Tamil Islamic Media

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 15

பைஸாந்தியத்தில் சிலுவைப்படை

கி.பி. 1096ஆம் ஆண்டு. நவம்பர் மாதம். அலை துவங்கியது. முதலாம் சிலுவை யுத்தப் படை, அணியணியாக கான்ஸ்டன்டினோபிள் (இஸ்தான்புல்) நகரை வந்து அடைய ஆரம்பித்தது.அடுத்த ஆறு மாதங்களும் அந் நகரில் முதலாம் சிலுவை யுத்தப் படையினரின் அந்த அலைதான் அடித்துக்கொண்டிருந்தது. பைஸாந்திய ராஜாங்கத்தின் தலைநகரமான கான்ஸ்டன்டினோபிள் நகரம்தான் கிழக்கத்திய தேசங்களின் நுழைவாயில். கிறிஸ்தவப் பயணிகள் ஜெருசலத்திற்குச் செல்லும் பாதையும் அதுதான். அவை ஒருபுறமிருக்க-

பைஸாந்தியச் சக்கரவர்த்தி விடுத்த உதவிக் கோரிக்கையினால் அல்லவா சிலுவைப்படை உருவானது? அவர்களது இலக்கு ஜெருசலம் என்று போப் அர்பன் திட்டத்தை உருமாற்றியிருந்தாலும் முதல் சேவையாக அலக்ஸியஸின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் இல்லையா? தவிர, அலக்ஸியஸையும் அவரது கோரிக்கையையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, அவரது உதவி இல்லாமல் சிலுவைப் படை ஜெருசலத்தை அடைந்துவிட முடியாதல்லவா? அதனால் அவர்களது அணிவகுப்பின் முதல் இலக்காக , கான்ஸ்டன்டினோபிள் வந்து இறங்கியது படை.

இன்று ஐரோப்பாவும் மேற்குலகும் தாங்கள்தாம் உயர்வான நாகரிக சமூகம் என்று நினைத்துக்கொண்டிருக்கலாம். அதை உலகமும் நம்பிக்கொண்டிருக்கலாம். ஆனால் பதினோராம் நூற்றாண்டில் கிழக்கத்திய தேசமான பைஸாந்தியம்தான் கிறிஸ்தவர்களின் நாகரிகத்திற்கு மையப்புள்ளியாக அமைந்திருந்தது. கிரேக்க, ரோம சாம்ராஜ்ஜியங்களின் பெருமையையும் மகிமையையும் கைப்பற்றி வைத்திருந்தது. சக்ரவரத்தி அலக்ஸியஸோ தமது வம்சாவளியை முற்காலத்து அகஸ்டஸ் சீஸர், கான்ஸ்டன்டைன் வரை நூல் பிடித்து நெஞ்சை நிமிர்த்திக்கொண்டிருந்தார். அவையெல்லாம் சேர்ந்து, பரங்கியர்களின் மனத்தில் சக்ரவர்த்தியையும் அவரது ராஜாங்கத்தையும் பற்றிய வியப்பும் மதிப்பும் கலந்த பிரமிப்பாக உருவாகியிருந்தன.


கான்ஸ்டன்டினோபிள் நகரை அடைந்த படை அதன் வாசலை நெருங்கினால் மாபெரும் வெளிச் சுவர் நான்கு மைல்களுக்கு நீண்டிருந்தது. பதினைந்து அடி தடிமன், அறுபது அடி உயரம் கொண்ட அதன் பிரம்மாண்டத்தைப் பார்த்து அவர்கள் தம் மூக்கில் விரல், உள்ளங்கை, முழங்கை வைத்துப் பிரமிக்காத குறை. உள்ளே நுழைய அனுமதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது வியப்பு மேலும் பெருகியது. இலத்தீன் ஐரோப்பாவின் பெரும் ஜனத்தொகை கொண்ட நகரங்களுடன் ஒப்பிட்டால்கூட ஐந்து இலட்சம் மக்கள் தொகை கொண்டிருந்த கான்ஸ்டன்டினோபிள் நகர் பத்து மடங்கு பெரியது. எனும்போது, பரங்கியர்களுக்கு எப்படி இருக்கும்? விழி விரிந்து போனார்கள்.


