Tamil Islamic Media

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-23 ஜெருஸல முற்றுகை

புனித நகரமான ஜெருஸலத்தை நோக்கித் தங்களது அணிவகுப்பின் கடைசிக் கட்டம் தொடங்கியதும் அந்த முதலாம் சிலுவைப் போர்ப் படையினர் மத்தியில் ஓர் அவசர உணர்வு தொற்றியது. ஒருவழியாகத் தங்களது புனித யாத்திரை

நிறைவேறப் போகிறது; அந்த நிலம் நம் வசமாகப் போகிறது என்ற பரபரப்பு, உத்வேகம் அது. அதனால், மேற்கொண்டு எதுவும் இனி நம்மைத் தாமதப்படுத்தக்கூடாது; இலக்கு திசை திரும்பக்கூடாது என்று முடிவெடுத்தனர். லெபனான், ஃபலஸ்தீன் வழியாகச் செல்லப்போகிறோம்; அவ்வழியில் உள்ள நகரங்களையும் துறைமுகங்களையும் கைப்பற்றினால் ஐசுவரியம் பெருகும்; நிலமும் கடலும் நம் வசமாகும்; என்றாலும் இப்பொழுது அவை முக்கியமில்லை, புனித நகரம் ஜெருஸலம், அது மட்டுமே இனி நம் இலக்கு என்ற உறுதியுடன் வேகமாக நகரத் தொடங்கியது முதலாம் சிலுவைப் படை.

அதற்கு மற்றொரு முக்கியக் காரணமும் இருந்தது. அரசியல் காரணம்! ஸன்னி முஸ்லிம்களின் அப்பாஸிய கிலாஃபத்துக்கு எதிரிகளான எகிப்தின் ஃபாத்திமி ஷிஆக்களுடன் நட்புறவை வளர்த்துக்கொள்ளச் சிலுவைப் படை முனைந்ததை முன்னர் பார்த்தோமில்லையா? இடைப்பட்ட காலத்தில் அந்த உறவில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. அந்தாக்கியாவில் சிலுவைப் படைக்கு எதிரான கெர்போகாவின் போர் முயற்சி வெற்றியடையவில்லை; ஸெல்ஜுக் சுல்தான்கள் ஆளுக்கொரு திசையில் தங்களுக்குள் மோதிக்கொண்டு ஒற்றுமை இன்றி இருக்கின்றனர் என்பதையெல்லாம் கவனித்து ஸன்னி முஸ்லிம்களின் பலவீனத்தைச் சரியாக எடைபோட்ட ஃபாத்திமீக்கள் 1098ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், துருக்கியர்களிடமிருந்து ஜெருஸலம் நகரைக் கைப்பற்றிவிட்டனர். இந்த உடைமை மாற்றத்தைக் கவனித்த சிலுவைப் படைத் தலைவர்கள் ஃபாத்திமீக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சுமூகமான முடிவு கண்டு, புனித நகரைப் பெற்று விடலாம் என்று முனைந்தனர். ‘ஜெருஸலம் நகரின் உரிமைகளை எங்களுக்குத் தந்துவிடுங்கள். அதற்கு ஈடாக நாங்கள் கைப்பற்றியுள்ள நிலங்களிலிருந்து ஒரு பகுதியை உங்களுக்குத் தந்துவிடுகிறோம்’ என்று தூது அனுப்பினர். எகிப்தியர்களோ, ஜெருஸலத்தை விட்டுக்கொடுக்க முடியாது என்று அப்பட்டமாக மறுக்க, பேச்சுவார்த்தையும் தோல்வியுற்றது. பூவாமல், காய்க்காமல் அவர்களிடையே உறவும் முறிந்தது. ஆகையால், எகிப்தின் அல்-அஃப்தால் ஜெருஸலத்தைப் பாதுகாக்கவும் தங்களைத் தடுத்துத் தாக்கவும் பெரியதொரு படையைத் திரட்டுவதற்கு முன் ஜெருஸலத்தை எட்டிவிட வேண்டும் என்ற மும்முரமும் சிலுவைப் படையின் அவசரத்தை அதிகப்படுத்திவிட்டது.

