அன்று அச்செய்தியை வாசித்தபோது வியப்பு தாங்கமுடியவில்லை. அதைப் பார்த்ததும், முன்பு வாசித்த மற்றொரு தகவல் நினைவுக்கு வந்தது. தமிழக தனியார் தொலைக்காட்சியில், சமீபத்தில் ஒரு பெண் தொகுத்து வழங்குகின்ற வயது வந்தோருக்கான ஒரு நிகழ்ச்சி குறித்த முகநூல் விமர்சனங்கள், நிகழ்ச்சியின் தரம் முகச்சுளிக்குமளவு இருப்பதைக் கூறின. இந்திய தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப்படும் சாதாரண நிகழ்ச்சிகளிலேயே பலவும் பெரியவர்கள்கூட பார்க்க முடியாதபடி இருக்க, தாம்பத்திய சந்தேகங்கள் குறித்த நிகழ்ச்சிகளைப் பற்றி கேட்க வேண்டுமா? பெண்களுக்கு நியாயமான சந்தேகங்கள் இருப்பினும் அதைப்பற்றிக் கேட்டுத் தெளிவதற்கு எந்தவொரு வழியும் இல்லாத நிலையே இந்தியாவில் உள்ளது. படித்தவர்களுக்காவது இணையம் உள்ளது. படிக்காத பெண்களுக்கு?
இந்நிகழ்ச்சிகள் டிவிக்களின் டிஆர்பி ரேட்டை அதிகரிக்க மட்டுமே பயன்படுகின்றன என்பதல்லாமல், உரிய சந்தேகங்களை - ஆண்களுக்குக்கூட - நிவர்த்தி செய்ய உதவுவதில்லை என்பதுதான் உண்மை. ஆனந்த விகடனில் “பேசாத பேச்செல்லாம்” என்ற தொடரில் திருமதி. ப்ரியா தம்பி, ”தன்னை பாலியல்ரீதியாகப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிப்பதற்கு” அப்பெண் உடன்படுகிறார் என்று இந்நிகழ்ச்சி குறித்து கூறுகிறார்.. இதுவா சுதந்திரம்? தொலைக்காட்சி, வானொலிகளில் வரும் பெரும்பாலான நிகழ்ச்சிகளிலும் இதுதான் நடக்கிறது.
இந்த வருடம் காதலர் தினத்தன்று, ஒரு தமிழ் வானொலியில் “தன் காதல் துணைக்கு வானொலி வழி சேதி சொல்லும்” ஒரு நிகழ்ச்சி ஒலிபரப்பானது. அந்நிகழ்ச்சியை நடத்திய பெண் தொகுப்பாளரிடம் இதைச் சாக்காக வைத்து வழிந்தவர்கள்தாம் அதிகம். அதிலும் அரைமணிநேரம் ஒலிபரப்பான அந்நிகழ்ச்சியில் மூவர், காதல் கவிதைகள் வாசித்து அது அந்த தொகுப்பாளருக்கான தன் காதல் தூது என்றும் கூறினார்கள்!! அதற்கு அப்பெண் சிரித்து மழுப்புவதைத் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை – செய்ய இயலவுமில்லை. உலகமே கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சியில் அவரது விருப்பத்திற்கு மாறாக, அது சாத்தியமில்லை என்று தெரிந்தும் ஒருவன் தன் காதலைத் தெரிவிக்கிறான் என்றால், அங்கே தான் கண்டிக்கப்பட மாட்டோம் என்பது நிச்சயமாகத் தெரிந்ததால்தானே செய்ய முடிகிறது?
காதலிக்கும் நோக்கம் சற்றும் இல்லை என்ற போதும், “ச்சும்மா” போகிற போக்கில் இப்படி ஒரு அழைப்பில் அப்பெண்ணை இழிவுபடுத்திவிட முடிவது எதனால்? அழைப்பவரின் தொலைபேசி எண் இருக்கும் பட்சத்தில் புகார் செய்வதும், தண்டனை பெற்றுத் தருவதும் முடியாத காரியமல்லவே. எனினும், நிர்வாகங்கள் அப்படி நடப்பதைத்தான் விரும்புகின்றன. டிஆர்பி ரேட்டிங்கிற்காக, இம்மாதிரியான சலம்பல்களை நிர்வாகமே விரும்புகின்றது.
