Tamil Islamic Media

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29: மெர்ஸிஃபான், ஹெராக்லியா யுத்தங்கள்

ஹி. 494 / கி.பி. 1101ஆம் ஆண்டு பெரும் எண்ணிக்கையில் திரண்ட சிலுவைப் படை, மூன்று தனிப் பிரிவுகளாகக் கான்ஸ்டண்டினோபிள் வந்து சேர்ந்தது. அதில் முதலாவதாக வந்தவர்கள் லோம்பார்டுகள்; தலைவர் ரேமாண்டையும் இழுத்துக்கொண்டு பொஹிமாண்ட் சிறைப்பட்டிருக்கும் டானிஷ்மெண்த் நோக்கிச் சென்றவர்கள். மற்றவர்களும் வந்துவிடட்டும், ஒன்றாகச் செல்வோம் என்று சொல்லி, தாம் ஒரு பாதையைத் திட்டமிட்டார் ரேமாண்ட். ஆனால் லோம்பார்டுகளோ பொஹிமாண்ட்டை விடுவிக்காமல் எங்கும் நகர முடியாது என்று சொல்லிவிட்டதால் அந்தப் படை அணியின் திசையும் திட்டமும் டானிஷ்மெண்த் என்றாகிப் போனது.

அடுத்த இரண்டு பிரிவுகளுள் ஒன்று பதினைந்தாயிரம் போர் வீரர்கள் அடங்கிய பிரெஞ்சுப் படை. அதற்குத் தலைமை தாங்கி வந்தவர் வில்லியம். அதற்கடுத்து இறுதியாக வந்தது பிரெஞ்சு நாட்டவர்களும் ஜெர்மானியர்களும் அடங்கிய படை. இதற்குத் தலைமை ஏற்று வந்தவர்கள் வில்லியம் IX, வெல்ஃப் IV. இந்தப் படைகள் வந்து சேர்வதற்குள் முதல் அணியான லோம்பார்டுகளுக்கு நேர்ந்த கதியைப் பார்த்துவிடுவோம்.

முதலாம் சிலுவைப் படையுடன் மோதிய முதல் முஸ்லிம் மன்னர் ரோம ஸல்தனத்தின் சுல்தான் கிலிஜ் அர்ஸலான். அதை முந்தைய அத்தியாயங்களில் நாம் கடந்து வந்திருக்கின்றோம். அவர் அப்பொழுது பரங்கியர்களுடன் நிகழ்த்திய போர்கள் மூன்று. முதலாம் சிலுவைப் போர்ப் படைக்கு முன்னோட்டமாய் வந்த ‘மக்களின் சிலுவைப்போர்’ என்ற பெருங்கூட்டத்தைத் தோற்கடித்து விரட்டியடித்தது முதலாவது. அடுத்தது நைஸியா போர், மூன்றாவது டொரிலியம் போர். இதில் முதலாவது போர் மட்டும்தான் வெற்றியில் முடிந்தது. மற்ற இரண்டும் தோல்வியில் முடிந்திருந்தன. குறிப்பாக டொரிலியம் போரில் ஏற்பட்டிருந்த தோல்வி ஸெல்ஜுக் துருக்கியர்களுக்குப் பெரும் மனக் காயத்தை ஏற்படுத்தியிருந்தது. பழிவாங்கத் தருணம் கிடைக்காதா என்ற ஏக்கத்தில் அவர்கள் காத்துக் கிடந்தனர்.



இப்பொழுது டானிஷ்மெண்த்தின் மாலிக் காஸி குமுஷ்திஜினுடன் கிலிஜ் அர்ஸலானுக்கு நட்பு ஏற்பட்டு, மீண்டும் சிலுவைப் படையினரை எதிர்கொள்ள வாய்ப்புக் கிடைத்ததும் அவர்களைத் தொற்றிக்கொண்டது ஆவேச உற்சாகம். அதற்கேற்ப அந்த (ஹி. 494 / கி.பி. 1101) ஆண்டு புதிதாய்க் கிளம்பி வந்த சிலுவைப் படையின் மூன்று பிரிவுகளுடன் கிலிஜ் அர்ஸலான் – குமுஷ்திஜின் கூட்டணி மூன்று முக்கியப் போர்களை நிகழ்த்தின. மூன்றும் முத்தாய்ப்பாய்ப் பெருவெற்றியில் முடிந்தன. ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.

