Tamil Islamic Media

அரிய பண்புகளைக் கொண்ட அல்கமா (ரலி)வின் குழு

அல்கமா இப்னு ஹாரிஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: நான் ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தபொழுது, என்னுடைய சமூகத்தாரின் ஏழு நபர்களில் ஏழாவதாக நான் இருந்தேன். நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஸலாம் கூறினோம்.  அன்னாரும் எங்களுக்கு பதில் கூறினார்கள். நாங்கள் நபியவர்களிடம் பேசினோம். எங்களுடைய பேச்சு அவர்களுக்கு வியப்பளித்தது. “நீங்கள் யார்” என்று கேட்டார்கள். “நாங்கள் முஃமீன்கள்” என்று கூறினோம். அப்பொழுது ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் “ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு அடிப்படை உண்டு; உங்களுடைய ஈமானின் அடிப்படை என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், “அவை பதினைந்து தன்மைகள். தாங்கள் என்களுக்குக் கட்டளையிட்டவை ஐந்து. தங்களின் தூதுவர் மூலம் தாங்கள் எங்களுக்கு கட்டளையிட்டவை ஐந்து. அறியாமைக் காலத்திலேயே நாங்கள் கொண்டிருந்த குணங்கள் ஐந்து. இவற்றை இதுவரை கடைப்பிடித்து வருகிறோம். யா ரஸூலுல்லாஹ் இவற்றிலிருந்து தங்கள் எதையேனும் தடுத்தால் தவிர” என்று கூறினோம்.

அப்பொழுது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “நான் உங்களுக்குக் கட்டளையிட்ட ஐந்து விஷயங்கள் எவை?” என வினவினார்கள். “நாங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதுவர்களையும், நன்மையும் தீமையும் அவனால் ஏற்படுவது என்பதையும் நம்பிக்கை கொள்ள வேண்டுமெனக் கட்டளையிட்டீர்கள்” என்று கூறினோம்.

என்னுடைய தூதுவர் உங்களுக்கு கட்டளையிட்ட ஐந்து விஷயங்கள் எவை?” என வினவினார்கள். “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு யாதோர் இணையுமில்லை என்றும் நிச்சயமாக தாங்கள் அவனுடைய தூதருமாக இருக்கிறீர்கள் என்றும் நாங்கள் சாட்சி கூற வேண்டுமென்றும், கடமையாக்கப்பட்ட தொழுகையை நிரந்தரமாக தொழுது வரவேண்டுமென்றும், கடமையாக்கப்பட்ட ஜக்காத்தை நாங்கள் நிறைவேற்ற வேண்டுமென்றும், ரமலான் மாதத்தில் நோன்பு நோற்க வேண்டுமென்றும், எங்களுக்கு பொருள் வசதியும் சக்தியும் இருந்தால் பைத்துல்லாஹ்வை ஹஜ்ஜுச் செய்ய வேண்டுமென்றும் தங்களின் தூதுவர் எங்களுக்கு கட்டளையிட்டார்” என்று கூறினோம்.

அறியாமைக் காலத்தில் நீங்கள் கொண்டிருந்த குணங்கள் யாவை? என்று கேட்டார்கள். “செழிப்பான நேரத்தில் நன்றி செலுத்துவது, துன்பம் வந்தபோது பொறுமை கொள்வது, போர்க்களத்தில் எதிரிகளைச் சந்திக்கும் நேரத்திலும் உண்மை கூறுவது, விதியின் கசப்பை திருப்தி கொள்வது, எதிரிகளுக்குத் துன்பம் ஏற்படும் போது மகிழ்ச்சியடையாமலிருப்பது ஆகியவையாகும். “ என்று கூறினோம்

இதனைக் கேட்ட ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “இவர்கள் அறிஞர்கள், ஒழுக்கசீலர்கள், நற்குணங்களின் காரணமாக நபிமார்களுக்கு நெருக்கமானவர்களாக ஆகிவிட்டார்கள், இந்த குணங்களின் சிறப்புத்தான் என்னே! என்று கூறிய பின், எங்களை நோக்கிப் புன்னகை புரிந்தார்கள்.

பிறகு, “நன்மையின் குணங்கள் நிரப்பமாவதற்காக நான் உங்களுக்கு (இன்னும்) ஐந்து குணங்களை உபதேசிக்கிறேன்” என்று கூறி

  1. “நீங்கள் சாப்பிடதவற்றைச் சேமித்து வைக்காதீர்கள்.
  2. நீங்கள் குடியிருக்காதவற்றைக் கட்டாதீர்கள்.
  3. நாளைக்கு எதை விட்டும் நீங்கள் நீங்கிச் சென்றுவிடுவீர்களோ அதில் ஆசை வைக்காதீர்கள்.
  4. அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். அவன் பக்கமே நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்; அவன் முன்பாகவே நீங்கள் நிறுத்தப்படுவீர்கள்
  5. நீங்கள் எங்கு திரும்பிச் செல்வீர்களோ, எதில் நிரந்தரமாக இருப்பீர்களோ அதில் ஆசை கொள்ளுங்கள்”

என்று உபதேசித்தார்கள்.

நூல்: இஸாபா 2/98, ஹில்யா 9/279, கன்ஜ் 1/69 (ஹயாத்துஸ் ஸஹாபா)



 






No articles in this category...