சக்ரவர்த்தி கூட்டுப் படையணிக்குத் தலைமை தாங்குவார். நாம் அவரது ஆணைக்குக் கட்டுப்பட்டுச் சேவையாற்றப் போகிறோம் என்று சிலுவைப் படையினர் நம்ப ஆரம்பித்தார்கள். தங்களது படை அணிகளுக்கு அலக்ஸியஸ் தலைமை தாங்க வேண்டும்; ஒன்றிணைந்த பெரும் படையாகத் தங்களை அவர் ஜெருசலம் நகரத்திற்கு வழிநடத்திச் செல்ல வேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால் அப்படியான திட்டமோ, நோக்கமோ அலக்ஸியஸுக்குத் துளியும் இல்லை. அவரைப் பொறுத்தவரை அவருக்குத் தம் பைஸாந்தியத்தின் இலட்சியமே முதன்மையானதாக இருந்ததேயன்றி, சிலுவைப்படையின் ஜெருசலம் என்பது அவரது செயல்திட்டத்தில் இரண்டாம், மூன்றாம் இடத்தில்கூட இல்லை.

அலெக்ஸியஸ் சிலுவைப் படையினரை மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் வரவேற்றார். வெளிச் சுவரிலிருந்து தலைநகர் வரை அவர்கள் பலத்த கண்காணிப்புடன் அழைத்து வரப்பட்டனர். தமது நோக்கத்தில் அலெக்ஸியஸ் மிகத் தெளிவாக இருந்தார். வந்திருப்பவர்கள் தமது படைக்கும் முஸ்லிம் சுல்தான்கள் மீதான படையெடுப்பிற்கும் உதவ வந்திருக்கும் இராணுவச் சாதனம் என்ற கண்ணோட்டத்துடனேயே அவர்களை அவர் அணுகினார். அப்படித்தானே அவர் போப் அர்பனுக்கு வேண்டுகோள் அனுப்பியிருந்தார்? ஆனால் வந்து சேர்ந்திருந்தது அவரது எதிர்பார்ப்பை மீறிய பெரும் சாதனம்; கட்டுக்கடங்காத கொடூரர்களின் கூட்டம் என்ற பிம்பம் அவரது மனத்தில் ஏற்பட்டிருந்தது. இருக்கட்டும். பரங்கியர்களின் அந்த முரட்டு உற்சாகத்தைச் சேணம் பூட்டிக் கையாண்டுவிடலாம், தம் சாம்ராஜ்யத்தின் நலனுக்குப் பயன்படுத்திவிடலாம் என்று அவருக்கு நம்பிக்கை இருந்தது.

சிலுவைப் படை துருக்கியர்களை எதிர்த்து எத்தகு வெற்றி அடைந்தாலும் சரி. அது பெரு மகிழ்ச்சி. எனவே வெகு தாராளமாய் அவர்களுக்கு உதவி புரியலாம். தமது ராஜாங்கத்திற்கு இஸ்லாம் தோற்றுவித்துள்ள அச்சுறுத்தலை விரட்டி, வெகு முக்கிய நகரமான அந்தாக்கியவை மீட்டுத் தந்தால் போதும், செல்வத்தை அள்ளி அள்ளி அவர்களுக்கு இறைக்கலாம் என்று அவர் தயாராக இருந்தார். ஆனால், தொலைதூரத்தில் உள்ள புனித நகரை மீட்கிறேன் பேர்வழி என்று நீண்ட நெடிய போருக்கு உட்பட்டு, அதில் தலைகொடுத்து, தம் ராஜாங்கம் முஸ்லிம்களின் படையெடுப்புக்கு ஆளாகி, தூக்கி வீசப்படும் அபாயத்திற்கு அது உள்ளாக அவர் சிறிதும் தயாராக இல்லை. நோக்கத்திலும் எதிர்பார்ப்பிலும் இரு தரப்பினர் இடையே ஏற்பட்டிருந்த இந்தப் பிளவு பின் தொடரப்போகும் வரலாற்றில் முக்கியப் பங்கு வகித்தது.