மத்தியதரைக் கடலோரப் பகுதி வழியாகச் சிலுவைப் படையினர் தெற்கு நோக்கி விரைந்தனர். அந்தாக்கியாவிலும் மர்ரத்திலும் அந்தப் படை நிகழ்த்திய காட்டுமிராண்டித்தனமும் அயோக்கியத்தனமும் முஸ்லிம்களுக்குத் தெரியவந்து அவை அவர்கள் மத்தியில் பரவியிருந்ததால் சிலுவைப் படை விரையும் பகுதியில் இருந்த குறுநில முஸ்லிம் ஆட்சியாளர்கள் அவர்களிடம் இடைக்கால அமைதி உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டனர். அது மட்டுமின்றி, அந்தப் படையினருக்குத் தேவையான உணவையும் பொருள்களையும் கூட அளித்தனர். வேறு வழி? அந்த அமீர்கள் தங்கள் குடிமக்களுக்கு அளிக்க முடிந்த குறைந்தபட்ச பாதுகாப்பாக அதைக் கருதினர். இது சிலுவைப் படையின் பயணத்தை மேலும் இலகுவாக்கிவிட்டது. முஸ்லிம்களின் முக்கியக் குடியிருப்பு நகரங்களான டயர் (Tyre), ஏக்கர் (Acre), சிசேரியா (Caesarea) ஆகியனவற்றைக் கடக்கும்போது கூட, குறைந்த அளவிலான, சம்பிரதாயமான எதிர்ப்பு மட்டுமே இருந்தது. அவற்றையெல்லாம் சிலுவைப் படை எளிதாகச் சமாளித்து விரைந்தது.

அர்ஸுஃப் (Arsuf) நகரின் அருகே வந்ததும் கரையோரப் பாதையிலேயே வந்துகொண்டிருந்த படை உள்நோக்கித் திரும்பியது. ஜெருஸலம் நகரத்திற்குச் செல்லும் சாலையில் கடைசியில் உள்ள ரம்லாவை அணுகியதும் அதுவரை விறுவிறுவென்று முன்னேறி வந்திருந்த படை அங்குதான் சற்றுத் தாமதித்தது. அங்கு, தங்களுக்கு எதிர்ப்பு இருக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், ரம்லாவில் இருந்த கோட்டையும் ஃபாத்திமீக்களால் கைவிடப்பட்டு இருந்ததால், அங்கும் அவர்களுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை.

ஜெருஸலத்தை அப்பாஸியர்களிடமிருந்து கைப்பற்றிய ஃபாத்திமீக்களின் அல்-அஃப்தால், அந்நகரைக் கைப்பற்ற சிலுவைப் படை முன்னேறி வருகிறது என்பதை நன்றாக அறிந்திருந்த போதிலும் அதைத் தடுக்கவோ, எதிர்க்கவோ எவ்வித முன்னேற்பாடும் செய்யாமல் செயலற்றுக் கிடந்தது ஒரு வினோதம். அதனால் அந்தாக்கியாவிலிருந்து புறப்பட்ட சிலுவைப் படை ஒரே மாதத்தில் ஜெருஸலம் நகரின் வாயிலை வெகு எளிதாக எட்டியது. கி.பி. 1099, ஜுன் மாதம் 7ஆம் நாள், அந்நகரின் வாயிலை வந்தடைந்தது.

- * -

ஜெருஸலம் நகரம் ஜுடியன் மலைக் குன்றுகளுக்கு (Judean hills) மத்தியில், உயரமான நிலப்பகுதியில் தனியாக நின்றிருந்தது. அதன் கிழக்கு, தென் கிழக்கு, மேற்குத் திசைகளில் ஆழமான பள்ளத்தாக்குகள் அமைந்திருந்தன. நகரைச் சுற்றி அறுபது அடி உயரம், பத்து அடி தடிமனில் இரண்டரை மைல் நீளத்திற்கு வலிமையான அரண். நகரை அணுகித் தாக்குவதற்கு வடக்கு, தென் மேற்குப் பகுதியிலிருந்த தட்டையான நிலப் பரப்பு மட்டுமே சாத்தியமளித்தது. ஆனால், அப்பகுதிகளில் பல அடுக்குப் பாதுகாப்பாகச் சுவர், அதற்குப் பின்னே மற்றொரு சுவர், அதையடுத்து அகழிகள் ஆகியன அமைக்கப்பட்டிருந்தன.

