சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -12

இதுவரையும் இனியும்

கடந்த பதினோரு அத்தியாயங்களில் ஏகப்பட்ட நிகழ்வுகளையும் எக்கச்சக்கத் தகவல்களையும் மூச்சு முட்டக் கடந்து, இப்பொழுதுதான் முதலாம் சிலுவை யுத்தத்தை நெருங்கியிருக்கின்றோம்.

நெடிய வரலாறு இனிமேல்தான் துவங்கப் போகிறது, நீண்டதொரு பயணம் காத்திருக்கிறது என்பதால் இங்குச் சற்று நின்று, ஆசுவாசப்படுத்திக்கொண்டு இதுவரை அறிமுகப்படுத்திக்கொண்டதை மிகச் சுருக்கமாக அசைபோட்டு விடுவோம்.

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, கி.பி. 1187 / ஹிஜ்ரீ 583ஆம் ஆண்டு ஜெருசலம் நகரை மீட்டதும் அந்தப் போரும் சுருக்கமான முன்னோட்டமாக, பெரும் வெற்றியின் முன்னறிமுகமாகத் தொடங்கியது இவ் வரலாற்றுத் தொடர்.

அங்கிருந்து 50 ஆண்டுகள் பின்னோக்கிப் போய், ஸலாஹுத்தீன் ஐயூபியின் தந்தை நஜ்முத்தீன் ஐயூப், அவருடைய சகோதரர் அஸாதுத்தீன் ஷிர்கு, அவர்களது குர்துக் குலப் பூர்வீகம், அவர்கள் பக்தாதுக்குப் புலம் பெயர்ந்தது, அங்கிருந்து திக்ரித் நகருக்கு வந்து சேர்ந்தது, அங்குச் செல்வாக்குடன் ஆட்சி புரிந்தது, சுல்தான் முஹம்மது இப்னு மாலிக் ஷாவுடன் போரிட்டுத் தப்பி வந்த இமாதுத்தீன் ஸன்கி என்பவருக்கு உதவி புரிந்தது, பிறகு நஜ்முத்தீன் ஐயூபியும் மற்றும் அனைவரும் திக்ரித்திலிருந்து ஒரு நள்ளிரவில் வெளியேற நேர்ந்தது, அந்த இரவில் ஸலாஹுத்தீன் ஐயூபி பிறந்தது, அவர்கள் அனைவருக்கும் இமாதுத்தீன் ஸன்கி மோஸூலில் அபயம் அளித்தது என்பனவெல்லாம் இரண்டாம் அத்தியாயம்

oOo

அதன்பின் டமாஸ்கஸ் நகருக்கு அண்மையில் உள்ள பஅல்பெக் நகரை இமாதுத்தீன் ஸன்கி கைப்பற்றி, அதன் ஆட்சிப் பொறுப்பை நஜ்முத்தீன் ஐயூபிக்கு அளிக்க, அவர் அங்குக் குடியேறி, பிறகு அரசியல் மாற்றத்தால் அங்கிருந்து டமாஸ்கஸ் நகருக்குப் புலம்பெயர்ந்து, ஸலாஹுத்தீன் ஐயூபியின் இளம் பருவம் முழுவதும் அவ்விரு நகரங்களில் கழிந்ததை அறிந்தோம்.

அங்கிருந்து மேலும் சுமார் இருநூறு ஆண்டுகள் பின்னோக்கிப் போய் இமாதுத்தீன் ஸன்கியின் துருக்கிக் குலத்தின் மூலம், ஸெல்ஜுக் துருக்கியர்களான அவர்கள் ஏரால் பகுதியிலிருந்து மத்தியக் கிழக்குப் பகுதிகளுக்கு மெதுமெதுவே புலம் பெயர்ந்தது, இஸ்லாத்தை ஏற்றது, வலிமை பெற்றது, ஆட்சி அமைத்தது, அவர்களுடைய சுல்தான் அல்ப் அர்ஸலான் கிறிஸ்தவ பைஸாந்தியப் பகுதிகளைக் கைப்பற்றியது – அவை ஸெல்ஜுக் காதை. மூன்றாம் அத்தியாயம்.

