அதுவென்ன சுன்னத் வல் ஜமாஅத்?

 அ. முஹம்மது கான் பாகவி      

நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுட்டிக்காட்டியபடி, "நானும் என் தோழர்களும் எவ்வழியில் உள்ளோமோ அவ்வழி செல்பவர்களே வெற்றிக்கூட்டம்."

"நான் செல்லும் வழி" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டதுதான், "சுன்னத்" ஆகும்.

"என் தோழர்கள் சென்ற வழி என்பதுதான் "ஜமாஅத்" ஆகும்.

இந்த இரண்டையும் இணைத்தே, சுன்னத்தையும், ஜமாஅத்தையும் பின்பற்றுவோர்" என்ற பொருளில் "அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்" என்று இக்கூட்டத்தார் அறியப்படுகின்றனர்.


இன்றைய உலக முஸ்லிம்களில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் சுன்னத் வல் ஜமாஅத்தார்களே என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு தரப்பட்ட வேறுபட்ட வித்தியாசமான கொள்கையாளர்களுக்கு மத்தியில், இறைமறையும், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், நபித்தோழர்களும், இமாம்களும் எந்த கொள்கைக் கோட்பாட்டைக் காட்டியுள்ளார்களோ அவற்றை ஏற்று நம்பி, செயல்படுகின்ற கூட்டமே சுன்னத் வல் ஜமாஅத் முஸ்லிம்கள் ஆவர்.

இதைவிடுத்து இன்றைய முஸ்லிம்களிடம் ஊடுருவி விட்ட, அநாச்சாரங்கள், மார்க்கத்தின் பெயரால் செய்யப்படும் புதுப்புது அனுஷ்டானங்கள், மூடக்கொள்கைகள் ஆகியவற்றை நம்புகின்றவர்கள்தான் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தினர் என்பது முற்றிலும் தவறான கண்ணோட்டம். இது களையப்பட வேண்டியதாகும். இவற்றில் சில, ஷியாக்களிடமிருந்தும் இன்னும் சில பிற மதங்களில் இருந்தும் முஸ்லிம்களிடம் பரவியவை ஆகும்.

முஹர்ரம் மாதத்தில் பஞ்சா எடுப்பது, தீ மிதிப்பது, மார்பில் அடித்துக் கொள்வது, அதை புனிதமாகக் கருதுவது, பெரியார்கள் பெயரில் சந்தனக்கூடு தூக்குவது, உர்ஸ் என்ற பெயரில் நடக்கும் ஆட்டம் பாட்டங்கள், ஸஃபர் மாதத்தில் "ஸஃபர் கழிவு" என்று சொல்லி நடக்கும் பித்அத்கள், திக்ரி அல்லது ஸலவாத் என்ற பெயரில் நடக்கும் குத்தாட்டம், "பேய்விரட்டல்" என்று காரணம் காட்டி போடும் பேயாட்டங்கள், பந்தக்கால் விசேஷம், திருஷ்டி கழிப்பதற்காக பூசணிக்காய் உடைத்தல், பெரியார்கள் அடக்கத்தலங்களில் நடக்கும் மயிலிறகு பூச்சு, தவாஃ, சஜ்தா... இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

இதற்கெல்லாம் மார்க்கத்தில் இடமுண்டா? சுன்னத் வல் ஜமாஅத்தின் மூலாதாரங்களில் எதிலாவது சான்று உண்டா? இதுவெல்லாம் தடை செய்யப்பட்டுள்ள அனாச்சாரங்கள் என்று பிரச்சாரம் செய்து, தடுக்க முயல்வோரை "வஹ்ஹாபிகள்" என்ற பயங்கரவாதிகள் என்று வசை பாடலாமா?

இதுபோன்ற அநாகரிகங்கள் தீனின் பெயரால் நடைபெறும்போது அவை பாவச்செயல் அல்லவா? பாவத்தை பாவம் என்று சொல்லாமல் அனுமதிப்பதோ, மவுனம் காப்பதோ பெருங்குற்றம் அல்லவா? எல்லாவற்றையும் விட மிகப்பெரிய கொடுமை என்னவென்றால், இவற்றை அனுமதிப்பதுதான் அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத் கொள்கை என்று பாமரர் நம்புகின்ற நிலையை உருவாக்கிவிட்டு எதிர்ப்பவர்களைத் தீண்டத் தகாதவர்கள் போல் நடத்துவதுதான்!

இன்னொரு பக்கம் பித்அத்களைச் செய்வோர் எல்லாம் "இணைவைப்பாளர்கள்" ஆவர் என்று "ஃபத்வா" கொடுத்து, இஸ்லாத்திலிருந்தே வெளியேற்றும் கொடுமையும் நடக்கிறது. முஸ்லிம்கள் மிக எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். எதார்த்தம் என்னவென்பதை அறிந்து தெளிய வேண்டும்.

sorce: 2018 ஜூன் "ரஹ்மத்" மாத இதழில் வெளியான "அதுவென்ன சுன்னத் வல் ஜமாஅத்?" கட்டுரையிலிருந்து!


No articles in this category...