எது எப்படியிருப்பினும் பரங்கியர்களின் மீதான தமது ஆளுமையைத் திட்டவட்டமாகச் செலுத்த அலெக்ஸியஸ் முடிவெடுத்தார். ஐரோப்பாவின் பல பகுதிகளிலிருந்தும் பல இனக் குழுக்களிலிருந்தும் துண்டு துண்டாகத்தானே சிலுவைப் படை உருவாகியிருந்தது? அந்த விரிசல் கோட்டை, தமக்கேற்ப, அவர் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். எப்படி? ஒவ்வோர் இளவரசனையும் கோமானையும் தனித்தனியே அழைத்து, சிறப்பாக உபசரித்தார். அவர்களைப் பிரமிப்பில் ஆழ்த்திக் கட்டுப்படுத்த, தம் தலைநகருக்கு இயல்பாகவே அமைந்திருந்த தோற்றப் பிரம்மாண்டத்தைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டார் அலக்ஸியஸ்.

 

ஜனவரி 20, 1097ஆம் ஆண்டு போயானின் காட்ஃப்ரெ முதலில் வந்து சேர்ந்தார். அவரும் அவரைச் சார்ந்த முக்கிய பிரமுகர்களும் செல்வச் செழிப்பான அரண்மனைக்கு வரவழைக்கப்பட்டனர். பெரும் சிம்மாசனத்தில் அலக்ஸியஸ் கம்பீரமாக அமர்ந்திருந்தார். தம்மையோ தம்முடன் வந்திருப்பவர்களையோ முத்தமிட்டு வரவேற்க, சக்ரவர்த்தி எழுந்து வராததை பிரமிப்புடன் கவனித்தார் கோமான் காட்ஃப்ரெ. அந்தப் பிரமிப்பு அவரைவிட்டு விலகிவிடாத வகையில் பேசத் தொடங்கினார் அலக்ஸியஸ்.

‘போரில் நீங்கள் கைப்பற்றப்போகும் கோட்டைகள், நகரங்கள், நாடுகள் ஆகியனவற்றை நாம் நியமிக்கும் அதிகாரியின் வசம் ஒப்படைத்துவிட வேண்டும். அவையாவும் இதற்குமுன் எங்களுடைய உடைமையாக இருந்தவை.’

அதாவது சிலுவைப்படை கைப்பற்றும் அனைத்தும் பைஸாந்தியர்கள் வசம் வந்தாக வேண்டும். இந்த நிபந்தனைக்குக் கட்டுப்பட்டு காட்ஃப்ரெ சத்தியப் பிரமாணம் அளிக்கவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. வேறு வழியின்றி, குத்தகைதாரர் நில உரிமையாளருக்கு அளிப்பதைப்போன்ற சத்தியப் பிரமாணம் அளித்தார் காட்ஃப்ரெ. சிலுவைப் போரை வழிநடத்தும் உரிமையை அலக்ஸியஸுக்கு அளிக்கும் விசுவாசப் பிரமாணம் உருவானது. ஆனால் பதிலுக்கு அலக்ஸியஸ் காட்ஃப்ரெவுக்குத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் ஆலோசனையையும் அளிக்க வேண்டும் என்று ஒப்பந்தமானது.

அதையடுத்து, இதோ பார் பைஸாந்தியத்தின் வள்ளல் குணம் என்பதைப்போல் அந்த இளவரசருக்குத் தங்கம், வெள்ளி, விலையுயர்ந்த துணிமணிகள், குதிரைகள் என்று அள்ளி அள்ளி வழங்கினார் அலெக்ஸியஸ். அதில் திக்குமுக்காடிய காட்ஃப்ரெ சுதாரிப்பதற்குள் அப்படியே அவரையும் அவருடைய படையையும் பாஸ்போரஸ் ஜலசந்தியைத் தாண்டி ஆசியா மைனருக்கு அனுப்பி வைத்துவிட்டார் அலெக்ஸியஸ். மத்தியதரைக் கடலையும் கருங்கடலையும் இணைக்கும் பாஸ்போரஸ் இடைகழிதான் ஐரோப்பாவையும் ஆசிய கண்டத்தையும் பிரிக்கிறது.