லோம்பார்டுகள் அடங்கிய சிலுவைப் படை அங்காரா நகரம் வழியாக டானிஷ்மெண்த் பகுதியை நோக்கி நகர்ந்தது. அப்பாதை எல்லாம் கிலிஜ் அர்ஸலானின் ஸல்தனத்துக்கு உட்பட்டிருந்த பகுதிகள். இதை கிலிஜ் அர்ஸலான் எதிர்பார்த்திருந்தார்; தயாராக இருந்தார். சிலுவைப் படையின் வேகத்தைக் குறைத்து அவர்களைத் தடுமாற வைக்க வேண்டும் என்பது அவரது முதல் திட்டம். அதனால் அவர்களைக் கண்டு தம்முடைய படை அஞ்சிப் பின்வாங்குவது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினார். அப்படி வேண்டுமென்றே மெதுமெதுவே பின்வாங்கிச் செல்லும் போது, சிலுவைப் படை தம்மைத் தொடரப்போகும் வழி நெடுகிலும் பயிர்களைக் கொளுத்திக்கொண்டே சென்றார். நீர் ஆதாரமான கிணறுகளையும் சிதைத்து மூடியது அவரது படை. இவை சிலுவைப் படைக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்திவிட்டன. உணவுக்கும் தண்ணீருக்கும் வழியின்றிப் போனால் என்னாகும்? திண்டாடிப்போனார்கள்.

எப்படியோ சமாளித்து கங்க்ரா என்ற நகரைச் சிலுவைப் படை அடைந்தது. இந்நகரைக் கைப்பற்றுவோம்; இங்கு ஏதாவது சிரமப் பரிகாரமும் கிடைக்கக்கூடும் என்ற அவர்களது ஆசையைச் சிதைக்க முஸ்லிம்களின் படை அங்கு பெரும் எண்ணிக்கையில் தயாராகக் காத்திருந்தது. நாம் இருக்கும் நிலையில் இங்கு இவர்களுடன் மோத முடியாது என்று முடிவெடுத்து அவர்கள் அங்கிருந்து மேற்கொண்டு நகர்ந்தார்கள். ஏற்பட்டிருந்த வெறுப்பில் வழியிலிருந்த கிராமங்களுக்குள் புகுந்து, மக்களைத் தாக்கிக் கொள்ளையடித்து, கிடைத்தைச் சுருட்டிக்கொண்டு அவர்கள் முன்னேறினர். கடுமையான அனல், பசி, தாகம் எல்லாமாகச் சேர்ந்து அவர்களுக்கு ஏகப்பட்டச் சோர்வு. அத்தகு இன்னல்களுக்கு அவர்கள் ஆளாகி , பலவீனமடைய வேண்டும் என்பதுதான் கிலிஜ் அர்ஸலானின் திட்டம்.


அது மட்டுமின்றி, தம் திட்டத்தின் அடுத்தக் கட்டமாக, சிறுசிறு படைக் குழுக்களை ஏற்படுத்தினார். அவர்கள் தனித்தனிக் குழுக்களாக, சிலுவைப் படையின் ஒவ்வோரு பகுதி வீரர்கள் மீது அவர்கள் எதிர்பாராத வகையில் திடீரென்று பாய்ந்து தாக்கினார்கள். பலமான சேதத்தை ஏற்படுத்திவிட்டு ஓடி மறைந்தார்கள். ஏற்கெனவே நொந்த நிலையில் நகர்ந்து கொண்டிருந்தவர்களுக்கு இது பெரும் சோர்வை ஏற்படுத்தியது. தடுமாறிப்போனார்கள். ஒருவழியாக முன்னேறி டானிஷ்மெண்த் பகுதியில் உள்ள மெர்ஸிஃபான் (Merzifon) நகரை அவர்கள் அடைந்த போது நா வறண்டு, சோர்ந்து, சீர்குலைந்து போயிருந்தது சிலுவைப் படை.

