்எஸ்ஸிலும் தினமும் நடக்கும். அதன் பெயர் சாகா.ராணுவத்தில் உயர் அமைப்பிலிருந்து அடிமட்ட அமைப்புக்கு ஒருவர் பார்வையிட வந்தால் அங்கே Guard of Honour என்ற மரியாதை செலுத்தும் சடங்கு நடப்பது போல் இங்கும் பிரணாம் என்ற சடங்கு உண்டு. ராணுவ உடற்பயிற்சியில் விரைப்பாக நில், தளர்வாக நில் போன்ற கட்டளைகள் இருப்பது போல் ஆர்எஸ்எஸ் சாகாவிலும் சமதபத சஞ்சலம் எனப்படும் கட்டளைகள் உண்டு. எல்லாம் சமஸ்கிருதப் பெயர்கள். இதற்கிடையில் குணா படத்தில் கமலஹாசன் கூறும் கவிதையில், நடுவில நடுவில மானே தேனே என்று போட்டுக் கொள் என்று கூறுவது போல் அவ்வப்போது தெய்வ வழிபாட்டு ஸ்லோகங்கள் போன்றவையும் சாகாக்களில் உண்டு. இவையெல்லாம் தேசபக்தி என்ற போர்வையில் ஆரம்ப கட்டத்தில் உள்ளே நுழைபவர்களுக்கு மட்டுமே. உள்ளே வந்த ஒருவர் இயக்கத்திற்கு கட்டுண்டவர் என்ற நிலையை அடைந்ததும் கொடுக்கப்படும் சிகிச்சைகள் வேறு.

தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி
அமைப்பு முறைகளில் செங்குத்தான (Verticals) வடிவத்திலிருந்து அணி (Matrix) வடிவத்திற்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் 1990களில் மாறிச் சென்றதைப் போல், ஆர்எஸ்எஸ்ஸும் மாறிச் சென்றிருக்கிறது. அணிவடிவத்தில் செங்குத்து மற்றும் கிடைநிலை (Horizontal) அதிகார மையங்களும் இரண்டும் சந்திக்கும் புள்ளிகளும் (Matrix Point) உண்டு. ஆர்எஸ்எஸ்ஸில் உள்ள செங்குத்து படிநிலைகள்: சாகா, மண்டல், தாலுக், விபாக், பிராந்தம், ஷேத்ர, தேஷ் (தமிழில்: கிளை, ஊர், தாலுகா, மாவட்டம், மாநிலம், மண்டலம், தேசம்) கிடைமட்டங்கள்: பௌதிக் (அடிமட்ட கருத்தியல்), தத்துவம் (உயர்மட்ட கருத்தியல்), சேவா (சேவைகள்), சம்பர்க் (தொடர்பாடல்), வியவஸ்தா (நிதி), சாணக்யா (உளவு), பிரசாரக் (ஐஏஎஸ் போன்ற நிர்வாகப் பொறுப்பு) இன்னும் பல. பிரசாரக் இல்லற வாழ்வில் ஈடுபட முடியாது. கிடைமட்டத்தில் குறிப்பிடப்படும் வேலைகளைச் செய்பவர் எந்த செங்குத்துப்பிரிவிலும் எந்த மட்டத்திலும் நேரடித் தொடர்புகொள்ள முடியும். ஆனால் தனிப்பட்ட கிடைமட்டங்கள் தங்களுக்குள் தொடர்பு வைத்துக் கொள்ள முடியாது. அதேபோல் ஒவ்வொரு செங்குத்துப் படிநிலைகளில் பணியாற்றுபவர்களுக்கு விசேடப் பயிற்சிகள் உண்டு. அந்தந்த மட்ட பயிற்சி இல்லாமல் அந்தந்த மட்ட பொறுப்புக்கு வரமுடியாது. அதே நேரத்தில், கிடைமட்டப் பணிகளை கவனிப்பவர்கள் தேசமட்ட பயிற்சியை கட்டாயம் பெறவேண்டும். சுதீஷ்மின்னி சாணக்கியா பிரிவில் பணியாற்றியதால் அவர் தேசிய மட்ட பயிற்சி பெற்றவர். எனவே அவர் தேசம் முழுவதும் சென்று பணியாற்றும் தகுதிபடைத்தவர். இப்படி திட்டமிடப்பட்டு ராணுவ ஒழுங்குமுறையுடன் கூடிய அமைப்புமுறையே ஆர்எஸ்எஸ் அமைப்பு. இதை இப்புத்தகம் வாசிப்பவர்கள் தெரிந்து கொள்ளலாம். அத்துடன் சங்பரிவாரம் என்று கூறப்படும் எண்ணற்ற துணை அமைப்புகள் பற்றிய சித்திரமும் இந்நூலைப் படிப்பவர்களுக்கு கிடைக்கும்.

