நன்மை தீமையும் அதன் அளவுகோலும்

நன்மை தீமையும் அதன் அளவுகோலும்

உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் நான் கேட்டேன் நன்மை பற்றியும், பாவம் பற்றியும் எனக்கு சொல்லுங்கள் என்று, அதற்கு நபிபெருமான் அவர்கள் கூறினார்கள் : நன்மை என்றால் நற்குணம் ஆகும். பாவம் என்றால் ஒன்றை செய்ய உனது மனம் குறுகுறுப்பதும், மக்கள் அதை அறிவதை நீ வெறுப்பதும் ஆகும் என்று நபித்தோழர் நவாஸ் பின் சம்ஆன் அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் பல உண்மைகளை நமக்கு சொல்லித்தருகிறது.

பொதுவாக அல்லாஹ்தாலா நபி பெருமான் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களுக்கு ஸஹாபாக்கள் என்ற பொக்கிஷத்தை கொடுத்திருந்தான்.ஸஹாபாக்கள் மூலமாக அல்லாஹ் இந்த தீனுடைய பெரும் செய்திகளை உலக வரலாற்றில் பதிவுசெய்கிறான். அதுபோன்று எந்த செய்திகளேல்லாம் இந்த சமுதாயத்திற்கு தேவையோ அவற்றை அவர்கள் வாயிலாக கேட்கவைத்து நபியவர்கள் மூலம் அதற்குரிய விடையத்தந்தான்.  இறைவன் அவர்களை பொருந்திக்கொண்டான், அவர்கள் இறைவனை பொருந்திக்கொண்டார்க்ள்.

இந்த ஹதீஸில் நபியவர்கள் நன்மை குறித்தும், தீமைக்குறித்தும் ஒரு பாமரன் முதல், மெத்தப்படித்தவர்கள் வரை அறியும் அளவிற்கு, எளிய வார்த்தையாகவும், சிந்தைக்கு பொருந்துகிற விதத்தில் குறிப்பிடுகிறார்கள்.

பொதுவாக நல்லது என்பது கெட்டது என்பது ஆளுக்கு ஆள், இடத்திற்கு இடம், நாட்டிற்கு நாடு வித்தியாசப்படக்கூடியது. ஒரு நாட்டில் குற்றமாக கருதப்படுவது இன்னொரு நாட்டில் குற்றமாக கருதப்படாமல் இருக்கலாம். இன்னும் ஒரு படி மேலே போய் ஒரு காலத்தில் அரசால் குற்றமாக (மது தடைச்சட்டம்) தண்டனைக்கு தகுதி படைத்தது, இன்று அரசு அனுமதியோடும், மிக்க மரியாதியோடு வீதி தோறும் வலம் வரலாம்.

இந்த நல்லதையும் கெட்டதையும் யார் தான் முடிவு செய்யவேண்டும் என்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் காட்டிய வழியே மிக சிறநத்தாக இருக்கமுடியும். ஏனெனில், மனிதனிடம் ஒரு செய்தி அவன் சுய இஷ்டத்திற்கு விடப்படுகிறது என்று சொன்னால் அவன் தனக்கு எது சாதகமானதாகவும், எளிதாகவும் இருக்குமோ அந்த விஷயத்தையே தனதாக்கிகொள்ள சிந்திப்பான். அந்த அடிப்படையில் சில நேரங்களில் தவறை செய்யக்கூடியவர்கள் கூட தங்கள் ஏதோ அறத்தை செயவதாக எண்ணி செய்து கொண்டிருக்கிறார்கள்.

இறைவன் இதை திருக்குர்ஆனில் அழகாக சொல்வான:

(தம்) செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?”என்று (நபியே!) நீர் கேட்பீராக.யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான். ( 18:104)

இந்த ஹதீஸில் நபியவர்கள் நன்மை என்பதற்கு நற்குணம் என்று ஒரு வார்த்தையில் பதில் சொல்லிவிட்டார்கள். நற்குணம் என்று சொன்னால் ஒருவர் நல்ல முறையில் மற்றவர்களோடு நடந்துகொண்டால் மட்டும் போதுமா? என்ற கேள்வி வருகிறது. நற்குணம் என்று எதற்கு சொல்வார்கள்? பொதுவாக நற்குணம் என்பது நல்ல வழிகளை தனதாக்குவது, அநீதிளுக்கு எதிராக இருப்பது.

நான் நல்லவன் என்ற பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக ஒருவர் அநீதிக்கு ஆதரவாக செயல்பட்டால் அவன் நற்குணமுள்ளவன் பட்டியலில் இடம் பெறமுடியாது. அது போன்று கோபம் கொள்ளவேண்டிய நேரத்தில் கோபம் கொள்ளாமல் இருப்பது தவறு. அதைத்தான் தமிழில் மகாகவி பாரதி கூறுகிறார் ”ரெளத்திரம் பழகு” (தேவையான நேரத்தில் கோபம் கொள்ள பழகிக்கொள்). அந்த நற்குணம் தான் நன்மை அனைத்திற்கும் அடித்தளமாக அமைகிறது.

