Tamil Islamic Media

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-43: இரண்டாம் பால்ட்வினின் மறைவு

43. இரண்டாம் பால்ட்வினின் மறைவு

ஜெருசல ராஜா இரண்டாம் பால்ட்வின், தம் படையைக் கிளப்பிக்கொண்டு வடக்கே அந்தாக்கியா நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அங்கிருந்து வந்திருந்த தகவல் அவருக்குக் கவலையையும் தலைவலியையும் ஒருசேரத் தந்திருந்தது. உடனே செல்ல வேண்டிய அவசரம். அதனால் வேகவேகமாகப் படையைக் கிளப்பிச் சென்று கொண்டிருந்தார். அந்தாக்கியாவையும் நெருங்கி விட்டார். அச்சமயம் அப்பாதையில் சென்று கொண்டிருந்த பரங்கியரின் சேனாதிபதி ஒருவன் அவர் கண்ணில் பட்டுவிட்டான். அவன் தன்னோடு கொண்டு சென்றுகொண்டிருந்த வெள்ளை நிறப் போர்க் குதிரையும் அதன் தோற்றமும் அவரது கவனத்தைக் கவர்ந்தன. ‘ஏதோ சரியில்லையே?’ என்றது அவரது உள்ளுணர்வு.பயணத்திற்கும் வேட்டைக்கும் போருக்கும் மற்றும் பல வேலைகளுக்கும் அக்காலத்தில் குதிரை அவசியமான ஒன்று. அதனால் அதைச் சிரத்தையுடன் கவனித்து, பராமரித்து வளர்ப்பது அவர்களுக்கு முக்கியமான பணி. அதில், போர்க் குதிரைகள் என்றால் அவற்றின் சிறப்பே தனி. அவை ஆக உயர்ந்த ரகக் குதிரைகள். அதிக சக்தி வாய்ந்தவை; உருவமும் நீளம். போர்க்களத்திற்குச் செல்லும் சேனாதிபதிகள் அணிந்திருக்கும் இரும்புக் கவச உடைகள், குதிரைகளுக்கு அணிவிக்கப்படும் கவசங்கள் எல்லாமாகச் சேர்ந்து ஏராளமான எடை இருக்கும். அவற்றை எல்லாம் சுமந்துகொண்டு, களேபரமான போர்க்களத்தில் துணிவுடனும் நெளிவு சுளிவுடனும் விசுவாசத்துடனும் இக்குதிரைகள் செயல்பட வேண்டியிருக்கும். எனவே இந்த ரகக் குதிரைகளைக் குட்டியாக இருக்கும் போதே கவனமுடன் தேர்ந்தெடுத்து, வெகு அக்கறையுடன் பராமரித்து வளர்ப்பார்கள்; பயிற்சி அளிப்பார்கள். போர்க்களத்தில் அதன் அத்தனை சக்தியும் தேவை என்பதால் அவற்றின்மீது ஏறி அமர்ந்து சவாரி செய்வது, அன்றாடப் பணிகளுக்கு அவற்றைப் பயன்படுத்துவது போன்றவை முற்றிலும் தவிர்க்கப்பட்டு, தொலை தூரப் பயணங்களின்போதும்கூட அவற்றுக்கு ராஜ மரியாதை அளிக்கப்படும். மற்ற குதிரைகளெல்லாம் தம்மீது ஆட்களைச் சுமந்துவர, இவை மட்டும் உல்லாசமாகக் குலுங்கிக் குலுங்கி நடந்து வரும்.

விலை அதிகம் எனக் கருதப்படுவதை, ‘யானை விலை, குதிரை விலை’ என்போம் இல்லையா? இந்தப் போர்க் குதிரைகள் அவற்றைவிட விலை உயர்ந்தவை. சொத்தை எழுதி வைக்கும் அளவிற்கு விலை உயர்ந்தவை. மிகை இல்லை, மெய். ஒரே ஒரு குதிரைக்காகப் பெரும் பகுதி நிலத்தை விலையாகக் கொடுப்பது, வாங்குவது அக்காலத்தில் நிகழ்ந்துள்ளது.