இதற்குத்தான் காத்திருந்தது துருக்கியர்களின் படை. அடுத்து, சற்றும் அவகாசம் அளிக்காமல் சிலுவைப் படையின்மீது முழுவீச்சில் தாக்குதல் தொடுத்தது. தளர்ந்து கிடந்த அவர்களுக்கு எதிர்த்துப் போரிடக்கூடச் சக்தியில்லை. தங்களின் பெண்களையும் மடத்துத் துறவிகளையும் அப்படியே விட்டுவிட்டுத் தெறித்து ஓடினார்கள். துரத்தித் துரத்தி வெட்டித் தள்ளியது ஒருங்கிணைந்திருந்த முஸ்லிம்களின் படை. வெகு நேரமெல்லாம் ஆகவில்லை. சிலுவைப் படையினர் நொறுங்கி விழுந்தார்கள்.

படைத் தலைவர் ரேமாண்ட் தப்பித்து ஓடி மலைக் குன்று ஒன்றில் ஒளிந்துக்கொண்டார். பரங்கியர்களின் சிறு குழுவொன்றுதான் அவரைக் காப்பாற்றிக் கூட்டி வந்தது. அவமானகரமான அத்தோல்வியினால் மனம் சோர்ந்து, விரக்தியுற்று விட்டார் ரேமாண்ட். பிழைத்தவர்களை அப்படியே விட்டுவிட்டு, இரவோடு இரவாகத் தப்பித்துக் கிளம்பி, கருங்கடல் கரையில் அமைந்திருந்த பஃப்ரா என்ற துறைமுக நகரை அடைந்து, பைஸாந்தியர்களின் கப்பல் ஒன்றில் ஏறி, கான்ஸ்டண்டினோபிள் சென்று சேர்ந்தார் அவர்.

ரேமாண்ட் கைவிட்டுச் சென்றவர்களை முஸ்லிம்கள் சிறைபிடித்தனர். தப்பித்து ஓடிய மற்றவர்களை விரட்டிச் சென்று வெட்டித் தள்ளினர். அவர்களது படை எண்ணிக்கையில் ஏறத்தாழ எண்பது சதவிகிதத்தினர் கொல்லப்பட்டு, மற்றவர்கள் போர்க் கைதிகள் ஆயினர். மெர்ஸிஃபான் போரில் அன்று சிலுவைப் படையினருக்குப் பேரழிவு, பெருத்த நாசம். அசைக்க முடியாத சக்தியைப் போல் உருவாகியிருந்த அவர்களது பெருமைக்கு மாபெரும் அவமானம் ஏற்பட்டது.

இதற்குள் அங்கு கான்ஸ்டண்டினோபிளில் வில்லியம் தலைமையிலான பிரெஞ்சுப் படை வந்து சேர்ந்தது. தமக்குமுன் வந்து சேர்ந்தவர்கள் ரேமாண்ட் தலைமையில் டானிஷ்மெண்த் நோக்கிச் சென்றுவிட்டார்கள் என்று தெரிந்ததும், வில்லியம் ‘நானும் போகிறேன்’ என்று தமது படைகளை அழைத்துக்கொண்டு கிளம்பி விட்டார். கிளம்பி விட்டாரே தவிர, முன்னர் சென்றவர்கள் எந்தப் பாதையில் சென்றார்கள் என்பது அவருக்குத் துல்லியமாகத் தெரியவில்லை. அதனால் அவர் என்ன செய்தார் என்றால் கொன்யா (Konya) நகரை நோக்கிச் சென்று அதை முற்றுகையிட்டார். கிலிஜ் அர்ஸலானின் கொன்யா. ஆனால், அந்த முற்றுகையை அந்நகரில் இருந்த அவருடைய படை வெகு எளிதாக முறியடித்தது.

