Tamil Islamic Media

பெயர்களை நினைவில் வைப்போம்

மனிதனை மதிப்பதன் இன்னொரு பகுதிதான் அவர்களின் பெயர்களை நினைவில் வைப்பது. சிரமமான விஷயம் இது. ஆனால் அவசியமான விஷயம். குறிப்பாக இஸ்லாமிய அழைப்பாளர்களுக்கும், மக்கள் தொடர்பை விரும்புகின்றவர்களுக்கும் இருக்கவேண்டிய பண்பு.
பேருந்துப் பயணத்திலோ வங்கியிலோ, கடை வீதியிலோ திருமண வீட்டிலோ எங்காவது ஒரு தடவை மட்டுமே நாம் சந்தித்த மனிதரை மீண்டும் சந்திக்கும்போது அவரின் பெயரை நினைவில் வைத்து, வாருங்கள்..............  என்று பெயர் சொல்லி அழைத்துப் பாருங்கள், நிச்சயம் உங்கள் மீது ஒரு வித அன்பும், மரியாதையும் அவருக்கு ஏற்படும்.


                     பள்ளிக்கூடத்தில்கூட ஆசிரியர் மாணவர்களிடம் அந்தக் கடைசியில் இருக்கிறியே நீ சொல்லுப்பா...! என்றோ அல்லது வேறு எதையோ கூறும் ஆசிரியரைவிட அப்துல்லாஹ், நீ சொல்லு...! என்று பெயர் கூறி அழைக்கும் ஆசிரியரையே மாணவர்கள் மதிப்பார்கள்.

தொலைப்பேசி உரையாடலிலும் அவ்வாறே. வெறுமனே ஹலோ...என்ன விஷயம் சொல்லுங்க என்று பேசும் மனிதர்களை விட சொல்லுங்க காலித்...என்ன விஷயம் காலித்...? என்று பெயர் சொல்லிப் பேசுபவராக நீங்கள் இருந்தால் உண்மையில் உங்கள் அழைப்பு மணிஓசை தொலைப்பேசியில் ஒலிப்பதற்கு முன் அவரின் இதயத்தில் இதமாய் ஒலிக்கும்.  இதனால் தான் சிலர் மாஷா அல்லாஹ்!  ஒருதடவை தானே சந்திச்சோம்... என் பெயரை இவ்வளவு கரெக்டா ஞாபகம் வெச்சிருக்கீங்களே! என்று வியந்து கூறுவதைப் பார்க்கலாம்.


                      நபி (ஸல்) அவர்களுக்குத் தாயிஃபில் என்ன நடந்தது என்று நம் எல்லோருக்கும் தெரியும். வீதி எங்கும் அடிமைகளும் அடியாட்களும் இரு ஓரங்களிலும் நின்று கொண்டு கண்மணி நாயகம் (ஸல்) அவர்களைக் கருங்கல்லாலும், கடுஞ்சொல்லாலும் அடித்தனர், வேதனைப்படுத்தினர். உடலில் இருந்து இரத்தம் வழிகிறது. பாதங்களும் பாதணிகளும் இரத்தத்தால் ஒன்றோடு ஒன்று சேர்ந்து விடுகின்றன. ஊர் எல்லை வரை விரட்டி வந்தனர் மடையர்கள். 


                    மக்காவுக்கும் தாயிஃபுக்கும் இடையே இருந்த ரபீஆவின் மகன்களான உத்பா, ஷைபா ஆகியோரின் தோட்டத்தின் மர நிழலில் சற்று நேரம் தளர்ந்து போய் அமருகிறார்கள் அருமை நபி (ஸல்) அவர்கள். உத்பாவும் ஷைபாவும் நபி (ஸல்) அவர்களைப் பார்க்கின்றார்கள். அவர்களின் கல்மனதிலும் கடுகளவு கருணை பிறக்கிறது.  தங்களின் கிறிஸ்தவப் பணியாளர் அத்தாஸ் என்பரை அழைத்து சிறிது திராட்சைக் குலைகளைக் கொடுத்து இதனை அதோ இருக்கும் மனிதரிடம் கொண்டு கொடு என்று நபிகளாரின் பக்கம் கை காட்டுகின்றனர். கொண்டு வருகிறார் அத்தாஸ்


                 நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் திராட்சைக் குலைகளை வைத்தபோது, அதனை எடுத்து பிஸ்மில்லாஹ்என்று கூறியவராகச் சாப்பிடத் தொடங்கினார்கள். பின்னர் நடந்த உரையாடல் இதோ...
அத்தாஸ் : இந்த ஊர் வாசிகள் இந்த வார்த்தையைப் பயன்படுத்த மாட்டார்களே...


