செய்யும் உதவிகளுக்காக, மனிதர்களின் பாராட்டை எதிர்பார்க்க வேண்டாம்
அவர்களுடைய கால்நடைகளுக்கு மூஸா தண்ணீர் புகட்டினார் . பிறகு, ஒரு நிழலில் போய் அமர்ந்தார்' (28:24)
▪️ஃபிர்அவ்னிடமிருந்து தப்பித்து பசி, தாகத்துடன் மதாயின் பகுதிக்கு வந்த மூஸா (அலை) அங்கே இரு பெண்களுக்கு தண்ணீர் புகட்டிய நிகழ்வை அல்லாஹ் இங்கே விவரிக்கிறான்.
செய்த உதவிக்கு நன்றியையும் பாராட்டையும் எதிர்பார்ப்பது மனித இயல்பு.
நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மைக்காகவும் மனிதர்களின் பாராட்டை எதிர்பார்க்க வேண்டாம் என்று இந்த இறைவசனம் கற்றுத் தருகிறது.
நீங்கள் செய்யும் ஒவ்வொரு வீரச் செயலுக்காகவும் மக்களது கைத்தட்டலை எதிர்பார்க்க வேண்டாம்.
இயன்றவரை உதவி செய்துகொண்டே இருங்கள்.
இயன்றவரை உபதேசம் செய்துகொண்டே இருங்கள்.
இயன்றவரை தர்மம் செய்துகொண்டே இருங்கள்.
இயன்றவரை நன்மை செய்துகொண்டே இருங்கள்.
சுவாசிப்பதைப் போன்றே நன்மை செய்வதையும் வழமையாக்கிக் கொள்ளுங்கள்.
ஏழைக்கு உதவிக்கு செய்தால் உடனடியாக உங்கள் முகத்தை அவரை வ்ட்டும் திருப்பிக் கொள்ளுங்கள். ஏனெனில், அந்த ஏழையின் முகத்தில் தென்படும் தாழ்வு நிலை உங்கள் கண்களுக்குத் தென்பாடாமல் இருக்கட்டும்.
அலீ (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து, 'அமீருல் முஃமினீன்!எனக்குத் தேவையானதை உங்களிடம் கேட்பதற்கு முன்னர் அல்லாஹ்விடம் கேட்கிறேன். நீங்கள் நிறைவேற்றித் தாந்தால் அல்லாஹ்வைப் புகழ்ந்து உங்களுக்கு நன்றி சொல்வேன். நீங்கள் நிறைவேற்றவில்லை என்றால், அல்லாஹ்வைப் புகழ்வேன். அதற்காக உங்களைக் குறைகூற மாட்டேன்' என்றார்.
உடனே அலீ (ரலி), 'உமது தேவையைக் கேட்கும்போது உமது முகத்தில் தென்படும் கூச்சத்தைப் பார்க்க நான் விரும்பவில்லை. எனவே உமது தேவையை தரையில் எழுதிக் காட்டும்' என்றார்.
அவர் அவ்வாறு செய்யவே அவருக்குத் தேவையான உதவிகளைத் தாராளமாக வழங்கினார் . (இப்னு கஸீர்)
பெண்களுக்கு உதவிய மூஸா (அலை) உடனடியாக ஒதுங்கிச் சென்று ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டார்கள்.
அந்தப் பெண்கள் கூறியிருக்க வேண்டிய 'நன்றி' எனும் வர்த்தையைவிட மிக உயர்ந்த கூலியை மூஸா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்தான்.
நினைவில் இருக்கட்டும்! நீங்கள் எப்போதும் அள்ளிக் கொடுக்கும் கொடையாளனாகிய அல்லாஹ்வுடன் செயற்படுகிறீர்கள்.
எனவே உங்கள் கணக்கு வழக்குகள் அவனுடன் மட்டுமே இருக்கட்டும்! மக்களுடன் அல்ல !
✒️ நூஹ் மஹ்ழரி
14-09-2024
| No articles in this category... |