இந்தச் செவ்வகப் பாதுகாப்பு அமைப்பில் ஐந்து பெரிய வாயில்கள். ஒவ்வொன்றிலும் இரண்டு பாதுகாப்புக் கோபுரங்கள். அவையன்றி வடமேற்கு மூலையில் வலிமை மிக்க நாற்கோணக் கோபுரமும் (Quadrangular Tower) மேற்குச் சுவரின் நடுப்பகுதியில் டேவிட் கோபுரமும் (Tower of David) முக்கியமான பாதுகாவலாய் அமைந்திருந்தன. அவை யாவும் பெரும் சதுரக் கற்களால் கட்டப்பட்டிருந்தன. அவற்றைப் பூசி மெழுகியிருந்தது உருக்கி ஊற்றப்பட்ட ஈயம். ‘படை வீரர்களுக்குத் தேவையான உணவு கையிருப்பில் இருந்தால் போதும், வெறுமே பதினைந்து இருபது வீரர்கள் எத்தகு தாக்குதலிலிருந்தும் பாதுகாத்துவிட முடியும்‘ என்று லத்தீன் வரலாற்று ஆசிரியர் ஒருவர் அதை விவரித்திருக்கிறார்.

 

 

ஒன்றாகத் திரண்டு வந்திருந்தாலும் சிலுவைப் படையின் தலைமையில் முக்கியமான பிளவு ஒன்று ஏற்பட்டது. அர்கா முற்றுகைக்குப்பின் முக்கியத்துவம் மிகவும் குறைந்துபோன ரேமாண்ட் ஓர் அணியாகவும் சிலுவைப் படையில் வளர்ந்து வரும் தலைவரான போயானின் காட்ஃப்ரெ (Godfrey of Bouillon) மற்றோர் அணியாகவும் பிரிந்து நின்றனர். ரேமாண்ட் தம்மிடமிருந்த படைகளை ஜெருஸலம் நகரின் தெற்கு சியோன் நுழைவாயிலை அச்சுறுத்தும் வகையில் தென்மேற்கே உள்ள சியோன் மலையில் நிறுத்தினார். காட்ஃப்ரெ, நகரை வடக்கிலிருந்து முற்றுகையிட முடிவு செய்து, நாற்கோண கோபுரத்துக்கும் டமாஸ்கஸ் வாயிலுக்கும் இடைபட்ட பகுதிக்குத் தம் படையுடன் நகர்ந்தார். இவ்விதம் இரண்டாகப் பிரிந்து அவர்கள் விலகி நிற்க முடிவெடுத்தாலும் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட இந்தப் பிளவு ஜெருஸலம் நகரம் இருமுனைத் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயத்தை ஏற்படுத்திவிட்டது.

அதே நேரத்தில் பரங்கியர்களுக்கும் பெரும் சிக்கல்கள் சில இருந்தன. அந்தாக்கியாவை முற்றுகையிட்டதைப் போல் ஜெருஸலத்தை நெடுங்காலத்திற்கு முற்றுகையிட முடியாது என்பது ஒன்று. படையினர் எண்ணிக்கையோ பெரும் சுற்றளவில் அமைந்திருந்த நகரின் அரணைச் சுற்றிவளைக்கப் போதுமானதாக இல்லை என்பது மற்றொன்று. தவிர, எகிப்திலிருந்து ஃபாத்திமீக்களின் உதவிப் படை எந்நேரமும் வந்துவிடலாம் என்பதால் கால அவகாச நெருக்கடி வேறு. இவையன்றி, வேகவேகமாக அவர்கள் அணிவகுத்து வந்திருந்ததால், தங்களைப் பின்புறத்திலிருந்து பாதுகாக்கவோ, தேவையான தளவாடங்களையும் உணவுப் பொருள்களையும் கொண்டுவந்து சேர்க்கவோ, நம்பகமான, வலிமையான ஏற்பாடுகள் எதையும் அவர்கள் ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

ஜெருஸலத்தில் உள்ள முஸ்லிம் படையினர் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் என்பதைச் சிலுவைப் படையினரால் அனுமானிக்க இயலவில்லை. பல ஆயிரக்கணக்கில் இருப்பர் என்பது மட்டும் அவர்களுக்கு நிச்சயமாகத் தெரிந்திருந்தது. சிலுவைப் படையோ 1300 சேனாதிபதிகள் உட்பட 15,000 போர் வீரர்களைத் தங்களால் திரட்ட முடியும் என்ற நிலையில் இருந்தது. அது ஒருபுறம் இருக்க, நகரை முற்றுகையிட்டுத் தாக்குவதற்குப் பெரும் ஆயுதவளம் தேவைப்படும் அல்லவா? அதில்தான் அவர்கள் மிகவும் பலவீனமாக இருந்தார்கள். அவர்களிடம் இருந்தவையெல்லாம் ஒரேயோர் ஏணியும் பரிதாபகர நிலையில் இருந்த ஆயுதங்களும் மட்டுமே.

