சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30: பாலிக் யுத்தம் (ஹர்ரான்)
கிலிஜ் அர்ஸலானிடம் உதவி கோரி வந்து நின்ற ஸெங்கி இப்னு ஜெகர்மிஷ் யார்? அது என்ன உதவி? இந்த வினாக்களுக்கான விளக்கங்களை அறிய நாம் ரோம ஸல்தனத், டானிஷ்மெண்த் பகுதிகளிலிருந்து மோஸுல் நகருக்கு நகர வேண்டியுள்ளது. இங்கு மெர்ஸிஃபான், ஹெராக்லியா யுத்தங்கள், அதன் பிறகான முன்னேற்றங்கள், கிலிஜ் அர்ஸலான் – காஸி குமுஷ்திஜின் இடையே விரிசல் என்று நிகழ்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் அங்கு மோஸுல் பகுதியில் வேறு சில முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அதைச் சற்று விரிவாகப் பார்ப்போம். அதற்குமுன், இங்கு நிகழ்ந்த முக்கியமான உபரிச் செய்தி ஒன்றை அறிவது முக்கியம்.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொஹிமாண்டை விடுவிக்க, காஸி குமுஷ்திஜினிடம் பெரும் பணயத் தொகைக்கான பேரம் ஒன்று நடைபெற்றது. அதை அளிக்க முன்வந்தவர் பைஸாந்தியச் சக்கரவர்த்தி அலெக்ஸியஸ் என்கின்றன சில தகவல்கள். அந்தப் பணயத் தொகையில் தமக்கும் சரிபாதி பங்கு வேண்டும் என்று கிலிஜ் அர்ஸலான் கோரினார். அது ஒரு முக்கியமான பிணக்காக கிலிஜ் அர்ஸலான் – காஸி குமுஷ்திஜின் இடையே ஏற்பட்டுவிட்டது. அந்தப் பிரச்சினைகளை நீங்கள் உங்களுக்குள் தீர்த்துக்கொள்ளுங்கள் என்று பணயத் தொகையை பேரம் பேசிக் குறைத்து, அதை முழுவதுமாக காஸி குமுஷ்திஜினிடம் அளித்துவிட்டு, விடுதலை அடைந்து சென்றுவிட்டார் பொஹிமாண்ட். முஸ்லிம்களிடமிருந்து விடுதலையடைந்து சென்றவர், தப்பித்தோம், பிழைத்தோம் என்று அமைதியாகவா இருந்தார்? மீண்டும் சிலுவைப் படை, மீண்டும் போராயுதங்கள், மீண்டும் யுத்தம் என்று முஸ்லிம்களுக்கு எதிராகக் களமிறங்கிவிட்டார்.
கட்டவிழ்த்து விட்டால் சிலுவைப் படைத் தலைவர் முஷ்டியை முறுக்குவாரே என்று முஸ்லிம்களுக்குத் தெரியாதா? வசமாக மாட்டிக்கொண்டு கைதாகிச் சிறையில் இருந்தவரை அவர்கள் ஏன் கொல்லவில்லை? பணயத் தொகைக்கு ஆசைப்பட்டு விடுவித்து, தங்களுக்கு எதிராய் அவர் களமிறங்க ஏன் மீண்டும் வாய்ப்பு அளித்தார்கள் என்றெல்லாம் நமக்குக் கேள்விகள் எழலாம், வியப்பு மேலிடலாம். ஆனால், ஒற்றை வார்த்தையில் பதில் சொல்ல இயலாத இத்தகு செயல்கள், பிழைகள், திகைப்புகள் வரலாறு நெடுக நிறைந்துள்ளன. அவலம் என்னவெனில் வரலாற்றுப் பிழைகளிலிருந்து நாம் பாடம் படிக்க மறுப்பதுதான்.
நாம் இப்பொழுது மோஸுலுக்குள் நுழைவோம்.