ராஜா இரண்டாம் பால்ட்வின் எதிர்கொண்ட அச்சேனாதிபதியின் வசம் இருந்த போர்க் குதிரை அத்தகு உயர் ரக வெள்ளைக் குதிரை. அதன் குளம்புகளில் வெள்ளியிலான லாடம்; தலைமுதல் மார்பு வரை பிரம்மாண்ட கவச அங்கி. அக்குதிரையின் விலை பல காணி நிலத்திற்கு இணை என்பது எளிதாகத் தெரிந்தது. இங்கு இவன் இதை யாருக்கு ஓட்டிச் செல்கிறான் என்று மடக்கிப் பிடித்து விசாரித்தால், கிடைத்த தகவல் ராஜாவுக்கு உயர் அழுத்த மின்சாரத்தைப் பாய்ச்சியது. அலெப்போவில் இருந்த இமாதுத்தீன் ஸெங்கிக்கு அதைப் பரிசாக அனுப்பி வைத்திருந்தார் அந்தாக்கியாவில் இருந்த இளவரசி அலிக்ஸ் – பால்ட்வின் ராஜாவின் சொந்த மகள். கூடவே ஸெங்கிக்கு ஒரு மடல். “என் உதவிக்கு வாருங்கள். தங்களது ஆட்சி அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள உறுதி அளிக்கின்றேன்” என்றது அதில் இருந்த செய்தி.

குதிரையையும் அத்தூதுவனிடம் இருந்த இதர அனைத்தையும் கைப்பற்றிக்கொண்டு, அவனைத் தூக்கிலிட்டுக் கொன்றுவிட்டு இன்னும் வேகமாகத் தம் படையுடன் அந்தாக்கியாவுக்கு விரைந்தார் இரண்டாம் பால்ட்வின்.

இமாதுத்தீன் ஸெங்கி மோஸூல்-சிரியா பகுதிகளின் தலைமைப் பொறுப்பை ஏற்று இரு பகுதி முஸ்லிம் ஆட்சியாளர்களையும் ஒருங்கிணைத்து வலிமையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொண்ட அதே நேரத்தில் சிலுவைப் படையினரிடையே கருத்து பேதமும் முரண்பாடுகளும் அதிகரிக்கத் தொடங்கின. அவர்களுக்கு இடையே மோதல்களும் நிகழ்ந்தன. அதன் ஒரு பகுதியாக அமைந்த வியப்புக்குரிய நிகழ்வுதான் இமாதுத்தீனுக்கு இரண்டாம் பால்ட்வினின் மகள் அலிக்ஸ் அனுப்பிய தூது.

ஜெருஸல ராஜா இரண்டாம் பால்ட்வினின் மனைவி அர்மீனியர். பெயர் மார்ஃபியா. இவர்களுக்கு நான்கு மகள்கள். ஆண் வாரிசு இல்லை. பரங்கியர்களின் பல இளவரசர்களுக்கு ஆண் வாரிசு இல்லாமல் இருந்தது. மேற்கில் பிறந்து வளர்ந்து கிடந்து, கிழக்கே வந்த அவர்களின் உடல் புதிய சூழலுக்கு உடனே ஒத்துப்போகவில்லை. அவர்கள் மத்தியில் குழந்தை இறப்பு விகிதமும் அதிகமாக இருந்தது. இயற்கையின் நியதியோ என்னவோ, அது சிறுமிகளைவிடச் சிறுவர்களைத்தான் அதிகம் பாதித்தது.