வில்லியமின் சிலுவைப் படை தோல்வியைச் சுமந்துகொண்டு அங்கிருந்து கிளம்பியது. அதே நேரத்தில்தான் அங்கு கிலிஜ் அர்ஸலான்-குமுஷ்திஜின் கூட்டணிப் படை லோம்பார்டுகளின் சிலுவைப் படையைக் கொன்று அழித்திருந்தது. அந்த வெற்றியின் களிப்பில் இருந்தவர்களிடம் இப்படி மற்றொரு படை வந்துகொண்டிருக்கிறது என்ற செய்தி வந்து சேர்ந்தது. அந்தப் படை நகரும் திசையைத் தெரிந்துகொண்டு, முஸ்லிம்களின் படை உடனே தெற்கு நோக்கிப் பயணித்து ஹெராக்லியா (Heraclea) என்ற ஊரை அடைந்து போருக்கு ஆயத்தமாகிவிட்டது. இது எதுவும் தெரியாமல், கொன்யாவிலிருந்து தோல்வியுடன் கிளம்பிய வில்லியம் தம் படையினருடன் பயணித்து ஹெராக்லியாவை வந்தடைந்தார்.


அழிக்கப்பட்டிருந்த பயிர்கள், சிதைந்து போன கிணறுகள் இந்தப் படையினருக்கும் பெரும் சோதனையாக அமைந்துவிட்டன. சோர்ந்து, களைத்து வந்து சேர்ந்த சிலுவைப் படையின் மீது, மெர்ஸிஃபானில் நிகழ்த்தியதைப் போலவே சற்றும் அவகாசம் அளிக்காமல் பாய்ந்து தாக்கியது முஸ்லிம்களின் படை. வெகு ஆக்ரோஷத் தாக்குதல். எதிர்க்க வீரியமின்றிச் சிலுவைப் படையின் இந்தப் பிரிவும் சுருண்டு விழுந்தது. அத்தனை ஆயிரம் பேர்களுடன் வந்தவர்களில் வெறும் அறுவர் மட்டுமே உயிர் பிழைத்தனர். அந்த பிரெஞ்சுப் படை முழுவதும் துடைத்து எறியப்பட்டது. இது ஹெராக்லியாவின் முதல் யுத்தம் என்று வரலாற்றில் குறிக்கப்படுகிறது.

வில்லியம் தமது படையினருடன் ஹெராக்லியாவுக்கு அணி வகுத்துக்கொண்டிருந்த அதே நேரத்தில்தான், பிரெஞ்சுகளும் ஜெர்மானியர்களும் அடங்கிய படை கான்ஸ்டண்டினோபிள் வந்து சேர்ந்தது. அவர்களின் எண்ணிக்கை அறுபதாயிரம். இவர்களும் உடனே அங்கிருந்து கொன்யா வழியாக ஹெராக்லியாவை நோக்கி நகர்ந்தனர்.

பெரும் எண்ணிக்கையில் வந்துகொண்டிருந்த இவர்கள்மீது முன்னர் செய்ததைப்போல் துருக்கியப் படைக் குழுக்கள் சிறுசிறு தாக்குதல்கள் தொடுத்துச் சிலரைக் கொன்று போட்டன. முக்கியமான படைப்பிரிவு ஹெராக்லியாவைச் சுற்றியிருந்த காடுகளில் பதுங்கிக் காத்திருந்தது. சிலுவைப் படையினருக்குப் பசி, தாகம். இதனிடையே துருக்கியர்களின் சிறு குழுக்களின் தாக்குதல் குடைச்சல். மெதுமெதுவே நகர்ந்து ஹெராக்லியாவை அடைந்தார்கள். அங்கே அவர்கள் கண்ணெதிரில் ஆறு. அதில் புரண்டோடும் தண்ணீர். தண்ணீரைக் கண்டதும் தாகத்துடன் அவர்கள் பாய்ந்தோட, பதுங்கியிருந்த முஸ்லிம்களின் படை அவர்கள் மீது ஆக்ரோஷத்துடன் பாய்ந்தது.



சுதாரிக்க நேரமின்றி, எதிர்க்கத் திராணியின்றித் துவண்டிருந்த சிலுவைப் படையினர் சின்னாபின்னமானார்கள். அவர்கள் மொத்தமாகக் கொன்றொழிக்கப்பட்டு, வெகு சிலரே உயிர் பிழைத்தனர். அவர்களும் அந்தாகியாவிற்குத் தப்பியோடினார்கள். இது ஹெராக்லியாவின் இரண்டாவது யுத்தம்.

