Tamil Islamic Media

நான் குதுப்மினார் பேசுகிறேன்-1

மௌலானா அபுல் ஹஸன் அலி நத்வி.

சுமார் எழுநூறு ஆண்டுகள் இங்கு தான் நான் அயராமல் நிற்கிறேன். இந்த இடத்தை விட்டு ஒரு அங்குலம் கூட இதுவரை நான் நகர்ந்தது இல்லை. என் இரு கண்களை ஒரு வினாடி கூட நான் மூடியதும் இல்லை. காலத்தின் ஓட்டம், அதிகாரத்தின் மாற்றம் என அனைத்தையும் கவனித்து கொண்டுதான் இருக்கிறேன்.

இத்தனை ஆண்டுகளில்
எவ்வளவோ பார்த்துவிட்டேன்.அவற்றில் சில என்னை மகிழ்வித்தும் உள்ளது பல சோகத்தில் ஆழ்த்தியும் உள்ளது.எனது மனம் மட்டும் கல் அல்லாமல் வேறெதாவதினால் படைக்கப்பட்டிருந்தால் சோகத்தின் காரணமாக என்றைக்கோ அந்த இதயம் பிளந்தே போயிருக்கும்.

அதே நேரத்தில் இத்தனை ஆண்டுகளில் என் கண் குளிரவைத்த, சோகங்களை மறைந்த மேகங்கள் போல் ஆக்கிய நீதமான அரசர்களையும் நற்குணமுள்ள மனிதர்களையும் பார்த்துள்ளேன் என்பதையும் நான் இங்கு மறுக்கவில்லை.

சரி, நேராக விஷயத்திற்கு வருகிறேன் எனது முழு கதையையும் கூறுகிறேன் கேள் என் கண்ணெதிரே நடந்ததையெல்லாம் கூறுகிறேன் நன்றாக கேள்......


ஹிஜ்ரி ஐந்தாம் நூற்றாண்டின் துவக்கத்திலே இந்தியாவை இஸ்லாமிய சாம்ராஜ்யமாக உருமாற்றம் செய்த பெரிய சாதனைக்கு வித்திட்டவர் மஹ்மூத் கஜினி தான்
என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.அவர் தான் இந்திய நாட்டின் மேற்கிலிருந்து கிழக்கு வரை எல்லா திசைக்கும் இஸ்லாத்தைக் கொண்டு போய் சேர்த்தாராம்.சிற்றரசுகள், பேரரசுகள் என அனைத்தையும் வென்று வீழ்த்தினாராம். எண்ணிக்கைகளை ஈமான் மிகைத்தே தீரும் என்பதற்கு இவரது வாழ்வு தான் ஆதாரமாம்.

பிறகு ஒன்றரை ஆண்டுகள் கழித்து சுல்தான் ஷிஹாபுத்தீன் கோரி.இந்தியாவை நோக்கி படையெடுத்து.இந்தியாவை முழுமையான இஸ்லாமிய நாடாகவே மாற்றி இந்தியாவில் முஸ்லிம்களது இருப்பை இவர் தான் ஊர்ஜிதப்படுத்தினார்.

ஆனால் இவர்கள் அனைவரையும் விட இந்த திருநாட்டை வென்றவர் யாரென்றால் ஆன்மீகத்தின் தாயகம் காஜா முஇனுத்தீன் ஷஷ்தி நாயகம் அவர்கள் தான். ஆயிரக்கணக்கான இறைமறுப்பாளர்களை இறை நெருக்கத்திற்கூறியவர்களாக மாற்றியவர். எதிரிகளை வென்று வீழ்த்த மன்னர் கோரி நம்பியிருந்த மிகமுக்கியமான ஆயுதமே இவரது பிரார்த்தனைதான்.