அக்காலத்தில் மேற்கத்தியர்களின் சுகாதாரத் தரநிலை படுமோசம். சுத்தம் என்ற பழக்கம் அவர்களிடம் அறவே இல்லை என்கிறது வரலாறு. கிழக்குப் பகுதிக்கு வந்த பிறகுதான் ஹம்மாம் எனப்படும் குளியல் அறை அவர்களுக்கு அறிமுகமாகியது. காலப்போக்கில் அடிக்கடிக் குளித்து, சுத்தமடையக் கற்றுக்கொண்டார்கள். அரபு மருத்துவர்களிடம் சென்று அவர்களது ஆலோசனைகளைப் பெற்று அதன்படி நடந்து தங்களது ஆரோக்கியத்தையும் மேம்படுத்திக் கொண்டார்கள்.

ஆசைக்குப் பெண் இருந்தாலும் ஆட்சிக்கு ஆண் வாரிசு இல்லாத சிலுவைப் படை ஆட்சியாளர்கள், கோமான்களையும் இளவரசர்களையும் தேடித்தேடிப் பிடித்துத் தம் மகள்களுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். ஜெருசல ராஜா இரண்டாம் பால்ட்வினும் தமக்குப் பின் நாடாள அரச வாரிசு வேண்டுமே என்ற கவலையில் அன்ஜுவின் கோமான் ஃபுல்க் என்பவரைத் தம் மூத்த மகள் மெலிஸாண்ட் என்பவருக்கு மணமுடித்து வைத்தார். கோமான் ஃபுல்க் பிரான்சு நாட்டின் சக்தி வாய்ந்த ஏகாதிபதிகளுள் ஒருவர். அந்நாட்டின் இதர குறுநில மன்னர்கள், இங்கிலாந்தின் ஏகாதிபதிகள் ஆகியோருடன் எல்லாம் அவருக்கு நெருங்கிய நட்பு இருந்தது. இவருக்கும் மெலிஸாண்டுக்கும் கி.பி. 1129ஆம் ஆண்டு திருமணம் நிகழ்ந்தது.

அதைப்போல் தம் இரண்டாம் மகளான அலிக்ஸுக்கு பொஹிமாண்டின் மகனான இரண்டாம் பொஹிமாண்டை இரண்டாம் பால்ட்வின் மணம் முடித்து வைத்தார். இளவயது இரண்டாம் பொஹிமாண்ட், தம் தந்தையின் மறைவுக்குப் பிறகு ஐரோப்பாவிலிருந்து வந்து, அந்தாக்கியாவின் அதிபராக ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தார். அலிக்ஸ், ஐரோப்பியரான இரண்டாம் பால்ட்வினுக்குப் பிறந்தவர்தாம் என்ற போதிலும் அர்மீனியத் தாயின் கருவில் உருவான அவர் மேற்குலகைப் பார்த்ததும் இல்லை; அக்காற்றை சுவாசித்ததும் இல்லை; அவர்களின் பழக்க வழக்கத்துடன் முற்றிலும் கலக்கவும் இல்லை. பரங்கியர்களின் இரண்டாம் தலைமுறையாக உருவாகியிருந்த அந்த இளவரசி, தம்மைக் கிழக்கத்தியவராகவே உணர்ந்தார். அப்படித்தான் நடந்துகொண்டார். அதிபரின் மனைவியாகத் தமக்குரிய அதிகாரத்துடன் அமைதியாகத்தான் வீற்றிருந்தார். ஆனால் கி.பி. 1130ஆம் ஆண்டுதான் முக்கியத் திருப்பம் ஒன்று நிகழ்ந்தது.