oOo

ஸெல்ஜுக் துருக்கியர்கள் ஆட்சி அமைத்தபின் நான்காம் அத்தியாயத்தில் கி.பி. 1071ஆம் ஆண்டுக்கு நகர்ந்து, பைஸாந்தியப் பேரரசர் ரோமானஸ் IV, சுல்தான் அல்ப் அர்ஸலான் இருவருக்கும் இடையே நடைபெற்ற மன்ஸிகர்த் யுத்தம், அதில் பைஸாந்தியர்கள் படுதோல்வி அடைந்தது, பேரரசர் ரோமானஸ் IV கைதியாகச் சிறைபிடிக்கப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டது, அந்தத் தோல்வி அவர்களுக்கு ஏற்படுத்திய அவமானம், சஞ்சலம், அதன் காரணமாக அவர்கள் ஐரோப்பாவிலுள்ள போப்பாண்டவரிடம் விடுத்த உதவி கோரிக்கை ஆகியனவற்றைப் பார்த்தோம்.

மத்தியக் கிழக்கிலிருந்து ஐரோப்பாவுக்குப் போக நேரிட்டதால், அங்குக் கிறிஸ்தவர்களின் நிலை, கிறிஸ்தவ மன்னர்களுக்கும் போப்புகளுக்கும் இடையே நிலவிய அரசியல், அதிகாரப் போட்டி, அச்சமயம் போப்பாக இருந்த கிரிகோரி பைஸாந்தியப் பேரரசின் உதவிக் கோரிக்கையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த நினைத்தது – அந்த அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டன.

oOo

பிறகு அர்பன் II போப்பாகப் பதவியேற்றார். பைஸாந்தியத்தில் அலக்ஸியஸ் சக்கரவர்த்தி ஆகியிருந்தார். இந்தச் சக்கரவர்த்தியும் துணைப்படைகளை அனுப்பச் சொல்லி, போப்பின் திருச்சபைக்குத் தகவல் அனுப்பி வைத்தார். கிழக்கே கான்ஸ்டன்டினோபிள், மேற்கே ரோம் நகரம் என்று பிரிந்து கிடந்த கிறிஸ்தவ ராஜ்ஜியம் மதக்கோட்பாட்டின் ஒரு முக்கியமான விஷயத்தில் ஒற்றுமையின்றிப் பிளவுபட்டிருந்தது. இந்தப் பிரச்சினையையும் ஐரோப்பாவில் நிலவிய அரசியல் பிரச்சினையையும் தீர்க்க மதச் சாயம் பூசிய அயல்நாட்டுப் போர் என்று முடிவெடுத்தார் அர்பன் II. அதற்கு பைஸாந்தியர்களின் கோரிக்கையை சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். சிலுவை யுத்தம் சூல் கொண்டது. அவையெல்லாம் ஐந்தாம் அத்தியாயம்.