நான் சொல்லியதை நன்கு கவனித்திருப்பாய் என நினைக்கிறேன். நான் கேள்விப்பட்டிருக்கிறேன் என்ற வார்த்தையை தான் பயன்படுத்தினேன் ஏனென்றால் நான் பிறந்ததே ஏழாவது நூற்றாண்டில் தான். குவ்வத்துல் இஸ்லாம் மஸ்ஜிதிற்கான மினாராவாக என்னைப் குத்துப்புத்தின் அவர்கள் தான் முதன் முதலில் பெற்றெடுத்து அடித்தளமிட்டவர் . பின்பு சம்சுதீன் அவர்கள் தான் என்னை வளர்த்து ஆளாக்கி கட்டி முடித்தவர்.

அடிமைகளையும் ஆழ்வோர்களாக மாற்றுவது இஸ்லாத்தின் தனிச் சிறப்பு. கோரிக்கு பிறகு அவரது அடிமை குதுபுதீன் ஆட்சிக்கு வந்தார்.குதுபுதீனுக்கு பிறகு அவரது அடிமை சம்சுதீன் ஆட்சிக்கு வந்தார் இவ்வாறாக இவர்களது ஆட்சி சுமார் 85 வருடம் தொடர்ந்தது. இவர்களது ஆட்சியில் வரலாற்றை அழகு படுத்திய நபர்களான வீரத்தளபதி குத்புதீன் ஐபக் நற்குணத்தின் பெட்டகம் நாசிருத்தீன் மஹ்மூத் இப்னு உல்துமிஷ் நீதியரசர் கியாசுத்தீன் பல்பன் போன்ற மகான்களை எல்லாம் கட்டாயம் இங்கு நான் நினைவு கூர்ந்தே ஆகவேண்டும்.

சுல்தான் சம்சுதீன் அவர்களது காலத்தில் குத்புத்தீன் பக்தியார் காகி என்ற பெரிய ஞானி டில்லியில் வாழ்ந்து வந்தார் இரவு வந்து விட்டாலே சுல்தான் சம்சுதீன் அவர்கள் அந்த ஞானியின் வீட்டிற்கு விரைவதையும் அங்கு சென்று அவருக்கு கால்அமுக்கி பணிவிடை செய்வதையெல்லாம் பார்த்துப் பூரித்துப் போயிருக்கிறேன்.

அதற்குப் பிறகு வந்த ஆட்சியாளர்களெல்லாம் எமது தலைவர்கள் கட்டியெழுப்பிய அற்புத சாம்ராஜ்யத்தை நாசமாக்கினார்கள். இந்த பூமி அல்லாஹ்வுக்குரியதாயிற்றே அதை அவன் தன் அடியார்களில் தான் நாடியவர்களுக்கு சொந்தமாகிவிடுவது இயல்பு தானே.

அதற்குப் பிறகு கில்ஜிகள் ஆட்சிக்கு வந்தார்கள் இவர்களைப் போன்ற மனிதாபிமானமற்ற மனிதர்களை நான் கண்டதே இல்லை. நிரந்தரமில்லா ஆட்சியைக் கைப்பற்ற தனது சகோதரனின் மகனை, மனைவியின் சகோதரனையெல்லாம் கொல்லும் படுமோசமான மனிதர்கள்.

ஆனால் இதற்கு மத்தியிலும் அலாவுதீன் கில்ஜி தனது சிற்றப்பா ஜலாலுதீன் கில்ஜியை கொன்று ஆட்சிக்கட்டிலில் ஏறியதும் நாட்டை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்தார், சட்ட ஒழுங்குகளை கட்டமைத்தார், விலைவாசிகள் நிர்ணயித்தார், பாதுகாப்பான சூழலை நாட்டுக்குள் ஏற்படுத்தினார்.
31 ஆண்டுகளுக்குப் பிறகு கில்ஜிகளுடைய ஆட்சியும் நிறைவுக்கு வந்தது.
அதற்குப் பிறகு துக்லக் வம்சத்தினர் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர். துக்லக் வம்சத்தின் அரசர்களில் ஒரு வித்தியாசமான மன்னர் இருந்தார் முஹம்மது துக்ளக் என்பது அவருடைய பெயர் புத்தி கூர்மையுள்ள முட்டாள். தனது ஆட்சியின் தலைமையகத்தை *தவ்லதா பாத்திற்கு மாற்ற பெரும் முயற்சி செய்தார். ஆனால் இறைவனின் அருளால் அதில் அவர் வெற்றி பெறவில்லை.