டானிஷ்மெண்த் வம்சாவளி; அதன் மாலிக் காஸி குமுஷ்திஜின்; கி.பி. 1100ஆம் ஆண்டு அவரது படை பொஹிமாண்டைச் சிறைபிடித்தது என்பனவற்றை அத்தியாயம் 27 இல் வாசித்தோம். அந்த பொஹிமாண்டின் மகனும் அலிக்ஸின் கணவருமான இரண்டாம் பொஹிமாண்ட் இப்பொழுது கி.பி. 1130ஆம் ஆண்டு அதே காஸி குமுஷ்திஜினிடம் சிக்கும்படி ஆனது. தாம் அந்தாக்கியாவின் அதிபதியாக ஆனபின், வடக்குப் பகுதியில் சில படையெடுப்புகளை மேற்கொண்டார் இரண்டாம் பொஹிமாண்ட். அங்கு சிலிசியாவில் ஆட்சியாளராக இருந்தவர் உதவி கோரி டானிஷ்மெண்த்தின் மாலிக் காஸி குமுஷ்திஜினுக்குத் தகவல் அனுப்ப, விரைந்து வந்த காஸி, சிலுவைப் படையினர் மீது நிகழ்த்திய திடீர்த் தாக்குதலில், அவரிடம் எக்குத்தப்பாகச் சிக்கினார் இரண்டாம் பொஹிமாண்ட். தந்தை பொஹிமாண்டுக்காவது பின்னர் விடுதலையாகும் வாய்ப்புக் கிடைத்தது. இவருக்கோ பரிசாக மரணம்தான் வாய்த்தது. அவருடைய பொன்னிறத் தலையைக் கொய்து, அக்கறையுடன் பதப்படுத்தி, வெள்ளிப் பேழையில் வைத்து மூடி, பக்தாதில் உள்ள கலீஃபாவுக்குப் பரிசாக அனுப்பி வைத்தார் காஸி குமுஷ்திஜின்.

கணவரின் மரணச் செய்தி அறிய வந்ததும் விதவை அலிக்ஸ் அந்தாக்கியாவில் கிடுகிடுவென்று காரியத்தில் இறங்கினார். என்ன காரியம்? இராணுவப் புரட்சி. ஆட்சியைக் கைப்பற்றித் தாம் அந்தாக்கியாவின் அதிபராகிவிடும் திட்டம் தீட்டினார் அவர். அதற்கேற்றாற்போல் அங்கிருந்த அர்மீனியர்கள், கிரேக்கர்கள், சிரியர்கள் ஆகியோரின் ஆதரவும் அவருக்கு இருந்தது. அதனால் முதலில் நகரைத் தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த அலிக்ஸ், அடுத்து இமாதுத்தீன் ஸெங்கிக்கு அனுப்பியதுதான் மேற்சொன்ன போர்க் குதிரைத் தூது. ஆட்சி அதிகாரம், அதன் பரிபாலனம் யாவும் தங்களுக்கு உரியதாக இருக்க, மகளாகவே இருந்தாலும் தம் பெண் இப்படி ஒரு புரட்சியில் இறங்கினால், ஜெருசல ராஜா இரண்டாம் பால்ட்வின் அதை வேடிக்கைப் பார்த்துவிட்டு அங்கீகரித்து விடுவாரா என்ன? அதை ஒடுக்க அவர் தமது படையுடன் ஜெருசலத்திலிருந்து அந்தாக்கியாவுக்குக் கிளம்பி வரும் வழியில்தான் அலிக்ஸின் தூதனான சேனாதிபதி அவரிடம் சிக்கி உயிர் இழந்தான்.

oOo

அந்தாக்கியாவிற்குள் நுழைந்த இரண்டாம் பால்ட்வினுக்கு நகரைத் தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வெகு நேரம் ஆகவில்லை. கையை உயர்த்தி, தந்தையிடம் சரணடைந்தார் அலிக்ஸ். ‘என்ன இருந்தாலும் பெற்ற மகளாச்சே’ என்ற இரக்கம் எட்டிப்பார்க்க, அவரைக் கொல்லாமல் துறைமுகப் பட்டணமான லடாக்கியாவுக்கு நாடு கடத்திவிட்டார் இரண்டாம் பால்ட்வின். அலிக்ஸுக்கும் இரண்டாம் பொஹிமாண்டுக்கும் பிறந்த தம் இரண்டு வயது பேத்தியை அந்தாக்கியாவின் சம்பிரதாய அதிபதியாக ஆக்கிவிட்டு ஆட்சியைத் தமதாக்கிக் கொண்டார்.

