பெருமானார் (அல்லாஹ்வின் ஆசியும் அருளும் அவர்கள் மீது உண்டாகட்டும்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த தலைமுறையை புனரமைக்கப்பட்ட இஸ்லாமிய வரலாற்றின் முதல் தலைமுறையினர் என்று அழைப்பது வழக்கம். அது ஓர் ஒப்பற்ற தலைமுறையும் கூட.
நபித்தோழர்களுக்குத்தான் இது பொருந்தும் என்றில்லை. நபிகளாரின் காலத்தில் வாழ்ந்த பெண்களுக்கும் இஃது பெருமளவில் பொருந்தும்.
இறைவனை அஞ்சி நடப்பதில் அந்த ஆண்களுக்கு நாங்கள் சற்றும் சளைத்தவர்களல்ல என்பதை அவர்கள் (அந்த பெண்கள்) எல்லா விதத்திலேயும் நிலைநாட்டிக் காட்டினார்கள்.
அல்லாஹ்வின் கட்டளைகள் அந்த மக்களை வந்தடைந்தவுடன், அந்த மக்கள் எப்படித் தங்கள் வாழ்க்கையில் அதனைச் செயல்படுத்தினார்கள் என்பதை அறிஞர் செய்யித் குதுப் ஷஹீத் (அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக!) அவர்கள் அழகியதொரு உவமையைக் கொண்டு விளக்குவார்கள்.
அந்த விளக்கம்...
போர்க்களம்.
அதில் முன்னே நிற்கும் வீரர்கள். இவர்களுக்கு எதிரிகள் எங்கே எப்படி பதுங்கிக் கிடக்கின்றார்கள் என்று தெரியாது. ஆனால் உயரத்தில் அம்பாரி கட்டி அமர்ந்திருக்கும் தளபதி தொலைநோக்குக் கண்ணாடி வழி எதிரிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்துக்கொண்டே இருப்பார். அந்தத் தளபதி தக்க தருணம் வந்தவுடன் 'சுடு' (Shoot) என ஆணை பிறப்பிப்பார். ஆணை காதில் பட்டவுடன் சிப்பாய்களின் கைகளிலிருக்கும் துப்பாக்கிகள் வெடிக்கும்.
தளபதியின் ஆணை வந்தபின் அந்தச் சிப்பாய்கள் ஒரு நிமிடம் பிந்தவோ, ஒரு நிமிடம் முந்தவோ மாட்டார்கள். உடனேயே செயல்படுத்தி விடுவார்கள். அதில் தயக்கங்களையோ கலக்கங்களையோ காட்டமாட்டார்கள்.
அந்த ஆணைகளை எவ்வளவு வேகமாகவும் துல்லியமாகவும் செயல்படுத்திட இயலுமோ அவ்வளவு வேகமாகவும் துல்லியமாகவும் செயல்படுத்துவார்கள். அந்த அளவுக்கு வெற்றிகளும் வந்து குவியும்.
பட்டாளத்துச் சிப்பாய்களைப் போல்தான் இறைவனின் இறுதித் தூதர் முஹம்மத் (அல்லாஹ்வின் ஆசியும் அருளும் அவர்கள் மீது உண்டாகட்டும்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்கள் வாழ்ந்தார்கள். அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் வந்தவுடன் அவர்கள் அதனைச் செயல்படுத்தி விடுவார்கள். அதனால் தங்களுக்கு வரும் துன்பங்களையும் துயரங்களையும் எண்ணிப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
காலாகாலமாகத் தாங்கள் பின்பற்றி வந்த பழக்கவழக்கங்கள், தங்கள் மூதாதையர்களின் வம்சாவழி பழக்கங்கள் இவையெல்லாம் இறைவனின் கட்டளைகளுக்குக் குறுக்கே நிற்கும் என்றால் இவற்றையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்துவார்கள்.
இதில் மணித்துளியும் தாமதிக்க மாட்டார்கள்.
நபித்தோழர்கள்தாம் இப்படி இருந்தார்கள் என்றில்லை. நபிகளாரின் காலத்தில் வாழ்ந்த பெண்களும் இப்படித்தான் இருந்தார்கள்.
பெண்களைக் குறித்து அல்லாஹ்வின் கட்டளைகள் வந்தபோதெல்லாம் அவர்கள் அந்தப் போர்க்களத்து சிப்பாய்களைப் போல்தான் செயல்பட்டார்கள்.