அடுத்து வந்த மாதங்களில் கோமான் காட்ஃப்ரெவுக்கு நிகழ்ந்த அனுபவமே இதர அனைத்து இளவரசர்களுக்கும் வாய்த்தது. தரான்தோவைச் சேர்ந்த பொஹிமாண்டுக்கு சக்ரவர்த்தி அளித்த வெகுமதியைக் கண்டு பொஹிமாண்டின் கண்கள் பிதுங்கி வெளிவந்துவிட்டன என்று எழுதி வைத்துள்ளார் அன்னா.

ஆனால், சில இளவரசர்கள் அலக்ஸியஸ் வலையில் விழாமல் அவருக்குப் பிரமாணம் அளிக்காமல் தப்பிக்க நினைத்து நேராகவே பாஸ்போரஸ் ஜலசந்தியைக் கடந்தனர். ஆனால் அவர்களையும் விடாமல் பிடித்துக் கட்டுப்படுத்தினார் அலெக்ஸியஸ். துலூஸின் கோமான் ரேமாண்ட் ஓரளவு பிடிவாதம் பிடித்து, இறுதியாகச் சற்று மாற்றி வடிவமைக்கப்பட்ட ஒப்பந்தத்திற்குக் கட்டுப்பட்டார். அந்த ஒப்பந்தத்தின் அடிநாதம் ரேமாண்ட் எவ்வகையிலும் அலெக்ஸியஸின் அதிகாரத்திற்கும் ஆளுமைக்கும் உடைமைகளுக்கும் அச்சுறுத்தலாய் விளங்கமாட்டார் என்ற உறுதிமொழி.

இப்படியாக, முதலாம் சிலுவை யுத்தப் படையினர் பிப்ரவரி 1097ஆம் ஆண்டு, ஆசியா மைனர் பகுதியில் சிறு சிறு அளவில் குழுமத் தொடங்கி, அடுத்தச் சில மாதங்களில் அவர்களது எண்ணிக்கை 75,000 வரை எட்டியது. அதற்குச் சில மாதங்கள் முன் `மக்களின் சிலுவைப் போர்’ படையை எளிதாக விரட்டியடித்திருந்த கிலிஜ் அர்ஸலான் இந்த அபாயத்தை அதன் வீரியத்தைச் சற்றும் உணரவில்லை. முந்தைய படைகளைப் போவே இவர்களையும் எளிதாகச் சமாளித்துவிட முடியும் என்ற எண்ணத்தில் முஸ்லிம் சுல்தான்களுக்கும் தமக்கும் இடையே ஏற்பட்டிருந்த மற்றொரு பிரச்சினையைக் கவனிக்கத் தம் பகுதியிலிருந்து கிழக்கே தொலைதூரம் சென்றுவிட்டார் அவர். பாஸ்போரஸ் ஜலசந்தியைக் கடக்க வேண்டியிருந்த சிலுவைப் படையினருக்கு அது பெரும் வசதியாகிவிட்டது. முஸ்லிம் தரப்பிலிருந்து எந்தவொரு சவாலும் பிரச்சினையும் இன்றி, சுற்றுலாப் பயணிகளைப் போல் சாரிசாரியாக வந்து சேர்ந்தனர்.

‘அடுத்து?’ என்று அலக்ஸியஸை ஏறிட்டு நோக்கியது சிலுவைப் படை. ‘நைஸியா’ என்று கைகாட்டினார் சக்ரவர்த்தி. பைஸாந்தியர்களிடமிருந்து கைப்பற்றி, ரோம ஸல்தனத்தின் தலைநகராக கிலிஜ் அர்ஸலான் அறிவித்திருந்த நைஸியா!

 

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி 
தொடர் - 14
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி 
தொடர் - 16

இந்தக் கட்டுரையின் மூலம்சத்தியமார்க்கம்.காம். ஆசிரியர்:  நூருத்தீன்


1 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34: சென்னாப்ரா யுத்தம்

பெருக்கெடுத்துப் பீய்ச்சிய இரத்தத்துடன் துவண்டு விழுந்த மவ்தூத், துக்தெஜினின் இல்லத்திற்குத் தூக்கிச் செல்லப்பட்டார். அன்றைய நாள் நோன்பு நோற்றிருந்தார் அவர்.அவரிடம் நோன்பை முறித்துவிடும்படி துக்தெஜின் கூற. ‘நோன்பு நோற்ற நிலையில் நான் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறேன்’ என்று மறுத்துவிட்டார் மவ்தூத். அதே நிலையில் தளபதி மவ்தூத் பின் அத்-தூந்தகீன் மரணமடைந்தார்.