oOo

அதைத் தொடர்ந்து போப் அர்பன் II ஐரோப்பாவின் பல பகுதிகளுக்கும் பயணித்துப் பிரச்சாரம் மேற்கொண்டார், கி.பி. 1095ஆம் ஆண்டு. நவம்பர் மாதம் க்ளெர்மாண்ட் நகரத் திடலொன்றில் உணர்ச்சி பொங்க உரை நிகழ்த்தி, இரண்டு முக்கிய காரணங்களை முன்வைத்து, மக்களை ஆயுதம் ஏந்தத் தூண்டினார். “பைஸாந்தியத்தில் உள்ள கிறிஸ்தவ சகோதரர்களைக் காப்பாற்ற வேண்டும். ஜெருசலம் உலகின் மையப் புள்ளி; அது கிறிஸ்துவத்தின் ஊற்று; ஏசு கிறிஸ்து, வாழ்ந்து மடிந்த நகரம். அதை முஸ்லிம்களிடமிருந்து கைப்பற்ற வேண்டும். அவர்கள் மனிதாபிமானற்ற காட்டுமிராண்டிகள். பைஸாந்தியர்களைச் சகட்டுமேனிக்கு வெட்டிக் கொல்கின்றார்கள்; தேவாலயங்களை உடைத்து நொறுக்குகின்றார்கள்; புனிதப் பயணம் மேற்கொள்ளும் கிறிஸ்தவப் பயணிகள் முஸ்லிம்களால் துன்புறுத்தப்படுகின்றார்கள்; கிறிஸ்தவச் செல்வந்தர்கள் மீது அநியாயத்திற்கு வரி விதிக்கப்பட்டு அவர்களது செல்வம் பிடுங்கப்படுகிறது; ஏழைகள் சித்திரவதைக்கு உள்ளாகின்றனர்” என்றெல்லாம் புளுகுகள் அடுக்கப்பட்டன. பெருந் திரளான மக்கள் கூட்டம் போப்பிடம் ஓடிக் குனிந்து, போருக்குத் தங்களது ஒப்புதலைத் தெரிவித்தது. அனைவரின் கைகளிலும் சிலுவை உயர்ந்தது. இந் நிகழ்வுகளெல்லாம் ஆறாம் அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டன.

oOo

மேற்கு ஐரோப்பா முழுவதும் சிலுவை யுத்தச் செய்தி பரவி, அது உச்சபட்சப் போர் வெறியாக மாறி, அவர்களது வரலாற்றில் முன்னெப்போதும் நிகழ்ந்திராத வகையில் யுத்தத்திற்கு மக்களின் பேராதரவு பெருக ஆரம்பித்தது. மக்கள் போருக்குத் திரள ஆரம்பித்தனர். அனைத்து வயதினர், பலதரப்பட்ட வகுப்பினர் என்று பெருங் கூட்டமொன்று க்ளெர்மாண்ட் கூட்டத்திற்குப் பிறகு சிலுவைகளைத் தூக்கியது. புனித நகரை மீட்கப்போவதாக சபதமிட்டது. சிலுவைகளையும் ஆயுதங்களையும் சுமந்தபடி மேற்கே மாபெரும் திரள் ஒன்று பெரும் வெறியுடன் தயாரானது. ஆனால் அச்சமயம் கிழக்கே முஸ்லிம் சுல்தான்களும் கலீஃபாவும் ஆளுக்கொரு திக்கில் தத்தம் ராஜ்ஜியம், தத்தம் அதிகாரம் என்று சிதறுண்டு கிடந்தனர். ஒன்றாகத் திரண்டுவந்த சிலுவைப் படையினரை எதிர்கொள்ள முடியாதபடி வெகு பலவீனமான நிலையில் இருந்தனர் என்பனவெல்லாம் ஏழாம் அத்தியாயம்.

oOo

மன்ஸிகர்த் யுத்தத்திற்குப் பிறகு அடுத்த ஆண்டில் அல்ப் அர்ஸலான் மரணமடைந்தார். அவருடைய மகன் மாலிக்-ஷா பட்டமேற்றார். மாலிக்-ஷாவின் பெரிய பாட்டனாரின் பேரன் சுலைமான் தலைமையில் பைஸாந்தியப் பகுதிகள் கைப்பற்றப்பட்டன. அப் பகுதிக்கு சுலைமான் சுல்தான் ஆகி, அது ரோமப் பேரரசாக உருவானது. மாலிக்-ஷா, தம் சகோதரர் தாஜுத்தவ்லா துதுஷ்ஷை சிரியாவிற்கு அனுப்பி வைத்தார். டமாஸ்கஸும் தெற்கே உள்ள பகுதிகளும் அவர் வசமாயின. மாலிக்-ஷாவின் தோழர் காஸிம் அத்-தவ்லா அக் சுன்குரின் கையில் ஹும்ஸ் நகரிலிருந்து வடக்கே நீண்டிருந்த பகுதிகள் சென்று சேர்ந்தன. காஸிம் அத்-தவ்லா அக் சுன்குர்தாம் இமாதுத்தீன் ஸன்கியின் தந்தை என்று எட்டாம் அத்தியாயத்தில் அறிந்தோம்.