இப்படி ராணுவம் போன்ற அமைப்பு இருப்பதால்தான் அமைப்பானது கொலை, கொள்ளை, பொது நிதி மோசடி, வன்புணர்ச்சி, பலிதானிகளின் (இயக்கத்திற்காக உயிர்த்தியாகம் செய்தவர்கள்) மனைவிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது போன்ற அறத்தை மீறிய செயல்களை செய்துவிட்டு எல்லாவற்றையும் மூடி மறைக்க முடிகிறது. இவ்வமைப்பில் சேர்ந்து அடிநிலைலிருந்து வளர்ந்து வருபவர்களுக்கு இவர்களின் அறத்தை மீறிய செயல்கள் உறுத்தலாகி பலநேரங்களில் மேல்மட்ட ஊழியர்களிடம் கேள்விகளை எழுப்பும் சூழ்நிலை உண்டு. மாவட்ட மட்டத்திலிருந்து மாநில மட்டம் வரை நடக்கும் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டங்களில் அடிதடி சட்டை கிழிப்பு நடக்கும்போது கலந்து கொள்ளும் மேலிடப்பார்வையாளர் கலவரத்தை அடக்குவதற்கு மகாத்மா காந்திக்கு ஜே என்ற கோஷத்தை எழுப்புவது போல், இவர்களும் இப்படி எழுப்பப்படும் கேள்விகளுக்கு பாரத மாதாக்கீ ஜே என்று உரத்த கோஷம் எழுப்பியோ, பகவத் கீதையின் ஒரு தத்துவப்பாடலைப் பாடியோ, இதற்கென்று சாணக்கியா பிரிவு தயாரித்து வைத்துள்ள சமஸ்கிருத ஸ்லோகத்தைக் கூறியோ கேள்விகளை அடக்கிவிடுவர். சங்கின் அறத்தை மீறிய செயல்களால் சுதீஷ் மின்னிக்கு உறுத்தல் ஏற்பட்டு அது மன உளைச்சலாகி அவற்றின் மீது கேள்விகள் எழுப்பிய போதெல்லாம் எதைக் கூறி சமாளித்தார்கள் என்பதை பல சம்பவங்களின் உதாரணத்தின் மூலம் இந்த நூலில் விளக்குகிறார்.

