அழகிய துஆ

ஹஜரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ரஸுலுல்லாஹி (ஸல்) அவர்கள் கிராமப்புறத்தைச் சேர்ந்த ஒருவரைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர் தொழுகையில்

''கண்களால் பார்க்கப்பட முடியாதவனே! எண்ணங்களால் எட்டப்பட முடியாதவனே! வர்ணிப்பவர்களால் வர்ணிக்கப்பட  முடியாதவனே! காலத்தின் ஆபத்துகளுக்கு அஞ்சாதவனே! மலைகளின் கன எடைகளை, கடல்களின் கொள்ளவுகளை, மழைத்துளிகளின் எண்ணிக்கைகளை, மரங்களின் இலைகளின் எண்ணிக்கைகளை அறிந்தவனே! மேலும், இரவின் இருளில் மறைந்திருப்பவைகள் இன்னும் பகலின் ஒளியில் பிரகாசிப்பவைகளின் எண்ணிக்கைகளை அறிந்தவனே!

அவனை விட்டும் எந்த வானமும் மற்ற வானத்தை மறைத்துவிட முடியாது எந்தப் பூமியும் மற்ற பூமியை மறைத்துவிட முடியாது. எந்தக் கடலும் அதன் ஆழத்தில் இருப்பவற்றை மறைத்துவிட முடியாது. எந்த மலையும் அதன் உறுதியான பாறையினுள் இருப்பவற்றை மறைத்துவிட முடியாது.

என் வாழ் நாளின் கடைசிப் பகுதியை மிகச் சிறந்ததாக ஆக்கிவிடு! எனது கடைசி அமலை மிகச் சிறந்த அமலாக ஆக்கிவிடு! உன்னைச் சந்திக்கும் (மவ்த்தாகும்) நாளை சிறப்பான நாளாக ஆக்கிவிடு!'' என்று துஆச் செய்து கொண்டிருந்தார்.

அவர் தொழுது முடித்ததும் அவரைத் தம்மிடம் அழைத்து வர நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருவரை நியமித்தார்கள். அவ்வாறே அவர் தொழுத பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சபைக்கு வந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு தங்கச் சுரங்கத்திலிருந்து கொஞ்சம் தங்கம் அன்பளிப்பாக வந்திருந்தது, அதை அவருக்கு அன்பளிப்பாக வழங்கினார்கள்.

அவரிடம் நீர் எந்தக் கோத்திரத்தைச் சார்ந்தவர்?'' என்று வினவினார்கள். ''யாரஸுலுல்லாஹ் நான் பனூஆமிர் கோத்திரத்தைச் சார்ந்தவன்'' என்றார். ''நான் உமக்குத் தங்கத்தை பரிசளித்தது ஏன் என்று அறீவீரா?'' என்று  ரஸுலுல்லாஹி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ''யாரஸுலுல்லாஹ் தங்களுக்கும் எங்களுக்குமிடையே உறவு முறை இருப்பதானால் பரிசளித்தீர்கள்'' என்றார் அவர். ''உறவு முறைக்கான கடமையுண்டு. ஆயினும், உமக்கு நான் தங்கம் கொடுத்தது, நீர் மிகவும் அழகிய முறையில் அல்லாஹுத்தஆலாவை புகழ்ந்தீர் என்பதற்கே!'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கம் சொன்னார்கள்.

(நூல்: தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
விளக்கம்:- நபில் தொழுகையில், ஒவ்வொரு நிலையிலும், இவ்வாறான துஆக்கள் ஓதலாம்.


No articles in this category...