2 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33: மவ்தூத் பின் அத்-தூந்தகீன்

ரித்வானின் நடவடிக்கைகளால் அலெப்போவில் வசித்த முஸ்லிம் குடிமக்களும் மார்க்க அறிஞர்களும் மிகவும் நொந்து போனார்கள். சிரியாவிலுள்ள பகுதிகளை முஸ்லிம்கள் சிலுவைப் படையினரிடம் இழந்து கொண்டிருக்கின்றனர். ரித்வானோ அவர்களை எதிர்க்கத் திராணியின்றி இந்தளவிற்குக் கீழிறங்கி அடிபணிந்துவிட்டார். நமக்கு கலீஃபாதான் உதவி செய்ய வேண்டும், பாக்தாதின் கதவைத் தட்டுவோம் என்று அலெப்போவிலிருந்து ஒரு தூதுக் குழு கிளம்பி பாக்தாத் வந்து சேர்ந்தது.

3 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32: சிலுவைப் படையும் பைஸாந்தியமும்

கி.பி. 1108ஆம் ஆண்டு மவ்தூத் பின் அத்-தூந்தகீன் மோஸுலுக்கு வருகிறார் என்பதை அறிந்ததும் தப்பித்து ஓடிய ஜவாலி, முன்னேற்பாடாகச் சிறையில் இருந்த பால்வின் IIஐயும் தம்முடன் கூட்டிக் கொண்டுதான் ஓடினார். சிலுவைப் படையுடன் கூட்டணி அமைப்பதற்கு அவரை முக்கியத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துவோம் என்ற முன் யோசனை.

4 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31: கிலிஜ் அர்ஸலானின் முடிவு

பிரிந்து கிடக்கும் முஸ்லிம் தலைவர்களின் கூட்டணியும் ஒருங்கிணைந்த கூட்டணிப் படையும் சிலுவைப் படையினரை எதிர்க்க அவசியம் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. அதனால் முதல் கட்டமாக, உதிரியாகப் பல பகுதிகளில் ஆண்டுகொண்டிருந்த ஆட்சியாளர்களைத் தொடர்பு கொண்டார் ஜெகெர்மிஷ். அவர்களுள் அலெப்போவிலிருந்த ரித்வான், மர்தின் பகுதியின் இல்காஸி அல்-அர்துகி, சின்ஜாரின் ஆட்சியாளர் அல்பி திமுர்தஷ், பாரசீகத்திலிருந்து அல்-அஸ்பஹத் ஆகியோர் முக்கியமானவர்கள்.

5 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30: பாலிக் யுத்தம்

கட்டவிழ்த்து விட்டால் சிலுவைப் படைத் தலைவர் முஷ்டியை முறுக்குவாரே என்று முஸ்லிம்களுக்குத் தெரியாதா? வசமாக மாட்டிக்கொண்டு கைதாகிச் சிறையில் இருந்தவரை அவர்கள் ஏன் கொல்லவில்லை? பணயத் தொகைக்கு ஆசைப்பட்டு விடுவித்து, தங்களுக்கு எதிராய் அவர் களமிறங்க ஏன் மீண்டும் வாய்ப்பு அளித்தார்கள் என்றெல்லாம் நமக்குக் கேள்விகள் எழலாம், வியப்பு மேலிடலாம். ஆனால், ஒற்றை வார்த்தையில் பதில் சொல்ல இயலாத இத்தகு செயல்கள், பிழைகள், திகைப்புகள் வரலாறு நெடுக நிறைந்துள்ளன. அவலம் என்னவெனில் வரலாற்றுப் பிழைகளிலிருந்து நாம் பாடம் படிக்க மறுப்பதுதான்.