ஆர்எஸ்எஸ் இயக்கம் தனது எதிரிகளாக சித்தரிப்பது முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்ட்கள். இவர்கள் எல்லாரும் அவர்களைப் பொருத்தவரை தேசத் துரோகிகள். எனவே இந்த மூன்று பிரிவினரிடமும் எப்படி வேண்டுமானலும் நடந்து கொள்ளலாம். அவர்களை அடிக்கலாம் உதைக்கலாம், வன்புணர்ச்சி செய்யலாம், கொலை செய்யலாம், அவர்கள் சொத்துக்களை சேதப்படுத்தலாம், திருடலாம், சூறையாடலாம். இச்செயல்களை எந்தளவுக்கு ஆக்ரோஷமாக ஒருவன் செய்கிறானோ அந்தளவுக்கு இயக்கத்தில் அவனுக்கு மதிப்பு உண்டு. அவர்கள் நடத்தும் பயிற்சிமுகாம்களில் இவர்கள் சித்தரிக்கும் எதிரிகளை துன்புறுத்திய, மோசடி செய்து ஏமாற்றிய சம்பவங்களைச் சாகசச் செயல்களாக பங்கெடுக்கும் ஒவ்வொருவரும் கூற வேண்டும். மனிதனை அநாகரிக கட்டத்திற்கு இழுத்துச் செல்லும் இந்நடவடிக்கைகளை“தர்மயுத்தம்”என்ற சொல் கொண்டு நியாயப்படுத்த முடியும். ஆனால் சட்ட விதிமுறைகளின் படி இயங்கும் நமது நாகரீக சமூகத்தில் இவற்றிற்கெல்லாம் இடமில்லை. எனவேதான் இவற்றை அமல்படுத்துவதற்கு தேவைப்படுவது ரகசிய திட்டங்கள். ஒருவருக்கு மட்டுமே தெரிந்ததால்தான் அது ரகசியம் என்றொரு பழமொழி உண்டு. எனவே ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கூடி சட்டத்துக்கு புறம்பான அநாகரீகச் செயல்களில் ஈடுபடும் நடவடிக்கைகளை ரகசிய முடிவெடுத்தால் என்ன நடக்கும்? ஒவ்வொருவர் மீதும் மற்றவர்களுக்கு எப்போதும் சந்தேகம். விளைவு இறுக்கமான நிலை, இதுதான் சுதீஷ் மின்னி இந்நூலில் கூறும் ஸ்தாபன அனுபவங்கள்.

மார்க்சிஸ்ட் கட்சியின் செந்தொண்டர் அணிவகுப்பில் சுதீஷ் மின்னி
ஆர்எஸ்எஸ்ஸின் ஆணிவேர் சாதியத்தை கட்டிக்காப்பதில் அடங்கியிருக்கிறது என்பதையும் இந்நூல் வாசிப்பவர்கள் புரிந்துகொள்ளலாம். தலித்வகுப்பைச் சேர்ந்த சுதீஷ்மின்னியை வட இந்தியப் பணிகளுக்கு அனுப்பும் போதெல்லாம் பூணூல் அணிவித்து ஷத்ரியன் என்று வர்ணமாற்றம் செய்து அனுப்புவார்கள். அங்கே மாநில, மாவட்ட அலுவலக கட்டடங்களின்மேல்தளங்களில் எப்பொழுதுமே உயர்சாதியினர் மட்டுமே தங்குவதற்கு அனுமதிக்கப்படுவர். அங்கே பிற்படுத்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அனுமதி கிடையாது. உயர்சாதியினரின் கொடூர நிலப்பிரபுத்துவ மனோநிலையினை சுதீஷ்மின்னி கண்கூடாக பார்த்திருக்கிறார். இயக்கத்துக்குள் நடக்கும் நிதி மோசடி, இதன்விளைவாக நடத்தப்படும் கொலைகள், கொலைகள் செய்தது யார் என்று யாருக்குமே தெரியாமல் எதிரிகளாக சித்தரித்தவர்கள் மீது போட்டு கலவரத்தைநடத்துவது போன்ற சம்பவங்களையும் இந்நூல் வாசிப்பவர்கள் காணலாம். சென்னையில் இயங்கிய/இயங்கும் வட்டார ரவுடிகளான வெள்ளை ரவி, பாக்ஸர் வடிவேலு, வெல்டிங் குமார், பல்லு மதன், காதுகுத்து ரவி, பினு, கல்வெட்டு ரவி, காக்காதோப்பு பாலாஜி, டாக் ரவி, தாம்பரம் சூர்யா, அடைக்கலராஜ், கனகு, மைலாப்பூர் சிவக்குமார் போன்ற கேங்ஸ்டர்களிடம் கூட கொஞ்சம் நாணயத்தை எதிர்பார்க்க முடியும் ஆனால் சங் அமைப்பின் உள்மட்ட நிர்வாகிகளிடம் எதிர்பார்க்க முடியாது என்பதையும் இந்நூல் வாசிப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும். இதற்கு சிறந்த உதாரணம்தான் தடகளவீரர் சத்யனின் கொலை. இவர் காலைநேர ஓட்டப்பயிற்சியின் போது ஒரு சங் ஊழியரின் மனைவியுடன் வேறொரு சங் ஊழியர் சல்லாபத்திலிருப்பதை பார்த்துவிட்டார்என்பது அந்த பெண்ணுக்கு தெரிந்துவிட்டது. இதை அந்தப்பெண் அந்த சங் ஊழியரிடம் கூற அவருடைய ஏற்பாட்டின் பேரில் நடந்ததுதான் சத்யனின் கொலை என்பது வாசிப்பவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் சம்பவமாகும்.