ஆனால், அதன் பிறகு அவரது ஆயுள் அதிகம் நீடிக்கவில்லை. நோய்வாய்ப்பட்டு, ஹி.525 / கி.பி. 1131ஆம் ஆண்டு மரணமடைந்தார் ஜெருசல ராஜா இரண்டாம் பால்ட்வின். அடுத்த ராஜாவாக அவருடைய மூத்த மருமகன் அன்ஜுவின் கோமான் ஃபுல்க் பதவி ஏற்றார். அவருக்கும் அவருடைய மனைவி மெலிஸாண்ட்டுக்கும் கி.பி. 1131ஆம் ஆண்டு, செப்டெம்பர் 14ஆம் நாள் பட்டாபிஷேகம் செய்யப்பட்டு கிரீடம் சூட்டப்பட்டது. இலத்தீன் – அர்மீனியருக்குப் பிறந்த, ஜெருஸலத்தின் ராணியான மெலிஸாண்டுக்கு அச்சமயம் 22 வயது. அவருடைய கணவர் கோமான் ஃபுல்க்கிற்கோ ஐம்பது வயது. உடல் அமைப்பும் பருமன். இந்த இடைவெளியும் வித்தியாசமும் பின்னர் அவர்களிடையே மற்றொரு பிரச்சினைக்குக் காரணமாக அமைந்துவிட்டன.

தம் மூத்த சகோதரியும் அவருடைய கணவரும் ஜெருசலத்தில் ராணி-ராஜா என்றானதும் அங்கு அந்தாக்கியாவில் சம்பிராதாயப் பொறுப்பில் இருந்த தம் மூன்று வயது மகளை மடியில் தூக்கி வைத்துக்கொண்டு மீண்டும் கலகத்தில் இறங்கினார் அலிக்ஸ். அதனால் ஃபுல்கிற்குத் தம் மைத்துனியின் அந்தப் பிரச்சினையை முதலில் சமாளித்து அந்தாக்கியாவைத் தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும்படி ஆனது. சமூக அந்தஸ்து, கோமான் போன்ற காரணங்களால் ராஜாவுக்கு மருமகனாகி அவருக்குப்பின் ராஜாவாகவும் ஆகிவிட்டாரே தவிர ஃபுல்கிடம் ஆட்சித் திறமை என்பதே இல்லை. இல்லை என்பது மட்டும் இல்லாமல் நிர்வாகத்தில் ஏகப்பட்ட கோளாறு. அது ஜெருசலத்தில் பரங்கியர்களிடம் அதிருப்தியையும் கொந்தளிப்பையும் உருவாக்கியது.

அதையடுத்து, ஃபுல்க்கின் மனைவி ராணி மெலிஸாண்டுக்கும் இளமையான படை வீரரான ஹ்யூ என்பவருக்கும் கள்ள உறவு என்று ஒரு வதந்தி கிளம்பி பலமாகப் பரவியது. அது வளர்ந்து ஃபுல்கின் ஆதரவாளர்களுக்கும் படைவீரரின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல்களாக மாறி, பரங்கியர்களின் பிரபுக்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்தியது. வாய்ச் சண்டை குத்துச் சண்டையாகி, குத்துச் சண்டை கொலைகளில் முடிந்தது. அவ்வதந்தி உண்மையோ, பொய்யோ – ஹ்யூவின் உயிருக்கு ஆபத்து வந்து சேர்ந்தது என்பது மட்டும் உண்மை. தப்பிப் பிழைத்து எகிப்திற்கு ஓடி, ஃபாத்திமீக்களிடம் அபயம் பெற்று அஸ்கலான் நகரில் தஞ்சமடைந்தார் அவர்.