நிர்வாகம்தான் விரும்புகின்றது என்றால், அந்தப் பெண்களும் ஏன் தடுப்பதில்லை? இதுவே அப்பெண்ணிடம் நேரில் ஒருவன் வந்து பொது இடத்தில் காதல் கடிதம் கொடுத்தால், செருப்பைக் கழட்டி அடிக்காத குறையாக அவமானப்படுத்துவார்கள். ஆனால், ஒரு ஊடகத்தில் இது நிகழ்ந்தால், அதே பெண்கள், சிரித்துக் கொண்டே கடந்து போகிறார்கள். இதுவும் “தன்னை பயன்படுத்திக் கொள்ள அனுமதிப்பது” ஆகாதா? நிகழ்ச்சி நடத்துபவர்கள் மட்டுமல்ல, ஒரு சில நிகழ்ச்சிகளில் பங்களிக்கும் பெண்களில் சிலரும், இவ்வாறே தம்மை புகழுக்காகவோ, வெற்றிக்காகவோ தரம் தாழ்த்திக் கொள்கின்றனர்.
ஊடகங்கள் மட்டுமில்லை, அலுவலகங்களிலும் இதை பார்க்கலாம். இன்றைய உலகமயமாக்கலில், அலுவலகங்களின் வரவேற்பறைகளில் இருப்பது பெண்கள் மட்டுமே!! ஏன்? வரவேற்பாளராக, அந்த அலுவலகத்தின் ”முகமாக” ஒரு பெண்தான் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் ஏன்?
வரவேற்பாளர், விமான பணிப்பெண், விற்பனையாளர், காரியதரிசி (secretary, personal assistant), வாடிக்கையாளர் தொலைபேசி சேவை, counter staff போன்ற வாடிக்கையாளர்களோடு நேரடி தொடர்பிலிருக்க வேண்டிய பணிகளில் – அலுவலகத்தின் “முகத்தை” பிரதிபலிப்பவர்களாக பெண்கள்தான் இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத நிர்பந்தம் இன்று தொழிலகங்களில் நிலவுகிறது.
அவர்கள் எப்போதும் சிரித்த முகத்தோடு இருக்க வேண்டும்; வரும் வாடிக்கையாளரோ, மேலதிகாரியோ எவ்வளவு கோபப்பட்டாலும் புன்னகையோடே எதிர்கொள்ள வேண்டும்; எக்காரணம் கொண்டும் முகம் வாடக்கூடாது. அது மட்டுமல்ல, அவர்கள் உடுத்தும் உடை வரை அலுவலகமே நிர்ணயிக்கின்றது. அதனால் என்ன என்று கேட்பீர்கள்: சீருடை என்றளவில் நிற்பதில்லை அந்த நிர்ணயம். ஆடையின் நீள அகலம் ஏற்ற இறக்கம் வரை எவ்வளவு இருக்க வேண்டும் என்பதும் அவர்கள் தீர்மானிப்பதே!! ஆடையோடு நிற்பதல்ல விதிமுறைகள்: திருமணம், குழந்தைப் பேறு ஆகியவற்றிற்கும் கடவுள் கண்ணை திறப்பதற்கு முன், காரியாலயத்தின் கருணைப் பார்வை முதற்கண் வேண்டும்!!
நான் பணிபுரிந்த காலத்தில், இருவேறு நிறுவனங்களில் நடந்தவை நினைவுக்கு வருகின்றன. ஒரு நிறுவனத்தில், வரவேற்பாளினி வேலையை விட்டு நின்றபோது, அடுத்த வரவேற்பாளினி வரும்வரை, அங்கிருந்த ஒரே பெண்ணான என்னை அலுவலகத்திற்கு வரும் தொலைபேசி அழைப்புகளை ஏற்றுப் பேசச் சொன்னார்கள். ஒரு ஆஃபீஸ் பாய் இருந்தும், என்னை அப்பணியைச் செய்ய நிர்பந்தித்ததற்கு, இதே “முகம்”தான் காரணம்!! மற்றொரு நிறுவனத்தில், ஆஃபீஸ் பாய் தவிர “டீ பாய்” என்று ஒருவர் தனியாக இருந்தும், அட்மினிஸ்ட்ரேஷனில் உள்ள பெண்கள்தாம் வரும் விருந்தினர்களுக்கு விருப்பமறிந்து தேநீர் பரிமாறி உபசரிக்க வேண்டுமாம்!!
இவ்விரு நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவங்கள் என்பதும், இப்பணியை ஆணையிட்டவர்கள் ஆங்கில தேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிட்டேயாக வேண்டும்!! நிறுவனத்தின் முகமாக ஒரு “பெண்”தான் முன்னிறுத்தப்பட வேண்டும் என்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே பொதுவான நியதியாகிவிட்டது!!
இன்னும், எல்லாவிதமான விளம்பரங்களிலும் திரைப்படங்களிலும் பெண்கள் எப்படி “பயன்படுத்தப்” படுகிறார்கள் என்றும் பார்க்கத்தானே செய்கிறோம். இதைத் தனியே விளக்க வேண்டியதேயில்லை.