ஆகையால் தான் இறைவன் நபியவர்களின் பண்புகளை விவரிக்கிறபோது நீங்கள் கடுகடுப்பானவராகவும், கடின உள்ளம் உடையவராகவும் இருந்திருந்தால் உம்மை சுற்றி யாரும் இருந்திருக்க மாட்டார்கள் என்று இறைவன் குறிப்பிடுகிறான். இன்றைய காலையில் இஸ்லாமிய பெயர் தாங்கி இயக்கங்கள் ஒருவர் மற்றவர்களின் அந்தரங்கங்களை வெளிப்படுத்த மீடியாவை முழுமையாக பயன்படுத்துவதுடன், மற்றவர்களை சொந்த எதிரி போல் பாவிப்பதை பார்க்கமுடிகிறது. அல்லாஹ் நம் அனைவரையும் மன்னித்து தன் அருளில் போர்த்திக்கொள்வானாக. ஆமீன்

ஆக, நற்குணம் முழுமை பெறும் போது அங்கு நன்மைகள் விழைய காரணம் ஆகிறது. நன்மை என்றால் எவையெல்லாம் அடங்கும் என்பதை இந்த இறைவசனம் மிக அழகாக தெளிவுபடுத்திக்காட்டுகிறது.

”புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு)நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக,பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்); இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்)கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள் (பயபக்தியுடையவர்கள்). (அல் பகரா 177)

இந்த ஆயத்தில் ஈமான் கொள்வதில் ஆரம்பித்து, ஹுகுக்குல் இபாத் என்று சொல்கிற அடியார்களுக்கு செய்யவேண்டிய கடமைகளையும்,ஹுகுக்குல்லாஹ் என்று சொல்லப்படுகிற இறைவனுக்கு செய்யவேண்டிய கடமைகள் அத்துணையும் மொத்தமாக சேர்த்து சொல்லப்பட்டுள்ளது.இதற்கு பெயர் தான் பி(B)ர் என்று சொல்லப்படுகிற நன்மையான காரியங்கள் ஆகும். அடுத்து நபி பெருமான் அவர்கள் தீமையைப்பற்றி குறிப்பிட்டார்கள்.

எத்துணை ஒரு அழகான உவமையுடன் ஒரு சாமானியன் புரிகிற தோரணையில் விளக்கம் அளித்தார்கள். பாவம் என்பது நீ அதை செய்யும் போது உன் மனதில் ஒரு வித பயம் ,அச்சம், குறுகுறுப்பு தோன்று,  இது எல்லா பாவங்களுக்கும் பொருந்தும், மனிதன் அதை செய்வதற்கு அவனது நஃஸ் நாட்டம் கொண்டு அவன் செய்ய முற்படுகிறபோது அவன் மனதில் ஒரு வித தடதடப்பு ஏற்படுகிறது.

ஏனெனில், இறைவன் திருமறைக்குர்ஆனில் மனித நிலையை விவரிக்கும் போது அவன் தான் அந்த நப்ஸில் அதனுடைய தீமையைப்போட்டான் அதன் பின் அதிலிருந்து தற்காத்துக்கொள்ளக்கூடிய வழிமுறைகளையும் போட்டான். ஆக, இது தீமை என்பது நஃப்ஸுக்கு நன்கு பரிச்சியமானது, ஆகையால் தான் மனிதன் தீமையை செய்ய முனைகிறபோது அவன் உள்ளம் அதை ஏற்காத நிலை ஏற்படுகிறது.

இரண்டாவதாக சொன்னார்கள், அவன் தன் செய்யும் அக்காரியத்தை மக்கள் பார்ப்பதை பொருந்திக்கொள்ள மாட்டான், வெறுப்பான். தன் செய்த காரியத்தை தன் தந்தைக்கு தெரிந்து விட்டால் என்ன செய்வது என்று பயப்படுவான். அல்லது தன் தாய்க்கோ, தான் மனைவிக்கோ, தான் பெற்றபிள்ளைக்கோ தெரியக்கூடாது என்று நினைப்பான். இன்னும் ஒரு படி மேலே போய் சில செய்திகளை இவர்களுக்கு முன்னால் செய்தால் கூட தன் குருவிற்கு முன் அவற்றை செய்ய துணிய மாட்டான். இது ஒன்றே போதும் அது அவன் மனதுக்கு உகந்ததாக இல்லை என்று கூற. மனம் அதை செய்ய ஆசையைத்தூண்டுகிறது. ஆனால் அதை செய்யும் போது மனம் பயப்படுகிறது.

நாம் சில காரியங்களை பயத்தின் காரணமாக செய்யாமல் இருக்கிறோம். நாம் அதை செய்தால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணத்தில், ஆனால், அதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் நம் உண்மை நிலை வெளிச்சத்திற்கு வந்து விடும்.

நபியவர்கள் இந்த நிலையிலிருந்து சமூகத்தை எச்சரித்தார்கள், இன்னும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்பதற்க்காக நல்லவர்களாக வாழ்பவர்களை இறைவன் உற்றுநோக்கிக்கொண்டிருக்கிறான். அவர்கள் உண்மையான இறைவிசுவாசியாக ஆக முடியாது, ஆனால் இறைவனுக்கென்றே மறைவிலும் கூட யாரும் பார்கக முடியாது என்ற சூழலிலும் அச்சத்தோடு வாழ்பவர்களே உண்மையான இறைவிசுவாசியாக ஆகமுடியும்.

பேரா. இஸ்மாயில் ஹஸனீ

 


No articles in this category...