oOo

வரலாற்றில் மேலும் பின்னோக்கி, வட ஆப்பிரிக்காவிற்குச் சென்றோம். ஹுஸைன் இப்னு அலீ (ரலி) அவர்களின் கொள்ளுப் பேரரான ஜஅஃபர் அஸ்-ஸாதிக்கை ஷீஆக்கள் தங்களுடைய ஆறாவது இமாமாகக் கருதுகின்றனர். ஜஅஃபர் அஸ்-ஸாதிக் மரணமடைந்ததும் அவர்களின் மகன் மூஸா அல்-காஸிம்தாம் அடுத்த இமாம் என்று அவருக்கு இமாமத்தை வழங்கியது ஒரு பிரிவு. இவர்கள் ‘இத்னா ஆஷாரீ’ (பன்னிரெண்டு இமாம்கள்) பிரிவினர் என்று அழைக்கப்பட்டனர். இரண்டாம் பிரிவோ மகனான இஸ்மாயில்தாம் இமாம் என்றது. இவர்கள் இஸ்மாயிலீ பிரிவு ஷீஆக்களாக உருவானார்கள்.

ஹிஜ்ரீ மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த முஹம்மது ஹபீப் தன்னை இஸ்மாயிலின் வழித்தோன்றல் என்று அறிவித்துக்கொண்டான். “இதோ இமாம் மஹ்தி வரப்போகிறார், அவர் ஃபாத்திமா ரலியல்லாஹு அன்ஹாவின் வழித்தோன்றலாக இஸ்மாயில் சந்ததியினரின் வரிசையில்தான் அவதரிக்கப் போகிறார்”, என்று பரப்புரை புரிந்தான். என்னுடைய மகன் உபைதுல்லாஹ்தான் இமாம் மஹ்தி என்று அறிவித்தான்.

ஆப்பரிக்காவின் வடக்குப் பகுதியை அஃக்லபித் என்ற அரசர் குலம் ஆண்டு கொண்டிருந்தது. பாக்தாதிலிருந்த அப்பாஸிய கலீஃபாவை ஏற்றுக்கொண்டு சுயாட்சி புரிந்த அரபு ஸன்னி முஸ்லிம்கள் அவர்கள். ஹபீபின் தளபதிபோல் உருவாகியிருந்த அபூஅப்தில்லாஹ், அந்த ஆட்சியாளர்களை வென்று உபைதுல்லாஹ்வை ஆட்சியில் அமர்த்தினான். அவன்தான் மஹ்தி என்றான். ஆனால் பிறகு அபூ அப்தில்லாஹ்வும் அவனுடைய சகோதரனும் உபைதுல்லாஹ்வால் கொல்லப்பட்டனர். இவற்றையெல்லாம் ஃபாத்திமீக்களின் முன்னுரையாக ஒன்பதாம் அத்தியாயத்தில் பார்த்தோம்.

oOo

மஹ்தி என்று கொண்டாடி, அரியணையில் ஏற்றி வைத்த உபைதுல்லாஹ்வினுடைய பனூ உபைதி வம்சத்து ஆட்சி காட்டுமிராண்டித்தனங்களுடன் கோலோச்ச ஆரம்பித்தது. நபித் தோழர்களையும் நபியவர்களின் மனைவியரையும் குறிப்பாக அன்னை ஆயிஷா (ரலி) அவர்களையும் ஒளிவு மறைவின்றித் தூற்றுவது அரசாங்கத்திற்குக் கடமை போலவே ஆகிவிட்டது. ஸன்னி முஸ்லிம்களின் மீதான அவனுடைய கொடுங்கோன்மை தலைவிரித்தாட ஆரம்பித்தது. இந்த வழிகெட்டவர்களை எதிர்த்துப் போரிடுவது ஜிஹாத், மார்க்கக் கடமை, என்ற நிலைப்பாடு கொண்ட அறிஞர்கள் ஆயுதமேந்தினார்கள். அவர்களுடைய இடைவிடாத போராட்டத்தினாலும் இராஜ தந்திர நடவடிக்கைகளாலும் ஆப்பிரிக்காவின் மொராக்கோவில் ஒருவழியாக, பாத்தினி-உபைதி-ஃபாத்திமீ ஷிஆ ஆட்சி நூற்றுச்சொச்ச ஆண்டுகளுக்குப்பின் முடிவுக்கு வந்தது.