நபி (ஸல்) : உமது பெயர் என்ன?
அத்தாஸ் : என் பெயர் அத்தாஸ்
நபி (ஸல்) : நீர் எந்த ஊரைச் சார்ந்தவர் அத்தாஸ்?
அத்தாஸ் : நீனவா
நபி (ஸல்) :  யூனுஸ் இப்னு மதா அவர்களின் ஊரைச் சார்ந்தவரா நீர் அத்தாஸ்?
அத்தாஸ் :   யூனுஸ் இப்னு மதாவை நீங்கள் அறிவீர்களா?
நபி (ஸல்) : அவர் எனது சகோதரர் அத்தாஸ்! அவர் ஒரு நபி; நானும் ஒரு நபி
                         அவ்வளவுதான்...குனிந்தார் அத்தாஸ். 
நபியின் நெற்றி, கை என முத்தமிடத் தொடங்கிவிட்டார். இஸ்லாத்தை ஏற்கிறார்.


என்ன நடந்தது...?


நபி (ஸல்) அவர்கள் அவருடைய பெயரைக் கேட்டார்கள். பின்னர் அந்தப் பெயரைப் பயன்படுத்தினார்கள். சிறிய இந்த உரையாடலில் 3 தடவை அந்தப் பெயரைப் பயன்படுத்திய நபி (ஸல்) அவர்களின் இந்த வழிமுறை ஒவ்வோர் அழைப்பாளனுக்கும் இன்று தேவை.
நாமாக இருந்தால் என்ன செய்வோம்? உன் பெயர் என்ன என்று கேட்போம். அவர் அஹ்மத் என்று கூறுவார். அவர் சொல்லி முடித்திருக்க மாட்டார் ;  அதற்குள் நாம்...�சொல்லுங்க முஹம்மத்... என்ன விஷயம்?� என்று சம்பந்தம் இல்லாமல் ஒரு பெயரைக் கூறிக் கொண்டிருப்போம். �என் பெயர் முஹம்மத் அல்ல அஹ்மத்� என்று அவர் கூறினால் கூட �ஏதோ ஒன்று ... பெயரா முக்கியம்... விஷயத்திற்கு வா...� என்போம்.


ஏன் மறக்கிறோம் நாம்? காரணங்கள் நிறைய...
1) சந்திப்பவருக்கு அவ்வளவாக முக்கியத்துவம் தருவதில்லை.
2) நமக்கு இருக்கும் வேலைப் பளுவுக்கு மத்தியில் அடுத்தவர் தன்னை அறிமுகம் செய்யும் போது கவனிக்க மறக்கிறோம்.
3) மீண்டும் சந்திக்கவா போகிறோம் என்ற எண்ணம்.
4) பெயரை நினைவில் வைக்கும் அளவுக்கு முக்கியமானவர் அல்ல என்ற எண்ணம்.
5) அவரின் பெயரை மறந்துவிட்டு மீண்டும் கேட்க வெட்கம்.
                   நபி (ஸல்) அவர்கள் கையாண்ட முறையே இதற்கேற்ற அருமருந்து. ஆம். உங்கள் உரையாடலுக்கிடையே மீண்டும் மீண்டும் அந்தப் பெயரைப் பயன்படுத்துங்கள். இதுதான் மிக முக்கியம்.  அல்லது அவர் சென்றபின் அவரின் பேச்சு ஸ்டைல், அவர் சிரித்த சிரிப்பு என்று அவரின் மானரிசம் எதையாவது நினைவு கூருங்கள்.  பெயர் ஞாபகத்தில் இருக்கும்.
           அல் குர்ஆனைப் புரட்டிப் பார்த்தால் புரியும்; நபிமார்களிடம் நேரடியாக உரையாடும்போதுகூட அவர்களின் பெயர் கூறி அழைக்கிறான் அல்லாஹ்.
இப்ராஹீமே!  இவ்வாறு தர்க்கம் செய்வதை விட்டுவிடுவீராக!               (11: 76)
நூஹே! திண்ணமாக அவன் உமது குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன் (11: 46)
தாவூதே! நாம் உம்மைப் பூமியில் பிரதிநிதியாக ஆக்கியிருக்கின்றோம் (38: 26)
ஆதமே! இவற்றின் பெயர்களை நீர்அவர்களுக்கு அறிவிப்பீராக!�                (2: 33)
என் பெயரை நீ நினைவில் வை! 
உன்னை நான் நினைவில் வைப்பேன்!

- மௌலவி நூஹ் மஹ்ழரி  
- நன்றி; சமரசம்


No articles in this category...