ஃபாத்திமீக்களின் ஆளுநர் இஃப்திகார் அத்-தவ்லா பரங்கியர்களின் தாக்குதலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தார். சுற்றுப்புற கிணறுகளில் நஞ்சு கலக்கப்பட்டது. மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. உள்ளிருந்தபடியே துரோகம் இழைக்கக்கூடும், தங்கள் மதத்தவர் என்ற அபிமானத்தில் முஸ்லிம்களைக் காட்டிக் கொடுத்துவிடுவார்கள் என்ற அச்சத்தினால் நகரினுள் வாழ்ந்த கிரேக்க கிறித்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

ஜூன் 13, 1099. சிலுவைப் படை வந்து சேர்ந்து ஆறு நாள்கள் ஆகியிருந்தன. அன்று ஜெருஸலம் நகரின்மீது முதல் நேரடித் தாக்குதலை அவர்கள் தொடுத்தனர். ஆயுத வளம் குறைவாக இருந்தவர்கள் என்ன நம்பிக்கையில், தைரியத்தில் தாக்குதலைத் தொடங்கினார்கள் என்று வியப்பு மேலிடுகிறதல்லவா? இங்கும் ஒரு துறவி அவர்களை உத்வேகப்படுத்துவதற்கு வந்து சேர்ந்தார். ஆலிவ் மலையில் அலைந்து திரிந்தபடி இருந்த அத்துறவி தீர்க்கதரிசனம் வழங்கி, சிலுவைப் படையின் மூர்க்கத்தனத்தைத் தூண்டி, துணிந்து தாக்குங்கள், வெற்றி உங்களுக்கே என்றெல்லாம் வற்புறுத்தியதும் போர் தொடங்கியது.

நகரின் வடமேற்கு மூலையில் டான்க்ரெட் தலைமையிலான அணி முன்னேறியது. தங்களிடமிருந்து ஒரே ஓர் ஏணியைப் பயன்படுத்திப் பரங்கியர்களின் துருப்புகள் அரண் சுவரில் ஏறவும் செய்தன. ஆனால் சுவரின் உச்சியை முதலாமவன் எட்டிப் பற்றிய நொடியே அவனது கரம் வெட்டப்பட்டுத் துண்டாகி விழுந்தது. முஸ்லிம்கள் தரப்பு மிகக் கடுமையாக எதிர் தாக்குதலில் இறங்கியது. அதன் விளைவாய் நிகழ்ந்த பாதிப்புகளும் இழப்பும் சிலுவைப் படையின் வேகத்தைக் குறைத்தன. நிலைமையை உணர்ந்த அதன் தலைவர்கள் ஒன்றுகூடித் தங்களது வியூகத்தைப் பரிசீலித்தனர். தகுந்த தளவாடங்களும் ஆயுதங்களும் இன்றிப் பெரிதாக எதையும் சாதித்து விட முடியாது என்பது அவர்களுக்குப் புரிந்தது. முதலில் ஆயுதங்களுக்கு ஏற்பாடு செய்வோம். அதுவரை தாக்குதலை நிறுத்தி வைப்போம் என்று முடிவெடுத்தனர். அடுத்து, அதற்கான பொருள்களை வெறித்தனமாகத் தேடத் தொடங்கினார்கள்.

ஜுன் மாதம் சுட்டெரிக்கும் கோடைப் பருவம். ஐரோப்பியப் படைகளை ஃபலஸ்தீனிய அனல் பொசுக்கித் தாக்க, சிலுவைப் படையினருக்குப் பெரும் சவாலாகக் குடிநீர் பிரச்சினை உருவானது. நீர் ஆதாரங்களை இஃப்திகார் அத்-தவ்லா பாழ்படுத்திவிட்டார் அல்லவா? அதனால் சிலுவைப் படையினருக்குத் தாகத்தில் நா வறண்டது. சிலர் சதுப்பு நிலத்தில் தேங்கிக் கிடந்த மாசுபடிந்த நீரைப் பருகி இறந்தனர். இந்தப் பிரச்சினையினால் முழுவதும் துவண்டு போகும் நிலையை அவர்கள் எட்டி விட்டார்கள். அந்நேரத்தில், முற்றிலும் எதிர்பாராத வகையில் அவர்களுக்கு உதவி ஒன்று வந்து சேர்ந்தது. அவர்களது விதியை மாற்றி அமைத்த உதவி!

அது?