இவ்வாறாகச் சிலுவைப் படையின் அந்த மூன்று பிரிவுகளும் படு துயரமான முடிவைச் சந்தித்தன; அழிந்தன. அம்மாபெரும் தோல்விகள் கிறிஸ்தவர்களின் ஊக்கத்தை உடைத்து நொறுக்கி விட்டன. ஆனால் செல்ஜுக் துருக்கியர்களுக்கோ பேரானந்தம்! முன்னர் டொரிலியம் போரில் தாங்கள் சந்தித்த தோல்வியை இந்தப் பெருவெற்றி ஈடுகட்டிவிட்டது என்று அவர்களுக்கு ஏகப்பட்ட திருப்தி!

இலத்தீன் கிறிஸ்தவர்களுக்கோ அதிர்ச்சி, அவமானம், வெறுப்பு. அந்த விரக்தியில் ‘உன்னால்தான் எல்லாம் போச்சு’ என்று பைஸாந்தியச் சக்கரவர்த்தியை நோக்கி அவர்களது கோபம் திரும்பியது. உன்னுடைய ஆலோசனையினால்தான் ரேமாண்ட் வேண்டுமென்றே எங்களைத் தவறான பாதையில் அழைத்துச் சென்று மாட்டிவிட்டு ஓடிவிட்டார் என்று புகார் வாசித்தார்கள். தன் தலை தப்பியதே புண்ணியம் என்று ரேமாண்ட் தப்பித்து ஓடிவந்ததை எல்லாம் அவர்கள் யோசித்துப் பார்க்கும் நிலையில் இல்லை. தாங்கள் சந்தித்த அவலத்திற்குப் பழிபோட அவர்களுக்கு ஒரு பலிகடா தேவைப்பட்டது. அவ்வளவுதான்.

இந்த வெற்றிகளுக்குப் பிறகு கிலிஜ் அர்ஸலானின் புகழ் ஓங்கியது. டானிஷ்மெண்த் துருக்கியர்களின் படைகளோ, தங்கு தடையின்றி முன்னேறி எடிஸ்ஸா மாநில எல்லை வரை வந்து நின்றன. அங்கு மலாட்யா நகரைக் கைப்பற்றி அதன் ஆட்சியாளரையும் கைது செய்தார் காஸி குமுஷ்திஜின். அங்கு அதில் புதிதாக உருவானது கிலிஜ் அர்ஸலானுக்கும் காஸி குமுஷ்திஜினுக்கும் இடையே ஒரு விரிசல். ‘மலாட்யா எனக்கு’ என்று வந்து நின்றார் கிலிஜ் அர்ஸலான்.

அச்சமயம் அங்கு கிலிஜ் அர்ஸலானிடம் பெரியதொரு உதவி கோரி வந்து நின்றார் ஸெங்கி இப்னு ஜெகர்மிஷ். யார் இந்த ஸெங்கி? என்ன உதவி?

 

- * -

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி 
தொடர் - 28
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி 
தொடர் - 30

இந்தக் கட்டுரையின் மூலம்சத்தியமார்க்கம்.காம். ஆசிரியர்:  நூருத்தீன்

 






1 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34: சென்னாப்ரா யுத்தம்

பெருக்கெடுத்துப் பீய்ச்சிய இரத்தத்துடன் துவண்டு விழுந்த மவ்தூத், துக்தெஜினின் இல்லத்திற்குத் தூக்கிச் செல்லப்பட்டார். அன்றைய நாள் நோன்பு நோற்றிருந்தார் அவர்.அவரிடம் நோன்பை முறித்துவிடும்படி துக்தெஜின் கூற. ‘நோன்பு நோற்ற நிலையில் நான் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறேன்’ என்று மறுத்துவிட்டார் மவ்தூத். அதே நிலையில் தளபதி மவ்தூத் பின் அத்-தூந்தகீன் மரணமடைந்தார்.