6 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29: மெர்ஸிஃபான், ஹெராக்லியா யுத்தங்கள்
7 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28: ஜிஹாது ஒலியும் சிலுவைப் படையும்
8 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27: மெலிடீன் போர்
9 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-26: மெய்ச் சிலுவை
10 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35: ராஜா பால்ட்வினின் முடிவு
11 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-25: ஜெருஸல வீழ்ச்சியும் குருதி ஆறும்
12 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-24: ஜெருஸலப் போர்
13 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-23 ஜெருஸல முற்றுகை
14 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-22: மண்ணாசையில் விழுந்த மண்
15 வீழ்ந்தெழுவோம் : பொருளாதார நெருக்கடியை எப்படி சமாளித்தார்கள் - அழகிய முன்னுதாரனம். (தொடர்-45)
16 தர்ம கற்கள் - அழகிய தர்மம்
17 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-20: அந்தாக்கியாவின் இரண்டாம் முற்றுகை
18 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-21: புனித ஈட்டி
19 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 19: அந்தாக்கியாவின் வீழ்ச்சி!
20 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 18: அந்தாக்கியா
21 திருநெல்வேலி வரலாறு...!
22 மாவீரன் திப்புசுல்தான்:இந்திய விடுதலைப் போரின் உயிர்நாடி
23 அந்த இரண்டணா ......
24 சீனாவில் விதைத்த விதை - ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி)
25 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 17
26 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 16
27 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 14
28 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 13
29 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 12
30 ஔரங்கசீப் அவர் அழித்ததைவிட அதிக கோவில்களைக் கட்டினார்
31 இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ்
32 இதுவல்லவா நபி நேசம்!!!!!!!
33 தனக்குரியவருக்காக காத்திருக்கும் இரயில் ....
34 உலகத்திற்கே ஒளி விளக்கேற்றிய மதீனாவில், விளக்கேற்றியது எப்போது?
35 உஸ்மானியா பேரரசு கடைவீதியின் தொங்கும் கூடைகள்
36 நான் குதுப்மினார் பேசுகிறேன்-1
37 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 11
38 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -1
39 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -2
40 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -3
41 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -4
42 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -5
43 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 6
44 கையிலே ஒரு துணிப்பை, எளிய நடை, எளிய உடை உத்தமபாளையம் எஸ்.எஸ். ஹஜரத்
45 இஸ்லாம் வென்றெடுத்த ஷாம்
46 தமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர்
47 சாரதா பீடம் சொல்லும் திப்புவின் மதநல்லிணக்கம்
48 சூஃபிக்களும் புனித போர்களும்
49 யார் தேச விரோதி?
50 இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.
51 ஸயீத் இப்னு ஆமிர் سعيد ابن عامر (ரலி)
52 விடுதலைப்போரில் வீரமங்கையர்
53 பூரண சுதந்திரம் கேட்ட முதல் இந்தியன்
54 இஸ்லாம் இந்தியாவுக்கு அந்நிய மதமா?
55 நாகூர் - ஒரு வரலாற்றுப் பார்வை
56 இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்
57 கோரிப்பாளையம் தர்கா கல்வெட்டுகள்
58 சமயப் பொறை பேசும் சரித்திரச் சான்றுகள்
59 தமிழ் முஸ்லிம்களின் இடப்பெயர்ச்சி வரைபடம்
60 விடுதலை போரில் நெல்லை மாவட்ட முஸ்லிம்கள்
61 தமிழகத்தில் முஸ்லீம்கள் வரலாறு
62 சுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது
63 இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.
64 தமிழகத்தில் முஸ்லீம்கள்
65 இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?
66 இந்திய விடுதலைப் போரும் முஸ்லீம்களும்
67 இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு
68 பாடலியில் ஒரு புலி
69 தேசவிடுதலைக்கு ஆயுதப்புரட்சியே தீர்வு
70 ஒரு மனிதன் ஒரு பட்டாளம் - மௌலவி செய்யது அஹ்மதுல்லாஹ் ஷாஹ்.
71 முதல் சுதந்திரப் பிரகடனம்
72 மவுலானா எனும் மகத்தான இந்தியர்
73 காலித் பின் வலீத் (ரலி)
74 தமிழ் முஸ்லிம்களின் வரலாற்று பொக்கிஷம். ஒரு ஆவணக் குறும்படம்
75 இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
76 முதல் வாள்!
77 கஜினி முகம்மது மற்றும் முகம்மது துக்ளக் (தவறான ணோட்டங்கள்)
78 இலங்கையில் முஸ்லிம்கள் - அன்றும் இன்றும்
79 மாவீரன் மருத நாயகம் கான் சாஹிப்