மானுடவிரோத, சமூக விரோத, தேச விரோத நடவடிக்கைகளை திட்டமிட்டு அமைப்புரீதியாக நீண்டகாலமாக நடத்தமுடியும் என்றால் அதற்கு இரண்டு விஷயங்கள் அடிப்படையானவை. ஒன்று அவர்கள் ஏற்றுக்கொண்ட கருத்தியல் மற்றொன்று இக்கருத்தியலை அமல்படுத்தும் வலுவான அமைப்பு, அதுவும் ராணுவரீதியில் ஒழுங்கமைக்கப்பட்ட, அமைப்பின் மூலமே சாத்தியமாகும், ஒவ்வொரு மட்டத்திலும் எடுக்கும் முடிவு அடுத்த மட்டத்துக்கு தெரியாது. குறிப்பாக, குள்ளநரித்தனத்துடன் இயங்கும் சாணக்கியா என்ற உளவுப்பிரிவானது, கொலைகளை எப்படி திட்டமிடுவது, கவலரங்களை எப்படி திட்டமிடுவது, ஆட்சியைக் கவிழ்ப்பது எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது போன்றவற்றில் சிஐஏ போன்ற உளவு அமைப்புகளுக்கு இணையாக கைதேர்ந்த அமைப்பாக உருவெடுத்திருக்கிறது. நிதியைப் பொருத்தவரை இவர்களுக்கு பிரச்சனையே இல்லை. கோடிக்கோடியாக உலகத்தின் மூலை முடுக்குகளிலிருந்தெல்லாம் கொட்டுகிறது. அதை “சரிவரப்” பயன்படுத்தி அமைப்பின் நடவடிக்கைகளை இந்தியாவின் மூலைமுடுக்கிற்கெல்லாம் கொண்டு செல்ல முடிந்திருக்கிறத. அரசு நிர்வாகத்தில் எந்தளவுக்கு ஊடுறுவியிருக்கிறது, தேசியஅளவில் நடக்கும் பயிற்சிகளில்உயர்மட்ட அரசு அதிகாரிகள்எந்தளவில் கலந்துகொள்கிறார்கள் என்ற தகவல் இந்நூலில் உள்ளது. எனவேதான் சட்டரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை ஏனென்றால் சட்ட நிர்வாக விஷயங்களில் முடிவெடுக்கும் உயர் மட்ட அதிகாரிகள் இவ்வமைப்புடன் நீண்டகாலம் தொடர்பில் இருக்கிறார்கள். அப்படியென்றால் இதுபோன்ற விஷவிருட்சத்தை துடைத்தெறிவது எப்படி என்ற பயம் கலந்த கேள்வியை வாசகனுக்கு இந்நூல் உண்டாக்குகிறது.