ஆனால், அதற்குமுன் பனூ உபைதிகள் எகிப்துக்கு நகர்ந்து, அங்கு அவர்களது ஆட்சி வலிமை பெற்றுவிட்டது. அவர்களின் கலீஃபாவாக இருந்த அல்-முஸ்தன்ஸிர், தங்கள் வம்ச மரபின்படி தன் மூத்த மகன் நிஸார்தான் அரச வாரிசு என்று அறிவித்துவிட்டு மரணமடைந்தான். ஆனால் பெரும் செல்வாக்குடன் திகழ்ந்த ஆளுநர் அல்-ஜம்மாலி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அந்தக் காலகட்டத்தில் அல்-ஹஸன் இப்னு அஸ்-ஸபாஹ் என்றொருவன் எகிப்திற்கு வந்திருந்தான். அவன் நிஸாருக்கு ஆதரவு தெரிவித்தான். இவற்றையெல்லாம் பத்தாம் அத்தியாயத்தில் பார்த்தோம்.

oOo

அல்-முஸ்தன்ஸிர் மரணமடைந்ததும் ஷீஆக்கள் மேலும் இரண்டாக உடைந்தனர். ஒரு பிரிவு மூத்த மகன் நிஸாருக்கு ஆதரவு அளித்தது. மற்றொரு பிரிவு கடை மகனான “அல்-முஸ்தஆலி அஹ்மது அபுல் காஸிம்தான் கலீஃபா” என்றது. ஆனால் ஆளுநராக இருந்த பத்ருல் ஜமாலியும் முஸ்தன்ஸிரின் சகோதரியும் ஒன்று சேர்ந்து அஹ்மது அபுல் காஸிமின் தலையில் கிரீடத்தைச் சூட்டிவிட்டனர்.

நிஸாரின் ஆதரவாளர்கள் பாரசீகத்திற்குத் தப்பி ஓடினர். அங்கு அல்-ஹஸன் இப்னு அஸ்-ஸபாஹ்வுடன் ஒன்றிணைந்தனர். ‘நிஸாரீக்கள்’ என்ற பிரிவு உருவானது. ஈரானின் அலாமுத் கோட்டையைக் கைப்பற்றித் தனது தலைமையகமாக மாற்றிக்கொண்டான் ஹஸன் அஸ்-ஸபாஹ். தன்னைத்தானே நிஸாரின் பிரதிநிதியாக அறிவித்துக்கொண்டு நிஸாரின் வழித்தோன்றலாக மஹ்தி அவதரிப்பார் என்று பிரச்சாரம் புரிந்தான். சதிக்கொலைத் திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்த ஆரம்பித்தான். அந்தக் கூட்டத்திற்கு அஸாஸியர்கள் என்ற பெயர் ஏற்பட்டது. அதன் ஆங்கிலப் பதமாக ‘Assassins’ உருவாகி, தொழில்முறைக் கொலையாளிகளுக்கான பெயராக அது இன்றளவும் நிலைத்துவிட்டது.

oOo

பாரசீக அஸாஸியர்களின் அரபுக் கிளை சிரியாவில் உருவானது. கி.பி. 1120ஆம் ஆண்டில் டமாஸ்கஸ் நகரத்தை இந்த அஸாஸியர்கள் தங்கள் அதிகாரத்தின்கீழ்க் கொண்டுவந்துவிட்டனர். ரஷீதுத்தீன் ஸினான் அல்-பஸரீ சிரியாவிலுள்ள மஸ்யஃப் கோட்டையைத் தனக்குத் தலைமையகமாக ஆக்கிக்கொண்டான்.