மறைந்த சுல்தான் மாலிக்-ஷாவின் தோழர் காஸிம் அத்-தவ்லாவுக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் இருந்தார்; அவர் பெயர் கெர்போகா. ருக்னுத்தீன் பர்க்யாருக் அணிக்கு ஆதரவாக இராக்கில் உள்ள ஹர்ரான், நுஸைபின், மோஸுல் பகுதிகளைக் கைப்பற்றி வலிமை பெற ஆரம்பித்தார். அதையடுத்து ‘அதாபேக்’ ஆக மோஸுலை ஆளும் வாய்ப்பு அவருக்கு அளிக்கப்பட்டது; சிலுவைப் படை அந்தாக்கியாவை முற்றுகையிட்டபோது அவர்களை எதிர்க்கப் படை திரட்டிச் சென்றார் என்று வாசித்தோமே, அவர் ஹி. 495 / கி.பி. 1102 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். இவருடைய பராமரிப்பில்தான், இவ்வரலாற்றில் முக்கியப் புள்ளியான, இரண்டாம் அத்தியாயத்தில் நமக்கு அறிமுகமான இமாதுத்தீன் ஸெங்கி வளர்ந்து வந்தார். அது நாம் இங்கு குறித்து வைத்துக்கொள்ள வேண்டிய முக்கியத் தகவல்.
கெர்போகா மரணமடைந்ததும் உள்நாட்டுக் குழப்பம் உருவானது. என்ன புதிய குழப்பம்? எல்லாம் ஆட்சி அதிகாரத்திற்கான போட்டிதான். அப்படியொன்று ஏற்பட்டுவிடும் என்று நினைத்தோ என்னவோ தம்முடைய ஆட்சி வாரிசாகத் தம் தளபதிகளுள் ஒருவரான சுன்குர்ஜாஹ் என்பவரை கெர்போகா நியமித்திருந்தார். ஆனால், கெர்போகா இறந்தபின், ‘உமக்கு நான் கட்டுப்பட மாட்டேன்’ என்று முரண்டு பிடித்தார் ஒருவர். அவர் பெயர் மூஸா அத்-துருக்மனி. இவர் சுன்குர்ஜாஹ்வின் பிரதிநிதியாக ஹஸன்கெய்ஃப் (Hasankeyf / Hisn Kayfa) என்ற பகுதியை நிர்வகித்துக்கொண்டிருந்தார். வெறுமே முரண்டு பிடித்துக்கொண்டு நிற்காமல் கிளம்பி வந்து சுன்குர்ஜாஹ்வைக் கொன்றுவிட்டு மோஸுல் நகரையும் கைப்பற்றிவிட்டார்.
இன்றைய துருக்கியில் சீஸ்ரா (Cizre) என்றொரு நகரம் உள்ளது. அதன் அன்றைய பெயர் ஜஸீரத் இப்னு உமர். ஷம்ஸ் அத்-தவ்லா ஜெகெர்மிஷ் (Sham ad-Dawlah Jekermish) என்பவர் அதன் ஆட்சியாளராக இருந்தார். அவர் மோஸுல் நகரில் நிகழ்ந்த குழப்பங்களைப் பார்த்தார்; அவற்றைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடிவெடுத்தார்; உடனே படையொன்றைத் திரட்டிக்கொண்டு வந்து மோஸுல் நகரை முற்றுகையும் இட்டுவிட்டார். உள்ளே சிக்கிக்கொண்டார் மூஸா.
ஜெகெர்மிஷிடமிருந்து தம்மை எப்படிக் காப்பாற்றிக் கொள்வது என்று யோசித்த மூஸா, மற்றொருவரிடம் உதவி கோரித் தகவல் அனுப்பினார். அவர் பெயர் சுக்மான் அல்-அர்துகி (Suqman al-Artuqi). தியார்பகிர் (Diyarbakir) என்ற பகுதியின் ஆட்சியாளர் அவர். கைம்மாறு இல்லாமல் உதவி கிடைத்துவிடாது என்பதால், ‘எனது கட்டுப்பாட்டில் உள்ள ஹஸன்கெய்ஃப் நகரை உனக்குத் தருகிறேன். கூடவே பத்தாயிரம் தீனார் ரொக்கம். தயவுசெய்து என்னைக் காப்பாற்று’ என்று சுக்மானுக்குத் தகவல் அனுப்பியிருந்தார் மூஸா. அது கசக்குமா என்ன? இது நல்ல வாய்ப்பாக இருக்கிறதே என்று படை திரட்டிக்கொண்டு மோஸுலுக்கு விரைந்தார் சுக்மான்.