இப்படி ஏதோ ஒரு நிறுவனத்தின் வெற்றிக்காக, புகழுக்காக, இலாபத்துக்காக பெண்கள் தம்மை அவர்களின் “முகமாக” பயன்படுத்திக் கொள்ள அனுமதிப்பது அடிமைத்தனம் ஆகாதா? வீடுகளில் ஆண் உறவுகளிடம் “பெண்ணுரிமை” பேசி தம் உரிமைகளை நிலைநாட்டத் துடிக்கும் பெண்கள், வேலையிடங்களில் சுயம் இழப்பதுதான் பெண்ணுரிமையா? சில பெண்களுக்கு பணிபுரிந்தாக வேண்டிய நிர்பந்த நிலை என்பதால், அவர்களின் சம்மதத்தோடுதான் இது நடக்கிறதென்றாலும், இது அவர்களின் அவலநிலையைப் “பயன்படுத்திக்” கொள்ளல் இல்லையா? இதுதான் இந்த சமூகம் பெண்களுக்குக் கொடுக்கும் மரியாதையா?
இப்படியான சூழலில்தான், இந்தச் செய்தியை வாசித்தபோது வியப்பு தாங்க முடியவில்லை. அண்டை நாடான பாகிஸ்தானில், பெண்களுக்கான பாலியல் சந்தேகங்கள் குறித்து ஒரு நிகழ்ச்சியை HTV என்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நடத்தி வருகிறது!! ஆண்கள், குழந்தைகள் இல்லாத பகல் நேரத்தில்தான் பெண்களுக்குப் பங்கு கொள்வது வசதி என்பதால் பகலில் நடத்தப் படுகிறது. கிராமத்திலிருந்தும் பெண்கள் அதிகமாகக் கலந்துகொண்டு தம் சந்தேகங்களை நிவர்த்தி செய்கிறார்களாம்.
எந்த வக்கிரமும் ஆபாசமும் இல்லாமல், எடுத்துக் கொண்ட நோக்கத்தைச் சிறப்பாகச் செயல்படுத்துகிறார்கள். நிகழ்ச்சி நடத்துவது ஆண் மருத்துவரே என்றபோதும் நிகழ்ச்சியின் நாகரீகம் காரணமாக பெண்கள் கேள்விகள் கேட்க தயங்குவதில்லையாம்.
மேலும், வளைகுடா நாடுகளில் திருமணத்திற்கு முன், ஆண்-பெண் இருவருமே மருத்துவப் பரிசோதனையும் கவுன்சிலிங்கும் கட்டாயம் செய்துகொள்ள வேண்டும். இன்று நேற்றல்ல, பல வருடங்களாக இவ்விதி நடைமுறையில் இருந்து வருகிறது. அந்நாடுகளில் தரமான மருத்துவமும் அந்நாட்டினருக்கு இலவசம் என்பதால் பெண்களுக்குரிய மருத்துவ ஆலோசனைகளுக்கும், உயர்தர சிகிச்சைகளுக்கும் குறைவில்லை.
மேலை நாடுகளில்கூட, மருத்துவம் விலையுயர்ந்ததாக இருந்தபோதும், தம்மைக் காத்துக் கொள்ளும் பரிசோதனைகள் குறித்த தெளிவும், தக்க சமயத்தில் தக்க மருத்துவம் நாடும் அறிவும் பெண்களுக்கு உள்ளது. இப்படி, பெண்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகம் என்று குற்றப்படுத்தப்படும் நாடுகளிலும்; மற்றும், பெண்களை ”சம உரிமைக்குரியவர்கள்” என்று பேர்படுத்தி, சுமைகளை இரு மடங்காக்கி உள்ள மேலைநாடுகளிலும்கூட பெண்களுக்கான அத்தியாவசிய ஆலோசனைகளும் மருத்துவ சிகிச்சைகளும் சிறப்பாகக் கிடைக்கிறது.
ஆனால், பெண்களை தெய்வமாக, ஆறுகளாக, பர்வதங்களாக இன்னும் மக்களைத் தாங்கும் பூமித்தாயாக போற்றிப் புகழும் நம் நாட்டில் பெண்கள் வெறும் அலங்காரப் பொருட்களாகவே பயன்படுத்தப்படுவது முரண். காரணம், பெண்ணை – நாட்டின், வீட்டின் உந்துசக்தியாக உருவகப்படுத்துவதை இழிவெனக் கருத வைத்து, மாறாக இதுதான் பெண்ணியம், பெண் சுதந்திரம் என்று அப்பெண்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு, ஏற்றுக் கொள்ள வைக்கப்படுகிறார்கள்.
சோழ இளவரசி குந்தவை நாச்சியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை முனைவர் பட்டதுக்கான ஆய்வுத் தலைப்பாக எடுத்து மிக விசாலமாக ஆய்வுசெய்து அதை அதிகாரப்பூர்வ வரலாறாக பதிவாக்கிட வேண்டும்.