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி 
தொடர் - 22
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி 
தொடர் - 24

இந்தக் கட்டுரையின் மூலம்சத்தியமார்க்கம்.காம். ஆசிரியர்:  நூருத்தீன்

 


1 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-46: ஸெங்கியின் மறுவெற்றி

அவற்றுள் பிரசித்தி பெற்ற ஒன்று லதாக்கியா படையெடுப்பு. மூவாயிரம் குதிரைப் படை வீரர்களுடன் சென்று சவார் நிகழ்த்திய திடீர்த் தாக்குதலில் பரங்கியர்கள் நிலைகுலைந்தனர். முஸ்லிம் படையினருக்குப் பெரும் வெற்றி! ஏழாயிரம் கைதிகள், ஆயிரக்கணக்கில் கால்நடைகள் கைப்பற்றப்பட்டு முஸ்லிம் படை மகிழ்ச்சியில் திளைக்க, பரங்கியர்களோ திகைத்து உடைந்து விட்டார்கள். துயரம் சூழ்ந்து அவர்கள் துக்கத்தில் மூழ்கிவிட, முஸ்லிம் பகுதிகளெங்கும் இவ்வெற்றி தலைப்புச் செய்தியாகி, மக்கள் மத்தியில் பேராரவாரம் எழுந்தது.

2 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-44: ஸெங்கியின் மறுதொடக்கம்

கலீஃபாவின் கூட்டணிப் படைக்கு எதிராகப் போரிட்டு, காயமடைந்து வந்த இமாதுத்தீன் ஸெங்கியையும் மற்றவர்களையும் பரோபகார உள்ளத்துடன் வரவேற்றார் நஜ்முத்தீன் ஐயூப். அவர்களது காயங்களுக்கு மருந்திட்டு, தேவையான உதவிகள் செய்து, படகுகளையும் அளித்து இமாதுத்தீன் மோஸூலுக்குத் திரும்பிச் செல்லப் பேருதவி புரிந்தார்.

3 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-45: இமாதுத்தீன் ஸெங்கியின் முதல் வெற்றி

ஹும்ஸை யார் வசம் ஒப்படைக்கலாம் என்று யோசித்த மஹ்மூதுக்கு எளிய தீர்வு கிடைத்தது – சென்ற அத்தியாயத்தின் இறுதியில் நமக்கு அறிமுகமான முயீனுத்தீன் உனுர். டமாஸ்கஸ் நகர் ஸெங்கியிடம் வீழாமல் தற்காத்துத் தந்த அவரைவிடச் சிறப்பாக வேறு யார் ஹும்ஸை ஸெங்கியிடமிருந்து காப்பாற்றிவிட முடியும்?

4 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-43: இரண்டாம் பால்ட்வினின் மறைவு

அச்சமயம் அப்பாதையில் சென்று கொண்டிருந்த பரங்கியரின் சேனாதிபதி ஒருவன் அவர் கண்ணில் பட்டுவிட்டான். அவன் தன்னோடு கொண்டு சென்றுகொண்டிருந்த வெள்ளை நிறப் போர்க் குதிரையும் அதன் தோற்றமும் அவரது கவனத்தைக் கவர்ந்தன. ‘ஏதோ சரியில்லையே?’ என்றது அவரது உள்ளுணர்வு.

5 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-42: பூரித் வம்சாவளி

அஸாஸியர்கள் டமாஸ்கஸ் நகரைத் தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருந்ததை அம்மக்கள் தீவிரமாக வெறுத்து வந்தனர். அவர்களுக்குள் உலை கொதித்துக்கொண்டிருந்தது.