அவருக்குப் பிறகு அவரது குடும்பத்திலிருந்து பைரோஸ் என்ற சாலிஹான இளைஞர் ஒருவர் தோன்றினார். பல பள்ளிவாசல்களையும் மதரஸாக்களையும் கட்டினார். பல தெருக்களை உருவாக்கினார் ஆன்மீக மையங்களை ஏற்படுத்தினார்.

இவர் வாழ்ந்த அதே காலத்தில் ஞானத்தில் ஆழம் கண்ட அவுலியா நிஜாமுத்தீன் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். அவருக்கென்று தனி ஆன்மீக மையமே இருந்தது. தினம்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்வார்கள். ஒரு பக்கம் ஆட்சிக்கான தலைமைப்பீடம் இருக்க மறுபக்கம் இது ஆன்மீகத்தின் தலைமை பீடமாக விளங்கியது.எதாரத்தத்தில் அரண்மனைகள் மக்களை ஆழ்வதை விட இந்த ஆன்மீகம் மையங்களே மக்களை ஆண்டு கொண்டிருந்தது.

துக்ளக் வம்சத்தின் ஆட்சி சுமார் 135 வருடங்கள் நீண்ட காலமாகவே தொடர்ந்தது. அதற்குப் பிறகு அவர்களுடைய ஆட்சி முடிவுக்கு வந்ததும் அடுத்ததாக லோடிகள் ஆட்சியை கைப்பற்றினர்.

இவர்களது ஆட்சியில் தோன்றிய மன்னர் சிக்கந்தர் லோடி ஓர் சிறந்த நீதி அரசராகவும் மேன்மையான குணம் படைத்தவராகவும் அறிவையும், அறிஞர்களையும் நேசிப்பவராகவும் விளங்கினார்.

இவர்களது காலத்தில்தான் ஜோன்பூர் மிகச் செழிப்பான நகரமாக உருமாறியது.
இப்ராஹீம் ஷா ஷர்கி அவர்களது காலத்தில் வளர்ச்சியின் உச்சத்தையே அடைந்தது எனலாம். இவர்களது காலத்தின் ஆட்சியாளர்களைப் பற்றி இன்னும் பிரபல்யமான மார்க்க அறிஞர்களான காஜி சிஹாபுதீன் தவ்ளதா பாதி, ஷைகு அபில் ஃபத்ஹி இப்னி அப்தில் முக்ததிர் தஹ்லவி அவர்களைப்பற்றி எல்லாம் நிறையவே கேள்விப்பட்டிருக்கிறேன்.

அதேபோல நேர்வழி காட்டும் மன்னர்கள் , அறிவில் ஆழம் கண்ட அறிஞர்கள், வளமான உற்பத்தி, எங்கும் பசுமை நிறைந்த தோட்டங்கள் என அனைத்து வளங்களையும் தன்னகத்தே கொண்ட அகமதாபாத் இந்தியாவின் முன்னணி நகரமாகவே திகழ்ந்தது. சிறந்த நூற்றாண்டில் வாழ்ந்த சிறந்த மனிதர்களைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டது போல இந்தக் காலத்தில் வாழ்ந்த மஹ்மூத் ஷா அவரது மகன் முசஃபர் ஷா அலீம் அவர்களது வரலாற்றையெல்லாம் அதிகம் கேட்டிருக்கிறேன்.

(தொடரும்) .
தமிழில்: மௌலவி நியாசுதீன் புகாரி நத்வி
No articles in this category...