பெண்களுக்கான இறை ஆணைகளைச் செயல்படுத்துவதில் அவர்கள் துளி நிமிடமும் பிந்தவே இல்லை. அந்தக் கட்டளைகள் அவர்களின் விருப்பங்களுக்கு, முந்தைய பழக்கவழக்கங்களுக்கு எதிராக இருந்தாலும் சரியே.
இப்படித்தான் பெண்கள் தங்கள் உடலை மறைப்பதற்குரிய இறை ஆணைகள் வந்தபோது உடனே செயலில் குதித்தார்கள். அந்த இறை ஆணை:
(நபியே!) விசுவாசமுள்ள பெண்களுக்கும் நீர் கூறும்; அவர்களும் தங்கள் பார்வைகளைக் கீழ் நோக்கியே வைத்து, தங்கள் கற்பையும் இரட்சித்துக்கொள்ளவும். (அன்றி, தங்கள் தேகத்தில் பெரும்பாலும்) வெளியில் தெரியக்கூடியவைகளைத் தவிர, தாங்கள் அழகையும், (ஆடை, ஆபரணம் போன்ற) அலங்காரத்தையும் வெளிகாட்டாது மறைத்துக் கொள்ளவும். தங்கள் முந்தானைகளால் மார்பையும் மறைத்துக்கொள்ளவும். (திருக்குர்ஆன் 24:31).
இந்த வசனம் (இறை ஆணை) இறங்கியவுடன் அந்தப் பெண்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை ஹழரத் ஆயிஷா (ரலி) அவர்கள் இப்படிக் குறிப்பிடுகின்றார்கள்:
"அல்லாஹ் அந்த முஹாஜிர் (மக்காவைத் துறந்து மதீனா வந்தவர்கள்) பெண்கள் மீது அருளைப் பொழிவானாக! 'தங்கள் முந்தானையால் தங்கள் மார்புகளை மறைத்துக்கொள்ள வேண்டும்' (அல்குர்ஆன் 24:31) என்ற அல்லாஹ்வின் கட்டளை இறங்கியவுடன் அவர்கள் தங்கள் போர்வைகளைக் கிழித்து தங்களை முழுமையாக மறைத்துக் கொண்டார்கள்."
ஸபியா பிந்த் ஷய்பா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
"நாங்கள் ஆயிஷா (ரலி) அவர்களுடன் அமர்ந்து கொண்டிருந்தோம். அப்போது நாங்கள் குறைஷி குலத்தைச் சார்ந்த பெண்களின் நற்பண்புகளைச் சிலாகித்துக் கூறிக்கொண்டிருந்தோம். அதுபோது ஆயிஷா (ரலி) அவர்கள் எங்களிடம் குறைஷி குலத்தைச் சார்ந்த பெண்கள் நற்பண்புகள் மிக்கவர்கள்தாம். ஆனால், அல்லாஹ்வின் பெயரால் நான் கூறுவேன் : அன்சாரிப் பெண்களைப் போல் (மதீனாவாசிகளைப் போல்) அல்லாஹ்வின் கட்டளைகளை அத்துணை கண்டிப்புடன் செயல்படுத்தியவர்களை நான் கண்டதில்லை.
'தங்கள் முந்தானையால் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்' என்ற அல்லாஹ்வின் கட்டளை இறங்குகிறது. அன்சாரி ஆண்கள் அன்சாரிப் பெண்களிடம் வந்து இந்த இறை வசனத்தை (அல்குர்ஆன் 24:31) ஓதிக் காட்டினார்கள். அந்த ஆண்கள் தங்கள் தாய், மனைவி, மகள், சுற்றத்துப் பெண்கள் இவர்களிடமெல்லாம் உடனேயே இந்த வசனத்தை ஓதிக் காட்டினார்கள். இதனைக் கேட்டதும் அந்தப் பெண்கள் எழுந்தார்கள். தங்கள் ஆடைகளை முழுமையாக மறைக்கும் ஆடைகளாக ஆக்கிக் கொண்டார்கள். அவர்கள் தங்களை முழுமையாகப் போர்த்திக் கொண்ட நிலையில் இறைவனின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் வந்து நின்றார்கள். அதுபோது காக்கைகள் அவர்களின் தலையில் அமர்ந்திருப்பது போல் இருந்தது." (புஹாரி)
ஆக, அன்சாரிப் பெண்களும், முஹாஜிர் பெண்களும், மொத்தத்தில் முஸ்லிம் பெண்கள் அனைவரும் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்துவதில் போர்க்களத்து சிப்பாய்களைப் போல் செயல்பட்டிருக்கின்றார்கள்.