மூஸாவுக்கு உதவியாக சுக்மானின் படை வந்ததும் வேறு வழியின்றித் தமது முற்றுகையைக் கைவிட்டு, பின்வாங்கத் தொடங்கினார் ஜெகெர்மிஷ். மகிழ்ச்சிப் பெருமூச்சு விட்ட மூஸா சுக்மானைச் சந்திக்கத் தமது படை பரிவாரங்களுடன் நகரிலிருந்து வெளியே வரும்போது, மூஸாவின் அடிமைகளுள் ஒருவன் மூஸாவைக் கொன்றுவிட்டான். அத்துடன் மூஸாவின் மூச்சு முற்றுப்பெற்று விட்டது. அவரது படை குழப்பத்தில் சிதறியது. உதவிக்குப் படை திரட்டி வந்த சுக்மான் இந்தக் களேபரத்தைப் பார்த்தார். ‘ஊர் கிடைக்கும், அதனுடன் சேர்த்துப் பணமும் கிடைக்கும் என்று கிளம்பி வந்தால், ஒன்றுக்கும் வழி செய்யாமல் மூஸா போய்ச் சேர்ந்துவிட்டாரே’, என்று பதறியவர், உடனே தமது படையை ஹஸன்கெய்ஃப் நோக்கித் திருப்பி அதைக் கைப்பற்றிக் கொண்டார். மோஸுல் நகரிலிருந்து பின்வாங்கிச் சென்று கொண்டிருந்தாரே ஜெகெர்மிஷ், இந்தக் களேபரங்களைப் பார்த்தார். திரும்பி ஓடி வந்து மோஸுல் நகரை தமதாக்கிக் கொண்டார்.
இப்படி நிகழ்ந்த திருப்பங்களைத் தொடர்ந்து அடுத்து ஒரு திருப்பம் நிகழ்ந்தது. மூஸாவுக்கு உதவி புரிவதற்காக எந்த ஜெகெர்மிஷை எதிர்த்து வந்தாரோ அந்த ஜெகெர்மிஷுடன் நட்புறவு ஏற்படுத்திக் கொண்டார் சுக்மான். அவர்களது கூட்டணிப் படையும் உருவானது. காரணம் கிழக்கே முன்னேறி வந்துகொண்டிருந்த சிலுவைப் படை!
இராக், மெஸோபொடாமியா, சிரியா ஆகியனவற்றுக்கான பாதையில் மையப்புள்ளி போல் அமைந்துள்ளது ஹர்ரான் நகரம். அதைக் கைப்பற்றிவிட்டால், முஸ்லிம்களுக்கு இடையிலான தொடர்புகளைத் துண்டித்துவிட முடியும்; மோஸுல் நகரைக் கைப்பற்றிவிட முடியும்; எடிஸ்ஸாவுக்குப் பாதுகாப்பை ஏற்படுத்திவிட முடியும் என்று பல அனுகூலங்களைச் சிலுவைப் படை கணக்கிட்டது. அதைக் குறி வைத்து நகர்ந்தது. அது முஸ்லிம்களுக்கு எத்தகு ஆபத்தாய்ப் போய் முடியும் என்பதை ஜெகர்மிஷும் சுக்மானும் நன்கு உணர்ந்தனர்.
‘ஹர்ரான் நிலவரம் குறித்து நாம் இருவரும் சந்தித்து உரையாடுவோம். அல்லாஹ்வுக்காக அவனுடைய வெகுமதிக்காக நாம் ஒன்றிணைவோம்’ என்று தகவல் பரிமாறிக்கொண்டார்கள். அதையடுத்து இருவரும் நேரில் சந்தித்துப் பேசினார்கள். கூட்டணி உருவானது. அதையடுத்து உடனடிப் போர் திட்டம் ஒன்று வகுக்கப் பட்டது. இலக்கு குறிக்கப்பட்டது. அது எடிஸ்ஸா! சிலுவைப் படையினர் கைப்பற்றி வைத்திருக்கும் எடிஸ்ஸா! இரண்டாம் பால்ட்வினின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் எடிஸ்ஸா. அரபியர்கள், துருக்கியர்கள், குர்துகள் உள்ளடங்கிய பத்தாயிரம் முஸ்லிம் வீரர்கள் கொண்ட படை திரண்டது. எடிஸ்ஸாவை முற்றுகையிடக் கிளம்பியது.