எதிரித் தரப்பிலிருந்து இப்படி ஒருவன் ஓடிவந்தால் அவர்களுக்குக் கசக்கவா செய்யும்? அவரை அன்புடன் வரவேற்று, ‘இதோ எங்களின் படையினர். தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று ஃபாத்திமீக்கள் வெகு தாராளமாய் நடந்து கொண்டார்கள். இது நல்வாய்ப்பாக இருக்கிறதே என்று ஃபாத்திமீக்களின் படை வீரர்களைத் திரட்டிக்கொண்டு, கிளம்பிச் சென்று, பரங்கியர்கள் வசம் இருந்த ஜாஃபா துறைமுகத்தைக் கைப்பற்றிவிட்டார் ஹ்யூ.

என் மனைவியைக் கவர்ந்தவன் இப்பொழுது என் ஆட்சிப் பகுதியை அபகரித்து விட்டானா என்ற கோபத்துடன் ஹ்யூவை துரத்தியடித்து ஜாஃபாவை மீட்டெடுக்க ஃபுல்க் படையைத் திரட்டி கொண்டிருந்த நேரத்தில், பூரியின் மறைவிற்குப் பிறகு பட்டத்திற்கு வந்திருந்த அவருடைய மகன் டமாஸ்கஸின் புதிய அத்தாபேக் இஸ்மாயீல், பனியாஸ் கோட்டையைக் கைப்பற்றிவிட்டார் என்ற தகவல் வந்து சேர்ந்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன் அஸாஸியர்கள் டமாஸ்கஸில் பூரியைப் பழிவாங்க பரங்கியர்களின் உதவியை நாடி அவர்களிடம் ஒப்படைத்தார்களே அந்த பனியாஸ் கோட்டை.

பரங்கியர்களை இந்தச் செயலின் மூலம் திகைப்பில் ஆழ்த்திய அந்த அபுல் ஃபத்ஹு இஸ்மாயீலின் வாழ்க்கை அதற்கடுத்துப் பல திருப்பங்கள் நிறைந்த ஒன்று. அதன் உச்சம்தான் அவருக்கும் இமாதுத்தீன் ஸெங்கிக்கும் இடையே நிகழ்ந்த ஒப்பந்தம். அதன் பின் விளைவுதான், பெற்ற மகன் என்றும் பாராமல் தாய் ஸுமர்ருத் இஸ்மாயீலைக் கொன்றது. அதை கவனிக்கும் முன் நாம் இமாதுத்தீன் ஸெங்கியுடன் அலெப்போவிலிருந்து டிக்ரித்துக்கும் மோஸூலுக்கும் பாக்தாதுக்கும் சென்று வர வேண்டியிருக்கிறது.

அதனால் முதலில் அவரைத் தொடர்வோம்.

.

 

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி 
தொடர் - 42
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி 
தொடர் - 44

இந்தக் கட்டுரையின் மூலம்சத்தியமார்க்கம்.காம். ஆசிரியர்:  நூருத்தீன்


1 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-46: ஸெங்கியின் மறுவெற்றி

அவற்றுள் பிரசித்தி பெற்ற ஒன்று லதாக்கியா படையெடுப்பு. மூவாயிரம் குதிரைப் படை வீரர்களுடன் சென்று சவார் நிகழ்த்திய திடீர்த் தாக்குதலில் பரங்கியர்கள் நிலைகுலைந்தனர். முஸ்லிம் படையினருக்குப் பெரும் வெற்றி! ஏழாயிரம் கைதிகள், ஆயிரக்கணக்கில் கால்நடைகள் கைப்பற்றப்பட்டு முஸ்லிம் படை மகிழ்ச்சியில் திளைக்க, பரங்கியர்களோ திகைத்து உடைந்து விட்டார்கள். துயரம் சூழ்ந்து அவர்கள் துக்கத்தில் மூழ்கிவிட, முஸ்லிம் பகுதிகளெங்கும் இவ்வெற்றி தலைப்புச் செய்தியாகி, மக்கள் மத்தியில் பேராரவாரம் எழுந்தது.