இஸ்லாமிய வரலாற்றின் அந்த முதல் தலைமுறையினர் ஒரு போர்ப் படையின் கட்டுப்பாடோடு நடந்து கொண்டதால் தான் வெற்றிகளைக் குவித்தார்கள். இன்றளவும் வெல்ல முடியாத வரலாற்றைப் படைத்தார்கள்.
இன்று நாம் பர்தாவால் விளையும் பயன்களைக் கண்கூடாய் கண்டு வருகின்றோம். மேலைநாட்டுப் பெண்களில் பலர் பர்தா, இஸ்லாமியக் குடும்ப அமைப்பு இவைகளால் கவரப்பட்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கின்றார்கள் என்கின்ற செய்தியை நாம் கேள்விப்படுகின்றோம். மகிழ்கின்றோம். (இதை பலமுறை நாம் முன்னால் நடத்திவந்த "விடியல் வெள்ளி" பத்திரிகையில் அது பற்றியக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன).
பெண்களை கற்பழிப்பு போன்ற கொடூரங்களிலிருந்து காப்பாற்றும் கவசம் என்பதை இன்றைய ஆய்வாளர்கள் ஆய்ந்தறிந்து சொல்கின்றார்கள். நாம் ஆச்சரியப்படுகின்றோம்.
'பர்தா' பெண்களை கற்பழிப்பு போன்ற கொடூரங்களிலிருந்து காப்பாற்றும் கவசம் என்பதை இன்றைய ஆய்வாளர்கள் ஆய்ந்தறிந்து சொல்கின்றார்கள். நாம் ஆச்சரியப்படுகின்றோம்.
பல்கலைக் கழகங்களில் பயிலும் பெண்கள் தாங்களாகவே முன்வந்து 'பர்தா'வை அணிந்து கொள்கின்றார்கள். ஆனால் இந்த ஆடைமுறைக்கெதிராகப் போர் தொடுப்பவர்களும் இருக்கின்றார்கள்.
மேலைநாட்டுப் பத்திரிகையாளர் ஒருவர் டமஸ்கஸ் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்தாராம். அங்கே பெண்கள் 'பர்தா' அணிந்து வருவது அவருக்கு மிகுந்த மன உளைச்சலைத் தந்ததாம். அந்தப் பெண்களை எப்படியேனும் 'பர்தா' அணிவதற்கு எதிராகத் திருப்பிவிட வேண்டும் எனக் கங்கணம் கட்டிக் கொண்டாராம்.
தனது மன உளைச்சலை இப்படியொரு வினாவின் வழி வெளிப்படுத்தினாராம்:
"இந்த வெயில் காலத்தில் பர்தா அணிவது உங்களுக்கு அதிக உஷ்ணத்தையும் கஷ்டத்தையும் தரவில்லையா?"
இந்தக் கேள்விக்கு அந்தப் பல்கலைக்கழக மாணவிகள் இப்படிப் பதில் சொன்னார்களாம்:
"நரகத்தின் வெப்பம் இதை விடக் கொடியதாக இருக்கும்!"
வாய் மூடிப் போனாராம் அந்தப் பத்திரிகையாளர் அந்தப் பெண்களின் உறுதி கண்டு. இந்த உறுதியை நமது கல்லூரி சகோதரிகளிடமும் கொண்டு வருவோம்.
M.குலாம் முஹம்மது M.A.,
"வைகறை வெளிச்சம்" மாத இதழில் மகளிர் மன்றம் என்கிற தலைப்பில் பெண்களுக்கான தொடர் கட்டுரைகளை வாசியுங்கள்... பயன்பெறுங்கள்...
சோழ இளவரசி குந்தவை நாச்சியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை முனைவர் பட்டதுக்கான ஆய்வுத் தலைப்பாக எடுத்து மிக விசாலமாக ஆய்வுசெய்து அதை அதிகாரப்பூர்வ வரலாறாக பதிவாக்கிட வேண்டும்.
தன்னை ஒரு முஸ்லிம் என்று சொல்லக் கூடியவர் வீட்டில் என்ன நடக்கிறது? குழந்தைகளை கூட வைத்துக் கொண்டு, பெற்றோரும், உற்றாரும் குடும்ப சகிதமாக, தொழுகை நேரம் என்றில்லாமல், சினிமாவை ரசித்துக் கொண்டிருக்கிற காட்சியை பரவலாக காண முடிகிறது (விதிவிலக்காக இருப்பவர்களைத் தவிர்த்து). கடைசியில் தன் குழந்தை, படத்தில் வருவது போல யாரையாவது இழுத்துக் கொண்டு ஓடிய பிறகுதான் பெற்றோர்கள் விழித்துக் கொள்வார்கள்.