எடிஸ்ஸாவின் புதிய ஆட்சியாளராக அமர்ந்திருந்த பால்ட்வின் II இச்செய்தியை அறிந்ததும் ‘உதவி தேவை’ என்று பொஹிமாண்டுக்குத் தகவல் அனுப்பினார். விடுதலையடைந்து வந்திருந்த பொஹிமாண்டோ ஜோஸெலின் என்பவருடன் சேர்ந்துகொண்டு ஹர்ரான் நகரை முற்றுகையிடும் முயற்சியில் இருந்தார். இதைக் கேள்விப்பட்டதும் எடிஸ்ஸாவில் சிறு அளவிலான படையினரை விட்டுவிட்டு, உடனே அவர்களைத் தேடி பால்ட்வின் II ஹர்ரானுக்கு விரைந்தார். ஹர்ரானை ஆபத்து சூழ்ந்துள்ளது என்பதை அறிந்ததும் ஜெகர்மிஷ்-சுக்மான் கூட்டணிப் படை ஹர்ரானுக்கு விரைந்தது.
அங்கு மூவாயிரம் குதிரைப் படையினர், மும்மடங்கு காலாட்படையினர் ஆகியோருடன் ஜோஸெலின், பொஹிமாண்ட், டான்க்ரெட் அந்நகரை முற்றுகை இட்டிருந்தனர். தாக்குதலும் தொடங்கியது. உதவி வேண்டி வந்த பால்ட்வின் II தாமும் அந்தப் போரில் அவர்களுடன் கலந்துகொண்டார். முஸ்லிம்கள் அந்த முற்றுகையையும் தாக்குதலையும் எதிர்த்து நின்று தாக்குப்பிடித்தாலும் ஒரு கட்டத்தில் அந்நகரம் வீழும் நிலைக்கு வந்துவிட்டது. ஹர்ரான் நமதாகப் போகிறது என்றதும் இரண்டாம் பால்ட்வினுக்கும் பொஹிமாண்டுக்கும் இடையே பிணக்கு ஏற்பட்டு முட்டிக்கொண்டார்கள். என்ன பிணக்கு?
ஹர்ரான் யாருக்குரிய உடைமை, யாருடைய கொடி அங்கு பறக்க வேண்டும் என்பது பிரச்சினை. அது அவர்களுக்குள் கடுமையான பேதமாக உருமாறியது. அது முஸ்லிம்களுக்கு நல்வாய்ப்பாக அமைந்து போனது. சுதாரித்துக்கொண்ட அவர்கள் சிலுவைப் படையினரிடம் வெகு ஆக்ரோஷத்துடன் போரிடத் தொடங்கினர். பாலிக் என்றோர் ஆறு. அந்த ஆற்றின் கரையில் போர் உக்கிரமடைந்தது. அச்சமயம் பின்வாங்கி ஓடுவதைப்போல் ஓடியது முஸ்லிம்களின் படை. மகிழ்ச்சி ஆரவாரத்துடன் பின் தொடர்ந்து ஓடியது சிலுவைப் படை.
சுமார் ஆறு மைல் தூரம் ஓடியிருப்பார்கள். ஒரு கட்டத்தில் சட்டெனத் திரும்பிய முஸ்லிம்களின் படை, சரசரவென்று சிலுவைப் படையினரை வெட்டித் தள்ள ஆரம்பித்தது. அதை அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. முஸ்லிம்களின் தாக்குதல் வீரியத்தில் சிலுவைப் படையின் பெரும் பகுதி அழிவுக்கு உள்ளானது. அவர்களுடைய உடைமைகள் முஸ்லிம்களால் கைப்பற்றப்பட்டன.
படைத் தலைவர்களும் மற்றும் சிலரும் தப்பித்து ஓடி மலைக்குன்றுகளில் ஒளிந்துகொண்டார்கள். அப்பெரும் தோல்வி அவர்களைத் திகைக்க வைத்தது. இருள் சூழ்ந்ததும் அங்கிருந்து அவர்கள் தப்பித்து ஓட, அவர்களைப் பின் தொடர்ந்து துரத்தியது முஸ்லிம்களின் படை. அதில் மேலும் பலர் கொல்லப்பட்டனர். ஆனாலும் பொஹிமாண்டும் டான்க்ரெடும் உயிர் பிழைத்து, தப்பித்து எடிஸ்ஸாவை நோக்கி ஓடினார்கள். ஜோஸெலினும் எடிஸ்ஸாவிலிருந்து வந்திருந்த இரண்டாம் பால்ட்வினும் ஆற்றுச் சகதியில் சிக்கி, ஓட முடியாமல் ஆகி, முஸ்லிம்களால் கைது செய்யப்பட்டனர்.
