கஅபா - அத்தாவுல்லா

அன்பு கொண்ட தெய்வமென்றும்
ஆசிகூறி வாழ்த்தொலிக்கும்
நமை மிகு நல்ல நகர் மக்கா- அதில்
என்றுமென்றும் நின்றிலங்கும்
ஏற்றம் கொண்டு வாழுகின்ற
தேவனவன் ஆதிவீடு கஅபா!

கொள்கைதன்னில் மாற்றமின்றி
கோடிமக்கள் நெஞ்சினின்று
கூட வரும் மாநகரம் மக்கா-அங்குப்
பிள்ளைமனம் போல்மனத்தில்
உள்ளொளியை நாட்டுகின்ற
பேரிறைவன் சோதிவீடு கஅபா!

ஐந்கடனில் ஹஜ்ஜு என்னும்
அற்புதத்தை நாட்ட வந்த
அருள் நகரே அண்ணலரின் மக்கா -மனத்
தீங்ககற்றித் தெளிவு நல்கித்
தேடுகின்ற தெய்வ சுகம்
தேற்றி விடும் தூய வீடு கஅபா!

ஒன்று குலம் ஒன்று இறை
ஓங்குகின்ற உண்மை உரை
நின்றுரைக்கும் நேச நகர் மக்கா-அங்கு
அன்றலர்ந்த போல் மலர்ந்த
பிஞ்சு மனப் பிள்ளைகட்கு
நிம்மதியைச் சூட்டி விடும் கஅபா!

உலக வாழ்வில் தேவ சொந்தம்
உண்மை வழி ஓதுவித்த
அண்ணலரின் பிறப்பு நகர் மக்கா - தேவக்
கலை மிளிர்ந்து காட்சி நல்கிக்
காணுகின்ற கண்களுக்குக்
கடவுளருள் காட்டி விடும் கஅபா!

அண்ணல் வாழும் சொந்த பூமி
அழகு மதினா நகருக்
கழகு செய்யும் அன்னை பூமி மக்கா-மனத்
திண்மை கொண்ட நேரியர்க்குத்
தெளிந்த வழி காட்டுகின்ற
திரு நிலையே தெய்வ வீடு கஅபா!

பழகு மறை மொழி உணர்ந்து
பரிசுத்தர் வழி உணர்ந்து
புறப்படுவோம் ஓங்கு புகழ் மக்கா-அண்ணல்
வழி பட்டத் திரு வீடும்
வாழ்கின்ற உயர் வீடும்
தரிசிக்கப் புறப்படுவோம் மக்கா!

 

இந்தக் கவிதை 15-07-1987 -  செப்பம் இதழில் வெளி வந்த கவிதை. நாகர்கோவில்,  கோட்டாறைச் சார்ந்த   பேராசிரியர்   முனைவர் மர்ஹூம் பசுல் முஹைதீன் அவர்களின் பத்திரிகை அது. மர்ஹூம் அகரம் அப்துல் ரசாக் காதிரி அவர்கள் கவுரவ ஆசிரியராக இருந்தார்கள். இருவருமே  நமது  சுன்னத் ஜமாஅத் கொள்கைகளில்     தீவிரப் பற்றுதல் உடையவர்கள். என்மேல் மிகுந்த அன்பு கொண்ட அவர்கள் அடிக்கடி என்னிடம் கவிதைகள் வாங்கிப் பிரசுரிப்பார்கள். இறைவன் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக!  பழைய சில கவிதைகளைப் புரட்டுகையில் கண்களில் பட்டது.ஹஜ்ஜுப்  பெருநாளை ஒட்டி  அன்பர்களின் பார்வைக்காக! - - Parangi Pettai Khaleel Baaqavee,  Kuwait


No articles in this category...