2 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-44: ஸெங்கியின் மறுதொடக்கம்

கலீஃபாவின் கூட்டணிப் படைக்கு எதிராகப் போரிட்டு, காயமடைந்து வந்த இமாதுத்தீன் ஸெங்கியையும் மற்றவர்களையும் பரோபகார உள்ளத்துடன் வரவேற்றார் நஜ்முத்தீன் ஐயூப். அவர்களது காயங்களுக்கு மருந்திட்டு, தேவையான உதவிகள் செய்து, படகுகளையும் அளித்து இமாதுத்தீன் மோஸூலுக்குத் திரும்பிச் செல்லப் பேருதவி புரிந்தார்.

3 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-45: இமாதுத்தீன் ஸெங்கியின் முதல் வெற்றி

ஹும்ஸை யார் வசம் ஒப்படைக்கலாம் என்று யோசித்த மஹ்மூதுக்கு எளிய தீர்வு கிடைத்தது – சென்ற அத்தியாயத்தின் இறுதியில் நமக்கு அறிமுகமான முயீனுத்தீன் உனுர். டமாஸ்கஸ் நகர் ஸெங்கியிடம் வீழாமல் தற்காத்துத் தந்த அவரைவிடச் சிறப்பாக வேறு யார் ஹும்ஸை ஸெங்கியிடமிருந்து காப்பாற்றிவிட முடியும்?

4 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-42: பூரித் வம்சாவளி

அஸாஸியர்கள் டமாஸ்கஸ் நகரைத் தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருந்ததை அம்மக்கள் தீவிரமாக வெறுத்து வந்தனர். அவர்களுக்குள் உலை கொதித்துக்கொண்டிருந்தது.

5 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-41: இமாதுத்தீன் ஸெங்கியின் அறிமுகம்

அல்லாஹ் அலெப்போவின் ஆளுநராக இமாதுத்தீன் ஸெங்கியை ஆக்கி முஸ்லிம்களுக்கு அருள் புரியாமல் இருந்திருந்தால், பரங்கியர்கள் சிரியா முழுவதையும் கபளீகரம் செய்திருப்பார்கள் என்று எழுதியுள்ளார் வரலாற்று ஆசிரியர் இப்னுல் அதீர்.