இரண்டாம் பால்ட்வினைக் கைது செய்தவர் சுக்மானின் படையைச் சேர்ந்தவர். அவர் பால்ட்வினை சுக்மானிடம் கொண்டுவந்து ஒப்படைத்தார். அதுவும், சுக்மான் படையினருக்குப் பெருமளவில் கிடைத்திருந்த போர் வெகுமானங்களும் ஜெகெர்மிஷின் படையினருக்குப் பொறாமையை ஏற்படுத்திவிட்டது.
ஜெகெர்மிஷிடம் வந்து முனங்கினர், குறைபட்டனர், ‘நம் மக்களிடம் நமது மானம், மரியாதை போய்விடும்’ என்று அங்கலாய்த்தனர். ‘போரில் கைதான பால்ட்வினையாவது நீங்கள் பணயக் கைதியாகக் கைப்பற்றுங்கள்’ என்று அவர்கள் தூபமிட அதற்கு இணங்கிப்போனார் ஜெகெர்மிஷ். அவருடைய படை வீரர்கள் சிலர் சுக்மானின் முகாமுக்குள் நுழைந்து பால்ட்வினைத் தந்திரமாகக் கடத்திக்கொண்டு வந்து விட்டனர்.
இதை அறிந்ததும் சுக்மானுக்குப் ஏகப்பட்ட ஆத்திரம் வந்தது; தம்முடைய கூட்டணித் தலைவரின் இச்செய்கை அவருக்குச் சொல்லி மாளாத வருத்தத்தத்தைத் தந்தது. அவருடைய படையினரோ கொதிப்படைந்துபோய், ‘ஜெகெர்மிஷை எதிர்த்துப் போரிட நாங்கள் தயார்’ என்று ஆயுதத்தை உயர்த்திவிட்டனர். ஆனால் சுக்மான் தம்முடைய அத்தனை உணர்ச்சிகளையும் அடக்கிக்கொண்டு பெரும் நிதானத்தைக் கடைப்பிடித்தார். ‘நமக்கிடையே பூசல் ஏற்பட்டு அது நமது எதிரிகளுக்குச் சாதகமாகிவிடுவதையோ அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதையோ நான் விரும்பவில்லை’ என்று கூறி ஜெகர்மிஷுக்கு எதிரான சண்டையைக் கைவிட்டார். அம்மட்டுமில்லாமல், தமது கவனத்தைச் சிலுவைப் படையினரை நோக்கிக் குவித்தார்.
பரங்கியர்களிடமிருந்து சுக்மானின் படையினரும் ஆடைகள், ஆயுதங்கள், குதிரைகள் ஆகியனவற்றைக் கைப்பற்றியிருந்தனர். அவற்றைப் பயன்படுத்தி அவரது படை சிலுவைப் படையைப் போன்ற கோலம் பூண்டது. ஷபக்தான் கோட்டையை முஸ்லிம்களிடமிருந்து சிலுவைப் படை பிடுங்கி வைத்திருந்தது; அதை நோக்கி அவரது படை அணிவகுத்தது. தம்முடைய படையினர்தாம் வெற்றியுடன் திரும்பி வருகிறார்கள் என்று நினைத்து, அங்கிருந்த சிலுவைப் படையினர் இவர்களை வரவேற்க ஆரவாரத்துடன் வெளியே வர, அவர்களை சுக்மானின் படையினர் வெகு எளிதாக வெட்டித்தள்ளினர். அந்தக் கோட்டையைக் கைப்பற்றினார் சுக்மான். இதே யுக்தியைப் பயன்படுத்தி அப்பகுதியில் பரங்கியர்கள் வசமிருந்த பல கோட்டைகளையும் கைப்பற்றினார். அவ்வெற்றிகளுடன் சுக்மான் தமது இருப்பிடமான தியார்பகிர் திரும்பினார்.