6 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-41: இமாதுத்தீன் ஸெங்கியின் அறிமுகம்
7 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-40: ஆக் சன்க்கூர் அல் புர்ஸுகீ
8 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-39: பலக் இப்னு பஹ்ராம் இப்னு அர்துக்
9 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-38: டெம்ப்ளர்கள், ஹாஸ்பிடலர்கள்
10 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-37: காழீயின் களப்பணி
11 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35: ராஜா பால்ட்வினின் முடிவு
12 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-36: குருதிக் களம்
13 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35: ராஜா பால்ட்வினின் முடிவு
14 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31: கிலிஜ் அர்ஸலானின் முடிவு
15 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30: பாலிக் யுத்தம் (ஹர்ரான்)
16 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34: சென்னாப்ரா யுத்தம்
17 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33: மவ்தூத் பின் அத்-தூந்தகீன்
18 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32: சிலுவைப் படையும் பைஸாந்தியமும்
19 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29: மெர்ஸிஃபான், ஹெராக்லியா யுத்தங்கள்
20 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28: ஜிஹாது ஒலியும் சிலுவைப் படையும்
21 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27: மெலிடீன் போர்
22 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-26: மெய்ச் சிலுவை
23 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-25: ஜெருஸல வீழ்ச்சியும் குருதி ஆறும்
24 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-24: ஜெருஸலப் போர்
25 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-22: மண்ணாசையில் விழுந்த மண்
26 வீழ்ந்தெழுவோம் : பொருளாதார நெருக்கடியை எப்படி சமாளித்தார்கள் - அழகிய முன்னுதாரனம். (தொடர்-45)
27 தர்ம கற்கள் - அழகிய தர்மம்
28 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-20: அந்தாக்கியாவின் இரண்டாம் முற்றுகை
29 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-21: புனித ஈட்டி
30 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 19: அந்தாக்கியாவின் வீழ்ச்சி!
31 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 18: அந்தாக்கியா
32 திருநெல்வேலி வரலாறு...!
33 மாவீரன் திப்புசுல்தான்:இந்திய விடுதலைப் போரின் உயிர்நாடி
34 அந்த இரண்டணா ......
35 சீனாவில் விதைத்த விதை - ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி)
36 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 17
37 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 16
38 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 15
39 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 14
40 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 13
41 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 12
42 ஔரங்கசீப் அவர் அழித்ததைவிட அதிக கோவில்களைக் கட்டினார்
43 இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ்
44 இதுவல்லவா நபி நேசம்!!!!!!!
45 தனக்குரியவருக்காக காத்திருக்கும் இரயில் ....
46 உலகத்திற்கே ஒளி விளக்கேற்றிய மதீனாவில், விளக்கேற்றியது எப்போது?
47 உஸ்மானியா பேரரசு கடைவீதியின் தொங்கும் கூடைகள்
48 நான் குதுப்மினார் பேசுகிறேன்-1
49 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 11
50 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -1
51 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -2
52 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -3
53 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -4
54 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -5
55 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 6
56 கையிலே ஒரு துணிப்பை, எளிய நடை, எளிய உடை உத்தமபாளையம் எஸ்.எஸ். ஹஜரத்
57 இஸ்லாம் வென்றெடுத்த ஷாம்
58 தமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர்
59 சாரதா பீடம் சொல்லும் திப்புவின் மதநல்லிணக்கம்
60 சூஃபிக்களும் புனித போர்களும்
61 யார் தேச விரோதி?
62 இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.
63 ஸயீத் இப்னு ஆமிர் سعيد ابن عامر (ரலி)
64 விடுதலைப்போரில் வீரமங்கையர்
65 பூரண சுதந்திரம் கேட்ட முதல் இந்தியன்
66 இஸ்லாம் இந்தியாவுக்கு அந்நிய மதமா?
67 நாகூர் - ஒரு வரலாற்றுப் பார்வை
68 இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்
69 கோரிப்பாளையம் தர்கா கல்வெட்டுகள்
70 சமயப் பொறை பேசும் சரித்திரச் சான்றுகள்
71 தமிழ் முஸ்லிம்களின் இடப்பெயர்ச்சி வரைபடம்
72 விடுதலை போரில் நெல்லை மாவட்ட முஸ்லிம்கள்
73 தமிழகத்தில் முஸ்லீம்கள் வரலாறு
74 சுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது
75 இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.
76 தமிழகத்தில் முஸ்லீம்கள்
77 இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?
78 இந்திய விடுதலைப் போரும் முஸ்லீம்களும்
79 இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு
80 பாடலியில் ஒரு புலி
81 தேசவிடுதலைக்கு ஆயுதப்புரட்சியே தீர்வு
82 ஒரு மனிதன் ஒரு பட்டாளம் - மௌலவி செய்யது அஹ்மதுல்லாஹ் ஷாஹ்.
83 முதல் சுதந்திரப் பிரகடனம்
84 மவுலானா எனும் மகத்தான இந்தியர்
85 காலித் பின் வலீத் (ரலி)
86 தமிழ் முஸ்லிம்களின் வரலாற்று பொக்கிஷம். ஒரு ஆவணக் குறும்படம்
87 இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
88 முதல் வாள்!
89 கஜினி முகம்மது மற்றும் முகம்மது துக்ளக் (தவறான ணோட்டங்கள்)
90 இலங்கையில் முஸ்லிம்கள் - அன்றும் இன்றும்
91 மாவீரன் மருத நாயகம் கான் சாஹிப்