ஆனால் ஊன்றிப்படிக்கும் வாசகன் இன்னொரு விஷயத்தையும் புரிந்து கொள்வான். ஆம், ஒரு ஸ்தாபனம் பின்பற்றும் கருத்தியலே அந்த ஸ்தாபனத்தை தீர்மானிக்கிறது என்ற உண்மையை இந்த அமைப்புக்கு பொருத்திப் பார்த்தால், மானுட விரோத கருத்தியல் அடிப்படையில் இயங்கும் இவ்வமைப்பு ரகசிய அமைப்பாகவும் ஜனநாயகத்தன்மையற்ற அமைப்பாகவும் மட்டுமே இருக்க முடியும் என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஜனநாயகத் தன்மையற்ற ஒரு அமைப்பிற்குள் உள்முரண்பாடு தோன்றி, அது முற்றி, அதன் அடிப்படை இருத்தலுக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதையும் இந்நூலைப் படிக்கும் வாசகர்கள் அறிந்து கொள்ளலாம். இயக்கத்திற்காக கொலைகள் செய்வது என்று சமூகம் ஏற்றுக்கொண்ட அறத்தை மீறும் செயலானது, தனக்காக கொலை செய்வது என்று அதில் ஈடுபடும் தனிநபர்கள் முடிவெடுக்க வெகுகாலமாகாது. இதற்கு சிறந்த உதாரணம் தடகளவீரர் சத்யனின் கொலை. இது இயக்கத்திற்காக செய்யப்பட்ட கொலையல்ல. ஆனால் இயக்கத்திற்காக கொலை முடிவெடுக்கும் அதிகாரம் உள்ள ஒருவரின் தனிப்பட்ட பிரச்சனைக்காக செய்யப்பட்ட கொலையிது. சட்டதிட்டங்களுக்கு உட்படாமல்தான் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கான நிதியை கையாள முடியும். எனவே கணக்கு வழக்கு முறையில்லாமல் இயக்கத்திற்காக நிதியைச் செலவிடுபவர் தனக்காகவும் நிதியைச் செலவிட முடியும். யாரும் கேள்வி கேட்க முடியாது. சில நேரங்களில் பிரச்சனை வெடித்தால் இந்நூலில் கூறியதுபோல் இன்னாருக்கு கொடுத்த தொகை டேஷ் என்றுதான் எழுத முடியும்.

சட்டவிரோதமான செயல்களுக்கு செலவிடப்படும் போது இன்னார் யார்டேஷ் தொகை எவ்வளவு என்று எழுத்து பூர்வமாகவெளிப்படையாக அறிவிக்க முடியாது. தணிக்கை செய்ய முற்படும் யாரும் மனம் நொந்துபோனால் கவுண்டமணியின் வசனமான “அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா” என்பதை ஒற்றை சமஸ்கிருத வார்த்தையான “தர்மயுத்தம்” என்று கூறிவிட்டு சென்றுவிட முடியும். தணிக்கைப் பணி ஒப்படைக்கப்பட்டு அதை செய்த சுதீஷ்மின்னிக்கும் இதுதான் பதிலாக கிடைத்தது. அமைப்புக்குள் அதிக அதிகாரம் படைத்தவர்களாக இருக்கும் பிரசாரக்கள் இல்லறவாழ்வில் ஈடுபட முடியாது என்ற இயற்கைக்கு விரோதமான விதியானது அவர்கள் பாலியல் குற்றஞ்செய்வதற்கு இட்டுச் செல்கிறது. குறிப்பாக இயக்கத்திற்காக உயிர்பலி கொடுத்தவர்களின் மனைவிகளை பெண்டாள வைக்கிறது. இவையெல்லாம்தான் அங்கே உள்முரண்பாடுகள் தோன்றுவதற்கு காரணமாகும். இம்முரண்பாடுகள் முற்றி வெடித்து அமைப்பை பலகீனமடையச் செய்யும். அதன் ஒரு அறிகுறியே சுதீஷ்மின்னியின் வெறியேறல், அதனைத் தொடர்ந்து வெளிவந்த இந்த நூல். சமூக நீதிக்காக, சமூக மாற்றத்திற்காக, சமத்துவத்திற்காக போராடும் ஒவ்வொருவரும் தங்கள் செயல்பாட்டை கூர்மைப்படுத்திக்கொள்ள இவற்றிக்கு எதிரானமுக்கியமான எதிரியினைப் பற்றிய ஞானம்பெற இந்நூலை வாசிக்க வேண்டும். மொழியாக்கம் செய்த தோழர் சதாசிவத்திற்கு எனது பாராட்டுதல்கள்.

நன்றி - புக் டே(https://bookday.in/sudheesh-minnis-naraga-maligai-naraka-sakethathile-ullarakal-book-review-by-vijayan-s/)
No articles in this category...