அஸாஸியர்கள் தாங்கள் குறி வைத்தவர்களின் அங்கங்களில் இலகுவாக ஆயுதங்களை ஏற்றிச் செருகி, தம் இஷ்டத்திற்குக் கொலை புரிந்து, கனகச்சிதமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தார்கள். சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபியை அவர்கள் குறிவைத்து, இருமுறை தாக்குதல் நடத்தி, இரண்டிலும் அவர் உயிர் தப்பினார். கொலை செய்வதைத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்த அஸாஸியர்கள் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டின் மத்தியில் அழிந்தனர். நிஸாரீக்கள் பிரிவு மட்டும் வாழையடி வாழையாகத் தொடர்ந்து, இன்று ‘ஆகா கான்’ பிரிவாகப் பெயர் சொல்லிக்கொண்டிருக்கிறது.

இவையெல்லாம் அஸாஸியர்களின் வரலாற்றை விவரிக்கும் பதினோராம் அத்தியாயம்.

oOo

ஸெல்ஜூக்கியர்கள், பைஸாந்தியம், லத்தீன் திருச்சபை, அப்பாஸியர்கள், ஃபாத்திமீக்கள் எனப்படும் உபைதி வம்சம், அஸாஸியர்கள் ஆகியோரை/ஆகியனவற்றை நாம் நன்கு அறிமுகப்படுத்திக் கொள்வது ஸலாஹுத்தீன் ஐயூபியின் வரலாற்றைத் தெளிவாக அறிந்துகொள்வதற்கு வெகு முக்கியம் என்பதால் வரலாற்றின் முன்னும் பின்னுமாக, ஒரு சில நூற்றாண்டுகள் நகர வேண்டியதாகிவிட்டது.

அந்த விபரங்களை மனத்தில் பத்திரப்படுத்துக்கொண்டு இந்தத் தொடருக்கு அவசியமான காலகட்டம் என்று பார்த்தால் அது நூற்றுச்சொச்ச ஆண்டுகள் மட்டுமே. அதாவது முதலாம் சிலுவைப் போருக்கான ஆயத்தத்திலிருந்து மூன்றாம் சிலுவைப் போர் வரையிலுமான காலம். அத்துடன் சிலுவைப் போர்கள் முடிவுற்றுவிட்டனவா என்றால் இல்லை. தொடர்ந்தன. வெற்றியும் தோல்வியும் தொடர்ந்தன. ஆனல் தீர்க்கமான ஒரு வெற்றிக்கு முனைந்து, உழைத்து, அதைச் சாதித்த ஸலாஹுத்தீன் ஐயூபியின் வாழ்க்கை முடிவுற்றது. அதுவரையிலான வரலாறு மட்டுமே இத் தொடர்.

அவசியமான பல தகவல்களின் அறிமுகமும் விரிவான விளக்கங்களும் முடிந்துவிட்டதால், இனி தொடரவிருக்கும் அத்தியாயங்கள் பெருமளவு நேர்க்கோட்டிலேயே பயணிக்கும்.