2 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33: மவ்தூத் பின் அத்-தூந்தகீன்

ரித்வானின் நடவடிக்கைகளால் அலெப்போவில் வசித்த முஸ்லிம் குடிமக்களும் மார்க்க அறிஞர்களும் மிகவும் நொந்து போனார்கள். சிரியாவிலுள்ள பகுதிகளை முஸ்லிம்கள் சிலுவைப் படையினரிடம் இழந்து கொண்டிருக்கின்றனர். ரித்வானோ அவர்களை எதிர்க்கத் திராணியின்றி இந்தளவிற்குக் கீழிறங்கி அடிபணிந்துவிட்டார். நமக்கு கலீஃபாதான் உதவி செய்ய வேண்டும், பாக்தாதின் கதவைத் தட்டுவோம் என்று அலெப்போவிலிருந்து ஒரு தூதுக் குழு கிளம்பி பாக்தாத் வந்து சேர்ந்தது.

3 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32: சிலுவைப் படையும் பைஸாந்தியமும்

கி.பி. 1108ஆம் ஆண்டு மவ்தூத் பின் அத்-தூந்தகீன் மோஸுலுக்கு வருகிறார் என்பதை அறிந்ததும் தப்பித்து ஓடிய ஜவாலி, முன்னேற்பாடாகச் சிறையில் இருந்த பால்வின் IIஐயும் தம்முடன் கூட்டிக் கொண்டுதான் ஓடினார். சிலுவைப் படையுடன் கூட்டணி அமைப்பதற்கு அவரை முக்கியத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துவோம் என்ற முன் யோசனை.

4 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31: கிலிஜ் அர்ஸலானின் முடிவு

பிரிந்து கிடக்கும் முஸ்லிம் தலைவர்களின் கூட்டணியும் ஒருங்கிணைந்த கூட்டணிப் படையும் சிலுவைப் படையினரை எதிர்க்க அவசியம் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. அதனால் முதல் கட்டமாக, உதிரியாகப் பல பகுதிகளில் ஆண்டுகொண்டிருந்த ஆட்சியாளர்களைத் தொடர்பு கொண்டார் ஜெகெர்மிஷ். அவர்களுள் அலெப்போவிலிருந்த ரித்வான், மர்தின் பகுதியின் இல்காஸி அல்-அர்துகி, சின்ஜாரின் ஆட்சியாளர் அல்பி திமுர்தஷ், பாரசீகத்திலிருந்து அல்-அஸ்பஹத் ஆகியோர் முக்கியமானவர்கள்.

5 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30: பாலிக் யுத்தம்

கட்டவிழ்த்து விட்டால் சிலுவைப் படைத் தலைவர் முஷ்டியை முறுக்குவாரே என்று முஸ்லிம்களுக்குத் தெரியாதா? வசமாக மாட்டிக்கொண்டு கைதாகிச் சிறையில் இருந்தவரை அவர்கள் ஏன் கொல்லவில்லை? பணயத் தொகைக்கு ஆசைப்பட்டு விடுவித்து, தங்களுக்கு எதிராய் அவர் களமிறங்க ஏன் மீண்டும் வாய்ப்பு அளித்தார்கள் என்றெல்லாம் நமக்குக் கேள்விகள் எழலாம், வியப்பு மேலிடலாம். ஆனால், ஒற்றை வார்த்தையில் பதில் சொல்ல இயலாத இத்தகு செயல்கள், பிழைகள், திகைப்புகள் வரலாறு நெடுக நிறைந்துள்ளன. அவலம் என்னவெனில் வரலாற்றுப் பிழைகளிலிருந்து நாம் பாடம் படிக்க மறுப்பதுதான்.