கூட்டணி முறிந்து சுக்மான் ஒரு பாதையில் சென்றதும் ஜெகெர்மிஷ் மற்றொரு பாதையில் தமது போரைத் தொடர்ந்தார். எடிஸ்ஸா மாநிலத்திற்குக் கிழக்கே, சிலுவைப் படை சில கோட்டைகளை முஸ்லிம்களிடமிருந்து கைப்பற்றி வைத்திருந்தது. அவற்றை இலக்காகக் கொண்டு எடிஸ்ஸாவின் திசையில் பயணித்தது அவரது படை. எடிஸ்ஸாவுக்குத் தப்பி ஓடியிருந்த டான்க்ரெட், முஸ்லிம் படைகள் வரும் என்பதைக் கணித்து, அப்பகுதிகளின் பாதுகாப்பை வலுப்படுத்தியிருந்தார். ஜெகெர்மிஷ் தம் படையினருடன் வந்து தாக்குதல் தொடுத்ததும் எதிர்த்துச் சமாளித்தது சிலுவைப் படை. அச்சமயம் வேறொரு பகுதிக்குச் சென்றிருந்த பொஹிமாண்டுக்கு, “உடனே எடிஸ்ஸாவுக்கு வரவும்” என்று தகவல் பறந்தது.
இருள் விலகாத அதிகாலை நேரம். உறங்கிக்கொண்டிருந்த ஜெகெர்மிஷின் படையினரை டான்க்ரெட் தம் துருப்புகளுடன் நெருங்கினார். திடீரென்று தாக்குதல் தொடுத்தார். அதை எதிர்பார்க்காமல், முன்னேற்பாடுகள் இல்லாமல் இருந்த ஜெகெர்மிஷின் படை அதிர்ச்சியடைந்து சிதறி ஓடியது. முஸ்லிம் படைகளின் பொருள்களை, ஆயுதங்களைச் சிலுவைப் படை கைப்பற்றியது. போர்க் கைதிகளாகவும் சிலர் மாட்டினர். அவர்களுள் முக்கியமான ஒருவர் ஜெகெர்மிஷின் மனைவி. இது ஜெகெர்மிஷுக்குப் பெருத்த பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. ‘என் மனைவியை மீட்க, பதினைந்தாயிரம் பொற்காசுகள் தருகிறேன், அல்லது என்னிடம் கைதியாக இருக்கிறாரே பால்ட்வின் II, அவரைத் தருகிறேன்’ என்று தகவல் அனுப்பினார் ஜெகெர்மிஷ்.
இந்தச் செய்திகள் யாவும் ஜெருசலம் நகரின் அரசரான முதலாம் பால்ட்வினுக்குச் சென்று சேர்ந்தன. பால்ட்வின் II அவருடைய உறவினர் அல்லவா. அதனால், அவர் உடனே, ‘நல்ல வாய்ப்பு இது. தவற விடாதே. அந்தப் பெண்மணியை ஒப்படைத்துவிட்டு இரண்டாம் பால்ட்வினை விடுவி‘ என்று பொஹிமாண்டுக்கு மடல் அனுப்பினார்.
ஆனால் பொஹிமாண்டும் டான்க்ரெடும் வேறு திட்டத்தில் இருந்தனர். முதலாவது அவர்களுக்குப் பணம் தேவைப்பட்டது. அடுத்தது பால்ட்வின் II விடுதலையாகி வந்துவிட்டால், இப்பொழுது எடிஸ்ஸாவைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த டான்க்ரெட் அதை அவரிடம் திருப்பி அளிக்கும்படி ஆகிவிடும். இவை இரண்டும் அவர்கள் இருவருக்கும் பேரிழப்பு. அதனால் அவர்கள் அரசர் பால்ட்வினுக்குப் பதில் அனுப்பினர். ‘இந்தப் பரிமாற்றத்திற்கு நாம் விரைவதும் நமக்கு அதில் ஆர்வம் இருப்பதைப்போல் காட்டிக்கொள்வதும் சரியல்ல. நம்மை பலவீனர்களாகக் காட்டிவிடும். சற்று யோசிப்பதைப் போல் நாம் தாமதப்படுத்தினால் ஜெகெர்மிஷ் மேலும் இறங்கி வருவார்; பணிவார்’
இப்படியொரு பதிலை ஜெருசலத்திற்கு அனுப்பிவிட்டு, ஜெகெர்மிஷிடம், ‘எங்கே அந்தப் பொற்காசுகள்?’ என்று அதை எண்ணி வாங்கிக்கொண்டு அவருடைய மனைவியை பொஹிமாண்டும் டான்க்ரெடும் விடுவித்துவிட்டனர். அங்கே விலங்குடன் சிறைக் கற்களை எண்ணிக்கொண்டு கிடந்தார் பால்ட்வின் II.
- * -
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி தொடர் - 29 |
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி தொடர் - 31 |
இந்தக் கட்டுரையின் மூலம்: சத்தியமார்க்கம்.காம். ஆசிரியர்: நூருத்தீன்
>