<*> சிலுவைப் படையின் பயணம், யுத்தங்கள், அதன் வெற்றிகள்;

<*> ஜெருசலம் பறிபோனபின் முழுவதுமாக இல்லாவிட்டாலும் சிறிதளவு சுதாரித்துச் சிலுவைப் படையினருடன் போரிட்ட சுல்தான்கள்;

<*> தங்களுக்குள்ளான ஒற்றுமைக் குலைவையும் போர்களையும் மீறி, சிலுவைப் படையினருடன் ஜிஹாத் என்று முதலில் கிளம்பிய இமாதுத்தீன் ஸன்கி, பிறகு அதையே இலட்சியமாக மாற்றிய நூருத்தீன் ஸன்கி, ஸன்கி வம்சம்;

நூருத்தீன் ஸன்கியின் படைத்தளபதியாக எகிப்திற்குள் நுழைந்து, வலிமையடைந்து, ஃபாத்திமீக்கள் எனப்படும் உபைதி வம்சத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, அதன்பின் சிலுவைப் படையினரை நோக்கித் தமது கவனத்தை ஒருமுகப்படுத்திய ஸலாஹுத்தீன் ஐயூபி, ஜெருசலம் என்று நாம் மேற்கொள்ளப் போகும் பயணத்தைச் சில பத்திகளுக்குள் குறிப்பிட்டுவிட்டாலும் அவை ஒவ்வொன்றும் சில பல அத்தியாயங்கள்; பற்பல போர்கள். குருதி, சமாதானம், யுக்தி, குயுக்தி, தந்திரம், துரோகம், வீரம், விவேகம், என்று ரகளைகளுக்கும் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் குறைவற்ற நிகழ்வுகள் காத்திருக்கின்றன.

பயணத்தில் முதல் கட்டம் முதலாம் சிலுவைப் போர். ஆனால் அதற்கு முன்னோட்டம் People’s Crusade எனப்படும் ‘மக்களின் சிலுவைப்போர்’. அது – oOo

 

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி
தொடர் - 11
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி
தொடர் -13

இந்தக் கட்டுரையின் மூலம்சத்தியமார்க்கம்.காம். ஆசிரியர்:  நூருத்தீன்


1 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -13

போப் அர்பனின் க்ளெர்மாண்ட் உரைக்குப் பிறகு, கும்பலைக் கூட்டும் திறன் பெற்றிருந்த சொற்பொழிவாளர்கள் முழுவீச்சில் செயல்பட ஆரம்பித்தார்கள். அவர்களுள் முக்கியமான ஒருவர் துறவி பீட்டர்.

2 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -14

மக்களின் சிலுவைப் போருக்கு நேர்ந்த கதியைப் பார்த்தார் பைஸாந்தியச் சக்ரவர்த்தி முதலாம் அலக்ஸியஸ் காம்னெனஸ் (Alexius I Comnenus). அது அடைந்த சீரழிவும் தோல்வியும் அவருக்கு அந்த இலத்தீன் கிறிஸ்தவர்கள் மீதான நல்லெண்ணத்தை மாற்றியது. அதனால், அதற்கடுத்து வந்து சேர்ந்த முக்கியப் படையினரையும் அவர்கள் நிகழ்த்திய முதலாம் சிலவை யுத்தத்தையும் ஒருவித ஏளத்துடனும் சந்தேகத் கண்ணோட்டத்துடனும் பார்க்க ஆரம்பித்துவிட்டார் என்று வரலாற்று ஆசிரியர்கள் விவரிக்கிறார்கள். அந்தக் கருத்துக்கு அடிப்படை இல்லாமலில்லை.

3 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -11

தன் கூட்டத்திலிருந்து ஆளைத் தேர்ந்தெடுத்துப் பணியை ஒப்படைப்பான். தனியாளாகவோ ஓரிருவராகவோ நாலைந்து பேர் கொண்ட சிறு குழுவாகவோ அவர்கள் கிளம்புவார்கள். கத்தி, வாள், குறுவாள் என்று ஏதேனும் ஓர் ஆயுதம் ஏந்திக்கொள்வார்கள். குறி வைத்தவரைத் தொழில் நேர்த்தியுடன் கனக் கச்சிதமாகத் தாக்கி அவரின் கதையை முடித்துவிடுவார்கள். சமயங்களில் அக் கொலையாளிகள் தாக்கப்பட்டு மரணமடைவதும் உண்டு. அதைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. தற்கொலைப் படைபோலத்தான் செயல்பட்டனர். அவர்களுக்கு அஸாஸியர்கள் என்ற பெயர் ஏற்பட்டது.

