Tamil Islamic Media

நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை?


அரசத்துறவி இமாம் இப்றாஹீம் இப்னு அத்ஹம் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களிடம் பஸரா நாட்டு மக்கள் ‘எங்களுக்கு உபதேசம்
செய்யுங்கள் எனக் கேட்டுக்கொண்டனர். 

 

அதற்கு இமாம் அவர்கள், "உபதேசமா? என்ன உபதேசம் செய்ய வேண்டும்" என்று கேட்டார்கள். "இறைவன் தனது திரு வேதத்தில் ‘என்னை அழையுங்கள். நான் உங்களுக்கு பதில் அளிக்கிறேன்’ (40:60) எனக் கூறியுள்ளான். நாங்கள் அவனிடம் எவ்வளவோ கேட்டுப்பார்த்தும் எங்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லையே! எங்கள் துஆக்கள்
கபூலாவதில்லையே! ஏன்?" என்று மக்கள் கேட்டார்கள்.


"நீங்கள் உயிரோட்டமுள்ள இதயங்களிலிருந்து இறைவனை அழைப்பதில்லை. உங்களிடம் காணப்பட வேண்டிய பத்து விஷயங்கள்
இல்லாது போய்விட்டதால் உங்கள் இதயங்களில் ஜீவனே இல்லை!" என்று பதிலளித்தார்கள் அந்த அறிஞர் பெருமகனார்.


"பத்து விஷயங்களா? அவை என்ன?" என்று வியப்போடு வினவினார்கள் அந்த மக்கள். மேதை இப்றாஹீம் அத்ஹம் பதிலளித்தார்கள்:-


1. இறைவனை நீங்கள் உணருகிறீர்கள். ஆனால், அவன் ஏவிய வழிகளிலே நடந்து செயல்படத் தவறிவிட்டீர்கள்.

2. திருக்குர்ஆனை ஓதுகிறீர்கள். ஆனால், அதைச் சரியாகப் புரிந்து கொண்டு நீங்கள் செயலாற்றுவதில்லை.


3. நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்
சமுதாயத்தவர் நாங்கள்! அவர்களை உயிரினும் மேலாக நேசிக்கிறோம் எனப் பெருமைப்படுகிறீர்கள். ஆனால், அவர்களது புனித வாழ்வு முறையை நீங்கள் பின்பற்றுவது கிடையாது.


4. சுவர்க்கத்தைப் பற்றி நிறைய பேசுகின்றீகள் அதற்குச் செல்ல வேண்டுமென ஆசைப்படுகிறீர்கள். ஆனால், அதற்குத் தகுதியானவர்களாக ஆக எந்த முயற்சியும் நீங்கள் செய்வதில்லையே! 


5. நரகத்திற்குப் பயப்படுவதாகச் சொல்கிறீர்கள். ஆனால், நீங்கள்
செய்யும் செயல்களோ நரகத்தின் பால் உங்களை இழுத்துச் செலவதாகவே உள்ளன. ஆனால், நீங்கள் அவற்றை விட்டும் தவிர்ந்து
கொள்வதாக இல்லையே!


6. மரணம் நிச்சயமானது என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள். ஆனால்,
இந்த உலகமே சதமென்று எண்ணிக் கொண்டு செயலாற்றுகின்றீர்கள்.


7. உங்கள் சகோதரர்களிடம் உள்ள சிறுகுறை கூட உங்களுக்குப் பெரிதாகத் தெரிகிறது. ஆனால, உங்களிடம் மலிந்துள்ள பல குறைகளை நீங்கள் எண்ணிப் பார்ப்பதே கிடையாது.


8. ஷைத்தானை வெறுப்பதாகவும் அவன் உங்களின் மிகப்பெரிய எதிரி என்றும் வெளியிலே பேசிக் கொள்கிறீர்கள். ஆனால், அந்தரங்கத்திலோ அவனை வரவேற்று விருந்தளித்து கொஞ்சிக் குலாவி அவனுடன் உல்லாசமாகப் பொழுதைக் கழிக்கிறீர்கள்.


9. இறைவன் உங்களிக்களித்துள்ள அருட் பெரும் கொடைகளை தெரிந்து
வைத்திருக்கிறீர்கள். ஆனால், அவனுக்கு நன்றியுள்ள அடியானாக நீங்கள் நடந்து கொள்வதில்லையே?


10. இறந்தோரை புதைகுழி வரை சென்று புதைத்துவிடுகிறீர்கள். ஆனால், அதிலிருந்து நீங்கள் எந்தப் படிப்பினையும் பெறுவதில்லையே? இந்த நிலையிலுள்ள உங்கள் அழைப்பிற்கு (துஆவுக்கு) இறைவன்
எப்படி பதிலளிப்பான்?

இவ்வாறு கூறிவிட்டு தொடர்ந்து நடக்கலானார் அந்த மாமேதை. மக்களோ தங்களின் நிலையை எண்ணி மனம் உருகினார்கள். தங்களின் குறைகளை அசை போடலானார்கள்.


நாமோ நம் குறைகளைப்பற்றி எந்தக்கவலையும் படாமல் நம்மைத் திருத்திக் கொள்ளாமல் நடமாடிக் கொண்டிருக்கிறோமே!


அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக! ! ! 






No articles in this category...