ஆறுதல் சொல்லச் சென்றோர் ஆறுதல் பெற்றுத் திரும்பிய அதிசயம்!

மஸ்ஜிதுன் நபவியில் நண்பர் ஃகாலிதை சந்தித்தபோது, 'வாருங்கள், டாக்டர் அப்துல்லாஹ்வை சந்தித்து விட்டு வருவோம்!' என்றார் ஃகாலித். 'அவரை ஏன் நாம் சந்திக்க வேண்டும், என்ன காரணம்?' என்று கேட்டேன் நான்.

அதற்கு அவர் கூறிய செய்தி இது :

'டாக்டர் அப்துல்லாஹ்வின் குடும்பம் அவரைச் சேர்த்து (மகன் மகள் பேரன் பேத்திகள் என) பனிரெண்டு பேர்.
அவரது குடும்ப உறவில் ஒரு திருமணம். டாக்டர் அப்துல்லாஹ் செல்ல முடியாத அளவில் அவர் பணி செய்த யுனிவர்ஸிட்டியில் ஒரு முக்கிய வேலை.

எனவே.. மூத்த மகன் குடும்ப உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு மண நிகழ்வுக்கு செல்கிறார். சென்று விட்டு திரும்பும்போது ஒரு விபத்து. சென்ற 11 பேரும் மரணம்.

செய்தி கேள்விப்பட்ட டாக்டர் அப்துல்லாஹ்வுக்கு கடும் வருத்தம் இருந்தாலும், அனைவருக்காகவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார். அவரே அனைவரையும் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்கிறார்.

அடக்கம் செய்து விட்டு,
தனது இல்லத்துள் நுழைகிறார்.

▪︎வாசலிலே ஒரு புத்தம் புது சைக்கிள். ஆனால்,
அதை ஆசையுடன் ஓட்டிக் கொண்டிருந்த மகன்
இப்போது உயிருடன் இல்லை!
▪︎ஹாலிலே நிறைய விளையாட்டு சாமான்கள்.
ஆனால் அவற்றை எடுத்து விளையாடும் பேரப் பிள்ளைகள் இப்போது உயிருடன் இல்லை!

▪︎படுக்கை அறையுனுள் நுழைகிறார். கலைந்து கிடக்கின்றன பெட்சீட்டுகள். அங்கே தாம் கொஞ்சி மகிழ்ந்த மனைவி உயிருடன் இப்போது இல்லை!

▪︎மூத்த மகள் அறையினுள் நுழைகிறார். அடுத்த சில தினங்களில் நடக்க இருந்த அவரது மண நிகழ்வுக்கான அனைத்துப் பொருள்களும் அங்கே விரவிக் கிடக்கின்றன. ஆனால், அவற்றை அனுபவிக்க வேண்டிய மகள் இப்போது உயிருடன் இல்லை!

அட, எல்லாம் விடுங்கள்!

நடந்த துக்க செய்தியை யாராவது விசாரிக்க வந்தால், வந்தவருக்கு ஒரு காபித்தண்ணி போட்டுக் கொடுக்கக் கூட, அங்கே ஒரு நாதியும் இல்லை!

நவூது பில்லாஹ்! (இறைவன் நம்மை பாதுகாக்க வேண்டும்!) இந்த நிலையில் அந்த இடத்தில் அவராக நாமிருந்தால் நமது நிலை எப்படி இருக்கும்?
யோசித்துப் பாருங்கள்!

50 வயது நிரம்பிய மருத்துவர் அவர். நல்ல மனிதர்.
இருந்தாலும், அவரும் ஒரு மனிதர்தானே!

அவருக்கும் கண்ணீர் சிந்தும்
கண்கள் இருக்கத்தானே செய்கின்றன.

அவருக்கும் கவலைப்படும்
இதயம் இருக்கத்தானே செய்கிறது.

உணர்வுகளும் உணர்ச்சிகளும்
அவரது ஆன்மாவுக்கும் இருக்கத்தானே செய்யும்!

ஆனால், நடந்தது என்ன தெரியுமா?

அவரது கண்கள் அதிகம் கலங்கவில்லை;
இதயம் பாரிய அளவுக்கு வருந்தவில்லை;
ஆன்மா மரத்துப் போகவில்லை!

துக்கம் விசாரிக்க வந்த அத்தனை பேரிடமும்
அடுத்தடுத்து அவரது நாவு மொழிந்த
அற்புத வார்த்தை என்ன தெரியுமா?

'இன்னா லில்லாஹி
வ இன்னா இலைஹி ராஜிஊன்!'

(நாம் இறைவனுக்குரியோர்.
அவனிடமே மீண்டும் செல்வோர்!')

மீண்டும் மீண்டும் இந்த வார்த்தையை மட்டுமே அவரது நாவு சொல்லிக் கொண்டே இருந்தது! சுப்ஹானல்லாஹ்!

ஆகக் கடைசியில்...
அவருக்கு ஆறுதல் சொல்ல வந்தோர்,
மிகப்பெரும் ஆறுதல் பெற்றுச் சென்றனர்!
------------------------------------------------------
இஸ்தம்தத்திஃ பி ஹயாத்திக்க (அறபு)
என்ஜாய் யுவர் லைஃப் (ஆங்கிலம்)
உனது வாழ்க்கையை அனுபவி (தமிழ்)
என்ற நூலில் பேரா அப்துர் ரஹ்மான் அல் அரீஃபி
----------------------------------------------------------------
▪︎கே. ரஹ்மதுல்லாஹ் மஹ்ளரீ


No articles in this category...