6 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-40: ஆக் சன்க்கூர் அல் புர்ஸுகீ
7 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-39: பலக் இப்னு பஹ்ராம் இப்னு அர்துக்
8 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-38: டெம்ப்ளர்கள், ஹாஸ்பிடலர்கள்
9 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-37: காழீயின் களப்பணி
10 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35: ராஜா பால்ட்வினின் முடிவு
11 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-36: குருதிக் களம்
12 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35: ராஜா பால்ட்வினின் முடிவு
13 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31: கிலிஜ் அர்ஸலானின் முடிவு
14 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30: பாலிக் யுத்தம் (ஹர்ரான்)
15 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34: சென்னாப்ரா யுத்தம்
16 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33: மவ்தூத் பின் அத்-தூந்தகீன்
17 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32: சிலுவைப் படையும் பைஸாந்தியமும்
18 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29: மெர்ஸிஃபான், ஹெராக்லியா யுத்தங்கள்
19 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28: ஜிஹாது ஒலியும் சிலுவைப் படையும்
20 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27: மெலிடீன் போர்
21 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-26: மெய்ச் சிலுவை
22 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-25: ஜெருஸல வீழ்ச்சியும் குருதி ஆறும்
23 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-24: ஜெருஸலப் போர்
24 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-23 ஜெருஸல முற்றுகை
25 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-22: மண்ணாசையில் விழுந்த மண்
26 வீழ்ந்தெழுவோம் : பொருளாதார நெருக்கடியை எப்படி சமாளித்தார்கள் - அழகிய முன்னுதாரனம். (தொடர்-45)
27 தர்ம கற்கள் - அழகிய தர்மம்
28 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-20: அந்தாக்கியாவின் இரண்டாம் முற்றுகை
29 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-21: புனித ஈட்டி
30 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 19: அந்தாக்கியாவின் வீழ்ச்சி!
31 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 18: அந்தாக்கியா
32 திருநெல்வேலி வரலாறு...!
33 மாவீரன் திப்புசுல்தான்:இந்திய விடுதலைப் போரின் உயிர்நாடி
34 அந்த இரண்டணா ......
35 சீனாவில் விதைத்த விதை - ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி)
36 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 17
37 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 16
38 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 15
39 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 14
40 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 13
41 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 12
42 ஔரங்கசீப் அவர் அழித்ததைவிட அதிக கோவில்களைக் கட்டினார்
43 இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ்
44 இதுவல்லவா நபி நேசம்!!!!!!!
45 தனக்குரியவருக்காக காத்திருக்கும் இரயில் ....
46 உலகத்திற்கே ஒளி விளக்கேற்றிய மதீனாவில், விளக்கேற்றியது எப்போது?
47 உஸ்மானியா பேரரசு கடைவீதியின் தொங்கும் கூடைகள்
48 நான் குதுப்மினார் பேசுகிறேன்-1
49 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 11
50 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -1
51 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -2
52 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -3
53 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -4
54 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -5
55 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 6
56 கையிலே ஒரு துணிப்பை, எளிய நடை, எளிய உடை உத்தமபாளையம் எஸ்.எஸ். ஹஜரத்
57 இஸ்லாம் வென்றெடுத்த ஷாம்
58 தமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர்
59 சாரதா பீடம் சொல்லும் திப்புவின் மதநல்லிணக்கம்
60 சூஃபிக்களும் புனித போர்களும்
61 யார் தேச விரோதி?
62 இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.
63 ஸயீத் இப்னு ஆமிர் سعيد ابن عامر (ரலி)
64 விடுதலைப்போரில் வீரமங்கையர்
65 பூரண சுதந்திரம் கேட்ட முதல் இந்தியன்
66 இஸ்லாம் இந்தியாவுக்கு அந்நிய மதமா?
67 நாகூர் - ஒரு வரலாற்றுப் பார்வை
68 இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்
69 கோரிப்பாளையம் தர்கா கல்வெட்டுகள்
70 சமயப் பொறை பேசும் சரித்திரச் சான்றுகள்
71 தமிழ் முஸ்லிம்களின் இடப்பெயர்ச்சி வரைபடம்
72 விடுதலை போரில் நெல்லை மாவட்ட முஸ்லிம்கள்
73 தமிழகத்தில் முஸ்லீம்கள் வரலாறு
74 சுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது
75 இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.
76 தமிழகத்தில் முஸ்லீம்கள்
77 இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?
78 இந்திய விடுதலைப் போரும் முஸ்லீம்களும்
79 இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு
80 பாடலியில் ஒரு புலி
81 தேசவிடுதலைக்கு ஆயுதப்புரட்சியே தீர்வு
82 ஒரு மனிதன் ஒரு பட்டாளம் - மௌலவி செய்யது அஹ்மதுல்லாஹ் ஷாஹ்.
83 முதல் சுதந்திரப் பிரகடனம்
84 மவுலானா எனும் மகத்தான இந்தியர்
85 காலித் பின் வலீத் (ரலி)
86 தமிழ் முஸ்லிம்களின் வரலாற்று பொக்கிஷம். ஒரு ஆவணக் குறும்படம்
87 இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
88 முதல் வாள்!
89 கஜினி முகம்மது மற்றும் முகம்மது துக்ளக் (தவறான ணோட்டங்கள்)
90 இலங்கையில் முஸ்லிம்கள் - அன்றும் இன்றும்
91 மாவீரன் மருத நாயகம் கான் சாஹிப்