திரும‌றை வ‌ந்த‌ தேன்மாத‌ம் வ‌ருகிற‌து

ர‌ம‌லான் வ‌ருகிற‌து !
ந‌ல‌ம‌ள்ளி வ‌ருகிற‌து !
க‌ம‌ழும் புக‌ழ் நோன்பைக்
கைகோர்த்து வ‌ருகிறது !

ஈமானில் நாமெல்லாம்
எத்தனை மார்க்கென்று
தீர்மான‌ம் செய்ய
திருநோன்பு வ‌ருகிறது

அருளாளன் அல்லாஹ்வின்
அன்பள்ளி வ‌ருகிறது !
திரும‌றை வ‌ந்த‌
தேன்மாத‌ம் வ‌ருகிறது !

த‌க்வாவை கொஞ்சம்
த‌ட்டிடவே வ‌ருகிறது !
ஹக்கன‌வ‌ன் க‌னிவையும்
அறிவிக்க வ‌ருகிறது !

அருமை நாயகம் (ஸல்)
அறிவித்த‌ நல் அம‌லை
அருமையாய் நாம் ஏற்க
அழைப்பாக வ‌ருகிற‌து !

பத்திய மாத‌மென்று
பறைசாற்றி வ‌ருகிற‌து !
உத்த‌ம ஸஹாபாக்கள்
உவ‌ந்த‌ மாத‌ம் வ‌ருகிற‌து !

ப‌சியின் ருசியறிய
பாங்கோடு வ‌ருகிற‌து ! க‌ல்பில்
க‌சியும் ஈர‌த்தைக்
காட்டிட‌வும் வ‌ருகிற‌து !

கஸ்தூரி வாச‌ம்
க‌ம‌க‌ம‌க்க‌ வ‌ருகிற‌து !
கைக‌ளை ஈகையால்
அல‌ங்கரிக்க‌ வ‌ருகிற‌து !

ஏழை வீதிக‌ளும்
புன்ன‌கைக்க‌ வ‌ருகிற‌து
எல்லோர் ம‌ன‌ங்க‌ளுக்கும்
சுக‌ம் சேர்க்க‌ வ‌ருகிற‌து !

க‌லிமாவில் நாவெல்லாம்
க‌லந்திட‌ வ‌ருகிற‌து !
தொழுகை த‌வ‌றாதேயென‌
தூது சொல்லி வ‌ருகிற‌து !

லைல‌த்துல் க‌த்ரென்னும்
ர‌ம்மிய‌ இர‌வுத‌னை
தொழுகையால் அல‌ங்க‌ரிக்க‌
சோப‌ன‌மாய் வ‌ருகிற‌து !

அன்று ப‌த்ருப் போரில்
அண்ண‌லார்க்கு வெற்றியினை
த‌ந்து ப‌ரிச‌ளித்த‌
த‌னிமாத‌ம் வ‌ருகிற‌து !

நோன்பின் மாண்பு சொல்லும்
நூர்மாத‌ம் வ‌ருகிற‌து !
மாண்பில் நாம் ம‌கிழ‌ இபாத‌த்
ம‌ண‌ம‌ள்ளி வ‌ருகிற‌து !

ர‌மலான் வ‌ருகிற‌து
ந‌ல‌ம் கொண்டு வ‌ருகிற‌து !
க‌ம‌ழும் புக‌ழ் நோன்பைக்
கைகோர்த்து வ‌ருகிற‌து !

-

பொற்கிழிக் கவிஞர்

மு. ஹிதாயத்துல்லா

இளையான்குடி

நர்கிஸ்
செப்டம்பர் 2008 மாத ரமலான் சிறப்பிதழில்
வெளியான கவிதை


No articles in this category...