6 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28: ஜிஹாது ஒலியும் சிலுவைப் படையும்
7 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27: மெலிடீன் போர்
8 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-26: மெய்ச் சிலுவை
9 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35: ராஜா பால்ட்வினின் முடிவு
10 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-25: ஜெருஸல வீழ்ச்சியும் குருதி ஆறும்
11 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-24: ஜெருஸலப் போர்
12 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-23 ஜெருஸல முற்றுகை
13 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-22: மண்ணாசையில் விழுந்த மண்
14 வீழ்ந்தெழுவோம் : பொருளாதார நெருக்கடியை எப்படி சமாளித்தார்கள் - அழகிய முன்னுதாரனம். (தொடர்-45)
15 தர்ம கற்கள் - அழகிய தர்மம்
16 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-20: அந்தாக்கியாவின் இரண்டாம் முற்றுகை
17 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-21: புனித ஈட்டி
18 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 19: அந்தாக்கியாவின் வீழ்ச்சி!
19 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 18: அந்தாக்கியா
20 திருநெல்வேலி வரலாறு...!
21 மாவீரன் திப்புசுல்தான்:இந்திய விடுதலைப் போரின் உயிர்நாடி
22 அந்த இரண்டணா ......
23 சீனாவில் விதைத்த விதை - ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி)
24 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 17
25 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 16
26 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 15
27 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 14
28 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 13
29 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 12
30 ஔரங்கசீப் அவர் அழித்ததைவிட அதிக கோவில்களைக் கட்டினார்
31 இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ்
32 இதுவல்லவா நபி நேசம்!!!!!!!
33 தனக்குரியவருக்காக காத்திருக்கும் இரயில் ....
34 உலகத்திற்கே ஒளி விளக்கேற்றிய மதீனாவில், விளக்கேற்றியது எப்போது?
35 உஸ்மானியா பேரரசு கடைவீதியின் தொங்கும் கூடைகள்
36 நான் குதுப்மினார் பேசுகிறேன்-1
37 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 11
38 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -1
39 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -2
40 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -3
41 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -4
42 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -5
43 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 6
44 கையிலே ஒரு துணிப்பை, எளிய நடை, எளிய உடை உத்தமபாளையம் எஸ்.எஸ். ஹஜரத்
45 இஸ்லாம் வென்றெடுத்த ஷாம்
46 தமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர்
47 சாரதா பீடம் சொல்லும் திப்புவின் மதநல்லிணக்கம்
48 சூஃபிக்களும் புனித போர்களும்
49 யார் தேச விரோதி?
50 இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.
51 ஸயீத் இப்னு ஆமிர் سعيد ابن عامر (ரலி)
52 விடுதலைப்போரில் வீரமங்கையர்
53 பூரண சுதந்திரம் கேட்ட முதல் இந்தியன்
54 இஸ்லாம் இந்தியாவுக்கு அந்நிய மதமா?
55 நாகூர் - ஒரு வரலாற்றுப் பார்வை
56 இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்
57 கோரிப்பாளையம் தர்கா கல்வெட்டுகள்
58 சமயப் பொறை பேசும் சரித்திரச் சான்றுகள்
59 தமிழ் முஸ்லிம்களின் இடப்பெயர்ச்சி வரைபடம்
60 விடுதலை போரில் நெல்லை மாவட்ட முஸ்லிம்கள்
61 தமிழகத்தில் முஸ்லீம்கள் வரலாறு
62 சுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது
63 இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.
64 தமிழகத்தில் முஸ்லீம்கள்
65 இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?
66 இந்திய விடுதலைப் போரும் முஸ்லீம்களும்
67 இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு
68 பாடலியில் ஒரு புலி
69 தேசவிடுதலைக்கு ஆயுதப்புரட்சியே தீர்வு
70 ஒரு மனிதன் ஒரு பட்டாளம் - மௌலவி செய்யது அஹ்மதுல்லாஹ் ஷாஹ்.
71 முதல் சுதந்திரப் பிரகடனம்
72 மவுலானா எனும் மகத்தான இந்தியர்
73 காலித் பின் வலீத் (ரலி)
74 தமிழ் முஸ்லிம்களின் வரலாற்று பொக்கிஷம். ஒரு ஆவணக் குறும்படம்
75 இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
76 முதல் வாள்!
77 கஜினி முகம்மது மற்றும் முகம்மது துக்ளக் (தவறான ணோட்டங்கள்)
78 இலங்கையில் முஸ்லிம்கள் - அன்றும் இன்றும்
79 மாவீரன் மருத நாயகம் கான் சாஹிப்