4 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -11

தன் கூட்டத்திலிருந்து ஆளைத் தேர்ந்தெடுத்துப் பணியை ஒப்படைப்பான். தனியாளாகவோ ஓரிருவராகவோ நாலைந்து பேர் கொண்ட சிறு குழுவாகவோ அவர்கள் கிளம்புவார்கள். கத்தி, வாள், குறுவாள் என்று ஏதேனும் ஓர் ஆயுதம் ஏந்திக்கொள்வார்கள். குறி வைத்தவரைத் தொழில் நேர்த்தியுடன் கனக் கச்சிதமாகத் தாக்கி அவரின் கதையை முடித்துவிடுவார்கள். சமயங்களில் அக் கொலையாளிகள் தாக்கப்பட்டு மரணமடைவதும் உண்டு. அதைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. தற்கொலைப் படைபோலத்தான் செயல்பட்டனர். அவர்களுக்கு அஸாஸியர்கள் என்ற பெயர் ஏற்பட்டது.

5 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -10

துனிஸியாவில் நுழைந்ததும் முதல் வேலையாகத் தன்னுடைய ஷீஆ கோட்பாட்டைத்தான் பகிரங்கப்படுத்த ஆரம்பித்தான் உபைதுல்லாஹ். அலீ (ரலி), தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஸஹாபாக்கள் ஆகியோரைத் தவிர மற்ற அனைவரும் நபியவர்களின் மறைவிற்குப் பிறகு இஸ்லாத்திலிருந்து வெளியேறிவிட்டவர்கள் என்ற அயோக்கியத்தனமான கருத்து அந்த ஷீஆக்களின் அடிப்படை.

6 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -9
7 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -8
8 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 7
9 பிறப்பு மற்றும் நபித்துவத்துக்கு முந்திய நாற்பது ஆண்டுகள்
10 உஹுத் போர்
11 உஹுத் போர்: போரின் முதல் தீ பிழம்பு
12 உஹுத் போர்: எதிரிகளின் தாக்குதல் வேகமாகுதல்
13 பெரிய பத்ர் போர்
14 பத்ர் மற்றும் உஹுத் போர்களுக்கு மத்தியில் நிகழ்ந்த ராணுவ நடவடிக்கைகள்
15 ஆயுதமேந்தித் தாக்குதல்
16 பெரிய பத்ர் போர்: இரு படைகளும் நேருக்கு நேர்...
17 மதீனா வாழ்க்கையில் அழைப்பு மற்றும் போரின் கட்டங்கள்
18 முதல் கட்டம் - புதிய சமூகம் அமைத்தல்
19 யூதர்களுடன் ஒப்பந்தம்
20 அகபாவில் முதல் ஒப்பந்தம்
21 அகபாவில் இரண்டாவது ஒப்பந்தம்
22 ஹிஜ்ராவின் தொடக்கங்கள்
23 நபியவர்கள் “ஹிஜ்ரா” செல்லுதல்
24 மூன்றாம் கால கட்டம்
25 கோத்திரங்களுக்கும் தனி நபர்களுக்கும் இஸ்லாமை அறிமுகப்படுத்துதல்
26 மிஃராஜ்
27 இறைத்தூதராகுதல் மற்றும் அழைப்பு பணி
28 முதல் கால கட்டம் - அல்லாஹ்வின் பக்கம் அழைத்தல்
29 இரண்டாம் கால கட்டம்
30 முழுமையாக ஒதுக்கி வைத்தல்
31 துயர ஆண்டு
32 பொறுமை மற்றும் நிலைகுலையாமையின் தூண்டுகோல்கள்
33 அரபு நாட்டில் ஆட்சி அதிகாரம்
34 அரபியர்களின் சமய நெறிகள்
35 அறியாமைக் கால அரபியச் சமுதாயம்
36 நபியவர்களின் வமிசமும் குடும்பமும்